எனது சிறுகதைகள்
Monday, January 12, 2015
நேரம் மறந்த நொடி
Friday, April 8, 2011
சினிமாவுக்கு..
அணு விஞ்ஞானிக்கு இணையாக தனது சிந்தனையாற்றலை கடந்த ஒன்றரை மணி நேரமாக செலவழித்து, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் அவள். எனக்கு மிக நன்றாக நியாபகம் இருக்கிறது. சென்ற தீபாவளிக்கு 3 தினங்களுக்கு முன்பாக சுமார் 8 மணி நேரங்களை செலவழித்து, ஒரு ஜீவனை வதைத்து (ஜவுளி கடைக்காரன்), அந்த ஜீவனை மயக்கமடையச் செய்து தேர்ந்தெடுத்த இளம் பச்சை நிற விலையுயர்ந்த புடவைதான் அவள் இன்று தேர்ந்தெடுத்த புடவை. என் மனைவிக்கு இன்றுவரை தெரியாது, அன்று அருகில் உள்ள தியேட்டரில் நான் திரைப்படம் ஒன்றை கண்டு ரசித்து விட்டு வந்த செய்தி. அன்று என்னுடன் வந்திருந்த பொறுப்பு மிகுந்த கணவர் ஒருவரை (நான் படம் பார்க்க அழைத்தபோது நேர்மைத்திலகம் போன்று பேசினார்) முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பவில்லை என்றால், மயக்கத்திலேயே மண்டையை போட்டிருப்பார். பாவம் பி.பி. எகிறிவிட்டது.
அவ்வளவு உழைப்பையும், பொறுமையையும் செலவழித்து எடுக்கப்பட்ட அந்த புடவையை தேர்ந்தெடுத்து (கடவுளுக்கு நன்றி) அணிய முற்பட்டிருக்கும் உன் அம்மா இன்னும் அரைமணிநேரத்தில் தயாராகி விடுவாள் என என் 5 வயது பெண் குழந்தையின் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்தேன். அவள் என்ன நினைத்துக் கொண்டு என்னை பார்த்தாளோ புரியவில்லை. ஆனால் என்னை முறைத்துப் பார்த்தாள் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஒருவேளை மனதிற்குள் என்னை திட்டியிருப்பாளோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.
இன்று மட்டும் என் மகளுக்கு சத்தியம் செய்து கொடுத்தபடி சினிமாவுக்கு அழைத்துச் செல்லாவிட்டால் முகத்தில் காரிதுப்பினாலும் துப்பிவிடுவாள். என் மகளிடம் என் மானத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு காரணத்துக்காகவாவது, எந்தவித உணர்ச்சி வேகத்துக்கும், கோபதாபங்களுக்கும் இடம் கொடுக்காமல், அமைதியை கடைபிடித்து சினிமாவுக்கு சென்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தை அடிமனதில் விதைத்துக் கொண்டிருக்கிற வேளையில் அவள் வெளிப்பட்டாள். அரைத்தூக்கத்தில் இருந்ததால் கண்கள் மங்கலாகத் தெரிந்தன. ஒருவித கனவு நிலையில் என் மனைவியை பார்த்ததும் அவ்வளவு அழகாகத் தெரிந்தாள். எனக்கு இப்படியொரு சந்தேகம் அப்பொழுது தோன்றியது. ஒருவேளை இங்கிருந்து மூன்றாவது தெருவாகிய கம்பன் தெருவில், ரோஜாபூ நிறத்தில் வர்ணமடிக்கப்பட்ட 2 மாடிவீட்டின் மேல் வீட்டில் வசிக்கும் பெண்ணாகிய வசந்தப்பிரியா டீச்சராக இருக்குமோ? என்கிற மயக்கம் எனக்கு அப்பொழுது ஏற்பட்டது. ஆனால் அடுத்த வினாடியே எனக்கு அந்த மயக்கம் மறைந்துவிட்டது. ஏனெனில் என் மனைவி மூன்றடி தூரத்தில் நெருங்கி வந்து என்னை முறைத்துப் பார்த்தாள்.
கடந்த 3 மணி நேரத்தில் 3 விஷயங்களை நான் சிறப்பாக செய்து முடித்திருந்தேன். ஒரு சிவப்பு வர்ண கவுனை என் மகளுக்கு அழகாக அணிவித்திருந்தேன். அதற்காக 5 சொட்டு வியர்வைத் துளிகளை நான் சிந்த வேண்டியிருந்தது. அவள் ஜெட்டிக்ஸ் சேனல் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஆடை அணிவிக்க முயற்சி செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பின்னர்தான் யோசித்து புரிந்து கொண்டேன். பின் அவளுக்கு தலைவாரி விடும் கடுமையான பணியொன்றினையும் செய்து முடித்திருந்தேன். கண்கள் கலங்கிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த ஹேர்பின்னை வாயில் கவ்விக் கொண்டு லாவகமாக தலையை வாரிவிடும் கலையை நான் சரியாக கற்றுக் கொள்ளவில்லை. அதில் நான் கற்றுக் குட்டிதான். தவறுதலாக பல் ஈறில் குத்திக் கொண்டு ரத்தம் வந்த போது கூட நான் அழவில்லையே! அப்படியொரு வைராக்கியம் அடிமனதில், இன்று எப்படியாவது சினிமாவை பார்த்துவிடவேண்டும் என்பதில். பின் அவளுக்கு உப்புமா ஊட்டி விடும்போது நடைபெற்ற துயரச் சம்பவத்தை நான் எப்படி சொல்வது? 6 வயது குழந்தை கடித்தால் வலிக்காது என்று இயல்பாக நடந்து கொள்ள வேண்டாம் என்கிற என் அறிவுரையை மறுபேச்சில்லாமல் ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.
உச்சிவெயில் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால், செய்து கொண்ட மேக்கப்பும், பூசிக்கொண்ட ஃபேர் அண்ட் லவ்லியும் வீணாகிவிடும் என்ற காரணத்தாலா? அல்லது பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என்ற காரணத்தாலா? என்று தெரியவில்லை. என் மனைவி ஆட்டோவில் செல்லலாம் என்கிற முடிவை போர்க்காலங்களில் ஒரு சர்வாதிகாரி முடிவெடுப்பது போல் பட்டென்று எடுத்தாள்.
ஆமை, முயல் கதையில் முயல் தோற்றதுபோல், கிளம்புவதற்கு 3 மணி நேரம் எடுத்துக் கொண்ட என் மனைவியிடம் நான் தோற்றுப் போனேன். சாவகாசமாக அரைத்தூக்கத்தில் ஆழந்திருந்த நான் எண்ணி 90 விநாடிகளுக்குள் தயாராகி ஓடிவந்தது என் மனைவியின் முகத்தில் எரிச்சலை கொண்டு வந்துவிட்டது. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஆண்களை பெண்கள் வெற்றி கண்டு விடுகிறார்கள். பொறுமை கடலினும் பெரிது என்பதை பெண்களிடமிருந்து ஆண்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் சும்மா சொல்லக் கூடாது நேரத்தைக் கணக்கிடுவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான். மதியம் செல்ல வேண்டிய திரைப்படத்திற்கு அதிகாலையிலிருந்தே தயாராக முற்பட்டது பாராட்டுக்குரியது.
எங்கே வெளியே கிளம்பினாலும் என் குழந்தை தயங்காமல் ஒரு விஷயத்தை கூறுவாள். எங்கே இன்னும் கூறவில்லையே, ஒருவேளை மறந்துவிட்டாளோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில், எங்கோ பறந்து கொண்டிருந்த காகத்தை பார்த்துக் கொண்டே டக்கென்று கேட்டாள்,
"அப்பா எனக்கு ஒன் பாத்ரூம் போகணும்"
வெரிகுட், இப்பத்தான் நீ என் பிரியாகுட்டி, என்று பாராட்டியவாறே அழைத்துச் சென்றுவிட்டு கூட்டி வந்தேன். அதற்குள் ஆட்டோக்காரர் வெயிட்டிங் சார்ஜ் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இல்லை அதைப்பார்த்தால் வேண்டுகோள் போன்று தெரியவில்லை. ஒருவித உத்தரவு போல் தெரிந்தது. சென்னையில் ஆட்டோவில் மட்டும் செல்லக் கூடாது என்கிற என் கடுமையான விரதத்தை உடைத்தபோதே, இதுபோன்ற வேண்டுகோள், உத்தரவுகளுக்கெல்லாம் தயாராகிவிட்டேன் நான்.
அந்த ஆட்டோக்காரர் மிகுந்த கோபக்காரர் போல, லஸ்கார்னர் அருகில் சென்று கொண்டிருந்த போது, எதிர்த்தாற்போல் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரை மிக மோசமாக திட்டினார்.
"பேமானி, கய்த, டேய் கஸ்மாலம்"
எதற்காக திட்டனார் என்று தெரியவில்லை, அந்த பேருந்து ஓட்டுனரும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. நான் ப்ரியாகுட்டியின் காதுகளை பொத்திக் கொண்டேன். அப்படி மட்டும் அவள் காதுகளை அடைக்கவில்லை என்றால் அவள் குறைந்த பட்சம் 25 கேள்விகளாவது என்னைப்பார்த்த இடைவிடாது, மூச்சுவிடாமல் கேட்பாள்.
"அப்பா பேமானின்னா என்ன?"
"அப்பா கஸ்மாலம்னா என்ன?"
"அப்பா அவரு எதுக்காக திட்டுறாரு"
..........................
.........................
ஆனால் அவள் சாலையில் செல்வோரை மிகமுக்கியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் நான் தப்பித்தேன்.
பின் ராதாகிருஷ்ணன் சாலை வளைவில் திரும்புகையில் ஒரு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த ஆட்டோ ஓட்டுனர் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் அலுவலக கொலீக் ஒருவர் கூறினார். ஐ.ஏ.எஸ். கூட பாஸ் செய்துவிடலாம், பைலட் ஆவது அவ்வளவு எளிதல்ல என்று. ஆனால் ஒரு பைலட் அநியாயமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் யார்தான் நம்பப் போகிறார்கள். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல ஆலந்தூரில் தொடங்கிய எங்கள் பயணம் கடவுள் புண்ணியத்தில் எந்தவித ஆபத்தும் இல்லாமல் சிட்டி சென்டரில் வந்து முடிவடைந்தது. அதற்காக சிறப்பு நன்றி ஒன்றை கடவுளுக்கு கூறினேன்.
சிட்டி சென்டருக்குள் நுழைந்ததும் குடுகுடுவென ஓட்டமாக ஓடி ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு பின் என் கையை வந்துபிடித்துக் கொண்டாள் பிரியா. பின் அந்த எஸ்கலேட்டரில் இன்னொரு முறை போய்வர வேண்டும் என அடம்பிடித்தாள். முடியாது என மறுத்ததுதான் தாமதம், அதே இடத்தில் உட்கார்ந்து கால்களை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். இதையெல்லாம் என் மனைவி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவளுக்குதான் அணிந்திருந்த நகை, உடை, மேக்கப் மீதுதான் அவ்வளவு கவனமும். என்னை எப்படி வேலை வாங்குவது என என் குழந்தைக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. பின் அவளுக்கு திருப்தி ஏற்படும் வரை எஸ்கலேட்டரில் ஏறி இறங்கி விளையாடினோம். நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை. உனக்கு ப்ரியா என்று பெயர் வைப்பதற்கு பதிலாக, பிடிவாதம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறினேன், அவளை பார்த்து. அது அவளுக்கு புரியாத காரணத்தால் சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்டாள்.
