Friday, August 27, 2010

இன்டர்வியூ


விலை கொடுத்து உடல் பசியை தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட 25 வயது இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த 4 இட்லியை எடுத்து வர இவ்வளவு நேரம் ஆகிறதென்றால், நான் 12 ரூபாய் கொடுத்ததற்கு என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த சர்வர்களுக்கு உடல் பசியை பற்றி தெரிவதே இல்லை, 12 ரூபாயின் அருமை இன்னும் வேலை கிடைக்காத எனக்கு தெரியுமா? இல்லை இவ்வளவு நேரத்தை அநாயசாமாக கடத்தும் அந்த சர்வருக்குத் தெரியுமா? நானே இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் இட்லியை பார்க்கிறேன், அதையும் காக்க வைத்து கடுப்படிக்கும் அந்த சர்வர் இருக்கிறானே. போகட்டும் அவன் நன்றாக இருக்கட்டும். எவனோ கூட்டத்திலிருந்து ‘பிரகாஷ்” என்று கொடூரமாக கத்தினான். அவன், அவனுடைய நண்பனை கூப்பிட்டான், ஆனால் நான் ஏன் அநிச்சையாக திரும்பிப் பார்த்தேன் தெரியுமா? என் பெயரும் அதுதான்.



பொதுவாக பல இளைஞர்கள், இன்டர்வியூக்கு லேட்டாக செல்வது அலுவலகத்திற்கு நேரம் கடந்து செல்வது, எலெகட்ரிக் ட்ரெயினை தவறவிடுவது போன்ற விஷயங்களுக்கு காரணமாக இருப்பவர்கள் இது போன்ற ஹோட்டல்கள்தான் காரணம். ஆனால் நான் சற்று புத்திசாலி 10 மணி இன்டர்வியூவிற்கு 8 மணிக்கே வந்துவிட்டேன். ஆனால் அந்த சர்வர் சரியான சோம்பேறி, இட்லி வேக 1 மணி நேரம் ஆகிறதென்றால் அதை நான் நம்பத் தயாராக இல்லை, மணி 9 ஐ தொட்டுவி;ட்டது. இங்கிருந்து அம்பத்தூர் போக வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகுமே. அதுவும் அரசு பேருந்தில், சென்னை டிராபிக்கில், யோசிக்காமல் எழுந்து நடையை கட்ட வேண்டியது தான் என்று கிளம்பியதுதான் தாமதம், அந்த 4 இட்லியை புயல் வேகத்தில் எடுத்து வந்து வைத்தான். அந்த இட்லியை வெயிலில் வைத்திருந்தால் கூட இந்நேரம் வெந்திருக்கும். பொய் சொல்லிவிட்டான்.



வழக்கம் போல அரைமணி நேரம் லேட், இன்டர்வியூ ஹாலுக்குள் எனது வலது காலை எடுத்து வைத்த பொழுது மணி 10:30. அங்கே 3 பேர் கழுத்தில் டையை கட்டிக் கொண்டு வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது தான் அந்த நியாபகமே என் நினைவுக்கு வந்தது. நான் டை கட்டமறந்து விட்டேன். ‘கடவுளே அவர்கள் டையை பற்றி எதுவும் கேட்டுவிடக்கூடாது. எத்தனை முறை கைவிட்டிருக்கிறாய், இந்த முறையாவது என்னை காப்பாற்று”



இந்தியன் கவர்ன்மென்டுக்கும், இந்த கடவுளுக்கும் எந்த வித்தியசமும் இல்லை, உயிர் போக கத்தினாலும், பிரார்த்தனை செய்தாலும் அவர்கள் காதுகளுக்கு கேட்பதேயில்லை, நான் நினைத்தது போலவே அந்த நரைச்ச தலையன் கேட்டுவிட்டான்.



‘மிஸ்டர்...”


‘பிரகாஷ் சார்”


‘ம். மிஸ்டர். பிரகாஷ் இன்டர்வியூ வரும்பொழுது டை கட்டிட்டு வரணும்னு உங்களுக்கு தெரியாதா?”



அந்த கடவுளை என்ன செய்வது, என் கோபத்திற்கு இலக்காவதே இந்த கடவுளுக்கு வேலையாகிவிட்டது, அன்று ஒரு நாள் அந்த கோவிலில் அலங்கரிக்கப்பட்ட கடவுள் சிலையை பார்த்தேன். அந்த கேக்காத காதுக்கு இத்தனை ஜிமிக்கி, அதுவும் தங்கத்தில், ரொம்ப அவசியம், எனக்கொன்றும் அந்த கடவுள் மேல் பயமில்லை, இருந்தாலும் கடவுளே என்னை மன்னித்து விடு, நான் ஒரு ஆத்திகன், சத்தியமாக, இதில் மாற்று கருத்தில்லை.



டை விஷயத்தை கூட சமாளித்து விட்டேன், எத்தனை இன்டர்வியூ போயிருக்கிறேன். எனக்கா தெரியாது, ஆனால் அடுத்த உட்கார்ந்திருந்த ஆள் என்னை முறைத்து பார்த்தபடி இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டான்,


‘பன்ச்வால்டியை பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க”


சென்னையின் காலை நேர பேருந்து பயணம் பற்றியும், காலை உணவு உண்பதில் உள்ள சாகசம் பற்றியும் அரியாத அனுபவமில்லாத அந்த பெரியவரை நான் மன்னித்துதான் ஆக வெண்டும், ஆனால் நான் ஒரு முட்டாள், அந்த கேள்வியில் உள்ள கனிவான தன்மை பார்த்து நான் ஏமாந்து விட்டேன். நான் பதில் சொல்ல எத்தனித்தேன்.


என் மனம் ஏன் அநத் 2 வது மனிதனை மன்னித்தது என்பது பிறகுதான் எனக்கே தெரியவந்தது, அதற்கு காரணம் அந்த 3 வது மனிதர் தான், நான் 4 இட்லி சாப்பிட்ட கதையை கேட்டு அவரது பி.பிதான் சற்று அசாதாரணமாக கொதித்தெழுந்துவிட்டது. அவர் இவ்வாறு என்னை பார்த்து கூறிவிட்டார்.



‘எங்களுக்கு ஒரு சர்வர் தேவையில்லை, தேவைப்பட்டால் சொல்லியனுப்புகிறோம், உங்கள் செல் நம்பரை கொடுத்து செல்லுங்கள்”


இருந்தாலும் இவ்வளவு நக்கல் ஆகாது, என்னை பார்த்தால் சர்வர் போலவா தெரிகிறது. அந்த சர்வர் அவ்வாறு என்னை காக்க வைத்துவிட்டால் நான் என்ன செய்வேன், அதுவும் சம்மந்தம் இல்லாமல் என்னை அந்த சர்வரோடு ஒப்பிட்டு பேசுவது என்ன நியாயம். எனது கோபமெல்லாம் அவரது பளபள மண்டையின் மேல்தான் திரும்பியது. எனக்கு இந்த விஷயத்தை அறிந்து கொள்வதில் வெகு காலமாக ஆர்வம் பெருகி வருகிறது. அந்த கடினமான வழவழப்பான, பளபளப்பான மண்டைக்கு பின்னே அப்படி என்ன இருக்கும் என்று உடைத்து பார்ப்பதில் உள்ள எனது ஆர்வத்தை பற்றி அந்த 3வது மனிதருக்கு ஏதாவது ஒரு வகையில் தெரியவந்திருந்தால் அவர் இவ்வாறெல்லாம் பேசியிருக்க மாட்டார். கடைசியில் நான் எனது 12 இலக்க செல் நம்பரை கொடுத்துவிட்டு வந்தேன், அந்த வகையிலாவது அந்த 3 பேரையும் வெறுப்பேற்றி விட்டேன் என்கிற திருப்தியில், மகிழ்ச்சியாக வெளியேறினேன்.



எனக்கு பெரும்பாலும் நம்பிக்கை போய்விட்டது. எதற்காக முயற்சி செய்கிறேன் என்று தெரியவில்லை, இவ்வாறெல்லாம் செயல்பட்டால், இவையெல்லாம் நடக்கும் என்பது நிதர்சனமான உண்மையாக இருந்தால், அந்த இவ்வாறெல்லாம் ஐ செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் போராடலாம். ஆனர் பலன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதிலேயே இவ்வளவு சந்தேகம் பின் எப்படி உற்சாகமாக உழைக்க முடியும்?.



எத்தனை இரவுகள் தூக்கத்தை தொலைத்திருக்கிறேன் ஒரு இன்டர்வியூற்காக. எதிர் டீ கடையில் வேறு பல நூறு ரூபாய்கள் கடன், என்ன செய்வது. அந்த டீயை குடித்தால் தான் தூக்கம் கலைகிறது. அப்படி ஒரு கொடூரமான சுவை. சிவன் ஆலகால விஷத்தை குடிப்பதை போல, ஒரே பல்க்காக உள்ளே இறக்கிவிட்டால் போதும். அடுத்த நான்கு மணிநேரத்திற்க உத்தரவாதம் உண்டு தூக்கம் வராமல் இருக்க. இதெல்லாம் அந்த 3 பேருக்க எங்கே தெரிய போகிறது. நான் ஒன்று படித்துவிட்டு சென்றால்அவர்கள் வேறு எதையோ கேட்கிறார்கள்.



என்னுடைய புலம்பல் எந்த அளவிற்கு இருந்ததென்றால் அம்பத்தூரிலிருந்து என் இருப்பிடத்திற்கு நடந்தே வந்துவிடும் அளவிற்கு, அந்த உணவகம், இன்னும் அங்கே கூட்டம் குறையவில்லை. உணவு, போதை, பாலுணர்வு இவை மூன்றிற்கும் என்றுமே கூட்டம் குறைவதில்லை. அந்த சர்வர் ஒரு குட்டி புயலை போல வேலை செய்து கொண்டிருந்தான், அவன் என்னைப் போலவே தெரிந்தான், அவனை பார்க்கும் பொழுது, ஆம் நான் ஒரு சர்வராக ஒரு புயல் போல வேலை செய்து கொண்டிருந்தேன். மணி மதியம் 2.15 மதியம் தூங்குவதும், கனவு காண்பதும் ஒன்றும் புதிதல்ல, இருப்பினும் நடந்து கொண்டே தேவையற்ற கனவல்லவா?



ஒரு வழியாக என் அறைக்கு வந்து சேர்ந்து கதவை திறந்த பொழுது கதவு கதறியது கிறீறீச்ச்ச்........ என்று, அதற்கு எண்ணெய் விடுவது பற்றி கடந்த ஒரு வருடமாக யோசித்து வந்தாலும், அதை ஏன் செய்யவில்லை என்று இதுவரை விலங்கவில்லை. அந்த அறையை வாடகைக்கு எடுத்த இந்த ஒரு வருடத்தில், ஒரு 5 நிமிட வேலை, ஒரு 1 ரூபாய் எண்ணெய் பாக்கெட், உண்மையில் நான் தகுதியில்லாதவனோ? என்னதான் வெகு நேர்மையாகவும், தன்மையாகவும் யோசனைகள் வந்து குவிந்தாலும், அந்த சாபம் என்னை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. களைப்பில் நான் தூங்கிவிட்டேன். நானும் என் விளக்கெண்ணெய் சிந்தனையும், அந்த கிறீச் சத்தத்துடன் இன்னும் பல வருடங்களுக்கு பந்தப்பட்டு கிடக்கும். எனது மங்கிப் போன செயல் திறன் அடுத்த இன்டர்வியூவிலாவது கண்டுகொள்ளப்படாமல் போக வேண்டும்.



தூங்கும் பொழுது குறட்டை விடும் எனது நண்பனை நான் பல முறை கிண்டல் செய்திருக்கிறேன். தொண்டைக்குள் ஏதோ அறுவை சிகிச்சை செய்தது போல சுவாசக் காற்றானது சிக்கிக் கொண்டு திணறித் திணறி, வெளிவந்து கொண்டிருக்கும். அவன் குறட்டைவிடும் சப்தத்தின் கொடூரத் தன்மையை தினசரி அனுபவிக்கும் நான் அந்த உணர்வை அவனுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என சிந்தித்ததின் விளைவாய். எனது அலைப்பேசியில் பதிவு செய்த அவனது குறட்டை ஒலியை அவனுக்கு போட்டு காண்பித்தேன். பின் அவனிடம் இவ்வாறு கூறினேன்.



‘நீ குறட்டை விடும் பொழுது உனது காதுகள் அதை உணரும் பட்சத்தில் அவையிரண்டும் தற்கொலை செய்து கொள்ளும்” என்று இப்பொழுது நான் தூங்கிக் கொண்டிருக்கம் பொழுது அவன் மட்டும் என் அருகில் இருந்திருப்பானேயானால், என் கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பான், காரணம், அந்த அரைத் தூக்கத்தில் நான் குறட்டைவிடுவதை என்னால் கேட்க முடிந்தது. கடவுளுக்கு மட்டும் என் மேல் கருணை இல்லாவிட்டால் என் குறட்டை ஒலி எழுப்பும் வாயையும், என் நண்பனின் காதுகளையும் அருகருகே வைத்தல்லவா? வேடிக்கை பார்த்திருப்பார். அவரை பற்றி நான் எவ்வளவு தவறாக பேசிவிட்டேன். கடவுளே என்னை மன்னித்துவிடு, நம் இருவருக்கும் இடையே நடந்த சமரச உடன்படிக்கைக்கு அடையாளமாக, நான் உனக்கு ஒரு தேங்காய் வாங்கி உன் சன்னிதானத்தின் முன் வந்து உடைக்கிறேன், இந்த விஷயத்தில் ஒரு சிறு நிபந்தனை மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த தேங்காய் என் முதல் மாதச் சம்பளத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அந்த நிபந்தனை.