இன்டர்நெட்டிலேயே டிக்கெட் புக் செய்துவிட்டதால், வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் வன்கொடுமைக்கு நான் ஆளாகவில்லை. ஸ்கிரீன் 3ல் எங்களுக்கான திரைப்படம் போடப்பட்டிருந்தது. இருட்டிற்குள் இல்லாத படியை இருப்பதாக நினைத்துக் கொண்டு கால்களை எட்டு வைத்து நடந்து ஏமாந்தேன். பின் எங்களுக்கான இருக்கையில் அமர்ந்தோம். எப்பொழுதுமே என் மகளுக்கான இருக்கை என் மடிதான். நன்கு வசதியாக மடியில் உட்கார்ந்து கொண்டாள்,படம் துவங்கி 10 நிமிடங்கள்தான் இருக்கும் என் கன்னத்தை சொறிந்தாள்.
"அப்பா எனக்கு பாப்கார்ன் வேணும்"
இன்னும் ஹீரோயினைக் கூட பார்க்கவில்லையே, அதற்குள்ளாக ஆரம்பித்துவிட்டாளே என நொந்தபடி எழுந்து சென்று வாங்கி வந்தேன். பின் ஒவ்வொரு பாப்கார்னாக எடுத்து ஊட்டி விட வேண்டும் அவளுக்கு. அடுத்த 15 நிமிடங்களுக்குள் அந்த பாப்கார்ன் காலியாகிப் போனது. மீண்டும் கன்னத்தை சொறிந்தாள்.
"அப்பா ஐஸ்கிரீம் வேணும்"
ஒருவேளை போன ஜென்மத்தில் பேரராக வேலை பார்த்திருப்பேனோ என்கிற சந்தேகம் அப்பொழுது தோன்றியது.
பின் 60தாவது நிமிடத்தில் ஒரு ரோல்கேக், 90வது நிமிடத்தில் ஒரு பெப்சி, 110வது நிமிடத்தில் 2 சமோசா (சாஸ் ஊற்றவில்லை என மீண்டும் ஒருமுறை) பின் தூங்கிப் போனாள். எந்த டால்ஃபி டிஜிட்டல் சத்தமும் அவள் தூக்கத்தைக் கலைக்க முடியவில்லை.
ஐநாக்ஸ் சென்றுவிட்டு அருகில் இருக்கும் மெரினாவிற்கு செல்லவில்லை என்றால் சாமிக்குத்தமாகிவிடும் என்கிற காரணத்துக்காகவும், என் மனைவியின் உருட்டலான மிரட்டும் பார்வைக்காகவும் மதிப்பு கொடுத்து நான் இவ்வாறு கூறினேன்.
"ஷாலு பீச்சுக்கு போயிட்டு வீட்டுக்கு போகலாமே"
பீச்சுக்கு கூட்டிச் செல்லாமல், வீட்டுக்கு செல்லும் மனதைரியமும், உறுதியும் உனக்கு உண்டா என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் மென்மையாக சிரித்தாள்.
"உங்களுக்கு ஓ.கே. ன்னா, எனக்கும் ஓ.கே. தான்"
இவ்வளவு பெருந்தன்மையான பதிலுக்குப் பிறகும் கடற்கரைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால் பெண்பாவம் சும்மாவிடாது என உள்ளுக்குள் ஒரு அசரீரி என்னையும் மீறி ஒலித்தது.
பிரியாகுட்டி இனிமேல் நடக்கமாட்டேன் என மகாத்மா காந்தி ஒரு முடிவெடுப்பது போல் எடுத்துவிட்டாள். அதனால் அவளை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் ஆட்டோ பிடித்து பீச்சில் இறங்கிய போது மணி 5.
கடற்கரையில் ப்ரியாவின் பார்வை வெகு நேரமாக எதையோ உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது. அவள் பார்த்த திசையில் உற்றுப் பார்த்தபோது, மீனை முழுதாக எண்ணெய் சட்டியில் போட்டு வருத்துக் கொண்டிருந்தார்கள். அதை நோக்கி தன் ஆட்காட்டி விரலை நீட்டினாள். அது அவளுக்கு வேண்டுமாம். அவளுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.
"பிரியாகுட்டி அதெல்லாம் சாப்பிடக் கூடாது வயித்துக்கு ஒத்துக்காது"
"அதெல்லாம் ஒத்துக்கும்"
"மீன்முள் தொண்டையில குத்திடும்"
"அதெல்லாம் குத்தாது"
"ஐயோ அது சுத்தமே இல்லம்மா"
"அதெல்லாம் சுத்தம்மாதான் இருக்கு"
"அதை சாப்பிட்டா உடம்பு சரியில்லாம போயிடும் அப்புறம் டாக்டர்கிட்ட போய் ஊசி போட வேண்டி வரும், ஜாக்ரதை"
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்................. இந்த பழைய மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவளா நான் என்கிற ரீதியில் என்னைப் பார்த்தாள்.
"ஊசி போட்டாலும் பரவாயில்லை அது எனக்கு வேணும்"
வேறு என்ன செய்வது தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர, அவள் அம்மாவைப் போலவே வந்து பிறந்திருக்கிறாள்.
இரவ 7 மணிக்கு வீடு திரும்பிய போது ஒரே ஒரு எண்ணம் தான் மனதை குடைந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டும், மீண்டும் 6 நாட்களுக்கு இயந்திரமாக மாற வேண்டும். ஒருவேளை ப்ரியாவின் மனதிலும் இந்த அழுத்தம் இருக்கலாம். அவளும் இப்பொழுதே எல்.கே.ஜியில் சேர்ந்துவிட்டாள்.
- சூர்யா
முழுதாக 2 நிமிடங்கள்
ஒரு அழகான இரவு வேளையில் என் அன்பு மனைவி என்னிடம் இவ்வாறு கூறினாள்.
மனைவி : உங்களுக்கு என்மேல் பாசம் உண்டா
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய தைரியசாலி, புத்திசாலி மற்றும் நெஞ்சுரமிக்க ஆண்மகன் இந்த உலகில் இதுவரை பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்கப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக தெரிந்து வைத்திருக்கும் என் மனைவியிடம் நான் தைரியமாகவும், மென்மையாகவும் சிரித்துக் கொண்டும் கூறினேன்
நான் : ம்
அவளுக்கு இந்த தைரியம் மிக்க பதில் போதவில்லை என்பதை அவள் நெற்றியில் விழுந்த சுருக்கத்தை பார்த்த பொழுதே புரிந்தது.
மனைவி : என்னை எவ்வளவு பிடிக்கும் உங்களுக்கு
சிரிக்காமல்கேட்டாள். சற்று பயந்து போன நான் . கிழக்கு பக்கமாக ஒரு கையையும், மேற்குப்பக்கமாக ஒருகையையும் நீட்டிய படி விரித்துக் காட்டினேன் .
நான் : இவ்வளவு பிடிக்கும்.
என்னதான் நான் சிரித்துக் கொண்டே கூறினாலும், அதில் ஒளிந்திருந்த கள்ளத்தனமான பயத்தை அவள் கண்டுபிடித்து விட்டாள் என்றே கூறவேண்டும். இதுதான் சரியான தருணம் என்று நினைத்தாலோ என்னவோ? அர்ஜுனன் நாகாஸ்திரத்தை கர்ணன் மேல் உபயோகித்ததைப் போல் என் மேல் பிரயோகப்படுத்தினாள்.
மனைவி : அது உண்மைனா நீங்க ஏன் எனக்கு 5 பவுன்ல ஒரு நெக்லஸ் வாங்கித் தரக்கூடாது......
அவள் என் மேல் இருந்த பார்வையை அகற்றவே இல்லை. முழுதாக 2 நிமிடங்களுக்கு.....
சில சமயங்களில் மட்டுமே இவ்வாறு நிகழ்ந்து விடுவது உண்டு. அதாவது என்னவிதமாக ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட அந்த 2 நிமிட கொடுமையான நகர்தலின் போது நான் இவ்வாறு யோசித்தது எனக்கு மிக நன்றாக நியாபகம் இருக்கிறது. சென்ற வாரம் பிய்ந்து போன எனது செருப்பை தூக்கிப் போட்ட குப்பைக் கூளங்களிலிருந்து தேடிப்பிடித்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப் போது உபயோகித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
அவள் தலை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு போய் படுத்திருக்கலாம். அல்லது தொலைகாட்சியில் திருமதி செல்வம் பார்க்க ஆரம்பித்திருக்கலாம் அல்லது எனது மொபைல் போனை எடுத்து யார் யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறேன் , எவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன் என உளவு வேலையில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது எனது சட்டையில் வேறு ஏதேனும் பெர்பியூம் வாசனை அடிக்கிறதா என முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது என்னை தோசை சுட வைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கலாம்.
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு சவால் விடும் விதத்தில் எனது அரியர்ஸ் பணம் வந்தடைந்த செய்தி எந்த உளவாளியின் மூலம் என் மனைவியின் காதுகளுக்கு எட்டியது என்ற ரகசியச் செய்தி தான் இன்னும் எனக்கு புரிபடவில்லை. அவள் 5 பவுன் என்று குறிப்பிட்டு கூறுகிறாள் என்றால் அதில் ஏதேனும் விஷயம் இருக்குமே என்று கணக்கிட்டுப் பார்த்ததில் சரியாக 75 ஆயிரம் ரூபாய் வந்தது. பின்னர் தான் புரிந்தது 75 ஆயிரம் ரூபாய் அரியர்ஸ் பணம் அவள் காதுகளுக்கு எட்டிவிட்டது என்று. மந்திரம் ஓதிக்கொண்டிருக்கும்போது பார்ப்பனர் ஒருவர் அடிக்கடி கூறும் அந்த வார்த்தை (ஸ்வாகா) என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
அநேகமாக ஒன்றரை வருடத்துக்கு முன் வாங்கப்பட்ட எனது கருமை நிற ஷூவின் குதிக்கால் அடிப்பகுதி, 3 மாதங்களுக்கு முன் ஓரிடத்தில் கழன்று விழுந்துவிட்டது. அன்றைய தினம் முதல் எனது கனவுகளில் புதிய ஷூ ஒன்று அடிக்கடி வந்து போய் கொண்டிருக்கிறது. ஒருகால் நெட்டையாகவும், ஒருகால் குட்டையாகவும் 16 வயதினிலே கமல் போல் கேந்தி கேந்தி நடக்க பிடிக்காமல் அதை உபயோகிப்பதையே விட்டுவிட்டேன். அந்த ஷுவை புதிதாக வாங்குவதற்கு கூட என் மனைவி எனக்கு அனுமதி அளிக்காமல் முழுதாக, மொத்தமாக 75 ஆயிரத்தையும் கணக்கிட்டு நகை வாங்க கணக்கு போட்டது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது என்று ஆவேசமாக யாருக்கும் தெரியாமல் குறிப்பாக எனது மனைவியின் காதுகளுக்கு கேட்காமல் மனதிற்குள்ளாக காட்டுத்தனமாக கத்தினேன்.
மேலும், எனது இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஹெட்லைட் எரியாவிட்டாலும் பரவாயில்லை. கியர் சரியாக விழவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த பிரேக் என்ற பகுதிதான் என்னை நிலைகுலைய வைக்கிறது. அந்த பிரேக் செயல் இழந்து போனதால் நான் வேகமுள் 20ஐத் தாண்டுவதில்லை. இதைபார்த்து என்னை நிதானமான ஆள் என்று அக்கம்பக்கத்தினர் முடிவு செய்து விட்டனர்.
அதோ பார் எவ்வளவு பொறுப்பாக மெதுவாக செல்கிறார் என்று என் காதுபடவே பேசுகிறார்கள். எனக்குத் தான் தெரியும் வேகமாக போனால் என்ன ஆகும் என்று. அன்று ஒருநாள் எனது 6 வயது பெண் குழந்தையுடன் வீடியோ கேம் (பைக் ரேஸ்) விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வண்டியில் கூட நான் பிரேக் பிடிக்காமல் தான் சென்று கொண்டிருந்தேன். ஏன் என்றால் என் சப்கான்சியசில் இரு சக்கர வாகனம் என்றாலே அது பிரேக் பிடிக்காது என்றுதான் அர்த்தமாகியிருந்தது. வீடியோ கேம் விளையாடும் போது கூட நான் பிரேக் பிடிப்பது பற்றி மறந்து போனேன். போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம் தான் என் மனைவியின் மாங்கல்யத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
எங்கள் தெருமுனையில் உள்ள இருசக்கர வாகனங்களை பழுது பார்ப்பவர் (தமிழில் - மெக்கானிக்) என்னை தினசரி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த முறை அவருக்கு நான் வாய்ப்பளிக்கலாம் என்றிருந்தேன். அதற்கும் வழி இல்லாமல் செய்து விட்டாள் எனது அன்பு மனைவி.