கனவில் கூட நான் அவருக்கு தேங்காய் உடைக்க மாட்டேன் என்பது தெரிந்து அவர் கடுப்பாகிப் போனார் போல, எனது காதுச்சவ்வுகளில் அதிர்வு ஏற்படும் படியாக, அந்த கதவு மடார்......மடார்..... எனத் தட்டப்பட்டது. வேறு யார் என் நண்பனாகத்தான் இருக்க வேண்டும், என்னை தூக்கத்தில் எழுப்பி பலர் வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டு. அந்த கடவுள் என்னை கடுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துவிட்டார் போல , ஆனால் பாவம் அவர் மறந்திருப்பார். கடந்த 5 மாதங்களாக அவன்தான் இந்த அறைக்கு வாடகை கொடுத்து கொண்டிருக்கிறான், நான் எப்படி அவனை கடிந்து கொள்ள முடியும்.



இன்னும் 2 தட்டு தட்டியிருந்தால் அவன் நோக்கம் நிறைவேறியிருக்கும். ஒரு கதவை ஒற்றை கையால் தட்டி உடைப்பது கூட நாளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம். அவ்வாறு ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அது இரண்டாவது நிகழ்வுதான். என் நண்பன் ஒருவன்; இருக்கிறான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம், பாய்ந்து சென்று கதவை திறந்த நான், இவ்வாறு கனிவுடன் அவனிடம் கூறினேன்.



‘ஹேய், கை வலிக்கப் போகிறது, பார்த்து”



ஆனால் அவன் கை உடைந்தால் தான் என்ன? இது போன்ற சில பயிற்சிகளை நான் மேற்கொள்வது யாருக்கும் தெரியாது. தூக்கத்திலிருந்து எழுப்பபவர்களை கடுமையாக திட்டிவிடும் பழக்கத்தை கைவிடும் பயிற்சி முறைதான் அது. அன்று ஒரு நாள் அந்த சுயமுன்னேற்ற புத்தகத்தில் இந்த விஷயத்தை படித்திருந்தேன். வாழ்க்கையை எவ்வாறு பாஸிடிவ் தன்மையுடன் அணுகுவது என்பது பற்றி. நான் எதையும் நடைமுறை படுத்திவிடும் துணிச்சல் உள்ளவன். எனது கோபத்தை அடக்கும் மகா காரியத்தை செயல்படுத்தி வெற்றி கண்டுவிட்டு பெருமையுடன் நிற்கிறேன்........... வேறு எப்படி சொல்லிக் கொள்வது..........எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கிறது.



கடவுளே என்னை நடிகனாக்கிவிட்டேயே. இந்த நாடக வாழ்க்கையிலிருந்து சீக்கிரம் விலகிக் கொள்ள வேண்டும். அடுத்த இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், ஒருமுறை கோபப்பட்டாலும் அது நிஜமாக இருக்க வேண்டும். ஒரு முறை அன்பு தோன்றினாலும் அதுவும் அப்படியே. கடவுளே நிஜமாக வாழ கூட பணம் தேவையாய் இருக்கிறது. இல்லையெனில் போலித்தனம் புகுந்துவிடுகிறது.



சில முறைகள் மட்டுமே இது நடப்பதுண்டு, வெகு சில சமயங்கள் மட்டுமே அது ஏன் என்று தெரியவில்லை. எனது உருக்கமான, உண்மையான பிரார்த்தனைகள் அந்த கடவுளின் காதுகளுக்க கேட்டுவிடும் போல அவர் உடனடியாக உதவிக்கரம் நீட்டிவிடுவார், நானும் மறந்தாற்போல் கடவுளே நன்றி என்று சொல்லி விடுவேன், அவரும் அதோடு மறந்து விடுவார் என்னை,



கதவை தட்டி வலியெடுத்துப்போன என் நண்பனின் கைகளில் அந்த காப்பிகலர் ஆபிஸ் கவர். அதில் எனக்கான இன்டர்வியூகார்டு தேதியிடப்பட்டு இருந்தது, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஏற்பாட செய்யப்பட்டிருந்தது இந்த அழைப்பு.



‘நண்பா நீ தான் எவ்வளவு நல்லவன்”



பிறர் என்னை ஆக்கிரமிக்கும் பல சூழ்நிலைகளை நான் சந்தித்திருக்கிறேன், சகித்துக் கொண்டு கடந்து போயிருக்கிறேன், இது போன்ற சூழ்நிலைகளில் இனி மாட்டிக் கொள்ளக் கூடாது என் சபதம் எல்லாம் கூட எடுத்திருக்கிறேன், ஆனால் எவ்வளவதான் விழிப்புடன் இருந்தாலும் அவ்வப்பொழுது மாட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. ஒரு இன்டர்வியூ கார்டை கொடுத்துவிட்டு அரை மணி நேரமாக அட்வைஸ் செய்கிறான் என் நண்பன். நான் என்னதான் செய்ய முடியும். முழுதாக 30 நிமிடங்கள்.



எனக்கு பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே இந்த பயிற்சி உண்டு. கண்களை திறந்த வைத்தபடியே தூங்கும் பயிற்சி, பின் அவ்வளவு கொடூரமாக பாடம் நடத்தினால் என்ன செய்வது. கண்களை அகல விரித்து வைத்துக் கொண்டு. சற்று கூட இமைக்காமல் வெறித்து பார்த்தபடி அப்படியே நிமிர்ந்தபடியே உட்கார்ந்திருப்போம். வெகு நாட்களுக்கு பிறகு அந்த வித்தியாசமான அமர்வை பார்த்து சந்தேகம் கொண்ட ஆசிரியர் கண்டுபிடித்துவிட்டார். விழித்துக் கொண்டே தூங்குவது அப்படி ஒன்றும் சாதாரண விஷயம் இலலை. யாரும் கேவலமாக நினைக்க வேண்டாம். ஆனால் எனது பரிதாபத்திற்குரிய நண்பன்... நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது, அவன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தானோ?



‘நண்பா என்னை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தோற்று போனாய், கடவுளே நீயும் தான்”



ஒரு முழு இரவு முழவதுமாக விழித்திருந்து, இன்டர்வியூவிற்கு தயாராக வேண்டும் என்று நினைத்தேன். இது போன்ற நினைப்புகள் இப்பொழுதெல்லாம் சலிப்பை கொடுக்கின்றன. ஒரு முறையாவது நினைத்ததை நிறைவேற்றினால்தானே உற்சாகம் பிறக்கும், வெறுமனே உறுதிமொழி ஏற்பதோடு சரி, பின் எப்படி. இருப்பினும் ஏதாவது செய்தாக வேண்டுமே?



எனக்கே ஆச்சரியப்படும்படி நானும் சில சமயங்களில் செயல்பட்டு விடுவதுண்டு, உறுதிமொழி எடுத்தபடி குறித்த நேரத்தில் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன், ஒரு வெறியோடு ஆரம்பித்தேன், அரை மணி நேரம் தான் கடந்திருப்பேன். அந்த நடிகை ஏன் என் நியாபகத்திற்கு வந்தாள் என்று புரியவில்லை. அதுவும் அந்த கவர்ச்சி போசில். தூரத்தில் அந்த பாடல் கேட்டதாலோ என்னவோ?



ஒரு முழு இரவு புத்தகங்களும், நடிகையும், தூரத்தில் கேட்ட அந்த பாடலும், ஒன்றையொன்று முந்திக்கொண்டு என் நினைவை ஆக்கிரமித்து கொண்டிருந்தது. அடுத்தநாள், உன்பெயர் என்ன என்று இன்டர்வியூவில் கேட்கப்படும் பொழுது நமீதா என்று வாய்குளறி கூறிவிடாமல் இருந்தால் அந்த கடவுளுக்கு மீண்டும் ஒரு நன்றியை நான் சொல்வேன்.



நான் இதை யோசிக்கவே இல்லை. அதிகாலையில் தூக்கம் சுழற்றியடித்துக் கொண்டிருந்தது. ஒரே வழி அந்த டீதான், டீ கடை மாஸ்டர்தான் என்னை காப்பாற்ற வேண்டும். ஒரு ‘கப் டீ” வாங்கி மூக்கை பிடித்துக் கொண்டு குடித்து விட வேண்டியதுதான். அந்த டீயின் கசப்புணர்ச்சி என் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரை வரவழைத்துவிட்டது. கடவுளே கண்ணீரெல்லாம் விடுகிறேன் உன் மணம் இளகாதா? அவருடைய டமார காதுகளுக்கு நான் பேசுவது கேட்க வேண்டுமானால் என் தொண்டை கிழிய நான் கத்த வேண்டும் போல. நான் வானத்தை முறைத்து பார்த்து கொண்டு கடவுளுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, என் நண்பன் இவ்வாறு கூறுகிறான்.



‘இன்னைக்கு மழையெல்லாம் வராது கவலைபடாத, இன்டர்வியூதான் முக்கியம்”லூசுப்பயல் அவனுக்கென்ன தெரியும் எனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு முறை பற்றி.



என் நண்பன் வேலைக்கு செல்லும் பொழுது என்னை திரும்பி திரும்பி முறைத்துக் பார்த்துக் கொண்டே சென்றான். அவன் ஷூ இல்லாமல் செருப்புக் காலோடு செல்வதை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பாக வந்தது. அது என்னுடைய செருப்பு. தரைக்கும். பாதத்திற்கும் பெரிதாக தூரம் இருக்காது அரை சென்டிமீட்டர் தான் இருக்கும். கடவுளே அதை அவன் கோபத்தில் பிய்த்துவிடாமல் இருக்க வேண்டும் அல்லது அது பிய்ந்து விடாமல் இருக்க வேண்டும். இரண்டும் உன் கையில் தான் உள்ளது.



அவனுடைய ஷூ எனக்கு பத்தவில்லை கொடூர முயற்சிக்கு பின் ஒரு வழியாக காலை நுழைத்துவிட்டேன், டையை கட்டிக் கொண்டு தடபுடலாக கிளம்பினேன். அந்த ஹோட்டல் பக்கம் மட்டும் செல்லக் கூடாது என்ற முடிவுடன் கிளம்பினேன். நாலு இட்லிக்கு ஆசைப்பட்டு இந்த இன்டர்வியூவையும் இழப்பதா என்ன? வேலை கிடைக்கட்டும் அந்த சைத்தான் சர்வரை ஒரு வழி பண்ணிவிட வேண்டியது தான,;



இன்டர்வியூ ஹாலில்



3 பேர் அல்ல. ஒரே ஆள்தான் உட்கார்ந்திருந்தான். வெகு நேரமாக என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வேளை வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கிவிட்டு வந்திருப்பாரோ? என்று நினைத்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டார், என் கண்களில் தூக்க கலக்கம் தெரியாமல் இருக்க நான் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன். திரும்பவும் என் கண்களை உற்று பார்த்தார்.



கிழிந்தது, என் கண்களில் அப்படி என்ன தேடுகிறார் என விளங்கவில்லை. எனினும், நான் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஆசுவாசமானேன். வழக்கம் போல ஏதேனும் நடக்கப்போகிறது என்ற நினைப்பு எனக்கு அமைதியை கொடுத்து விட்டது. பின் தொலை பேசியில் யாருடனோ பேசினார், படபடப்புடன் காணப்பட்டார். பின் ஏதோ மகிழ்ச்சியான விஷயம் அவருக்கு சொல்லப்பட்டது போல, வாய் நிறைய புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.



பின் வேகமாக கழற்றி தொங்கவிடப்பட்டிருந்த தன் கோர்ட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினார், என்னை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை அந்தமனிதர். ஒருபொருளை போல் துச்சமாக நினைத்துவிட்டு கிளம்பிவிட்டார். கதவு வரை வேகமாக சென்றவர். எதையோ மறந்து வைத்துவிட்டதை போல் அதே வேகத்துடனும், பதற்றத்துடனும் திரும்ப வந்தார். ஒவ்வொரு டேபிளாக சரசரவென இழுத்தார். ஒருகவரை எடுத்துக் கொண்டு, பின் ஏதோ நியாபகம் வந்ததைப் போல் என்னைப் பார்த்து இவ்வாறு கூறினார்.



‘உங்க ரெஷ்யூம டைப்பிஸ்ட்கிட்ட குடுத்துட்டு போங்க, ம்...... நாளைக்கு வேண்டாம், நாளை மறுநாள் ஆபர் லெட்டர வாங்கிக்கோங்க, அப்படியே ஜாய்ன் பண்ணிக்கோங்க... உங்க ஜாப் நேச்சர் பத்தின டீடய்ல்ஸ் அவங்க உங்களுக்கு சொல்வாங்க ஓ.கே....”



என் இடது நெஞ்சோரத்தில் லேசாக வலிக்க ஆரம்பித்தது. இது மிகமிக அதிகம். ஒரு முழு இரவு ஒரு நடிகை மற்றும் தூரத்து இனிமையான பாடல்கள், இவற்றுடன் போரிட்டு வெகு சிரமத்துடன் படித்து தயாராக வந்தால், பெயர் கூட கேட்காமல் வேலை தரும் பழக்கும் என்ன பழக்கம், ஸ்டுப்பிட் தனமாக இருக்கிறதே.



அந்த ஏ.சி. அறைக்குள் என் மனதிற்குள்ளாகத்தான் நான் இவ்வாறு கூறிக் கொண்டேன். நல்லவேளை யாரும் அந்த அறையில் இல்லை. எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.



ஒரு மாதத்திற்குப்பின் ஒரு தேங்காய் கடைக்குமுன் நான்,



நான்: இந்த தேங்காய் எவ்வளவு


கடைக்காரன்: 7 ரூபாய்


நான் : (மற்றொரு தேங்காயை எடுத்துக் காட்டி) இது எவ்வளவு?


கடைக்காரன் : 5 ரூபாய்


நான்: இந்த தேங்காய்


கடைக்காரன் : 4 ரூபாய் சார்


நான்: இதுக்கு கம்மியான விலைல தேங்காய் இல்லையா?


பதிலுக்கு அவன் முறைத்துப் பார்த்தான்.



அந்த நான்கு ரூபாய் தேங்காயுடன் நான் அந்த கோவிலுக்குள் நுழைந்தேன். கடவுளை பெருமிதத்தோடு பார்த்தேன். தேங்காயை நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போட்டு உடைத்தேன். புலி, மான் மேல் பாய்வது போல் சிதறிய தேங்காய் சில்கள் மீது 4 சிறுவர்கள் பாய்ந்தார்கள். நான் தேங்காய் உடைத்த காட்சியை ஒரு நொடி கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்ன கொடுமை இது.இருப்பினும் எனது நேர்மையை அந்த கடவுளுக்கு உணர்த்திவிட்ட சந்தோஷத்தில் கம்பீரமாக வெளியேறினேன்.


- சூர்யா


நன்றி கீற்று, திண்ணை

ரூல்ஸ் சந்திரசேகர்


ஊர் சுற்றுவது சம்மந்தமாக ஏதேனும் படிப்பிருந்தால் அதில் பி.ஹெச்.டி வாங்கியிருப்பான் சரவணன். இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவெனில், தான் எதற்காக அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை. நோக்கமற்ற செயல் அப்படி ஒன்றும் சாதாரண விஷயமல்ல. புதிய பதிய இடங்களையும், தெருக்களையும் வீடுகளையும், மரங்களையும் சுற்றிப் பார்த்தபடி சென்று கொண்டேயிருப்பான். அவ்வாறு செல்வதில் அப்படி ஒரு அலாதி விருப்பம்.


சரவணின் தந்தை திரு. சந்திரசேகர் ஆர்மி ரிடையர்டு ஹவுல்தார். விறைப்பான மனிதர். தூங்கும் பொழுது கூட அட்டென்ஷனில்தான் தூங்குவார். காலை 5 மணிக்கு எழுவதால் அப்படி என்ன நன்மை இருக்கிறது என்று கேட்டால் உருப்படியாக எந்த பதிலும் சொல்லத் தெரியாது. ஆனால் கடந்த 5 வருடமாக திரு. சுந்திரசேகரின் மனைவி காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறார். 5 மணியிலிருந்து 8 மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அதன் பின் உத்தரத்தைப் பார்த்து கொண்டு உட்கார்ந்திருப்பார். திரு. சுந்திரசேகர் 8 மணிக்கு மேல் தேய்த்து வைக்கப்பட்ட உடைகளை போட்டுக் கொண்டு கலெக்டரைப் பார்த்து உரையாடிவிட்டு வருவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவருக்கும் அதே உத்திரம் தான். தன் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது என்பது அவருக்கு பெருமையான விஷயம். இந்த நாடே தொலைக்காட்சி பார்த்துதான் நேரத்தை வீணடிக்கின்றது என்பது அவரது எண்ணம். தன் மனைவி சீரியல் பார்ப்பதில்லை என்று பல பேரிடம் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். திருமதி. பார்வதி அம்மாளை பற்றி ஒருவரியில் கூறுவதென்றால், அவர் திரு. சந்திரசேகரிடம் மாட்டிக் கொண்ட ஒரு நீக்ரோ அடிமை. அவரது எண்ணங்களை பிரதிபலிப்பவர்.


திரு. சந்திரசேகர் வீட்டில் தீபாவளியும், பொங்கலும் கொண்டாடப்படுவதில்லை. சுதந்திர தினமும், குடியரசுதினமும் தான் வெகுவிமரிiசாக கொண்டாடப்படும். அன்றுதான் தன் குடும்பத்திற்கு புதுத்துணி எடுத்துக் கொடுப்பார். தான் சுதந்திரதினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதை ஊர் முழுவதிற்கும் தெரியும்படி காட்டிக்கொள்வார். அன்றைய தினத்தில் பார்வதி அம்மாளுக்கு முக்கிய பங்குண்டு. அவர் சுதந்திரதினத்தை கொண்டாடியே ஆக வேண்டும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அது கட்டாயமாக்கப்பட்ட விஷயம்.


ஒருமுறை பாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்துவிட்டு அதில் மயங்கிப் போன திரு. சந்திரசேகர் தனது நண்பரிடம் பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார். கையில் காபி டம்ளரோடு வந்து நின்ற பார்வதியம்மாளின் காதில் அந்த பேச்சு விழ, பார்வதி அம்மாளின் வாழ்வில் அன்றுமட்டும் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம் அவர் சிரித்தது அன்று மட்டும் தான். திரு. சந்திரசேகர் தனக்கும் நகைச்சுவை உணர்வு இருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டார்.


சில சமயங்களில் ஆண்டவன் இருக்கிறான் என்று நம்பத்தான் தோன்றுகிறது. நாத்திகர்கள் கூட இது போன்ற சமயங்களில் வாயடைத்துப் போக வேண்டும். அதர்மம் தலை தூக்கும்பொழுதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவனுடைய எதிர்செயல் நடந்தே தீரும் என்பார்கள். ஆம் திரு. சந்திரசேகரின் ஒழுக்க அதர்மத்தை ஒழிப்பதற்காக அவதாரமெடுத்தவன் சரவணன். விதியின் விளையாட்டு விநோதமானது. எல்லையில் நின்று எதிரிகளை சமாளிக்க முடிந்தவரால் தன் வீட்டில் தன் மகனை சமாளிக்க முடியவில்லை. அவனை தன் வழிக்கு கொண்டு வர பல பிரோயகங்களை உபயோகித்தார். அதிகாலையில் நீராகாரம் குடிப்பதன் மூலம் 100 வருடங்களுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை அதிகாரப்பூர்வமாக திரு. சந்திரசேகர் நம்பிய காரணத்தால், காபியின் சுவை எப்படி இருக்கும் என்பதே மறந்து போய்விட்டது சரவணனுக்கு. மிகுந்த சிந்தனைக்குப் பின் பார்வதியம்மாள் தான் கண்டுபிடித்த இந்த விஷயத்தை தயங்கி தயங்கி கூறினார் திரு. சந்திரசேகரிடம்.


‘காபிதான சாப்பிடக் கூடாது பால் சாப்பிடலாம்ல. பால் உடம்புக்கு நல்லதுதான’


திரு. சந்திரசேகரின் பெருமூளையை, பார்வதியம்மாளின் இந்த வார்த்தைகள் கடுமையாகத் தாக்க சிந்தனை வயப்பட்டார். ஒரு வாரத்திற்குப்பின் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார். கறந்த பாலை அப்படியே சாப்பிடுவது என்ற முடிவு. மிரண்டு போனார் பார்வதி அம்மாள். நீராகாரத்தின் அருமை பெருமைகளை தற்பொழுதுதான் உணர ஆரம்பித்திருக்கிறார்.


சரவணன் தன் அதிபுத்திசாலித்தனமான அறிவைப் பயன்படுத்தி 12 ஆம் வகுப்பு வரை முடித்துவிட்டான். அதற்கு மேல் படிக்க மூளை இடம் தராததால் அது தன்னைத்தானே நிறுத்திக்கொண்டது. சரவணன் மேல் எந்த தவறும் இல்லை. அவன் என்ன செய்வான். இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.


திரு. சந்திரசேகர் முதன் முறையாக தோற்றது தன் தமையனிடம் தான். 5 வருடங்களுக்கு முன்னர்தான் ஆர்மியிலிருந்து ரிடையர்டு ஆகியிருந்தார். அங்கிருந்து அவரை விரட்ட வேண்டியதாயிருந்தது. தான் அங்கு இல்லாவிட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்று சீரியசாக நம்பினார். கணவனின் வருகை வருத்தத்திற்குரியதாக அமைந்தது பார்வதியம்மாளுக்கு மட்டும்தான்.


அன்று சரவணன் அந்த வார்த்தையை கேட்டிருக்கக் கூடாது தான். ஆனால் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. எப்படி கேட்காமல் இருக்க முடியம்? எத்தனை தமிழ் படங்களில் பார்த்தாயிற்று. நேரில் சிக்கியது சந்திரசேகர்தானே.


‘அது ஏம்ப்பா ஆர்மில இருந்து வர்ற எல்லோரும் அந்த டிரெஸ்ஸ கழட்டாம அப்படியே வர்றிங்க. இந்த வெயிலுக்குப் புழுக்கமா இல்ல’


திரு. சந்திரசேகர் பாகிஸ்தான்காரனைக் கூட அப்படி முறைத்துக் பார்தது இல்லை. அப்படி ஒரு கடுமையான முறைப்பு. சரவணனுக்கு அன்று ஆரம்பித்தது சனி. கிருஸ்தவர்களின் 10 கட்டளைகள் போல சரவணனுக்கும் விதிக்கப்பட்டது 10 கட்டளைகள்.


அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். இது ஒரு மிகக்கொடூரமான தண்டனை சரவணனை பொறுத்த வரை. அவனை அதிகாலையில் எழுப்புவதற்குத்தான் எத்தனைவிதமான பிரயத்தனங்கள். என்னதான் ரூல்ஸ் சந்திரசேகராக இருந்தாலும் தொடைகள் சிவக்க பிரம்பாள் அடித்து எழுப்புவது எந்தவொரு தந்தையும் செய்யத் தயங்கும் விஷயம் தான். ஆனால் சரவணனுக்கு எங்கே போயிற்று புத்தி. குடம் தண்ணீரை முகத்தில் ஊற்றிய பொழுதே எழுந்து இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன பிரம்படிக்கு திரு. சந்திரசேகரை நரகத்தில் எண்ணெய் சட்டியில் வறுபடுமாறு சபித்தது சற்று அதிகம் தான். சரவணன் தந்தையென்றும் பாராமல் சபித்துவிடுவான். தந்தை-மகன் இருவருக்கும் இடையே உறவுப்பாலம் அமைக்கும் பணியில் அடிக்கடி மூக்கறுபடுவது பார்வதியம்மாள் வாங்கி வந்த சாபங்களுள் ஒன்று


‘என்னங்க பிள்ளைய இப்படியா பிரம்பால அடிக்கிறது. பாவங்க’


‘இவனுக்கு இப்படி செல்லங்கொடுத்து கெடுத்து வச்சிருக்கிறதே நீதாண்டி’


‘பளார்’


‘இனிமே இவனுக்கு பரிஞ்சு பேசுன’


‘பளார்’


‘தோலை உறிச்சிடுவேன்’


‘பளார்’


பார்வதியம்மாள் மீதும் தவறு இருக்கத்தான் செய்தது. அடிப்பதற்கு வாகாக இப்படியா கண்ணங்களை காட்டிக்கொண்டு நிற்பது. அதுவம் திரு. சந்திரசேகரிடம். ஒரு 234 பளார்களுக்குப் பிறகு பார்வதியம்மாள் தன் கன்னங்களை காத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டார். அதன் பின் எதுவாக இருந்தாலும் 5 அடி தள்ளி நின்றுதான்.


அடுத்ததாக வேப்பங்குச்சி.


‘வடக்கே வேப்பங்குச்சிக்கு எங்கே போனார் இந்த அப்பா. காஷ்மீரில் கூடவா வேப்பமரம் இருக்கும். ஆச்சரியமாக இருக்கிறதே.’


சரவணனின் கசப்பான் சிந்தனைகளை அவ்வப்பொழுது ரூல்ஸ் சந்திரசேகரின் குரல் கலைத்துக் கொண்டே இருக்கும்.


‘வேப்பங்குச்சில பல் விலக்குனா எவ்வளவு நல்லது தெரியுமா? வயித்துல் ஒரு புழு பூச்சி இருக்காது. எல்லாம் செத்துடும்’


ஆனால் தான் சாகாமால் இருக்க வேண்டுமே. கோல்கெட் பேஸ்டை குச்சியின் முனையில் தடவிக் கொண்டு, கசப்பும் இனிப்புமாக, அது என்ன விதமான சுவை. வயிற்றை பரட்டிக் கொண்டு வருகிறது. வாந்தியெடுப்பதை விட கொடுமையானது ரூல்ஸ் சந்திர சேகரின் இந்த வார்த்தைகள்தான்.



‘பாத்தியா வேப்பங்குச்சியோட மகிமைய. உடம்புல இருக்குற பித்தமெல்லாம் வெளிய வந்திடுச்சு’


பித்தம் மட்டும் இல்லை. மொத்தமும் வெளியே வந்த பின்னும் நிதானிக்க விட மாட்டார் ரூல்ஸ். தலை ரங்கராட்டினம் சுற்றுவது போல சுற்றிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த வாளி நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து குளிக்க சொல்லுவார். சரவணன் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததேயில்லை. அதிகாலை 5.15க்கு அதுவும் கிணற்று தண்ணீர், அந்த குளிருக்கு ரத்தம் உறைந்து விடும். தண்ணீருக்குள தனது சுண்டுவிரலை விட்டுப்பார்த்தான். ஷாக் அடித்தது போல் வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டான். தந்தையை பரிதாபமாகப் பார்த்தான்.


‘அப்பா ரொம்ப குளிரா இருக்குப்பா’


பஸ்கி எடுத்து கொண்டே ரூல்ஸ் இவ்வாறு கூறுவார்.


‘இதெல்லாம் என்னடா குளிரு. காஷ்மீர்ல பனிக்கட்டிமேல நின்னுகிட்டு குளிப்போம்டா நாங்கல்லாம். சரி சரி பேசிகிட்டு இருக்காம சீக்கிரம் குளிச்சிட்டு வா’


தூரத்திலிருந்து பார்வதியம்மாள் தனது மகன் படும் அவஸ்தைகளை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருப்பார். சரவணன் தனது சரித்திர சாதனையை தொடங்குவதற்கு முன் தன் தாயை சோகமாகப் பார்த்தவாறு மானசீகமாக இவ்வாறு கூறுவான்.