அன்று என் பெண் குழந்தை என்னைப்பார்த்து இவ்வாறு கேட்கிறாள்.
"அப்பா எப்படிப்பா ஒரு முள்ள வச்சு நேரம் பாக்குறிங்க, கஷ்டம்மா இல்ல"
ஆம் கடந்த 257 நாட்களாக என் கைக்கடிகாரத்தில் ஒரு முள் தான் இருக்கிறது. அந்த இரண்டாவது பெரிய முள் எப்படி, எப்பொழுது விழுந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பழங்காலத்தில் மனிதர்கள் கடைபிடித்த அந்த முறையைத் தான் கடை பிடிக்கிறேன். மணி 12 என்றால் சூரியன் தலைக்கு மேல் இருக்கும். மணி 6 என்றால் மேற்கு பக்கம் இருக்கும். அதோடு சின்னமுள் வேறு கடிகாரத்தில் நேரத்தை கணிக்க எனக்கு உதவியாக இருக்கும். தோ நான் கணித மேதையாக இருக்கப் போய் என்னால் இதையெல்லாம் சமாளிக்க முடிகிறது. இல்லை என்றால் என்னாவது. புதிதாக கைக்கடிகாரம் வாங்கிவிடலாம் என்று நான் மனப்பால் குடித்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுது தான் புரிகிறது. யாரோ மண்டையில் நறுக்கென்று கொட்டியது போல் இருக்கிறது.
அன்று ஒருநாள் செய்தித் தாளில் வெளியாகியிருந்த அந்த செய்தியை என் மனைவியின் காதுபட சத்தமாக படித்தேன். அவள் எனக்காக ஒரு மோசமான காஃபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.
"பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 60 ரூபாயை தொட்டு விட்டது தெரியுமா?" என்று கூறினேன். அதற்கு......
எதிர்த்த வீட்டு ராணியின் கணவன் மோகன் சமர்த்தாக பஸ்ஸிலும், நடந்தும் தினசரி அலுவலகம் செய்வதைப் பற்றி அரைமணி நேரம் சிலாகித்து கூறினாள் என் அன்பு மனைவி. மேலும், சுகர், பிளட்பிரஷர் போன்ற வியாதிகள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் உடலுக்கு வராதாம். தினசரி உடலுக்கு நடைபயிற்சியும் கிடைக்குமாம். என் உடல்நிலையில் தான் என் மனைவிக்கு எத்தனை அக்கறை.
நான் கூறினேன், "பேசாம அந்த பைக்கை விற்றுவிட்டு உனக்கு ஒரு புது தங்க வளையல் வாங்குனா நல்லாருக்கும்னு எனக்குத் தோணுது"
என் அன்பு மனைவி சிரித்துக் கொண்டே கூறினாள். "ஐயோ வேணாங்க, அந்த ஓட்டை உடைசல யார் வாங்கப் போறாங்க"
எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அந்த பைக் ஒரு ஓட்டை உடைசல் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறதே.
மேலும், எனது 12 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய டச்ஸ்கிரீன் செல்போனை பற்றி கூற வேண்டும். அது ஏதோ ஒரு வார இதழ் நடத்திய போட்டியில் பரிசாக கிடைத்தது. 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் செல்போன் வாங்கியிருந்திருந்தால் அன்று நான் உலகை வெறுத்து இல்லறம் துறந்த நாளாக இருந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்படிப்பட்ட அந்த செல்போனில் ஒரு செயல் இதுவரை நடக்கவே இல்லை. அந்த செல்லுக்கு இதுவரை பல அழைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அதிலிருந்து ஒரு அழைப்பு கூட சென்றதில்லை. அந்த செல்போனில் இருந்து நான் இதுவரை யாரையும் அழைத்ததில்லை. காரணம் இதுவரை அந்த செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய நான் அனுமதிக்கப்படவில்லை என்கிற உண்மையை நான் யாரிடமும் சொன்னதில்லை.
நேற்று அந்த அற்புதம் நிகழ்ந்துவிட்டது. அந்த 75ஆயிரம் ரூபாயிலிருந்து மிகத் தைரியமாக 75 ரூபாயை எடுத்து ரீசார்ஜ்செய்து விட்டேன். முதன் முதலாக என் நண்பனை அழைத்துப் பேசினேன். அந்த அற்புதத்தை நம்ப முடியாத அவன் வாயடைத்துப் போய் அமைதியாக இருந்துவிட்டான். நான் மட்டும் 2 நிமிடங்கள் பேசிவிட்டு வைத்துவிட்டேன். இனி எவனும் என் பெயருக்கும் முன் மிஸ்டுகால் என்கிற அடைமொழியை போட்டு அழைக்க முடியாது. அந்த பட்டப்பெயருக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
நான் சம்பாதிக்க ஆரம்பித்த அந்தக் காலத்திலிருந்தே, நான் அந்த வேலையை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் எனது சம்பாத்தியத்தைப் பற்றி மற்றவர்கள் கணக்கு போட ஆரம்பித்துவிடுகிறார்கள். எனக்கு அந்த உரிமை ஆரம்பத்திலிருந்தே அனுமதிக்கப்படவில்லை. நான் சம்பாதிக்க மட்டுமே செய்ய வேண்டும். செலவு செய்வதைப் பற்றி மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அந்த சிரமமான பணியை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டார்கள். என் அம்மா, அப்பா, மனைவி, என ஆரம்பத்திலிருந்தே செலவு செய்தல் என்ற கடினமான பணியை அனைவரும் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் மேலும் எனக்கு தொந்தரவு சேர அனுமதிக்கவில்லை. என் குழந்தைக்கு இருக்கும் தைரியத்தைக் கூட நான் இழந்து விட்டேன். அவளுக்கு ஒரு பென்சில் வேண்டுமென்றால் யோசிக்காமல் சென்று அவளது அம்மாவிடம் கேட்பாள், எனக்கு ஒரு பென்சில் வேண்டும் என்று மிகத் தைரியமாக.
அன்று ஒருநாள், எனது அன்பு மனைவி தனது 65 ஆவது சேலையை எந்த டிசைனில் வாங்குவது என்ற யோசனையில் செய்தி வாசிப்பாளினி சந்தியாவை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவளது கவனத்தை கலைத்த நான், எனது மானம் மறைக்கப்பட வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்தி பிய்ந்து போன ஜிப்புக்கு மாற்று வழி என்ன என்று கேட்ட போது. அவள் முறைத்துப் பார்த்தாள்............ முழுதாக இரண்டு நிமிடங்கள்..........
- சூர்யா
வீட்டுத் தலைவர்
எங்கள் வீட்டு பிரதான அறையில் அழகாக நிறுத்தப்பட்டிருக்கும் பூவேலைப்பாடுகள் மிக்க மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த அந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து அன்று ஒரு நாள் தெரியாத்தனமாக இவ்வாறு கூறிவிட்டேன்.
அப்பா சின்னம்மா சாப்பிட கூப்பிடுறாங்க வாங்கப்பா
ஆனால் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தில் சின்னம்மா சொல்லியிருந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக கடந்த அரைமணிநேரமாக செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அப்பா, தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி வந்தார் என்றால், அதற்கு காரணம் அவர் என் சின்னம்மா மேல் வைத்திருக்கும் மேதகு மரியாதை உணர்வு தான். அது எப்படி வந்தது, எப்போது வந்து தொலைத்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. துரதிஷ்டவசமாக அது அப்படி நடக்கிறது. மரியாதை என்ற வார்த்தைக்கு டிக்ஷனரியில் அர்த்தம் தேட வேண்டிய அவசியமே இல்லை. என் அப்பாவைப் பார்த்தாலே போதும். மரியாதை என்கிற வார்த்தைக்கு வாழும் அர்த்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிஸ்டர் மோகன் ஆகிய என் அப்பாதான் என்பதை 3 தெரு தள்ளியிருக்கும் ராஜீவ் நகரின் கடைசியில் கட்டப்பட்டிருக்கும் ஓட்டு வீட்டில் உள்ள மீனா அக்காவின் 5 வயது குழந்தையிடம் கேட்டாலும் சொல்லிவிடும். அந்த குழந்தையின் நனவிலி மனதில் கூட என் தந்தையின் குணநலன் பதிந்து விட்டது என்பதே சுட்டிக் காட்ட விரும்பிய விஷயம்.
கொடுக்கப்பட்ட இட்லி 4 தான் என்றாலும், மேலும் ஒன்று வேண்டும் என்று கேட்காமல் பெரிதாக ஏப்பம் விட்டு தான் வயிறாற சாப்பிட்டு விட்டதை பறைசாற்றிவிட்டு மெலிதாக சிரிக்கும் நாகரிகம் தெரிந்தவர் என் தந்தை. அப்படியே இன்னொரு இட்லி கேட்டாலும் அது கிடைக்கப் போவதில்லை என்பது எனக்கு மட்டுமல்ல மீனா அக்காவின் குழந்தைக்குக் கூட தெரியும். அந்த 4 இட்லி கூட ஒரு குடும்பத் தலைவர் உழைத்துப் போடுவதற்கு உயிருடன் இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் என்பது தெள்ளத் தெளிவு. சின்னம்மா ஏதேனும் ஆர்டர் போட்டால் போதும், சிரமேற்கொண்டு அந்த ஆர்டரை ஒபே பண்ணுவதில் ராணுவ ஒழுங்கை கடை பிடிப்பார். அன்று ஒருநாள் சப்பாத்தி மாவை பிசையச் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுவிட்டார் சின்னம்மா. 1 மணி நேரம் கழித்து வந்து பார்த்த போதும் அவர் சப்பாத்தி மாவையே பிசைந்துகொண்டிருந்தார். அன்று அவர் வாங்கிய திட்டுக்கள் அவரது சொரணையற்ற மூளைக்குள் சென்று தாக்கி சிறிது கண்ணீரை வெளியே கொண்டு வந்துவிட்டது. ஆம் சப்பாத்தியை சுட்டு வைக்கச் சொன்னால் தான் அதைக் கூட சுட்டு வைப்பார். அவர் ஒரு எந்திரமாக மாறியிருந்தார்.
என் தந்தையை பொறுத்தவரை தலைக்குக் கீழ் கழுத்து என்ற ஒரு பகுதி இருப்பது எதற்கு என்று கேட்டால் அது சரி என்று தலையாட்டுவதற்காகவே, அந்த கழுத்து என்றுமே இட, வலமாக ஆட்டப்பட்தே இல்லை என்பதால், இடவலமாக ஆட்டுவதற்கு அர்த்தம் என்ன என்பதையே மறந்து விட்டிருப்பாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. கண்கள் எப்பொழுதுமே தரையை நோக்கித் தான் இருக்கும். அப்படி தரையில் என்னதான் இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேலை போன ஜென்மத்தில் தரையை தோண்டி பழம்பெரும் நாகரிகங்களை கண்டுபிடிக்கும் ஆர்க்கியாலஜிஸ்டாக இருந்திருப்பாரோ என்னவோ? தரையை இப்படி ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டை இந்த ஜென்மத்தில் இந்த உலகம் இழந்துவிட்டது என்றால் அது மிகையல்ல?