‘அம்மா. குளிச்சிட்டு உயிரோட இருந்தா வர்றேன். நாலு இட்லிய எடுத்து வையி’


அந்த இட்லியை விழுங்கக் கூட முடியவில்லை. அவ்வளவு சக்தியையும் உறிஞ்சிவிட்டார் ரூல்ஸ். இனிமேல் பள்ளிக்குச் சென்று எப்படி படிப்பது. சரவணன் அப்பொழுது 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இது போன்ற கொடுமைகள் எல்லாம் நடக்கும் பொழுது அவன் பாலகன். தந்தையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஆனால் இன்று 5 வருடங்கள் கடந்துவிட்டன. சரவணனுக்கு மீசை வேறு முளைத்துவிட்டது. சரவணனால் சகித்துக்கொள்ளப்பட முடியாத அந்த விஷயம் தான் அன்று ஒரு நாள் அவனை எதிர்செயல் செய்ய வைத்தது. ரஜினிக்காந்தின் தீவிர ரசிகனான சரவணனின் சிலுப்பிக்கொண்டு நிற்கும் முடிக்கற்றைகளை (வெகுநாட்களாக பிடிவாதமாக தற்காத்து வைத்திருந்தான்.) அன்றிரவு அவன் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது மெஷின் கட்டிங் செய்து விடாமல் இருந்திருந்தால், சரவணன் இன்றும் ஒரு அடிமைதான். ஆனால் ரூல்ஸ்ஸின் போதாத காலம் இப்படியா கரையான் புற்று மாதிரி கந்தர கோலமாக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து எடை குறைந்த அவன் தலையை கண்ணாடியில் பார்த்தபின் மூளை குழம்பாமல் இன்றுவரை இருக்கிறான் என்றால் அது ஆச்சரியம் தான். உள்ளுக்குள் இருந்து பொங்கி எழுந்த கோபத்தில், வேறு சில விஷயங்களும் பொங்கி வந்து விட்டது. தைரியம், அசட்டுத் துணிச்சல், அடங்காத தன்மை, எதிர்த்து பேசும் திறன் போன்ற அனைத்தும் அபரிமிதமாக பொங்கி வந்துவிட்டது. பார்வதியம்மாள் அன்று அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தன் மகனை ஈன்றதன் பலனை அன்று அடைந்து விட்ட மகிழ்ச்சியை திருட்டுத்தனமாக ப்ரூ காபி குடித்துக் கொண்டாடினார்.


அன்று ஒட்டு மொத்தமாக 2000 வோல்ட் கரண்ட் உள்ளே இறங்கியதைப் போல நொந்து போய் உட்கார்ந்திருந்தார் ரூல்ஸ். காதுகளில் இருந்து புகை வராத குறை. அவ்வளவு நாராசமாக பேசி விட்டான். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வதே இல்லை.


இரு எதிரிகள் ஒரே சிறைக்குள் அடைக்கப்பட்டது போல. ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு. இப்படியொரு சங்கோஜமான சூழ்நிலையில் இருவரும் 2 வருடங்களை கடத்திவிட்டார்கள். சரவணன் தனது நல்ல பழக்க வழக்கங்களை மீட்டு கொண்டுவர கடுமையாக போராட ஆரம்பித்துவிட்டான். காலை வெகு நேரம் கழித்து எழுவது, பல் துலக்காமல் காபி அருந்துவது, மதிய வெயிலில் வெந்நீரில் குளிப்பது. இருப்பது ஒரு லைப் எதற்காக சிரமப்படுத்திக் கொள்ள வேண்டும்.


இப்பொழுதெல்லாம் தினசரி காலை ப்ரூ காபிதான். முன்னரே இது போல் நடந்து கொண்டிருக்கலாமோ? என்று தோன்றியது. தேவையில்லாமல் 5 வருட வனவாசம். சமீபகாலமாக காபி குடிக்கும் பொழுது விநோதமான சத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தான். அது ரூல்சை வெறுப்பேற்றுவதற்கான யுக்தி. அன்று ஒரு அதிகாலை வீட்டிற்கு வந்த சந்திரசேகரின் நண்பர் ஒருவர்


‘என்ன நீங்களும் எருமை மாடு வளர்க்கிறீர்கள் போல’


இல்லையென்று கூறினால், நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். வீட்டைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தார்.


‘நான்தான் கேட்டேனே. அந்த எருமை கழனி தண்ணி குடிக்கும் சத்தத்தை’


திரு. சந்திரசேகர் எப்படி பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும். அது தன் பையன் ப்ரூ காபி குடிக்கும் சப்தம் என்று. அப்படியே கூறி அவனை அவமானப்படுத்தினாலும் அவன் என்ன திருந்தவா போகிறான். மேலும் வெறுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு டி.டி.எஸ். எபெக்டில் சத்தத்தை ஏற்றுவான்.


எத்தனை முறை மண்டையில் அடி வாங்கியிருக்கிறான். சாப்பிடும்பொழுது சத்தம் வரக்கூடாது. தண்ணீர் குடிக்கும் பொழுது வாய் வைத்து குடிக்கக் கூடாது. தும்மல் வந்தால் கூட சத்தம் வரக்கூடாது. சைலன்சர் மாட்டிய துப்பாக்கியை போலத்தான் தும்ம வேண்டும். மடார்....... மடார்...... என அவன் மண்டையில் வாங்கிய அடிகள். மண்டைக்குள் அதிகம் பயன்படுத்தப்படாமல் மேலும் துருப்பிடித்து விடாமலும் இருந்த மூளையின் நியூரான் செல்களுக்குள் பழிவாங்கும் உணர்ச்சியுடன் பதிய வைக்கப்பட்டு கிடந்தது உண்மைதான். இல்லையென்றால் ஒரு அடிமைக்கு வீரம் வர அடிப்படை ஆதாரம் வேறு எதுவாக இருக்க முடியும்.


பின் ஒரு நாள் கல்லூரியில் படிக்கும் ஆர்வம் சரவணனை பிடித்து ஆட்டியது. இதை ஏதோ கடமை உணர்ச்சி என்று நம்பி ஏமாறுவது. அனைத்து தந்தைமார்களின் இயல்பான குணம் தான் என்றாலும், திரு. சந்திரசேகர் சற்று நிதானித்திருக்கலாம். இன்று ஜீசஸ் உயிரோடு இருந்திருந்தால் ரூல்சுக்கு இவ்வாறு போதித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.


‘நீ உன் நண்பனை நேசிப்பதில் என்ன இருக்கிறது. உன் எதிரியை அல்லவா நேசிக்க வேண்டும்’ என்று


திரு. சந்திரசேகர் தனது சேமிப்பிலிருந்து 50.000 ரூபாயை எடுத்து சரவணனை கல்லூரியில் சேர்த்துவிட்டார். சரவணனுக்கு கூட லேசாக சந்தேகம் வந்தது. தந்தை பாசம் என்பது உண்மையோ? என்று. சந்தேகத்திற்கு காரணமுண்டு.


சில வருடங்களுக்கு முன், என்னதான் ஆண்சிங்கம் போன்று அழகாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் தலைமுடியை பெற்றிருந்தாலும், எண்ணெய் வைக்காத செம்பட்டைத் தலை சற்று அசிங்கமாக இருந்தது என்று நினைத்தானோ என்னவோ கேசத்தை கருமையாக்கும் முயற்சியில் இறங்கினான். அதிகமில்லை 10 ரூபாய் தான் கேட்டான் ரூல்சிடம். அவரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது. சற்று அடம் பிடித்து பார்க்கலாம் என்று நினைத்து. கண்ணில் நீர் வரும் அளவிற்கு லேசாக முயற்சித்தான். சிறுவர்களை முதுகில் குத்தும் இந்திய தந்தையாக மட்டும் இருந்துவிட்டு போயிருக்கலாம் திரு. ரூல்ஸ். இப்படியா? அடுத்த நாள் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவன் தலையை மிஷின் கட்டிங் செய்து விடுவது. அந்த சரித்திர நிகழ்ச்சி அன்றுதான் நடந்தது.


10 ரூபாய் கோத்ரேஜ் டைக்காக தலையில் கைவைத்த கயவர் அல்லவா இந்த ரூல்ஸ். இன்று தனியார் கல்லூரியில் 50 ஆயிரம் ரூபாய்....... இது சற்று அதிகமாகத்தான் தோன்றுகிறது. இருப்பினும் இந்த முக்கயமான 50 ஆயிரம் ரூபாய் நிகழ்வு சற்று நடுக்கத்தை கொடுத்தது சரவணனுக்கு. தான் ஏதேனும் தவறு செய்கிறோமோ? எதற்கும் கலங்காத நெப்போலிய மனம் கொண்ட (கடந்த சில ஆண்டுகளாக மட்டும்) சரவணனின் மனம் கூட சற்று நடுங்குகிறது என்றால் காரணமில்லாமல் இல்லை.


சரவணனும் வயதிற்கு வந்து 7. 8 வருடங்களை கடந்திருப்பான் என்றுதான் தோன்றுகிறது. எவ்வளவு நாள் நல்லபிள்ளை பேர் வாங்குவதற்காக சும்மாவே இருக்கமுடியும். இந்த இந்திய மடையர்களுக்கு இது புரிவதேயில்லை. இவர்கள் எல்லாம் எப்படி 110 கோடியை பெற்றுத் தள்ளினார்கள். நிச்சயமாக சுயநலவாதிகளாகத்தான் இருக்க வேண்டும். தான் நிறைந்தால் போதுமென்று. கருணையேயில்லாதவர்கள்.


அந்த அழகான இளம் பெண்ணுக்கு சரவணன் என்றென்றும் கடமைபட்டவனாக இருக்கத்தான் வேண்டும். அவள் மட்டும் இல்லையென்றால் தான் ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்ற நினைப்பே எழுந்துவிடாமல் அல்லவா போயிருக்கும். அவள் பின்னே அந்த கல்லூரிக்கும், அவள் வீட்டுக்குமாக 365 நாட்களை கழித்தபின் கால் வலித்ததோ என்னவோ, அவளை அருகிலிருந்தே பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்ததோ என்னவோ, அடுத்த ஆண்டே கல்லூரியில் சேர்ந்துவிட்டான். இன்றும் அவன் அவள் பின்னேதான். முன்னோர்கள் சும்மாவா கூறினார்கள். ஒவ்வொரு ஆணின் பின்னேயும் ஒரு பெண் இருக்கிறாள் என்று. ஆனால் ஏன் தலைகீழாக சொல்லி வைத்தார்கள் என்றுதான் புரியவில்லை.


யாரோ கூறினார்கள் ஐன்ஸ்டினின் சார்பு விதியைப் பற்றி இப்படி. ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள். நேரம் போவதே தெரிவதில்லை ஆனால் நேரம் போவது தெரிகிறதென்றால் அவள் 50 வயதைக் கடந்து விட்டாள் என்பது உறுதி. சரவணனுக்கு 2 வருடங்கள் போனதே தெரியவில்லை. அவளுக்கு வேறு 21 வயதுதான். ரூல்ஸ் சந்தோஷப்பட்டார். காரணம் சரவணன் ஒரு நாள் கூட கல்லூரிக்கு விடுப்பு எடுத்ததில்லை. இவ்வளவு நேர்மையை இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்திருந்தான். அனைத்துக்கும் நேரம் வர வேண்டும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.


அவன் 3 ஆண்டுகள் கல்லூரியை முடித்துவிட்டு வெளியே வந்தபொழுது ரூல்சால் நம்பமுடியாமல் போன விஷயம் அந்த ஒன்றுதான். அவன் ஏன் 14 அரியர்களை வைத்திருக்கிறான் என்பது. வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என 3 வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய். பின் கோபம் வரவில்லை என்றால் எப்படி. அன்று நடந்த சண்டையில்தான் ரூல்சுக்கு முதல் ஹாட் அட்டாக் வந்தது. தமையனும். மனைவியும் பதறிய பதறலில் உள்ள அன்பை, ரூல்சின் வலித்துக் கொண்டிருந்த இதயம் சற்று நிதானித்து லேசாக உணர்ந்தது. உணர்வதற்கெல்லாம் ஒரு நேரங்காலம் வேண்டாமா?


பின் மருத்துவரின் அறிவுரைபடி ரூல்ஸ் தனது விறைப்பை குறைத்துக் கொண்டார். இப்பொழுதெல்லாம் நன்றாக தூங்கினார். காலை வேளையில் பால் அருந்தினார். மனைவியை அதிகமாக கடிந்து கொள்வதில்லை. சரவணனுடன் மீண்டும் பேசுவதில்லை. சரவணனும் ரூல்சின் இத்தகைய மன மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களை கண்டு இவ்வாறு தன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.


‘யார், யார்க்கு, எங்க எங்க, எப்ப எப்ப, எப்படி எப்படி எல்லாம் ஆப்பு வைக்கனும்னு கடவுளுக்கு நன்றாகவே தெரிஞ்சிருக்கு’


ஆனால் கடவுள் ஒன்றும் ஒன் சைடு வக்கீல் அல்லவே. அவர் ஒரு நடுநிலை தவறாத நீதிபதி அல்லவா? சரவணனை மட்டும் சும்மாவா விட்டுவிடுவார். ரூல்சிற்கு கொடுத்த அதே ஹாட் அட்டாக்கை சரவணனுக்கும் கொடுத்தார். இது சற்று அதிகம் தான். 26 வயதில் ஹாட் அட்டாக். ஆம் அந்த அழகான இளம் பெண்ணுக்கு இன்னொருவனுக்கும் அன்று திருமணம். வாழை மரத்துக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து ப்ரூ காபி குடிப்பது போல் மடக் மடக்கென்று குடித்து விட்டால் உயிர் போய் விடுமா என்ன? அதில் மேட் இன் இந்தியா என்று போட்டிருப்பதை ஒரு முறையாவது படித்திருக்க வேண்டும். நல்ல வேளை கலப்பட மருந்து என்பதால், போன வருடம் ரூல்ஸ் படுத்து கிடந்த அதே பெட்டில் தொங்கவிடப்பட்ட குளுகோஸ் பாட்டில் மற்றும் வாய்க்குள் தொப்புள் வரை இறக்கப்பட்ட ட்யூப் என பரிதாபமாகக் கிடந்தான். கடவுள் எவ்வளவு நேர்மையானவர்.


உறவுகளுக்கிடையே காணப்படும் அசாதாரணமான இந்த பண்பு ஆச்சரியமான விஷயம். பல வருட வெறுப்பு. ஒரே ஒரு நிகழ்வின் மூலம் அன்பாக மாறிப் போவது. ரூல்சின் இந்த செயல் நம்ப முடியாதது. அவர் மயக்கத்திலிருந்த தனது மைந்தனின் அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் மூக்கிலிருந்து வழியும் சளியை தனது வேஷ்டியால் துடைத்து விட்டுக் கொண்டிருந்தார்.


உண்மையான அன்பு உணரப்படுவதே இல்லை. சரவணன் ரூல்சின் அன்பை புரிந்து கொள்ளாததை போல, அந்த அழகான இளம்பெண் சரவணனின் அன்பை புரிந்து கொள்ளாததை போல. வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளுக்கு நடுவே அழுத்தமாக உணரப்படும் அன்பு ஒவ்வொரு முறையும் சில விஷயங்களை உணர்த்த காத்து கொண்டிருக்கிறது. சளியை துடைத்துகொண்டிருப்பவர் தனது தந்தைதான் என்பதை அரை மயக்கத்திலிருக்கும் சரவணன். ஏதேனும் ஒரு உந்துதலின் பெயரில் லேசாக உணரப்படும் பட்சத்தில், அவனுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்தற்கரிய அழகான வாய்ப்பு. அழுத்தமான அன்பை உணர்வதற்கு கிடைக்கும். ஒரு வேளை இந்த மலர்தல் நடக்குமானால் சரவணன் துரதிஷ்டசாலி அல்ல என்பதை முழுமையாக நம்பலாம். கடவுள் நேர்மையானவர் தானே.?


- சூர்யா


நன்றி கீற்று, திண்ணை

Sunday, August 22, 2010

குறுக்குப் புத்தி பிள்ளையார் ஒழிக

தொலைக்காட்சியில் அந்த பழைய சினிமா ஓடிக்கொண்டிருந்தது. கடைசியாக இந்த ஒரு சினிமாவை மட்டும் பார்த்துவிட்டு ஆரம்பித்துவிட வேண்டியதுதான். இருந்தாலும் ஏதேனும் ஒரு புது சினிமா போட்டிருக்கலாம். திருவிளையாடலில் பிள்ளையார் முருகனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை எத்தனை முறைதான் பார்ப்பது. இருந்தாலும் என்னவொரு ஜுனியஸ் இந்த பிள்ளையார். இவர் தான் எனது முன்னுதாரணம்.
குறிப்பிட்ட தேவையான விஷயத்தை ஆழமாக நம்புவது குறித்த விஷயத்தில், ஏன்?, ஏதற்காக? என்ற கேள்விகள் இன்னமும் முழுமையாக அழியவில்லை என்னுள். காரணமில்லாமல் காரியமில்லை என்பது எவ்வளவு உண்மையாக இருப்பினும் ஏதோ ஒரு விஷயம் காரணங்களை பற்றி யோசிக்காமல் முட்டாள் தனமாக போய்க்கொண்டே இரு, என்று உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கிறது. அது முட்டாள் தனமானது தானா என்ற முழுமையான முடிவுக்கும் வர முடியவில்லை. அரைகுறைத்தனம் ஒவ்வொரு நிமிடமும் வெறுப்பை உமிழ்ந்தபடியே இருக்கிறது. எனக்கு தேவை முழுமை. எனக்குத் தேவை தெளிவு. நான் தளர்ந்து விட்டேன் இருப்பினும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கடலின் நடுவில் போய்கொண்டிருக்கும் பொழுது கப்பல் மூழ்கிப் போனால் நாமும் மூழ்கவா முடியும். மிதந்து திரிய ஏதேனும் செய்து தானே ஆக வேண்டும். நான் டி.என்.பி.எஸ்.சி பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அவ்வளவுதான் விஷயம். நான் இன்னமும் நம்பிக் கொண்டிருந்தேன், இல்லை எனது நம்பிக்கை தளர்ந்து விட்டது. இல்லை இல்லை சரியாகச் சொல்லத் தெரியவில்லை. நான் மிதந்து திரிய. நான் வாழ்ந்து திரிய ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக , எதையாவது செய்ய வேண்டும் அல்லவா?. நான் இந்த அளவு தெளிவாக இருப்பது குறித்து சிறிது பெருமைப் படுகிறேன். ஆம் நான் ஏதோ செய்து கொண்டிருக்கிறேன் என்கிற அளவிற்கு தெளிவு.
இறப்போடு நடக்கும் போராட்டம் குறித்து அதை வெற்றி பெற எனக்கு என் ஆறாவது அறிவால் சுட்டிக் காட்டப்பட்டது கடின உழைப்பு, ஏதேனும் நடக்கும். வெற்றி அல்லது தோல்வி. ஆனால் நிச்சயமாக கடின உழைப்பும் இறப்பை நோக்கித்தான் அழைத்துச் செல்கிறது என்பது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். இரவு மூன்றரை மணிக்கு இந்திய பொருளாதாரத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்து சாகாமல் வேறு என்ன நடக்கும். பைத்தியம் பிடித்தாலும் சரி விடுவதாக இல்லை. ஏதேனும் ஒன்று நடந்தாக வேண்டும். வெற்றி அல்லது தோல்வி.
கடினமான சூழ்நிலையில் நிமிடங்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது மனமானது இன்பத்தை நாடும் நாட்டத்துடன் தீவிரமாக துடித்துக் கொண்டிருக்கும். அதையும் மீறி லட்சியத்துக்கான செயலில் ஈடுபட்டிருக்கும் பொழுது லட்சியமானது கரும்புச் சக்கையை விட மேலானதாக இருப்பதில்லை. எதற்காக என்ற கேள்விக்குறி நொடிக்கொரு முறை ஊதிப் பெரிதாகிக் கொண்டே போகிறது. இருட்டு இயல்பாகவே இருக்கிறது. வெளிச்சத்துக்கு தான் மூலப்பொருள் தேவையாய் இருக்கிறது. மனிதன் இயல்பாகவே கெட்டவனாக இருக்கிறான். அவன் நல்லவனாய் இருப்பதற்குத் தான் முயற்சிகள் தேவையாய் இருக்கிறது. ராவணன் சாசுவதமானவன். ராமன் தான் உருவாக்கப்பட்டவன். உருவாக்கப்பட்டவனாய் மாறுவது தேவைக்காக மட்டுமே உபயோகமாகிறது மற்ற படி அது இம்சையான இம்சை. எதற்காக என் சிந்தனை இரவு 3.30 மணிக்கு இப்படி போகிறது. பேசாமல் படிக்கும் வேலையை செய்யலாம். யாராவது துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினால் எனது படிக்கும் வேலை சிறிது லகுவாக மாறலாம் என்று தோன்றுகிறது.
விவேகானந்தர் கூறுவார் செயல்பட்டுக்கொண்டே இரு, மயக்கமடையும் வரை, பின் இறக்கும் வரை, ஒரு வேளை இறந்து விட்டால் என் ஆன்மா உன்னோடு இருந்து பணி செய்யும். செயலில் இருக்கும் பொழுதே சிந்தனை நழுவி இறப்பிற்குள் செல்வது என்பது எவ்வளவு அசாதாரணமான விசயம். அதற்கெல்லாம் என்னவொரு லட்சிய வெறி வேண்டும். நானும் அப்படித்தான். நான் ஒன்றும் சாதாரணமான ஆள் இல்லை. அசாதாரனமானவன். நானும் வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தேன். என் உடல் நடுங்க ஆரம்பித்தது. கைகளை தூக்கிப் பார்த்தேன் ஆம் உண்மைதான். நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் ஈரப்பதமே இல்லை. காய்ந்து வரண்டு போய் கிடந்தது. உட்கார்ந்திருந்தால் தூக்கம் ஆழ்த்திவிடும் என்று எழுந்து நடந்து கொண்டே படிக்க ஆரம்பித்தேன். கால்கள் துவண்டன. மீண்டும் அமர்ந்தேன். தூக்கம் பேய்த்தனமாக ஒரு சுனாமி அலையை போல் ஏறி அமுக்கிக் கொண்டிருந்தது. மணி 4.15. இது முதல் நாள் அல்ல. 3 வது நாள். நினைவு நழுவி விடுமோ என்று பயமாக இருந்தது. விடுவதாக இல்லை. மனம், உடல், நினைவுகள் அனைத்தும் என்னிச்சை மீறி தன்னிச்சைக்குள் செல்ல ஆரம்பித்தது. என் கட்டுப்பாட்டிலிருந்து அனைத்தும் நழுவ ஆரம்பித்தது. ஐயோ என்னால் முடியவில்லை. கண்கள் சொருகி சொருகி, இரண்டு, மூன்று முறை நினைவு நழுவி, வந்து என, தீபம் எண்ணெய் இல்லாமல் அணைய துடிப்பது போல், என் நினைவு நழுவியது. எல்லாம் முடிந்தது.
அந்த கடைசி நொடியில் இது தான் இறப்போ என்று நினைத்தேன். விழித்த பொழுதுதான் தெரிந்தது நான் சாகவில்லை என்று, மணி மதியம் 2.30 உடலின் சக்தியைவிட மனதின் சங்கல்பம் சக்தி மிகுந்தது என்று படித்திருக்கிறேன். என் நினைவை தொலைப்பதற்காக இயற்கை செய்த ஏற்பாடு எதற்காக என்ற கேள்வி என் கோபத்தின் விளைவு தான். 10 மணி நேரம் வீணாகிப் போனதே. என்னை இயக்குவது, என்னை நான் இயக்குவதின் கடைநிலையின் விளிம்பிலிருந்து தொடங்குகிறது. அது ஏன் என்னை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்கிறது. சீரடைவு என்பது இயற்கையின் சர்வாதிகார கரத்திற்குள அடைபட்டு கிடக்கும் விதிகளுள் ஒன்றாக இருக்கிறதோ?. அதை உடைக்கும் முயற்சியில் எத்தனை நூற்றாண்டுகளாக மனிதர்கள் போராடி வருகிறார்கள். நான் சீரடைவை தாண்டிச் செல்ல விரும்புகிறேன். நான் அசாதாரணமானவன். எனக்கு இயற்கையின் ஏற்பாடு தேவையில்லை. நான் இயற்கையை மீறி செல்ல விரும்புகிறேன். இயற்கையின் சர்வாதிகாரத்துக்குள் சிக்க விரும்பவில்லை நான். ஒரு முறை தோற்று விட்டால் நான் தோற்றுவிட்டதாக அர்த்தமா? இல்லை , மீண்டும் முயற்சிப்பேன். ஆம் நான் அசாதாரணமானவன்.
இப்படியெல்லாம் பேசுவது என்னை நான் தேற்றிக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடோ என்கிற சிறு தாழ்வு மனப்பான்மை அவ்வப்பொழுது எட்டிப்பார்ப்பதை நான் கவனிக்காமல் இல்லை. இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. எங்கே என் புத்தகத்தை, அதோ கட்டிலுக்கு அடியில்........ பாய்ந்து பற்றினேன்.
என்னவொரு வெறித்தனமான ஒன்றுதல், இந்த உலகத்தின் பரிணாமத்திலிருந்து வேறொரு உலகத்தின், புத்தக உலகத்தின் பரிணாமத்துக்குள் புகுந்து எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தேன். நான் தன்னிச்சை பெற்றேன். விழிப்போடு தன்னிச்சை பெற்றேன். நான் இழுத்துச் செல்லப்பட்டேன். விழித்துப் பார்த்த பொழுது மணி 7.00 இடையில் என்னை அறியாமல் சாப்பிட்டது போல் தோன்றியது. யாரோ எனது அருகில் உணவை வைத்துவிட்டு சென்றது போல் தெரிந்தது. அது என் அம்மாவாகத்தான் இருக்கும். திடீரென்று நியாபகம் வந்தது. நான் பல் விலக்க வில்லை. வாய் நாறியது நான் எதற்கு கவலைப்பட வேண்டும். நான் தன்னிச்சை பெற்று விட்டேன். அது பார்த்துக் கொள்ளும், பசித்தால் வயிறு உண்டு கொள்ளும். தூக்கம் வேண்டும் என்றால் உடல் தூங்கிக் கொள்ளும் .என்னை யாரும் தொந்தரவு செய்ய முடியாது. நான் மீறி நிற்கிறேன். இருந்தாலும் வாய்நாற்றம் தாங்க முடியவில்லை. சற்று சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பல்துலக்கிவிட்டு வந்தேன். நேர்மையான சிந்தனைகளுக்கு நடுவில் சிந்தனையை மீற, சிந்தனையை உருவாக்குபவனுக்கு உரிமை உண்டு. ஆம் இதுவும் எனது சிந்தனைதான். எனது சுயநலம், எனது சிந்தனை, எனது சுயநலத்துக்கு தகுந்தாற்போல் என் சிந்தனை மாறி உருக்கொள்ளும் விதம், அதை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளச் செய்யும் இயற்கையின் பண்பை பற்றி யோசித்தால் தலைப்பகுதியின் நடுப்புறத்தில கடுமையாக வலிக்கிறது. இயற்கை தன் சர்வாதிகாரத்தனத்தை எப்படியெல்லாம் உபயோகப்படுத்துகிறது. ஆம், நான் அடிமை, முழுமையான அடிமை. இருந்தாலும் விடுவதாயில்லை. வெற்றி அல்லது தோல்வி. எங்கே அந்த புத்தகம். பாய்ந்து சென்று பிடி.
ஒரு அடிமைக்கு இந்த பண்பு கூட இல்லை என்றால் எப்படி. எதிர்த்து நில். துணிந்து நில். இது தான் நான் உயிர் வாழக் காரணம். என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டிருக்கிறது ஆயிரமாயிரம் சர்வாதிகாரக் கரங்களை பரப்பி விரித்த படி இயற்கை. பாடிக்கொண்டே வயலில் வேளை செய்தால் களைப்பு தெரியாது. என் பாட்டி சொன்னது. தன்னம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக் கொண்டே லட்சியப் பாதையில் நடைபோடு நீ சாவது கூட உனக்கு தெரியாது. இதை நான் எனக்கே சொல்லிக் கொண்டது. கண்ணை மூடினால் நான் தூங்கிவிடுவேன். நான் என் கண்களை மூடும நேரத்தை குறைத்துக் கொண்டேன். இந்த பயிற்சி ஆரம்பத்தில் சற்று கடினமாகத்தான இருக்கும். தூக்கம் வெல்லும் கலையை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.
தலை வீங்கியது போல் ஓர் உணர்வு. இந்த ஒன்றரை மாதத்தில் அரை இஞ்ச் என் தலை வீங்கிவிட்டது. நான் கூறியதை யாரும் நம்பவில்லை. கேட்டுவிட்டு சிரிக்கிறார்கள். அந்த நான்காவது ஆளிடம் இதைக் கூறும் பொழுது அவன் சத்தம் போட்டு சிரித்தான். அவனது சத்தமான சிரிப்பிற்கு உட்பட்டு அருகிலிருந்தவர்களும் விரும்பியோ விரும்பாமலோ சிரிப்பிற்குள் சென்றார்கள். நான் அப்பொழுது தான் கவனித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்குள் அந்த எள்ளல் சிரிப்பொலிகளை கேட்டு கோபமோ. பச்சாதாபமோ. வெறுப்போ ஏற்படவில்லை. அவை தோன்றிய இடத்திலேயே வலுவிலந்து செத்து விழுந்தது. நான் அப்படியே இருந்தேன் திடப்பட்டு. இது என்ன நிலையோ. ஆடாமல் அசையாமல் தீபத்தை போல நிமிர்ந்தபடி அப்படியே.
புத்தகப் பக்கங்களுக்கு மத்தியில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேலும் நான் உயிரோடு இருக்கிறேன். கடுமையாக பயணித்துக் கொண்டு. கனவுகள் கூட நிஜமானதைப் போல உண்மை எது. போலி எது. இறந்தகாலம். ஏதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் அழிந்து போய், ஆஆஆ, தலை வலிக்கிறது. பேசாமல் படிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம். இரண்டு மணி நேரம்....... செல் போன் ஒலித்தது. என் அருகில் எந்த சுத்தியலும் இல்லை. என் செல் போன் தப்பித்தது. கோபம் எழுந்து அடங்கியதில் உடல் சோர்வடைந்தது. சுவிட்ச் ஆப் செய்ய முயன்ற அந்த வினாடி அதை கவனித்தேன். அது என் தோழி வெகு நாட்களுக்கப பின அவள் குரல் கேட்கும் ஆசை. ஆந்த ஹலோவை மட்டும் நான் சொல்லாமலிருந்திருந்தால் ஒன்றரை மணி நேரம் தப்பித்திருக்கும். அதற்காக வருத்தப்படாமல் இருந்திருந்தால் அடுத்த அரை மணி நேரம் தப்பித்திருக்கும். நேரம் விழுங்கும் பிசாசைபற்றி வெகுவான பாடங்கள் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டேயிருக்கும் சாபம். துணிந்து போராடு என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதை கேள்விக் குறியாக்கிக் கொண்டே இருக்கிறது.
எழுத்துக்களைத் தவிர எதுவும் தெரியவில்லை. தூங்கும் பொழுதும் எழுத்துக்கள் தான் கனவில்; கனவிலும் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறேன். என் கல்வி தொடர்ச்சி பெற்று விட்டது. நான் வென்றுவிட்டேன் என்ற மகிழ்ச்சி. தூக்கம் என்னை தோற்கடிக்க முடியாமல் தோற்றுப் போனது. அன்று அந்த சத்தம் என் கவனத்தை கலைப்பதாக இருந்தது. அதற்கு என் கவனத்தை கலைக்கும் அளவிற்கு சிறிது வலிமை இருக்கிறது என்பதை என் கவனம் சிறிது சிதறுவதிலிருந்தே தெரிகிறது. பல ஆயிரம பேர் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அடித் தொண்டை அதிர அவர்கள் கத்தும் கதறல். நானும் அது போல கத்தியிருக்கிறேன். உற்சாகத்தில் மிதந்திருக்கிறேன். பைத்தியம் பிடித்து அழைந்திருக்கிறேன். அதையெல்லாம் விட்டு விட்டு இன்று இப்படி உட்கார்ந்து புத்தகத்துள் மூழ்க எவ்வளவு சிரமம் பிடித்தது என எனக்கு நன்றாக தெரியும். தூக்கத்தையும் வென்றவனையும், வெல்லக் கூடிய துணிச்சல் அந்த சத்தத்திற்கு உண்டா என்ன? எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சச்சின் 99 ரன்களிலேயே அரை மணி நேரம் விளையடிக்கொண்டிருப்பார் என்று நான் என்ன ஜோஸியமா கண்டேன். சீக்கிரம் அடித்துவிட்டு போக வேண்டியது தானே. 5 நிமிடத்தில் முடிந்துவிடும் என்று தான் நினைத்தேன். முடிவில் என்ன நடந்தது தெரியுமா? இந்தியா தோற்றுப் போனது. நேரத்தை விழுங்கும் பிசாசு மறுபடியும் என்னை தோற்கடித்துவிட்டது. விடுவதாயில்லை. வேறு என்ன சொல்லிக் கொள்வது.
காலண்டரின் கணம் கரைந்தது. எதிர்பார்த்த நாளும் வந்தது. போர்க்கள உடை தரித்து செல்வதாயிருந்தாலும் அதற்கு நான் தகுதியானவனே. தோரணையுடன் மனதில் கணம் இன்றி கம்பீரமாக....... இந்த ஒரு நாளுக்காக எத்தனை நாள் போராட்டம். அந்த அரசு பேருந்து எனக்குத் தகுதியானது இல்லை. என் தனி ஒருவனுக்காக கார் ஒன்று அமர்த்திக் கொண்டால் அது ஒன்றும் தவறில்லை. ஆனால், ஆனால் நான் இந்த அரசு பள்ளியிலா??? பரிட்சை எழுதுவது. குப்பைத்தொட்டி போன்று இருக்கிறதே? தகுதியானவனை வரவேற்கத் தெரியாத இந்தியாவில் தானே இருக்கிறோம். வேறு என்ன செய்வது. சகித்துக் கொள்வோம். எனது இருப்பிடத்தை தேடிப்பிடித்து அமர்ந்தேன். நெஞ்சம் படபடக்க அங்கும் இங்குமாக சுற்றித்திரியும் மற்றவர்களை பார்க்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது. எனது பல வர்ண எழுது கோல்களை எடுத்து வரிசைப்படுத்திக் கொண்டேன். அந்த மணிச் சத்தம் ஐயோ அந்த மணிச் சத்தத்தை மாற்றவே மாட்டார்களா? இந்த அரசுப் பள்ளியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
எனது மூளைப் பிரதேசத்தில் தேடிப்பிடித்து. பதில்களை அலசி ஆராய்ந்து மிகக் கொடூரமாக எனது போரை 2 மணி நேரத்தில் முடித்துவிட்டேன். போர்க்களத்தை விட்டு வெளியேறினேன். மாணவர்கள் அனைவரும் உற்காச மிகுதியில் வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. என்னை விட வெற்றி உற்சாகத்தில் மிதந்த படி ஒருவன் வந்து கொண்டிருந்தான். நான் நுழைவதற்குள் அந்த தொலைபேசி பூத்துக்குள் அவன் புகுந்துவிட்டான். நான் விரும்பாவிட்டாலும் அவன் பேசிய வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தன.
‘ஹலோ......ஹலோ...... மாப்ள நீ கொடுத்த கொஸ்டின் பேப்பர் அப்படியே வந்துடுச்சுடா. நான் புல்லா அட்டன்ட் பண்ணிட்டேன். மீதி பணத்தை அந்த வாத்தியார்கிட்ட கொடுத்திடு. ஓகே....... ஆ.....ஓகே...... ஓகே..............................”
தங்கப் பதக்கம் படத்தில் மனைவி இறந்த செய்தி கேட்டு சிவாஜி தடுமாறியபடி நடப்பார். அப்பொழுது நான் சிரித்தப்படி படம் பார்த்தேன். ஆனால் நான் இப்பொழுது அப்படி நடப்பதை பார்த்து யாராவது சிரித்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அவர் சரியாகத்தான் நடித்திருக்கிறார். இதயம் ஏன் இவ்வளவு பலமாக வெடிக்கிறது. இல்லை துடிக்கிறது. எனக்கு சற்று பயமாக இருக்கிறது. எனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. முருகன் ஊரைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பொழுது பிள்ளையார் தனது குறுக்குப்புத்தியை பயன் படுத்தி பழத்தை பெற்றுக் கொண்டது தவறு தான். நான் ஒத்துக் கொள்கிறேன். ஆம் நான் கட்சி மாறிவிட்டேன். உலகத்ததை சுற்றியவனுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும், குறுக்கு புத்தி பிள்ளையார் ஒழிக.
எனது அழகான, தடிமனான 349 ரூபாய் செருப்பை பார்த்தேன். சத்தியமாக சொல்கிறேன். அந்த செருப்பு புத்தம் புதியது என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நான் அப்படி செய்து கொள்ளவில்லை. என்னையெல்லாம் பிஞ்சு போன பழைய செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்.
- சூர்யா