தாழ்வுணர்ச்சியை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு வெளிப்படுத்த வழி தெரியாமல் பரிதாபமாக திரிந்து கொண்டிருக்கும் என் தந்தைக்கு தன்னைப் போன்று அல்லது தன்னைவிட சமுதாயத்தில் வெட்கித் திரியும் அல்லது துன்பப்படும் ஜீவன்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. அதில் அவருக்கு ஒருவித அமைதியும் கிடைக்கும். தன்னைப் போன்று துன்பப்படுபவர்களை காண நேர்ந்தால், வாழ்க்கை தனக்கு மட்டுமல்ல பலருக்கு அவ்வாறு தான் உள்ளது என்பதை உணர்ந்து அவரது மனம் அமைதி அடையும். இங்கு மட்டும் அல்ல தீ, ஊரெங்கும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தான் மட்டும் தீயிற்கு பலியாகிக் கொண்டிருக்கவில்லை. ஊரே தீயினால் வெந்து கொண்டுதானிருக்கிறது என்பதில் நிம்மதியடையும் அவரது மனம் தன்னிச்சையாக உடலை ஆக்கிரமித்து தனக்கு தகுந்தாற் போல் சூழ்நிலையை மாற்றிக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட விஷயத்திற்கு அடிமையாவது இப்படித்தான், சிகரெட் பிடிப்பதில் அடிமைத்தனம், காஃபி குடிப்பதில் அடிமைத்தனம், பேப்பர் படிப்பது, சீரியல்பார்ப்பது. தெருச்சண்டையை வேடிக்கை பார்ப்பது. ......என சில்லரை விஷயங்களில் மனம் ஆறுதல் அடை முயற்சி செய்து மறுபடி மறுபடி தோற்கும்.
மிஸ்டர் மோகனுக்கு இந்த சமுதாயம் அதாவது 99 சதவீதம் சின்னம்மா அனுமதித்த வரை அதிகாலையில் பேப்பர் படிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒருவித ரவுடித் தனத்துடன் பேப்பரை ஆக்கிரமித்துக் கொண்டு வரிவரியாக, விலாவாரியாக பரீட்சைக்கு படிப்பதைப் போல் படிப்பதில் அவரது உள்மனம் ஒருவித ஆறுதலை அடைந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலையிலிருந்து, ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மணல் லாரி ஏறியதுவரை அத்தனை கொடூரச் செய்திகளும் மிஸ்டர் மோகனை நிகழ்வாழ்க்கையின் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க உதவியது என்று சொன்னால் அது மிகையில்லை.
அன்று அதிகாலை,
எப்பொழுதும் அவன் (இஸ்மாயில் - செய்தித்தாள் போடுபவன்) இதயம் வெடவடெப்பது மிஸ்டர் மோகனுக்காக மட்டும் தான். அது ஒருவேளை பரிதாப உணர்வாக இருக்கலாம். ஒரு ஜீவன் 16 வயதினிலே மயிலைப் போல அதிகாலை வேளையில் செய்தித்தாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போதே நெஞ்சு படபடக்க ஆரம்பித்து விடும் அவனுக்கு. முதலில் யாருக்கு செய்தித்தாள் போட வேண்டும் என்று அவனை அரைத்தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட தேள்ளத் தெளிவாக மிஸ்டர் மோகனின் பெயரை மரியாதையாக கூறுவான். செய்தித் தாளை கையில் வாங்கி மரியாதையாக நன்றி தெரிவிக்கும் பண்புமிக்க மனிதரை இந்த உலகம் இதற்கு முன்னும், இதற்குப் பின்னும் காணப்போவதில்லை என்று தனக்குத் தானே பலமுறை அவன் கூறிக்கொண்டதுண்டு.
அன்று கடவுள் செய்த சதியோ, இயற்கை செய்த சதியோ தெரியவில்லை இஸ்மாயிலுக்கு வயிற்றைக் கலக்கிக்கொண்டு வர, கடைசி நிமிட தேர்வு நிமிடங்களைப் போல, கடைசி ஓவர் கிரிக்கெட் விளையாட்டைப் போல காலைக் கடனை முடித்துக் கொண்டு விட்டு வர 3 நிமிடங்கள் அதிகமாகிவிட்டன. கால நேரத்தை கணக்கிட்டு புயலின் வேகத்திற்கு சாவல் விடும் விதத்தில் இஸ்மாயில் அரசு வழங்கிய தனது இலவச சைக்கிளில் வெறித்தனமாக பாய்ந்து வர, அங்கே மிஸ்டர் மோகன் முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பொதுவாக அரசு வழங்கிய எந்த இலவச சைக்கிளிலும் ஒருவார பயன்பாட்டிற்குப் பிறகு பிரேக் என்கிற பகுதி தனது செயல்பாட்டை முடித்துக் கொண்டு விட்டிருக்கும். இஸ்மாயிலின் சைக்கிளோ வருடம் ஒன்றை கடந்து புரட்சி செய்துகொண்டிருந்தது. ஒவ்வொரு சைக்கிளிலும் வழியில் செல்வோரை எச்சரிக்கும் மணி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதேபோன்றதொரு அமைப்பு இஸ்மாயிலின் சைக்கிளிலும் இருந்தது. ஆனால் அதை உபயோகப்படுத்த வேண்டிய அவசியமே அவனுக்கு ஏற்படவில்லை. அந்த மணி ஒலி எழுப்புதல் என்னும் செயலை தானாகவே செய்ய ஆரம்பித்து விடும். சைக்கிளானது ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த மணி தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும்.
கினி, கினி, கினி, ..... என இஸ்மாயிலின் வருகையை அந்த ஊர் முழுவதும் சொல்லாமல் சொல்லி செல்லும் அந்த ஒலி எப்பொழுதும் மிஸ்டர் மோகனுக்கு தேவகானமாகத் தான் இருந்தது. ஆனால் இப்பொழுதோ, இந்த உலகம் கண்டிராத மிஸ்டர் மோகனின் கோபத்தை அந்த சப்தம் வெளிக்கொணர்ந்து விட்டது. அவரது முகம் கடுமையாக இருந்ததை நூறடி தூரத்திலேயே உணர்ந்து கொணடான் இஸ்மாயில். பீரங்கி வண்டி முன் தைரியமாக நின்று சண்டை போடும் தீரமிக்க ராணுவ வீரனுக்கும், இஸ்மாயிலின் சைக்கிள் முன் நிற்கத் தைரியம் வராது என்பது திண்ணமானாலும், மிஸ்டர் மோகன் அன்று நடுப்பாதையை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் போதே அதிலிருந்து தாவிக் குதித்து, சைக்கிளின் வேகத்திலேயே ஓடி அதன் வேகத்தை குறைக்கும் புதிய கண்டுபிடிப்பை கற்று வைத்திருந்த இஸ்மாயில் 10 அடிக்கு முன்னேயே மேனுவலாக பிரேக் போடும் செயலை நிறைவேற்றியிருந்தான். தனக்கு வழங்கப்பட்ட அரைமணி நேரத்தில் 3 நிமிடங்களை விழுங்கி விட்ட இஸ்மாயிலை, விழுங்கிவிடுவது போல வெறித்து பார்த்தார் மிஸ்டர் மோகன். அவன் அமைதியாக சுருட்டிக் கொடுத்த செய்தித் தாளை விருட்டென்று வேகமாக பிடிங்கி கண்கள் இரண்டையும் உருட்டியபடி முறைத்துப் பார்த்தார். அதன் பெயர்தான் கோபம் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என அன்றுதான் நான் கண்டுகொண்டேன்.
செய்தித் தாளின் மூன்றாம் பக்கத்தில், ஏதோ ஒரு செய்தியில் வைக்கப்படாத புள்ளி குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருந்த போது அவருக்கு காஃபி என்கிற அந்தத் திரவத்தை என்னால் கொடுக்க நேர்ந்தது குறித்து நான் சந்தோஷமடைந்தேன். என்னால் நம்பமுடியாத விஷயங்களுள் ஒன்று, அந்த திரவத்தை அவர் ரசித்து குடிப்பது மட்டுமல்ல. இன்னொரு கிளாஸ் வேண்டும் என்கிற தோரணையில் என்னைப் பார்ப்பதும் கூடத்தான். அதில் என்ன விசேஷம் என்றால் காஃபியை, கசாயம் போல் செய்வதில் வல்லுனரான எனது சின்னம்மா, கஷயாத்தை எப்படி செய்வார் என்பது தான். அதற்கெல்லாம் அதீதமான கற்பனை சக்தியும், கசப்புணர்ச்சியும் வேண்டும். சின்னம்மாவின் உணர்ச்சிகள் அவரது படைப்புகளில் (காஃபி, இட்லி, சாம்பார்) வெளிப்படையாகத் தெரியும். சாம்பாருக்கும், ரசத்துக்கும் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்கள் தோல்வியைத் தழுவுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியென்றால் ரசத்தை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. வெறும் தண்ணியை ஊற்றி பழைய சாதமாக சாப்பிடுவது குறித்து நான் என்றோ கற்றுக்கொண்டு விட்டேன்.
என் தந்தையின் மூத்த மனைவியின் பிள்ளையான நானும், என் தந்தையும் தினசரி சின்னம்மா விட்டெறியும் அம்புகளுக்கு பலியாகிக் கொண்டிருந்தோம். விஷம் தடவிய ஒவ்வொரு அம்புகளும் தைத்துச்சென்ற இடத்தின் வடுக்கள் கணக்கில் அடங்காதவை. நீர் வற்றிய கிணற்றைப் போல, கண்ணீர் வற்றிய கண்களுடன் நடமாடிக் கொண்டிருந்த என் தந்தை வாங்கி வந்த சாபங்களுக்கு நான் ஏன் பலியாகிக்கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி வெகுகாலமாகவே என்னை நச்சரித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆறரை மணிக்கு செய்தித்தாள், 7 மணிக்கு பாத்திரம் கழுவுதல், ஏழரை மணிக்கு துணி துவைத்தல், 8 மணிக்கு அலுவலகம் கிளம்புதல், 9 மணிக்கு விடுதலை.......
விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவரின் பெயரை சொல்லுமாறு என் வரலாற்று ஆசிரியர் கேள்வி கேட்ட போது, ஏதோ சிந்தனையில் இருந்த நான் மிஸ்டர் மோகன் என்று கூறிவிட்டேன். எனது ஆசிரியரும் வெரிகுட் என்று கூறி பாராட்டினார். அன்றுதான் எனக்கே தெரியும் காந்தியின் முழுப்பெயர் மிஸ்டர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று.
அலுவலகம் செல்லும் அவஸ்தையில் 60 நொடிகளுக்குள் உணவு உண்ணும் சாதனைகள் என் தந்தையால் தினசரி நிகழ்த்தப்படுவது உண்டு. உருட்டிக் எடுக்கப்பட்ட கவளங்களை யானைகள் விழுங்குவது போல், இரண்டு உருண்டைகளை உள்நாக்கில் வைத்து அழுத்தி தண்ணீரை வாய்க்குள் கொட்டி விட்டு விருட்டென்று வெளியேறும் சாதனை நிகழ்ச்சி தினசரி நடைபெறுவது குறித்து இந்த உலகில் யார்தான் கவனிக்கிறார்கள். அதனால் அவர் 50 கிலோ தாஜ்மஹாலாகவே இன்று வரை இருக்கிறார். அவரது எடைக்கு தகுந்தாற்போல் டி.வி.எஸ் 50 ஒன்றை வைத்திருந்தாலும், அதிகமாக காற்றடித்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்தே பயணத்தைத் தொடர்வார்.