Friday, August 20, 2010

பதவி உயர்வு


24 மணி நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கக் கூடிய அந்த அலுவலகம் இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. வேலை செய்வதற்கென்றே பிறந்தவன் போல கம்யூட்டரும் பிரதீப்பும் ஒரு வித கடினமான பிணைப்போடு போராடிக் கொண்டிருந்தார்கள்.பிரதீப் 26 வயது இளைஞன். அனுபவிக்க வேண்டிய வயதில் கடினமாக உழைத்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று யாரோ சொல்லியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு கடினமாக போராடிக்கொண்டிருந்தான்.

ஆனால் வாழ்க்கையில் இனிமைதான் இன்னும் வர வில்லை. ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதே. விடாமல் போராடிக்கொண்டிருந்தான். இது வரை பதவி உயர்வு என்ற ஒன்றை அனுபவிக்கவே இல்லை. ஆனால் வேலையை மட்டும் கடைசி சொட்டு ரத்தம் சுண்டும் வரை வாங்கி விடுவார்கள். இந்த வேலையும் யாரோ ஒருவரின் சிபாரிசின் பேரில் கிடைத்தது. இந்த டேட்டா பேஸ் மெயிண்டைன் பண்ணும் தொழில் இத்தனை துயரம் இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. எத்தனை சிக்கல்கள். எந்த ஒரு சின்ன தவறானாலும் சுற்றி வளைத்து பிரதீப்பையே வந்தடைந்தது. ஒரு நாளைக்கு எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? வேலைக்கு சேர்ந்த ஆரம்ப காலங்களில் அவன் பேச்சு வாங்காத ஆளில்லை. ஆளாளுக்கு விரட்ட ஆரம்பித்தார்கள். பிறகு தான் புரிந்தது தான் எதுவும் பேசாமல் அமைதியாக திட்டுக்களை வாங்கிக் கொள்வதால் தான் ஏறி மிதிக்கிறார்கள். திருப்பி தாக்க வேண்டும். தாக்குதல் என்றால் என்னவென்று புரிய வைக்க வேண்டும். அடுத்தவர்கள தன்னிடம் பேசுவதென்றாலே யோசித்து பேசவேண்டும். அணுகுவதற்கு அபாயகரமானவனாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த பிழைப்பையாவது தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லையென்றால் ஏறி உட்கார்ந்து குதிரை சவாரி செய்து விடுவார்கள்.

இன்று அலுவலகத்தில் பிரதீப்பின் நிலைமையே வேறு. இன்னும் அதே கிளார்க் போஸ்ட் தான். ஆனால் கிடைக்கும் மரியாதையோ, மேனேஜரை விட ஒரு படி அதிகம். காரணம். பிரதீப்பின் அதிரடி பேச்சு தாக்குதல் தான். அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரின் மறுபக்கத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தான். யாராவது பிரதீப்பை நோக்கி ஒரு குற்றம் கூறினால் அவ்வளவுதான் அடுத்ததாக பிரதீப்பிடமிருந்து அம்பு மலையாக குற்றச்சாட்டுகள் வரும். அவனது அதிரடிப் போரை தாக்குப் பிடிக்கும் அளவிற்கு தகுதி படைத்தவர்கள் யாரும் இல்லை.

மேனேஜரும் இதற்கு விதிவிலக்கல்ல. இவனோடு சண்டைபோட்டு மூக்குடைந்த பலர் மாற்றுதல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள். வலுவாக காலை ஊன்றிவிட்டான் பிரதீப். யாரை எப்படி கையாள்வது என்ற கலையை கரைத்து குடித்து வைத்திருந்தான். யாரேனும் ஒருவர் உன்னை நோக்கி ஒரு விரலை உயர்த்தினால், பதிலுக்கு அவரை நோக்கி 10 விரல்களையும் சுட்டி காட்ட வேண்டும். ஒட்டு மொத்தமாக ஒரு பேரலை எழும்பி வந்து அமுக்குவது போல. அவர் அடுத்த வார்த்தையைப் பேசுவதற்கு வாய் திறப்பதற்குள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்படியே அமுக்கி விடவேண்டும். இதைத்தான் கடந்த நான்காண்டுகளாக பயிற்சி செய்து தேறியிருந்தான்.