சின்னம்மாவின் நெருக்கமான தோழியான பக்கத்து வீட்டு சரளா அக்காவின் மகன் குட்டி மணியை பற்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உண்டு. 7ஆம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனுக்கு நியாயமாகவும், நேர்மையுடனும் வைத்திருக்க வேண்டிய பெயர் குண்டுமணி, இப்பொழுதே 50 கிலோவை கடந்து 60 கிலோவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். அவன் சாப்பிடும் நேரம் போக சிலமணித்துளிகள் படிப்பான் என்று ஊருக்குள் பேசிக் கொள்வார்கள். அவனது தாடை எலும்புகள் கடினமானவை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அதை உபயோகப்படுத்தி கடினமாக உழைத்துக் கொண்டிருப்பான். ஏதேனும் ஒரு உணவுப்பொருளை அவனது தாடைகள் அரைத்துக் கொண்டே இருக்கும் என்பதை இந்த நொடியிலும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
வயிற்றுக்கு மேல் கழுத்து என்னும் ஒரு உறுப்பு உண்டு என்று சொன்னால் அவன் நம்ப மாட்டேன் என்கிறான். அவனைப் பொறுத்தவரை வயிற்றுக்கு மேல் தலை மட்டும் தான். அவனுக்கு உடை தைக்கும் தையல் தொழிலாளி வேர்வை சிந்தி தைக்கும் உடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு மேல் அவனுக்கு பத்துவதில்லை. அவன் நாளொரு ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான் என்று சொன்னால் அப்படியே அதை நம்பலாம்.
விஷயம் என்னவென்றால், குட்டி மணியின் தாய் சரளா, என் சின்னம்மாவின் நெருங்கிய தோழி என்பதால் குட்டி மணியை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு என் தந்தையின் தலையில் வந்து விடிந்தது. சின்னம்மாவினால் அந்த கட்டளை பிறப்பிக்கப்பட்ட போது, மிஸ்டர் மோகன், கண்கலங்கிப் போனதை நான் கவனித்தேன். அரசியல் வாதிகளைப் போல் அல்லாமல் அவர் நிஜமாகவே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டார். இருப்பினும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
குட்டி மணி அந்த பரிதாபமான டி.வி.எஸ். 50 மீது முதன் முதலில் ஏறி உட்கார்ந்த போது அதன் சக்கரப்பகுதியில் சற்று கோட்டம் விழுந்து விட்டது. சின்னம்மாவின் முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்த என் தந்தை, அந்த ஆக்சிலேட்டரை பல்லைக் கடித்துக் கொண்டு திருகி முறுக்கினார். இருப்பினும் அந்த வண்டி கதறியதே தவிற ஒரு இன்ச் தூரம் கூட நகரவில்லை. ஒரு கையில் மாம்பழத்தையும், மற்றொரு கையில் பார்லிஜி பிஸ்கெட் பாக்கெட்டையும் வைத்துக்கொண்டு மாறி, மாறி சாப்பிட்டுக்கொண்டிருந்த குட்டி மணி இதையெல்லாம் பார்த்து கவலைப்படுவதாய் தெரியவில்லை. கண்கள் கலங்கிப் போன மிஸ்டர் மோகன், கால்கள் நடுங்க, கண்கள் கலங்க, கைகள் வெடவெடக்க அந்த டி.வி.எஸ். 50யை ஒரு ரிக்ஷாவாக நினைத்து தள்ளிக் கொண்டு சென்றார் மெக்கானிக் ஷாப்பை நோக்கி.
உடலில் இவ்வளவுதான் வேர்வை வடிய வேண்டும் என்கிற வரையறையைத் தாண்டி கண்ணாபின்னாவென வேர்த்து ஒழுகிய உடம்புடன் நடந்து வந்த மிஸ்டர் மோகனை பார்த்து பரிதாபப்பட்ட, மெக்கானிக் கடையின் முருகன் ஓடிச் சென்று என்தந்தையை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து சென்று உட்கார வைத்தான். வண்டியின் கோட்டம் விழுந்த சக்கரத்தை பழுது பார்க்கும் வரை அருகில் இருக்கும் இரும்பு சட்டத்தின் மீது உட்காரும் படி மேன்மை தாங்கிய குட்டி மணியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவனோ மாம்பழத்தை தோலுடன் சாப்பிட்டு முடித்துவிட்டு பெரிய மனது பண்ணி அந்த கொட்டையை கீழே போட்டுவிட்டு, பார்லிஜி யை கபலீகரம் செய்ய ஆரம்பித்தான்.
டி.வி.எஸ். 50யின் புல்லிங் கெபாசிட்டியை அதிகரித்து கொடுத்த முருகன் எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள் என பரிதாபமாக சொல்லியனுப்பினார். நியாயமாக 50ல் போக வேண்டிய வண்டி 15, 16, 17, திரும்பவும் 15 என வேகமுள் துடிதுடிக்க நிதானமாய் பயணித்து அந்த மூட்டையை பள்ளியில் இறக்கி விட்டு, காற்றாடியைப் போல் அலுவலகம் சென்றார்.
இந்தத் தண்டனையை தினமும் அனுபவித்து வந்த என் தந்தை, போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என பிள்ளையார் படத்திற்கு முன் நின்று தினமும் நொந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தினமும் சாப்பிடும் 4 இட்லியில் இருந்து கிடைக்கும் கலோரி அனைத்தும் குட்டிமணியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதிலேயே தீர்ந்து விடும் என்பதால், அவர் மேலும் மேலும் எடை குறைய ஆரம்பித்தார்.
என் தந்தை எப்பொழுது இப்படியொரு அடிமையானார் என யோசித்துப் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் அடிமையாக்கப் படுகிறார்கள் என்கிற கருத்து நிலவுகிறது. ஆணடிமைத் தனத்தைப் பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். என் தந்தை ஒரு சிறந்த அடிமை என்பதற்கு எந்தவொரு நிரூபணமும் தேவையிருக்காது.
இரண்டாவது திருமணமான புதிதில் சிறு குழந்தையாய் இருந்த எனக்கு சில விஷயங்கள் நிழலான நியாபகமாக உள்ளது. இன்று என்ன நடந்திருக்கும் என என்னால் யூகித்து புரிந்து கொள்ளவும் முடிகிறது.
தான் இரண்டாம் தாரமாக வற்புறுத்தப்பட்டதால் ஏற்பட்ட கோபமாக இருக்கலாம். தனக்கென்று வரவேண்டிய அடிமை ஏற்கனவே இன்னொரு பெண்ணுக்கு அடிமையாக இருந்தவன் என்கிற மனோபாவமாக இருக்கலாம். எப்பொழும் பெண்களுக்கு தன்னுடை அடிமை கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உண்டோ என்னவோ? ஒருவேளை நான் பிறந்திருக்காமல் இருந்திருந்தால் கூட சின்னம்மா என் தந்தையை மன்னித்திருக்கலாம். நான் என்றுமே அவரது ஆழ் மனதில் ஒரு முள்ளாகவே தைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். கண்ணில் நிரந்தரமாக விழுந்த தூசியைப் போல் நான் அவரை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறேன். இதையெல்லாம் விட என் தந்தையால் இன்னொரு முறை தந்தையாக முடியவில்லை. அவருக்கும் என் சின்னம்மாவுக்கும் கடைசி வரை ஒரு குழந்தை பிறக்கவேயில்லை. இது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் வெளிப்படையாக என்னால் விசாரித்து தெரிந்து கொள்ள முடியாது என்றாலும், சில விஷயங்களை யூகித்து புரிந்து கொள்ள முடிகிறது.
சித்தி கொடுமையிலிருந்து என்னை விடுவித்துவிட்டு தன்னை பலிகொடுத்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. சின்னம்மா இன்று வரை என் தந்தையை பழி வாங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் பின்னணியில் நிச்சயமாக வலிமையான ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும். என் தந்தை அவரது பழிவாங்குதலை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்கிறார் என்றால் அதற்கும் காரணமில்லாம் இருக்காது. ஆழ் மனதுக்குள் காயப்பட்ட சின்னம்மாவின் மனதுக்கு என் தந்தை படும் துன்பங்களே மருந்தாக இருக்கிறது போல. உண்மையில் அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்திருந்தால் நான் ஒதுக்கப்பட்டிருப்பேன் என்று நினைத்திருப்பார் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவருக்கு என்மேல் மிகுந்த அன்பு உண்டு என்றாலும், வரைமுறையின்றி அடிமைத்தனத்தில் வாழும் அவர் மேல் எனக்கு சற்றும் அன்பு இல்லை.
ஒரு பெண்ணின் நியாயமான ஆசைகளில் மண்ணை அள்ளிப் போட்ட மிஸ்டர் மோகன் பழி வாங்கப்பட வேண்டியவரா?, இல்லையா? என பட்டிமன்றம் நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் நடக்கும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு, திருமணத்திற்குப் பின் தன்னால் இயன்ற வரை பதிலீடு செய்ய நினைப்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், சம்பந்தமே இல்லாமல் பழிவாங்கப்பட்ட எனது குழந்தைப் பருவத்திற்கு, பதிலீடாக பழி வாங்குவதற்குரிய ஒரு வாய்ப்பாக அதை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
அவர்களுக்கு திருமணமான புதிதில் 3 மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். திடீரென ஒரு நாள் மாவு ஆட்டும் கல்லில் மாவரைக்க ஆரம்பித்தார். ஏதோ உடற்பயிற்சிக்காக மாவரைக்கிறார் என்று தான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அந்த கல்லுக்கு அவர் ஓய்வு கொடுக்கவேயில்லை. அந்த மூன்று மாத இடைவெளிக்குள் தான் ஏதோ ஒருநாளில் அவர் அடியாகி இருப்பார் எனத் தோன்றுகிறது. திருமணமான புதிதில் ஏதோ ஒருநாள் சின்னம்மா சிரித்த முகத்துடன் உணவு பரிமாரிய காட்சி புகை மூட்டமாக நியாபகத்தில் இருக்கிறது. ஆனால் இன்று அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இதெல்லாம் என் பிரம்மையாக இருக்கலாம், அல்லது நிறைவேறாத விருப்பங்களின் வெளிப்பாடாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
குழந்தைப் பேறு என்பது ஒரு ஆண்மகனின் அங்கீகாரமாக இருக்கலாம். பெண்ணடிமைத் தனத்துக்கு குழந்தைப் பேறும் ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைப் பேறு ஒரு பெண்ணிடம் ஆண்மகனை ஏற்றுக் கொள்ளச்செய்கிறது. ஆண்மையை ஏற்றுக் கொள்வதன் மூலம் பெண் ஆனவள் தன்னுடைய தானை இழந்து விடுகிறாள். அவள் ஆணுக்காகவும், குழந்தைக்காகவும் என ஆகிவிடுகிறாள், தன்னைச் சுற்றி எழுப்பப்பட்ட குடும்பம் என்னும் கோட்டைச் சுவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு கம்பீரமாக தவிக்கிறாள். பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி வீராவேசமாக பேசும் ஒரு குடும்பப்பெண் கம்பீரமாக பெண்ணடிமைத்தனத்தில் இருந்து கொண்டுதான் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணருவதேயில்லை. அவர்கள் அப்படிப்பட்ட கோட்டைச் சுவர்களை விரும்புகிறார்கள். குடும்பம் என்னும் கோட்டைச் சுவரையே ஒரு பெண் தனது பாதுகாப்பு அரணாக நினைத்து அதற்குள் விரும்பியே நுழைகிறாள். அதற்குள் இருந்து கொண்டே அடிமைத்தனத்தையும் எதிர்க்கிறாள். இது நடக்கவே போவதில்லை. முன் கதவு வழியாக சுதந்திரத்தையும், பின்கதவு வழியாக அடிமைத்தனத்தையும் விரும்பும் முரண்பட்ட பெண்ணால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.
என் சின்னம்மாவைப் பொருத்தவரை அவருக்கு குடும்பம் என்கிற அமைப்பு முழுமை பெறவில்லை. அதனால், அவர் அடிமையாகவில்லை. அடிமையானவர் என் தந்தைதான். அவர் குடும்பம் என்னும் கோட்டையை எழுப்பத் தவறிவிட்டார். அக்கோட்டைக்கு சிறைபட தயாராய் காத்துக் கொண்டிருந்த சின்னம்மாவை ஏமாற்றிவிட்டார். ஏமாற்றுக்காரர் என்ற பட்டத்துடன் ஒரு அடிமையைப்போல சின்னம்மாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார் அவர். இன்று மட்டுமல்ல என்றுமே அவர் அடிமையாகத்தான் இருக்கப் போகிறார். ஒரு பெண் விரும்பிய அடிமைத்தனத்தை கொடுக்க முடியாத ஒரு ஆண், அந்த பெண்ணிடம் அடிமையாவதைத் தவிர வேறு வழியில்லை.