அலுவலர்கள் அனைவரும் அவனைப் பழி வாங்குவதற்கான நேரம் பார்த்து கொண்டிருந்தார்கள். அடிக்கடி கூடி பேசிக்கொண்டார்கள். திட்டம் தீட்ட ஆரம்பத்ததார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பொது எதிரி ஒருவன் தோன்றிவிட்டால் போதும், ஒற்றுமை என்ற விஷயம் வெடி குண்டை போல கிளம்பும். அலுவலர்கள் அனைவரும் ஒற்றுமைக்கு உதாரணமானார்கள். யாராவது இருவர் கூடிபேசினால் அது பிரதீப்பை பற்றியதாகத்தான் இருக்கும். பிரதீப்புக்கெதிரான வலை சிறிது சிறிதாக பின்னப்பட்டது. பொதுவாக முதுகுக்குப் பின்னால் நடக்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டும் பிரதீப் ஏனோ இந்த விஷயத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆம் அப்படிதான். ஒருவன் அழிவை நோக்கி போய்கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்குப் பாதகமான விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கத்தான் செய்யும். வலையில் மாட்டப் போகும் மீனுக்கென்ன தெரியும் விரிக்கப்பட்டிருக்கும் வலை தனக்குத்தான் என்று. சிறிது சிறிதாக பின்னப்பட்ட வலை திறம்பட முடிக்கப்பட்டது. மீனுக்குரிய இரை தேர்ந்தெடுக்கப்பட்டது. பழிகொடுகக வேண்டிய நாளும் குறிக்கப்பட்டது.

பிரதீப் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை லேசாக உணர தலைப்பட்டாலும், தன் மேல் உள்ள அபார நம்பிக்கையால் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டான். அவனுடைய அதிகாரம் நாளுக்குநாள் பெருக ஆரம்பித்தது. அலுவலக மேலிடத்தின் பார்வை பிரதீப்பின் மேல் விழுந்தது. அலுவலகப் பணியாளர்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறமை நிர்வாக வளர்ச்சிக்கு உதவும் என்கிற ஒரே காரணத்தால் அவனுக்குப் பதவி உயர்வு அளிக்கலாம் என்று பரிசீலிக்க ஆரம்பித்தார்கள். முதலாளியின் கையில் சாட்டை இருந்தால் தான் தொழிலாளி ஒழுங்காக வேலை செய்வான். இதற்கு முன்னர் இருந்த மேனேஜர்கள் கூட அவ்வளவாக நிர்வாகத்தை கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் சரியான வழவழா கொள கொளா.

பிரதீப்புக்கு அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வு பற்றிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த விஷயம் பிரதீப்புக்குத் தெரிய வந்தாலும் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவனாக காணப்பட்டான். ஏனெனில் யார் தனக்கு ஆதரவாக வாக்களிக்கப்போகிறார்கள்? இவர்களைப் பற்றித் தெரியாதா? தன்னை வேலையை விட்டு நீக்குவதென்றால் அனைவரும் கூடி சேர்ந்து வாக்களிப்பார்கள். அதைப் பற்றிய சிரத்தை ஏதுமின்றி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

ஒரு மாதம் கடந்தது

வாக்களிப்பு நடந்ததா நடக்கவில்லையா? ஒன்றும் தெரியவில்லை. அடுத்த மேனேஜர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் பெரிய கேள்விக்குறியாக வடிவெடுத்தது. ஆனால் எந்தக் கவலையும் அற்றவனாக தன் வேலையில் மூழ்கிப் போயிருந்தான் பிரதீப். யார் மேனேஜராக வந்தால் என்ன தன்னை சீண்டிப் பார்ககட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவர்களால் அப்படி என்னதான் செய்யமுடியும்? முடிந்த வரை குற்றம் சுமத்துவார்கள். சண்டை போடுவார்கள். இவர்களை சமாளிக்கத் தெரியாதா? வாழ்நாள் பூரா இதைத்தான் செய்கிறோம். எது நடந்தாலும சரி ஒரு கை பார்த்துவிடலாம். தன்னை யாரும் அசைத்து விட முடியாது என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தான்.

மேலும் பத்து நாட்கள் கடந்து போயிருந்தன

சென்னை டிராபிக்கை கடந்து வருவதற்கு, ஆபிசிலேயே தங்கி கூடுதல் நேரமாக வேலையைப் பார்க்கலாம். ஏதோ போர்க்கள முயற்சியை செலவழித்து வீட்டிலிருந்து அலுவலகம் வந்து சேர்ந்தான் பிரதீப். லிப்டில் ஏறி முதல் அறைக்குள் நுழைந்து கதவைத் திறந்தான். ஏசி அறையின் ஜில்லிப்பை ஏக்கத்துடன் எதிர்பார்த்தபடி உள்ளே நுழைந்தவன் அப்படியே உறைந்து போனான். மேலும் வியர்க்க ஆரம்பித்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் அவனைச் சுற்றி அரைவட்ட வடிவமாய் நின்றிருந்தார்கள்.

இன்றைக்கு தன் கதையை முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்களா? என்ன செய்யப் போகிறார்கள்? ரத்தம் வர அடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் அவரவர் வேலையைப் பார்க்க போகிறார்களா? ராணுவத்தில் சோல்ஜர்கள் எல்லாம் ஹவுல்தாரிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். இதற்காகாத்தான் இவ்வளவு நாள் கூடிப்பேசினார்களா?

கூட்டத்தினர் அனைவரும் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தபடி பிரதீப்பை நெருங்கினார்கள். தட்ட ஆரம்பத்ததர்கள். மெதுவாக ஆரம்பித்தவர்கள் பின் வேகமாக சடசடவென கைகள் வலிக்கும்படி தட்டினார்கள். கைகளைத் தட்டியபடி கை கொடுத்ததார்கள். ‘கங்ராட்ஸ். மிஸ்டர் பிரதீப் நீங்கதான் இனிமே இந்த ஆபிஸோட புது மேனேஜர். வாழ்த்துக்கள். எம். டி உள்ள இருக்கார். போய்ப் பாருங்க. உங்க அப்பாயின்மெண்ட் ஆர்டர் ரெடியா இருக்கு.’

சிறிதாய் தயங்கி பயத்தில் தளர்ந்து பின்வாங்கிய பிரதீப் பின் சுதாரித்தவனாய் அனைத்து பாராட்டுக்களையும் ஏதொ ஏற்கனவே எதிர்பார்த்தவனை போல ஏற்றுக்கொண்டான். இதெல்லாம் தனக்கு மிகவும் சாதாரணம் என்பது போல நடந்து கொண்டான். நேராக கூட்டத்தை விளக்கிக் கொண்டு எம். டி அறைக்குள் நுழைந்தவன், அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடியாக இருந்ததை பார்த்தவுடன் தான் நம்பிக்கையே வந்தது. "அனைத்தும் உண்மைதான்” ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று நுரையீரலை நிறைத்து வெளியே வந்தது. எத்தனை நாள் கனவு. நிறைவேறிவிட்டது. இனி இவர்களை பந்தாடிவிட வேண்டியதுதான். ஏற்கனவே அனைவரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டி எடுத்து கொண்டிருந்தவன் நான். மேனேஜர் பதவி வேறு கிடைத்து விட்டது இனி ஒருகை பார்த்துவிட வேண்டியது தான். அனைவரும் அலற வேண்டும். என்னை என்னவென்று நினைத்து விட்டார்கள் இந்த மனிதர்கள்.

ஒரு 5 நிமிடம் அந்த மதிப்பு மிகுந்த நாற்காலியில் அமர்ந்து அந்த சுகத்தை அநுபவித்தான். நினைவுக்கு வந்தவனாய் மேஜையிலிருந்த அழைப்பு மணியை தட்டினான். பியூன் பதறியவனாய் உள்ளே ஓடிவந்தான். அசட்டையாக மேலும் கீழும் பார்த்தான் பிரதீப். அந்த கசங்கிய வெள்ளை சட்டை, பேண்ட். எண்ணெய் வைக்காத களைந்த தலைமுடி. ஷூ போடாத அறுந்த செருப்பு கால்கள் இவையெல்லாம் பிரதீப்பை என்னமோ செய்தது. அவ்வளவுதான் அடுத்த அரை மணி நேரம் அர்ச்சனைதான். தொடர்ச்சியாக விடாமல் வெகுநேரம் அர்ச்சனை செய்வது பிரதீப்பால் மட்டும் தான் முடியும் அது அவனது தனித்திறமை. அதோடு நிறுத்தவில்லை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ப்யூன் வெளியேறுவதற்கு முன் கடைசியாக மிகுந்த வேதனையுடன் ஒரு வார்த்தை கூறிவிட்டு சென்றான்.

‘நாளைக்கு பார்க்கலாம் சார். வர்றேன்”

‘சர்தான் போ போ”

அடுத்த குறி அந்த ஹெட்கிளார்க் சதாசிவம். 45 வயசு கிழம். ஆரம்பக் காலங்களில் என்னை என்ன பாடு படுத்தியிருக்கு. இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிடவேண்டும். அடுத்த அரை நிமிடத்தில் ஹெட்கிளார்க் அமர்நதிருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தான் பிரதீப். இந்த சதாசிவத்தை தன்னந்தனியாக ருமில் வைத்து திட்டக் கூடாது. அனைவரின் முன்னிலையிலும் ஆடையை அவிழ்த்தது போல் அவமானப்படுத்த வேண்டும்.

10:45 க்கு ஆரம்பித்தான். மணி 11:30. ஹெட்கிளார்க் அனைத்து வசவுகளையும் கேட்டு விட்டு கற்சிலை போல் நின்றிருந்தார். அலுவலகத்தில் அனைவரும் கப்சிப் தலையை குனிந்தவாறு தங்கள் வேலையைப் பார்த்து கொண்டிருந்தார்கள். அந்த டைப்பிஸ்ட் கலா மட்டும் கீழே குனிந்தவாறு நமுட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாள். ஆத்திரம் தலைக்கேறியது பிரதீப்புக்கு. அவளை ரூமுக்குள் வரச்சொல்லிவிட்டு நேராக தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 2 நிமிடங்களுக்கு பிறகு மேனேஜர் அறைக்குள் ஒரே கலவரம். மணி 12:00. அழாத குறையாக வெளியே வந்தாள் கலா.

அப்படி இப்படி என்று மதிய இடைவேளை. அனைவரும் தங்களுக்குள் கூடி நின்று பேசிக்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையிலும் சில சிரிப்பொலிகள் கேட்டன. சரியாக அரைமணிநேரம். பிரதீப் டைனிங் ஹாலுக்குள் ஆஜரானான். ஹிட்லர் தோற்றான் அப்படி ஒரு விரட்டல். பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து அனைவரும் அவரவர் சீட்டில் உட்கார்ந்து வேலையை கவணிக்க ஆரம்பத்ததார்கள். ஒரு 5 நிமிடம் அனைவர் முன்னிலையிலும் சாப்பிடும்போது நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும், குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பாட்டை முடித்து விட்டு குறிப்பிட்ட நேரத்தில் சீட்டில் வந்தமர்வதை பற்றியும், கடைபிடிக்க வேண்டிய ருல்ஸ் அண்ட் ரெகுலேஷன்கள் பற்றியும் நீண்டதொரு கலாட்சேபம் பண்ணினான். அனைவரும் கண்ணிமைக்காமல் உள்ளுர ஆச்சர்யத்தோடு, காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு. சுவாசிக்க மறந்தவர்களாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பேச்சின் முடிவில் பிரதீப், ஒரு குண்டூசியை எடுத்து தரையில போட்டான். சத்தம் தெளிவாக அனைவருக்கும் கேட்டது.

“இந்த சைலண்டை எப்பவும் மெயிண்டைன் பண்ணனும்” கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அறையை நோக்கி நடந்தான்.

அந்த நரக மணித்துளிகள் ஒவ்வொன்றாக கழன்றது. கிட்டத்தட்ட அலுவலகத்தில் உள்ள அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதலுக்குள்ளானார்கள். மணி 6ஐத் தொட்டது. அனைவரும் விடுதலை உணர்ச்சியுடன் கிளம்பத் தயாரானார்கள். அதற்காகவே காத்திருந்தவன் போல உள்ளே வந்தான் பிரதீப். அடுத்த நாள் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், நேரந்தவறாமை, நீட்நெஸ் போன்றவற்றைப் பற்றி அரைமணி நேர ஸ்பீச். பிறகு அனைவரும் கிளம்பினார்கள்.

இன்றைய பொழுது 3 பேர் சஸ்பெண்ட் ஆகியிருந்தார்கள். 5 பைல்கள் கிழித்துப் போடப்பட்டிருந்தது. சில அலுவலகப் பொருட்கள் தூக்கி எறியபட்டிருந்தன. மேஜையில் 10 முறையாவது டங் டங் என குத்தியிருப்பான். திட்டுவதில் சில புதிய வார்த்தைகளை புகுத்தியிருந்தான். ஆக இன்றைய பொழுது முழு திருப்தி.

அடுத்த நாள்

ஒரு மேனேஜருக்கு தகுந்த உடைகளை அணிந்து டிப்டாப்பாக கிளம்பினான். வழக்கம் போல் சென்னை டிராபிக். கால் டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு கிளம்பினான்.

“சீக்கிரம் ஒரு காரை லோன் ஏற்பாடு செய்து வாங்க வேண்டும்” மனதிற்குள் கூறிக்கொண்டான்.

இன்று யாரையெல்லாம் எப்படியெல்லாம் வதைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியபடி அலுவலகத்தை வந்தடைந்தான். லிப்டில் ஏறி முதல் தளத்தை அடைந்தான்.

“இந்த ப்யூன் எப்பொழுதுமே கதவின் அருகில் இருப்பதில்லை வரட்டும் அவனை வைத்துக்கொள்கிறேன்”

சில விநாடிகளுக்கு பிறகு தான் ஞாபகம் வந்தது.

“ஓ நாம் தான் 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்தோமோ”

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அலுவலர்கள் அனைவரும் அரைவட்டமாய் சுற்றி நின்றபடி வழியை மறைத்துக் கொண்டு நின்றார்கள் நேற்றை போலவே. இந்த முறை அதிர்ச்சியாகவில்லை பிரதீப். திட்ட ஆரம்பித்தான்.

‘என்ன......? எதுக்காக இப்படி சுற்றி நிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா....”