- சூர்யா
வயது 34
பேருந்து வந்து நின்ற பிறகு அதற்குள் வரிசையில் நின்று மெதுவாக ஏறுவது மிக அவமானகரமான செயலாக இருக்கிறது. பேருந்தை அதன் நிறுத்தத்தில் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறேன் கல்லூரியில் நண்பர்களுக்கு மத்தியில். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தானது மெதுவாகத்தான் செல்ல வேண்டும். பயணிகள் ஓடிச் சென்று ஏறிக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு பேருந்தை நிறுத்துவார்களாம். அதில் பயணிகள் வரிசையில் நின்று ஏறுவார்களாம். அதுவும் படியில் யாரும் நிற்கக் கூடாதாம். என்ன கொடுமை இது. படிகளில் தொங்கும் 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று பாலகங்காதர திலகர் கூறியிருக்கிறார் அல்லவா? எப்படி ஒரு சுதந்திர போராட்ட வீரரின் புகழ்பெற்ற வீரவுரையை இன்றைய மனிதர்கள் மீறுகிறார்கள்.
வாயை அகல திறந்தபடி மெய்மறந்து எனது உரையை கேட்ட அந்த நண்பர்கள் இன்று என்னைப் பார்த்தால் என்னாவது. அன்று அகஸ்மாஸ்தாக படியில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவனை கடுமையாக மனதிற்குள் திட்டிவிட்டேன்.
"படுபாவிப் பயலே விழுந்து தொலைத்து விடாதே, இவர்களுக்கு படிகளில் தொங்கியபடி சீன் போடுவதே வேலையாக போய்விட்டது"
கடவுளே நல்லவேளை என் நண்பர்கள் யாரும் இங்கே இல்லை.
நான் மிகப்பொறுப்பானவனாக மாறிவிட்டேன்.
நான் படிகளில் தொங்குவதில்லை. நான் வரிசையில் நின்று பேருந்துக்குள் செல்கிறேன். நான் வலது பக்கம் ஆண்கள் அமரும் இருக்கையில் மட்டுமே அமருகிறேன். நான் பேருந்து நின்ற பிறகே இறங்குகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் சரியான சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்குகிறேன்.
வாழ்க்கையில் இருந்த சாகசத்தை ஒட்டு மொத்தமாக தொலைத்து விட்டேன். இவ்வாறு சொல்லிக் கொள்வதில் எனக்கு ஏன் வெட்கம் ஏற்படவில்லை என்றால், நான் அவ்வாறெல்லாம் வாழ்ந்ததில் மிக சந்தோஷமாக இருந்திருக்கிறேன். அவ்வாறெல்லாம் வாழ்வதில் உள்ள சந்தோஷத்தைப் பற்றி சிறிதும் தெரியாதவர்கள், "வெட்காமாயில்லை உனக்கு" என்று கேட்கும் உரிமையை பெறவில்லை என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
----------------------------
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் கருப்பு மை தலைச் சாயம் (டை) கண்டுபிடித்த அந்த மனிதருக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை என்று கடுமையாக சண்டை போட்டிருப்பேன். எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. அங்கீகாரம் கிடைக்கப்பெறாமல் உதாசீனப்படுத்தப்படுவது சகஜமாக போய்விட்டது இங்கு.
இந்தியாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது சகஜம்தான். அதாவது. ஒரு முடி. ஒரே ஒரு முடி. அழகாக வெள்ளை நிறத்தில் இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்துவிட்டால் அவனது பாலுணர்வு வாழ்க்கையே கேள்விக் குறியாக மாறிவிடும். தலைமுடி வெள்ளையாகத்தான் இருந்தால் என்ன? இந்தியாவின் மக்கள்தொகையை 200 கோடி ஆக்குவதில் என் பங்கு என்ன குறைந்துவிடப் போகிறதா என்ன. அந்தச் சாதனை வேள்வியில் என்னை விட்டு விட்டு தனியாக பயணிக்க இந்தச் சமூகத்தை நான் அனுமதிக்க மாட்டேன். எனக்காக, அல்லது என்னைப் போன்றவர்களுக்காக அன்றே ஒரு விஞ்ஞானி கடுமையாக தனது முடியெல்லாம் கொட்டி விடும் அளவுக்கு யோசித்திருக்கிறான். முடியை எப்படி கருமையாக்குவது என்பதை பற்றி.
அன்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், பந்தை என் வீட்டிற்குள் அடித்து விட்டு என்னைப் பார்த்து கூறுகிறான்.
"அங்கிள், அங்கிள் தயவு செஞ்சு பந்த எடுத்துப் போடுங்க"
வீட்டிற்குள் கண்ணாடி உடைந்தது பற்றி கூட எனக்குக் கவலையில்லை. ஆனால்......... ஆனால்......... அவன் ஏன் என்னைப் பார்த்து அப்படிக் கூப்பிட்டான்.
அவனை தொடர்ச்சியாக 40 நிமிடங்கள் மிரட்டினேன். இனிமேல் அவன் என்னை எங்கு பார்த்தாலும் "அண்ணன்" என்று தான் கூப்பிடுவான். அவனை தயார் படுத்த 40 நிமிடங்கள் ஆனது.
அன்று ஒருநாள் அவன் அம்மாவுடன் மார்க்கெட் சென்றுவிட்டு வரும் போது என்னை முறைத்து பார்த்படி சென்று கொண்டிருந்தான். எங்கே தனது பழியை தீர்த்துக்கொள்வானோ என்று பயந்து போனேன்.
இதற்குத்தான் வெள்ளைக்காரனாக பிறக்க வேண்டும் என்பது. அவர்களது முடி ஏற்கனவே வெள்ளையாகத்தான் இருக்கும். அவர்களுக்கு நரைப்பது என்ற பிரச்னையே இல்லை. ஏன் இந்த இந்தியர்கள் மட்டும் முடியின் நிறத்தை கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் என் மனதின் நிறத்தை கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். அது உஜாலா சொட்டு நீலம் போட்டு துவைத்தது போல் வெள்ளை வெளேர் என பளிச்சிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.
அன்று ஒருநாள் பெண் பார்க்கப் போன இடத்தில் இவ்வாறு சம்பாஷனை நடைபெற்றது.
நான் : பெண் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
பெண்ணின் தாய் : மாப்பிள்ளைக்கு வயசு ரொம்ப இருக்கும் போல இருக்கு
நான் (மனதிற்குள்ளாக) : ஆமாம் டை அடிக்க மறந்து விட்டேன்.
(சங்கடத்தில் நெளிவதைப் பார்த்து)
பெண்ணின் தந்தை : இல்லை மாப்பிள்ளைக்கு தலையெல்லாம் நரைச்சு போயிருக்கே அதான் கேக்குறாங்க, வேற ஒண்ணும் இல்லை.
அந்த படுபாவி போட்டோ கிராபர் என் தலையை போட்டோஷாப்பில் கருப்பாக்கி கொடுத்துவிட்டிருக்கிறான். என்முடிக்கு திடீரென என்ன வந்துவிட்டதோ அது வெளுத்துவிட்டது. ஏன் அவ்வாறு ஆனது என எனக்கு எப்படி தெரியும்.
என் நிலைமையை புரிந்த கொண்டு, கூட்டத்தில் மிச்சர் தின்று கொண்டிருந்த ஒருவர் இவ்வாறு துணைக்கு வந்தார்.
ஒருவர் : அது பித்தநரைதாங்க, அவருக்கு வயசு 30 தான் ஆகுது
என்னுடைய மனசாட்சி : அடப்பாவி 4 வயதை முழுங்கிவிட்டானே, முதல் இரவில் பெண்ணுக்கு விஷயம் தெரிந்து கண்ணை கசக்கினால் என் நிலைமை என்ன ஆவது. என் மானம் தான் என்னாவது.
பெண் என்னவோ 10 லிட்டர் குக்கரில் தினமும் சமைத்து சாப்பிடுபவள் போலத்தான் இருந்தாள். இருந்தாலும், வெள்ளை முடி என்பது 10 லிட்டர் குக்கரை மிஞ்சுவதாக இருக்கிறதே. என்ன செய்வது.
பெண்ணின் தந்தை : மாப்பிள்ளை டீ. காப்பி ரொம்ப குடிப்பீங்களோ?
அசிங்கமாக சிரித்துக் கொண்டே கூறித் தொலைத்தேன்
நான் : ஆமாங்க........
அவர்கள் தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொணடார்கள். அப்பொழுது அந்த ஒருவருக்கு திண்பதற்கு மிக்சர் தீர்ந்துவிட்டது போல. அதனால் என்னுடைய ஒரே அட்வைஸ் என்னவென்றால், பெண்பார்க்க செல்லும் பொழுது அந்த ஒருவருக்கு எப்பொழுதும் திண்பதற்கு நிறைய மிச்சர் வாங்கிச்செல்ல வேண்டும். அவர் வாய் எப்பொழுதும் அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் ஒருவார்த்தையை கூட பேசக் கூடாது. அவர் வாயை பிசியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் என் துரதிஷ்டம், அந்த ஒருவர் தின்பதற்கு மிச்சர் தீர்ந்து விட்டது. என்ன செய்வது என் தலையெழுத்து. அந்த புகழ்பெற்ற வாக்கியத்தை அவர் தன் வாய் மொழிந்தார்.
அந்த ஒருவர் : மாப்பிள்ளை தலைமுடி மட்டும் வெள்ளையில்லைங்க.....மாப்பிள்ளை மனசும் வெள்ளைங்க...........
என் செருப்பு பிய்ந்து போன காரணத்தை மட்டும் நான் சொல்லப் போவதில்லை. அது பிய்ந்து போவதற்குரிய சரியான நேரத்தை அடைந்திருந்தது. அது தன் வாழ்க்கையை போதும் என்று முடித்துக் கொண்டது. இனி ஒருவர் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு....
--------------------------------
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டால் ஒரு அமெரிக்கன் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிடுவான். இந்தியாவில் ஒருவன் 34 வயது வரை பெண் ஸ்பரிசம் என்பதை அனுபவப் பூர்வமாக உணராமல் இருக்கிறான். அவன் ஒரு பாதிரியார் இல்லை. அவன் ஒரு சாது இல்லை. அவன் தன் சுயஒழுக்கத்தில் இதுவரை எந்தப்பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் வாழ்ந்து வந்திருக்கிறான். அவன் பெண்களை இதுவரை மரியாதையான பார்வையுடன் எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல் அணுகி வந்திருக்கிறான். இருப்பினும் அவனுக்கு 34 வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு பெண் கிடைக்கவில்லை. அவனை இந்தியப் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புறக்கணித்து விட்டார்கள்.
மனவியல் நிபுணர்கள் உட்பட அனைவரையும் குழப்பக் கூடிய இந்த விஷயத்தை இந்திய இளைஞர்கள் மிகசுலபமாக பல நூற்றாண்டுகளாக சமாளித்து வருகிறார்கள். அவர்கள் ஆன்மீகத்தை நாட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் திடீரென்று மனோதைரியம் மிக்கவர்களாக, புனிதர்களாக, சிற்றின்பத்தை புறக்கணித்து, பேரின்பத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் பெண்ணின்பத்தை கடந்து கடவுள் இன்பத்தில் திளைக்க ஆரம்பித்து விடுவார்கள். வேறு வழி இருந்திருக்கவில்லை என்பதை வேறு யாரும் அறிந்திராத வரையில் காவி உடைக்குள் புனிதனாக வலம் வர வழியிருக்கிறது இந்தியாவில். இன்னும் ஒரு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையானாலும் கடைசியாக சம்சார வாழ்விற்குள் கடைந்தேற முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற என் எண்ணம் இன்னும் தீவிரமாய் இருக்கத்தான் செய்கிறது.
அன்று அந்த பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தால். என்னால் என்னை நம்பவே முடியவில்லை. என்னையும் ஒரு பெண் பார்க்கிறாள். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம்தான் கவனிக்கவில்லையோ என்று அப்பொழுது தான் தோன்றியது. அவள் வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்த்ததையும், நான் வெட்கியபடி நிலைகுலைந்து போய் தலைகுனிந்து நின்றதையும் என் முன்னால் நின்ற அந்த வயதான (கிட்டத்தட்ட 45 வயது) பெண்மணி கவனிக்கவில்லை. நான் செல்ல வேண்டிய பேருந்து அன்று மட்டும் சீக்கிரமாய் வந்து தொலைத்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? எப்பொழுதும் எனக்குஅப்படித்தான் நடக்கும். வரவேண்டிய நேரத்தில் பேருந்தானது வந்துவிட்டால் சூரியன் மேற்கே உதித்து விடுமே. வரக்கூடாத நேரத்தில் வந்து தொலைத்த அந்த பேருந்தை கொடூரமாக கண்டபடி திட்டி, சபித்து, உதைத்து (மனதிற்குள்ளாக) அனுப்பி வைத்தபின். அந்த பெண்ணை ஓரக்கண்ணால் கவனிக்க ஆரம்பித்தேன். அவள் இன்னும் என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தை கடுமையாக வைத்திருந்தாள் அதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை என்னை சோதனை செய்கிறாளோ? நான் பெண்களை பார்தவுடன் பல்லை இளிக்கக் கூடிய குணம் உடையவனா? என சோதித்து பார்க்க நினைக்கிறாளோ? அய்யோ! நான் அப்படியெல்லாம் இல்லை. இந்த 34 வருடங்களில் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சுத்தமான நைத்ரீக பிரம்மச்சாரிகளை பற்றி கேள்விதான் பட்டிருப்பீர்கள். இப்பொழுது நேரடியாக பாருங்கள், தயவு செய்து கண்களை இமைக்காமல் பாருங்கள். நான் உங்களுக்கு இடது புறமாக 10 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறேன் என்பதை கவனித்து பாருங்கள். என் பக்கத்தில் உள்ள அந்த 55 வயது தலைநரைத்த கிழவனை பார்த்து விடாதீர்கள். நான் சற்று தள்ளியிருக்கிறேன். அந்த கிழவனுக்கும் எனக்கும் 5 அடி இடைவெளி உள்ளது என்பதை உங்களுக்கு சுட்டி காட்ட ஆசைப்படுகிறேன் என காற்றின் வழியாக அந்த பெண்ணுக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தேன்.
அவள் இமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. 4 வருடங்களுக்கு முன் நான் நாத்திகனாக மாறிவிட்டதாக சத்தியம் செய்திருந்தேன். அந்த சத்தியத்தை இன்று கேன்சல் செய்துவிட்டேன். நான் என் மனதார அந்த கடவுளுக்கு நன்றி கூறினேன். ஆனால் கண்களை மூடவில்லை. அதையெல்லாம் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் அந்தக் கடவுள். கடவுளே நான் திட்டியதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எனக்கு உதவி செய்கிறாயே உனக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீ நல்லவன். உன்னை மதிக்கிறேன்.
அந்த பெண் என்னவோ சற்று கருப்புதான். இருந்தால் என்ன?? கருப்புதான் திராவிடர்களின் நிறம் என்பதை யாரோ அடிக்கடி கூறுவதை சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேட்டிருக்கிறேன். நானும் திராவிடன் என்பதை தரையில் துண்டைப் போட்டு தாண்டி சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நான் வெள்ளைக்காரனாக ஆசைப்படுகிறேன் என்று சில வாரங்களுக்கு முன் மனதிற்குள்ளாக ஒரு பேதையைப் போல நினைத்ததை இப்பொழுதே வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். கருப்பு நிறம் தான் வெயிலுக்கு ஏற்ற நிறம். இங்குள்ள வெப்பநிலையை தாங்க வேண்டுமானால் கருப்பு நிறமுள்ள தோல் உள்ளவர்களால் தான் முடியும். முடி வெள்ளையானால் என்ன நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன். அதனால் என்ன? முடியெல்லாம் ஒரு விஷயமா?...
கல்லூரி தினங்களில் சில மோசமான நண்பர்கள் பெண்களைப் பார்த்து படுமோசமாக கமெண்ட் அடிப்பார்கள். அதில் ஒன்று
"அவளைப் பார் செம கட்டையாக இருக்கிறாள்" என்பார்கள்.
எனக்கு அப்பொழுது அந்தப் பெண்ணைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றியது. அவள் மகளிர் ஜிம்முக்கு போயிருப்பாள் போல. நல்ல வலிமையான தேகமுடையவளாக இருந்தாள். விட்டால் 90 கிலோ எடையை அப்படியே தூக்குவாள் போல.
பெண்கள் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். பெண்கள் இப்படி வலிமையாக இருந்தால் தான் அராஜகமாக நடந்து கொள்ளும் ஆண்களை தட்டிக் கேட்க முடியும். பாரதியார் இதைப் பார்த்தால் நிச்சயமாக சந்தோஷம் அடைந்திருப்பார். ரௌத்திரம் பழகு என்று அவர் கூறியிருக்கிறார் அல்லவா? நல்லவேளை இந்தியப் பெண்கள் கணவனை அடிக்க கை ஓங்க மாட்டார்கள். அந்த வகையில் நான் தப்பித்தாலும், சமூகத்தில் அராஜகமாக நடந்து கொள்ளும் ரவுடிகளை பந்தாட இதுபோன்ற பெண்கள் கை ஓங்கத் தான் வேண்டும். அவளுக்கு என் வாழ்த்துக்களை மோர்ஸ் தந்தி முறையில் காற்றில் அனுப்பினேன்.
இவ்வளவுக்குப் பின்னும் அவள் இருக்கமாகத்தான் இருந்தாள். என் மூளையை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் அது ஒன்றுதான்.அவள் ஏன் இன்னும் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அவள் என்னை நோக்கி நடந்துவர ஆரம்பித்தாள். என் கால்கள் ஒன்றும் நடுங்கவில்லை. யாரும் அப்படியெல்லாம் தவறாக முடிவு செய்யக் கூடாது. என் முடிகள் ஒன்றும் குத்திட்டு நிற்கவில்லை. அப்படியெல்லாம் என் அனுமதியில்லாமல் கற்பனை செய்யக் கூடாது. என் நாக்கு வறண்டு போனது என்றும் நான் சொல்லவில்லை. என்னால் நிற்க முடியவில்லை என்று யார் சொன்னது. எல்லாம் அவரவர் பிரம்மை.
ஆனால் இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது நான் நின்றுகொண்டிருந்தேன் என்பதை என்னால் நியாபகப்படுத்திப் பார்க்க முடிகிறது. நேராக வந்தவள் என் முன்னே நின்று கொண்டிருந்த அந்த 45 வயது மதிக்கத் தகுந்த பெண்மணியை அணுகி தாழ்ந்த குரலில் பேசியபடி சிறிது நேரம் நின்றிருந்தாள். இருவரும் 10 வினாடிக்கு ஒருமுறை என்னை முறைத்துப்பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அவள் அதே முறைப்பான முகத்துடன் என்னை கடந்து சென்றாள்.
என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் தவித்த நான் அன்று தற்கொலைப்படை வீரனின் செயலுக்கு இணையானதொரு செயலைச் செய்தேன். நான் தைரியமாக அந்த 45 வயது பெண்மணியை அணுகி, அந்த கரிய நிற அழகி என்ன கூறினாள் எனக் கேட்டேன். அவள் கூறினாள்.............
உங்கள் பின்னே நின்றிருக்கும் அந்த தடியன் உங்களை ஏதேனும் தொந்தரவு செய்கிறானா? அந்த ரவுடிப்பயலால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டதா? அவன் ஏதேனும் தவறாக நடந்து கொள்வானேயானால் தயங்காமல் என்னிடம் கூறுங்கள். நான் ஒரு போலீஸ் அதிகாரி.............என்று கூறியதாக கூறினாள்.
நான் உடனடியாக 4 காரியங்களைச் செய்தேன்.
1. நான் மீண்டும் நாத்திகனாக மாறிப் போனேன்.
2.மீண்டும் அடுத்த பிறவியில் வெள்ளைக்காரனாக பிறப்பது என்று முடிவு செய்தேன்.
3. நான் இன்று முதல் திராவிடன் அல்ல
4. அடுத்து வரப்போவது பேருந்து என்று அல்ல மாட்டு வண்டியாக இருந்தாலும் பரவாயில்லை ஏறிவிடுவது என்று முடிவு செய்தேன்.
மேலும் ஒன்றை சத்தம் போாாாாாாாாட்டு கத்தினேன் (மனதிற்குள்ளாக)
ஆண், பெண் உறவில் இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த சமூகம் ஒழிக...... ஒழிக.... ஒழிக.....
- சூர்யா
மிகக் கடைசியில்...
நான் : சரி நான் அப்புறம் பேசுறேன்.
அவள்: அப்புறம்னா... இப்ப யார்கூட பேசப்போற.
நான்: இப்ப யார்கூடயும் பேசல, நான் டிராபிக்ல இருக்கேன்
அவள் : ட்ராபிக்ல இருந்தா பேசகூடாதுன்னு எந்த சட்டமும் இல்லையே,
நான் : நான் வண்டியில போய்கிட்டு இருக்கேன்.
அவள் : ஓரம்மா நின்னு பேசு
நான் : ஐயோ போலிஸ் நிக்கிறாங்க.
அவள் : அவர் நின்னா நின்னுட்டு போகட்டும். அதற்கென்ன.
நான் : உனக்கு அறிவே இல்லையா, புரிஞ்சுக்கவே மாட்டியா
அவள் : ஆமா உன்னை புரிஞ்சுக்கவே முடியலை. இப்பயெல்லாம் உன்னை புரிஞ்சுக்கவே முடியலை
நான் : சரி வை நான் அப்புறம் பேசுறேன்.
அவள் : அப்புறம் ஒன்னும் பேச வேண்டாம்.
போலீஸ் காரர் : நோ பார்க்கிங்ள வண்டிய நிறுத்திருக்கியே உனக்கு எவ்வளவு தைரியம்.
நான் : தயவு செஞ்சு சொல்றத கேளு.
போலீஸ் : நீ சொல்றத நான் என்னடா கேட்கனும். ஒழுங்கா வண்டிய விட்டு இறங்கு.
அவள் : நல்லா புரிஞ்சுகிட்டேன். உன்னை பத்தி..
நான் : என்னத்தை புரிஞ்சுகிட்ட நீ.
போலீஸ் : எல்லாத்தையும் புரிய வைக்கிறேன். இறங்கு
நான் : சார், சார் சாவிய ஏன் சார் எடுத்துட்டு போறீங்க
அவள் : இனிமே என் கூட பேசாத
போலீஸ் : உன்னோட பைக் சாவி ரொம்ப அழகா இருக்கு அதான் எடுத்துட்டு போறேன்.
அவள் : நீ உன் அம்மா பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்க
நான் : ????????
இருமுனைத் தாக்குதலில் குளம்பிப் போன என் மூளைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அந்த முரட்டு போலீஸ் காரரிடம் இவ்வாறு கூற வேண்டும் போல இருந்தது. அழகாக இருந்தாலும் அது அடுத்தவர் பொருளாக இருந்தால், அதை அவர் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் சென்றால் அது திருட்டு.