அனைவரும் அமைதியாக நின்றிருந்தார்கள் நடுவில் அந்த ப்யூன் அதே கசங்கிய அழுக்கு சட்டையுடன்.

“ஹேய் உன்னை 2 நாள் சஸ்பெண்ட் பண்ணிருக்கேன்ல. நீ எப்படி உள்ள வந்த? கெட் அவுட் ஐ சே’

கதவைத் திறந்தபடி ஆட்காட்டி விரலை வெளியே நீட்டியபடி ப்யூனுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தான். சும்மா இருக்க முடியாமல் ப்யூனும் சிரித்து வைத்தான். பிரதீப்பின் கோபம் தலைக்கேறியது. கத்துவதற்கு வாயைத் திறந்தான். அதற்குள் ஹெட்கிளார்க் சதாசிவம் கையமர்த்தினார்.

‘மிஸ்டர். பிரதீப் நீங்க ஒரு விசயத்தை இன்று தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில எதுவுமே நிரந்திரமில்லை. குரங்கு கையில பூ மாலையக் கொடுத்தா அது என்ன பண்ணும்னு நாங்க தெரிஞ்சுக்க ஆசைப்பட்டோம் தெரிஞ்சுக்கிட்டோம். இன்றைக்கு தேதி ஏப்ரல் 2. நேற்று ஏப்ரல் 1. ஆகையால் நேற்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி ஒரு ஏமாற்று வேலை. நீங்க விரும்பினா உங்க பழைய வேலையைத் தொடரலாம். அதோ உங்க சேர்”

இரத்தின சுருக்கமான வார்த்தைகள் தான். ஆனால் பிரதீப்பைப் பொருத்தவரை அது தலையில் விழுந்த இடி. இல்லை இல்லை நெஞ்சில் பாய்ந்த ஈட்டி. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

அனைவரும் நமுட்டுச் சிரிப்புடன் அவரவர் சீட்டில் சென்று அமர்ந்தார்கள். பிரதீப் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அடுப்பை பூனை சுற்றி வருவதைப் போல பிரதீப்பை சுற்றி வந்து முகர்ந்து பார்த்து முகத்துக்கு நேராக வந்து நின்றான் ப்யூன்.

‘என்ன சார் யோசிக்கிறீங்க......... நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கு நல்லாப் புரியுது. இந்த விஷயத்துக்கு எம்.டி. எப்படி ஒத்துக்கிட்டார்னு தான யோசிக்கிறிங்க. புதுசா வேலைக்கு வந்திருக்கறாங்களே டைப்பிஸ்ட் கலா. அவுங்களும் எம். டியும் க்ளாஸ் மேட்ஸ். அவுங்க கேட்டுக்கிட்டதால தான் அவரும் ஒத்துக்கிட்டார்........ போங்க சார்... போய் வேலையப் பாருங்க”

‘ஒரு நாள் அதிகாரம் கைக்கு வந்தா இந்தக் காலத்துல என்ன ஆட்டம் போடுறாங்க..........” புலம்பிக்கொண்டே சென்றான்.

திக் பிரமை பிடித்தவன் போல் அமைதியாக நடந்து சென்று சீட்டில் அமர்ந்தான். என்ன செயவதென்று தெரியாமல் 5 நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தான். பின் ஏதோ முடிவுக்கு வந்தவனாய், பேனாவை எடுத்து ஒரு ராஜினாமா லெட்டரை எழுதி விட்டு திரும்பிப் பார்க்காமல் வெளியேறி விட்டான்.

- சூர்யா

Sunday, August 1, 2010

காயடிக்கப்பட்ட கோபங்கள்

‘டிக்கெட் எடுக்க காசில்லன்னா என்ன மயிருக்கு நீயெல்லாம் பஸ்சுல ஏர்ற, வக்கில்லன்னா நடந்து போக வேண்டியதுதான. நான் போற ரூட்டுலன்னு தேடிப்பிடிச்சு வருவிங்களாடா?. தினசரி உன்ன மாதிரி ஆட்களோட போராடுறதே என்னோட பொழப்பா போச்சு. உன்னையெல்லாம் பாத்தாலே தெரியுது. என்னைக்காவது ஏத்தாம போனா வக்கனையா திட்டமட்டும் தெரியுது.............. டேய் உனக்கெல்லாம் சொரனைன்னு ஒன்னு இருக்கா இல்லையாடா. சோத்ததான் திங்குறியா? இதே ரூட்ல ஏற்கனவே உன்ன ரெண்டு தடவ திட்டியிருக்கேன். கொஞ்சமாவது ரோஷமிருந்தா இப்டி திரும்ப செய்வியா? உங்களோட போராடியே என் வாழ்க்கைல பாதி போயிடும்டா. என் நிம்மதிய கெடுக்குறதுக்குனே வந்து சேர்றானுக டேய். ஊன்னை மாதிரி ஆட்கள் தாண்டா இந்த நாட்டையே கெடுக்குறானுக. நீங்கள்ளாம் நாட்டுக்கு தேவையில்லாதவனுகடா. ஊங்களல்லாம் நிக்கவச்சு சுடனும்டா,”
டிசம்பர் 2, காலை 9:30
சிவப்பு நிறத்தில் தகரங்கள் படபடக்க, தொழிற்சாலைப் புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகையைபோல் சற்றும் வித்தியாசமின்றி புகையை கக்கிக் கொண்டு வழக்கம் போல் 150 பேரை ஏற்றிக் கொண்டு, இளைஞர்களின் கரகோஷங்களுக்கு நடுவே பொறுக்க முடியாத வேர்வை நாற்றத்துடன் பிதுங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தின் நடுவே, வாயில் அந்த சில்வர் விசிலை வைத்துக் கொண்டு, அந்த 150 பேரில் ஒரு பிச்சைக்காரனை (சொரணையில்லாத) கண்டக்டர் தியாகு திட்டிய வார்த்தைகள் தான் இவை.
தியாகு பாவம் தான், குறைசொல்வதற்கொன்றுமில்லை, ஆனால் மற்றொரு கண்ணோட்டமுள்ளது கவனிப்பதற்கு.
டிசம்பர் 2, இரவு 8:30
தியாகு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி லதாவுடன் அமர்ந்து இரவு உணவருந்திக் கொண்டிருந்தார். நடுத்தர மக்களின் வீடுகளில் இரவு நேரங்களில் சன் டி.வி. ஓடவில்லையென்றால் அங்கு நிலைமை சரியில்லை என்று அர்த்தம். தியாகு நியூஸ் பார்த்தபடி அநிச்சையாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.
நியூஸ்
‘சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சண்முகம், நேற்று நிபந்தனையின் பெயரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் 5 கோடி ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டுமென்றும், வழக்கு முடியும் வரை அவர் சென்னை செசன்ஸ் கோர்ட்டில் தினம் இருமுறை ஆஜராகி காலை, மாலை என இருமுறை கையெழுத்திட வேண்டுமென்றும் கூறப்பட்டது. அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்த மாதம் செல்ல இருக்கும வெளிநாட்டுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது................. விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்.
“தியாகு தனது வாயை பெரிதாகத் திறந்தார். ஒன்றுமில்லை கொட்டாவிதான். நியூஸ் முடியும் தருவாயில் தூங்கவில்லையென்றால் பின் எப்படி? தூக்க மாத்திரைக்கு கூட அவ்வளவு பவர் கிடையாது. தியாகு சுகமாகத் தூங்கினார்.
தியாகுவைப் பற்றி : தியாகு படித்தது தத்துவம். படித்த தத்துவத்தில் அவருக்கு இதுவும் உணர்த்தப்பட்டது. அதாவது தத்துவவாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்களாகத்தான் திரிவார்கள் என்று, இதை உணர்வதற்குள் லதாவுடன் காதல் வேறு ஏற்பட்டுவிட்டது. அவன் சிக்மண்ட் பிராய்டை படித்துவிட்டு உளறியதையெல்லாம் கேட்டுவிட்டு மக்கு லதா (முதல் வருட மாணவி) ஏமாந்து விட்டாள். வேலை வேண்டுமே என்ன செய்வது கடைசியில் குட்டிகர்ணம் அடித்து பார்த்ததில் அவனுக்கு கிடைத்த வேலை பஸ் கண்டரக்டர் வேலைதான். இந்தியாவின் சாபக்கேடு கல்வி வாழ்க்கைக்கு உதவுவதேயில்லை. கல்வி கல்கி, குமுதம் படிக்கத்தான் உதவுகிறது.
இந்த கனடக்டர் வேலையில் குப்பை கொட்டுவதற்குள் 2 குழந்தைகள் பிறந்து விட்டன. கல்லூரி காலங்களில் இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்தை குறித்து நாட்கணக்கில் வருத்தப்பட்டிருக்கிறார். இந்த கவர்ன்மெண்ட் பொறுப்பற்று இருக்கிறது. மக்களும் பொறுப்பற்று இருக்கிறார்கள். பேச ஆரம்பித்தால் குறைந்தபட்சம் 2 மணிநேரம் ஆகும். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. திருந்திவிட்டான். காட்டாற்றில் எதிர் நீச்சல் அடிக்க முடியுமா என்ன? அவனும் சிறு துரும்பு தானே. அவர் தத்துவம் படித்ததன் ஒரே நல்ல விளைவு, 2 குழந்தைகள் பிறந்ததும் மனைவியை தொந்தரவு செய்யாமல் வாசக்டமி செய்து கொண்டதுதான்.
இரவுக் கனவு: கரும்புகையை கக்கிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. தியாகு வெறிப்பிடித்தவனைப்போல கத்திக் கொண்டிருந்தார். அந்த பிச்சைக்காரனைப்பார்த்து. ஆனால் பிச்சைக்காரன் உடையில் இருந்தது போக்குவரத்து துறை அமைச்சர் சண்முகம். பாவமாய் நின்று கொண்டிருந்தார். தியாகு தன் கையில் டிக்கெட்டிற்கு பதிலாக பாஸ்போர்ட்டை வைத்திருந்தார். திரு. சண்முகம் எலும்புத் துண்டை பார்த்து கொண்டிருக்கும் நாயைப் போல ஏக்கத்துடன் அந்த பாஸ்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தார்.
தியாகு தொண்டை நரம்பு வெடிக்க கத்திக் கொண்டிருந்தார். ‘டிக்கெட் எடுக்க வக்கில்லன்னா..................” , டாக்டர் சந்திரசேகர் (தியாகுவுக்கு வாசக்டமி (கருத்தடை) செய்தவர்) தியாகுவை ஆசுவாசப்படுத்தினார். ‘ தியாகு அமைதியா இருங்க. தையல் பிரிஞ்சுடப் போகுது. அப்புறம் எதாவது ஆயிடுச்சுன்னா என்னை கொறை சொல்லாதிங்க”
‘டாக்டர் இவனுகளோட மாறடிச்சே என் வாழ்க்கைல பாதி போயிடும் போல இருக்கு டாக்டர்” இடையில் மனைவிலதா குறிக்கிட்டாள். ‘என்னங்க உங்களுக்கு பி.பி அதிகமாயிடுச்சு. இந்தாங்க பி.பி டேபலட் சாப்பிடுங்க” மாத்திரையை விழுங்கினான். அமைதியானான்.
தியாகுவின் இரண்டு குழந்தைகளுள் ஒன்று அவனைப்பார்த்துக் கேட்டது. ‘அப்பா ஏம்பா இவ்ளோ கூட்டத்துல இந்த அங்கிள மட்டும் திட்டுற”
அதற்கு பதில் எப்படி சொல்வது என்று யோசிப்பதற்குள், ஓரமாக பிச்சைக்காரன் வேடத்தில் நின்றிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சண்முகம் இவ்வாறு கூறினார். ‘அவரால் என்னை மட்டும் தான் திட்டமுடியும் பாப்பா. இதையெல்லாம் கண்டுக்காத, நீ நல்லா படி ஓ.கே.யா?”
பேருந்து, பேருந்து நிலையத்திற்கு செல்வதற்குப் பதிலாக ஏர்போர்ட்டுக்குள் சென்றது. எல்லோரும் இறங்கி சென்றார்கள். அதோ அந்த பிச்சைக்காரன், ஐயோ தியாகு தன் கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். அவன் தன்னைச் சுற்றி கருப்புப் பூனை படை சூழ பாதுகாப்புடன் அங்கு நின்றிருந்த போயிங் விமானத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். சற்று குழப்பமாக இருந்தது. இருப்பினும் தொண்டைகிழிய கத்தினான் தியாகு.
‘டேய் பிச்சக்கார நாயே டிக்கெட் வாங்காம எங்கடா போற” அடி வயிற்றிலிருந்து எக்கி கத்தியதில் இரண்டு தையல் விடுபட்டுப் போனது, வலி அதிகரிக்க கனவிலிருந்து படக்கென்று விழித்துக் கொண்டான். யூரின் முட்டிக்கொண்டு வந்தது. எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினான். முடித்துவிட்டு பின் நிதானமாக படுக்கையிலமர்ந்தார் தியாகு”
பின் ஏதோ நினைத்தவராய். தனது பழைய புத்தக அடுக்குகளை கிளற ஆரம்பித்தார். பல வருட பலமை வாய்ந்த தத்துவ புத்தகங்களுக்கு நடுவே அவர் தேடிய அந்த புததகம் கிடைத்தது. “இன்ஸ்ப்ரேஷன் ஆப் ட்ரீம்ஸ்” பிராய்டின் புகழ் வாய்ந்த புத்தகம். அதை படிக்க ஆரம்பித்தார். மணி 5:30 ஐத் தொட்டது. கனவின் விளக்கம் லேசாகப் புரிய ஆரம்பித்தது. தனது முந்தைய நாள் காயடிக்கப்பட்ட கோபங்களும் புரிந்தது. தன்னுடைய கோபம் நேர்மை தவறி அசிங்கமாக அம்மணமாக நிற்பதை அவரால் சகிக்க முடியவில்லை என்றாலும் , அதை உணர்ந்துவிட்டதில் திருப்தியடைந்தார்.
- சூர்யா