என்னை கோபமடையச் செய்தது என்னவோ அந்த நயமான பதில்தான். நான் அவமானப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தேன். என் சாவி அவருக்கு பிடித்திருக்கிறதாம். அதனால் எடுத்துச் சென்றாராம். இந்த பதில் போதாது இன்னும் காரமாக அவர் என் சட்டையை பிடித்து குலுக்கி என்முகத்தில் ஓங்கி ஓங்கி குத்தும் அளவுக்கு அவருக்கு பதில் சொல்ல வேண்டும். எப்படி?
"எனக்குக் கூடத்தான் அழகான பெண்களை பிடிக்கும். ஒரு வேளை உங்கள் மனைவி அழகாக இருக்கலாம். எனக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றலாம்."
இது போதும் என்று நினைக்கிறேன். அவரது இரத்தக் கொதிப்பு அடுத்த லெவலை அடைய இது போதும் என்றே நினைக்கிறேன். போலீஸ்காரராக இருந்தால் அடுத்தவரை மதிக்க தேவையில்லை என்று ஏதேனும் நிர்பந்தமா என்ன? என் சாவி அவருக்கு பிடித்திருக்கிறதாம். அவர் மேல் திருட்டு கேஸ் போட ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? என என் வக்கீல் நண்பனிடம் கேட்க வேண்டும். அவனிடம் கேட்டால் அவன் கொட்டாவி விட்டுக்கொண்டு பதில் கூறுவதற்குள் அவனை சுட்டுவிட வேண்டும் போல் எரிச்சல் வரும். நிலைமையை என்றுமே என் நண்பர்கள் மட்டும் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களின் நண்பர்கள் மட்டும் எப்படித்தான் நண்பனுக்கு ஒன்று என்றதும் வாரி சுருட்டிக் கொண்டு வருகிறார்களோ? தெரியவில்லை.
அவர் சாவியை எடுத்துக் கொண்டு அவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார். ஏதோ நான் அவர் பின்னாடியே கெஞ்சிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது நினைப்பு. என்னிடம் மட்டும் இன்னொரு சாவி இருக்குமானால் நான் யோசிக்காமல் அதைப் பயன்படுத்தி அவர் முன்னால் வேகமுள் 10ல் மெதுவாக அவர் கண்முன் அவரை பார்த்துக் கொண்டே ஆங்கிலப்பட ஹீரோ போல சென்று கொண்டிருப்பேன். என்ன சாபம் இதுவோ எனக்கு தேவையான பொழுது என்னிடம் எனக்குத் தேவையானது இருப்பதில்லை.
அவன் என்னை பரம்பரை எதிரியாக நினைத்து என்ன? என்ன? சொல்லப் போகிறானோ தெரியவில்லை. இவர்களுக்கு அழுவதற்கு என்றே மாதம் ஆயிரத்து 500 ரூபாயை என் சம்பளத்திலிருந்து நான் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இதில் அவர்களிடம் அவமானம் வேறு பட வேண்டும்.
இதனால் தான் சிறுவயதில் நான் ஒரு கூலிப்படை தலைவனாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். குறைந்த பட்சம் ஒரு காவல்துறை அதிகாரி பயப்படும் அளவுக்கு, குறைந்த பட்சம் ஒரு காவல்துறை அதிகாரியிடம் அவமானப்படாமல் இருக்கும் அளவுக்கு, குறைந்த பட்சம் ஒரு காவல்துறை அதிகாரி என் பைக் சாவியை எடுத்துக் கொண்டு என்னை அவமானப்படுத்தாமல் இருக்கும் அளவுக்கு நான் பயங்கரமானவனாக இருந்திருப்பேன்.
திடீரென போன் கால் ஒலித்தது.
நான் : ஹலோ!
(எதிர்பார்க்காமல் அலைபேசியை ஆன் செய்தது நான் செய்த மாபெரும் தவறுகளுள் ஒன்று என எனது தங்க நிற டைரியில் குறித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு)
அவள் : இனிமே என் கூட பேசாத, நீ உங்க அம்மா பாத்து வச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க...
நான் : ??????
என் மூச்சு, பேச்சு, அவமான உணர்வு எல்லாம் அடங்கிப் போனது.
அவர் (அந்த போலீஸ் காரர்) என்னைத் திட்டினார். அவர் என்னை அவமானப்படுத்தினார். அவர் என் சாவியை திருப்பிக் கொடுத்தார். அவரால் நான் அனுப்பி வைக்கப்பட்டேன். எல்லாம் சுமுகமாக நடந்தேறியது. எதுவுமே என் அதிர்ச்சியை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை.
-----------------
வெகு நேரமாக சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்ன நடந்தது. சகித்துக்கொள்ள முடியாத சில நிமிடங்கள் சகஜமாக கடந்து செல்லும் அளவுக்கு என்னவிதமான உணர்வை அவள் கொடுத்தாள். அவள் என்மீது அன்பு வைத்திருக்கிறாள். நிச்சயமாக என்றென்றைக்குமாக என்னை கோபித்துக்கொண்டு செல்வதற்காக அந்தவார்த்தைகளை அவள் சொல்லவில்லை. அவள் எனது அட்டென்ஷனை தன்பக்கம் எந்த நிமிடம் வைத்துக்கொள்வதற்காக முயற்சிசெய்து கொண்டிருந்தாள் என்பதை அப்பட்டமாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அது என்ன விதமான உணர்வு. எப்பொழுதும் இரண்டு கண்கள் என்னை கண்காணித்துக்கொண்டிருப்பது போன்றதொரு டார்ச்சரான உணர்வு. அவள் ஒரு மணித்துளியும் என்மீதிருந்து அவளது பார்வையை விலக்கவில்லை என்பதை என்னிடம் விளக்க நினைக்கிறாள் என்பது எனக்கு நடுமண்டையில் அடிப்பது போல் நன்றாக உறைக்கிறது. அவளை நான் திட்டிக்கொண்டாவது நினைத்துக்கொண்டிருக்க வேண்டுமாம். அப்படி நினைக்காமல் போய்விட்டால் அது அன்பாகிவிடாது.
அவளையே ஒவ்வொரு நொடியும் நினைத்துக்கொண்டு தியானம்செய்து கொண்டிருக்க வேண்டுமானால் என் அப்பா என் பெயரில் 2 கோடி ரூபாயாவது பேங்க் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். சோறு என்று ஒன்றை தின்ன வேண்டும் என்றால் வேலை என்ற ஒன்றை செய்தாக வேண்டும் அல்லவா? வேலை என்ற ஒன்றை செய்தால் அவளையே நினைத்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? இதையெல்லாம் அவளிடம் சொன்னால் அவள் என்ன சொல்வாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அது என் பிரச்னை இல்லை............
--------------
அதிகாலை வேளை...
தலையனைக்கு அருகில் உள்ள செல்போன் ஒலித்துக் கொண்டிருந்தது. அது அலாரமா அல்லது யாராவது என்னை அழைக்கிறார்களா? என்பதை மூளை கிரகித்து உணருவதற்குள் அது நின்று விட்டது. திடீரென்று ரத்தத்தில் ஒரு சுறுசுறுப்பும், சூடும் பரவியது. அய்யோ அது அவளாக இருந்தால்...... கடவுளே அது அவளுடைய இரண்டாவது அழைப்பாக இருந்தால்..... காலையிலேயே அரைமணி நேரம் பேசுவாளே.......
ஐயோ....... அது மூன்றாவது அழைப்பு. அது என் அருமைக் காதலிதான். கடவுளே.... கொலைகாரப் பாவி..... மனசாட்சி இல்லாதவனே..... உனக்கு ஒரே நேரத்தில் மூன்று காதலிகள் வாய்க்க.....
ஒருமணி நேரத்திற்குப் பிறகு, என்முடிகள் எல்லாம் குத்திட்டு நின்றன என்பதை என் அறை நண்பன் கூறிய பிறகுதான் கவனித்தேன். நல்ல வேலை செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அவள் கூறுகிறாள் அவளை நான் காதலிக்கவில்லையாம். அவள் மேல் எனக்குஅன்பில்லையாம். அவளை நான் ஒதுக்குகிறேனாம். என் அம்மா பார்த்து வைத்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனாம். அப்படி ஒருவேலை என் அம்மா பெண் பார்க்கவில்லை என்றால், அவளே ஒரு சேட்டு பொண்ணாக பார்த்து சொல்கிறாளாம். அவளை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம். அவளை காதலிப்பது போல் நடிக்க வேண்டாமாம்.
அவள் பேசிக் கொண்டிருந்த பொழுது இடையே நான் ஒரே ஒருடயலாக் பேசிய நியாபகம் நன்றாக என் நினைவில் இருக்கிறது.
கந்தன் கருணை படத்தில் சிவாஜி (வீரபாகு) பேசிக் கொண்டிருந்த போது, இடை இடையே பயந்து கொண்டே சிவக்குமார் (முருகன்) வசனம் பேசுவது போல் அல்லாமல் நான் அந்த வசனத்தை மிகத் தைரியத்துடன் கூறினேன் என்பது என் நியாபகத்தில் மிக நன்றாக உள்ளது. நமது வாழ்க்கையின் தைரியமான தருணங்கள் நமது நியாபத்தில் இருப்பது சகஜம் தானே.
நான் இவ்வாறு கூறியிருந்தேன்....
"நான் உன்னை மிகமிக உண்மையாக காதலிக்கிறேன். என்னை நம்பு தயவு செய்து."
அப்பொழுது தான் அவள் அழுதாள். நான் சிவாஜியை விட மிக நன்றாக நடிக்கிறேனாம். அந்த ஆண்டவன் என்னை சும்மா விடமாட்டானாம்.
அது என்னவோ உண்மைதான். அந்த ஆண்டவன் என்னை சும்மா விடுவதில்லை. அவர் கிரிக்கெட், புட்பால் விளையாட்டு போல திருவிளையாடல் விளையாடிக்கொண்டிருக்கிறார். அவரது சதுரங்கத்தில் அடிவாங்கும் காய்களாக இருப்பது யார். எங்கே கூறுங்கள் பார்க்கலாம் என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் மெதுவாக சிரித்துக் கொள்வேன். அந்த துர்பாக்கியசாலி வேறு யாராக இருக்க முடியும். என்னைத் தவிர...
அவள் மேலும் கூறினாள். எனக்கு குழந்தை பிறந்தால் தயவு செய்து அவளது பெயரை வைக்கக் கூடாதாம். அப்படி வைத்தது தெரியவந்தாள் என்னை போன மாதம் பிய்ந்து போன செருப்பால் அடிப்பாளாம். அதில் தயவு செய்து அடித்துவிடாதே என்றுஅவளிடம் (அவளை வெறுப்பேற்றுவதற்காக) கூறினேன். அதில் தான் அடிப்பேன் என்று பிடிவாதமாக மற்றும் ஒரு சின்ன சினுங்கலான சிரிப்புடன் கூறினாள். எனக்குத் தெரியும் அவளை எப்படி சிரிக்க வைப்பதென்று.
(ஆம் நான் செருப்படி வாங்கினால் அவளுக்கு சிரிப்பு வரும்)
அப்போதுதான் சார்ஜ் தீர்ந்து போனது.
அவள் கையில் மட்டும் இந்நேரம் அணு ஆயுதம் இருந்திருந்தால் அதை என்னை நோக்கி வீசியிருப்பாள் என்று என்னால் உறுதியாக கூற முடியும்......
அவளுக்கு வருங்காலத்தில் ரத்தக் கொதிப்பு சீக்கிரம் வந்து விடும் என்பதை இப்பொழுதே யூகித்து விட்டேன்... கடவுளே அவளது வைத்திய செலவுக்கு என்னை அலைய வைத்து விடாதே....
--------------
சாய்ங்காலம் ஏழரைமணிக்கு கால் வரவில்லை என்றால் ஆச்சரியப்பட்டு போகிறார் என் உயரதிகாரி. என்ன இந்த உலகத்தில் ஒரே அதிசயங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என பொதுப்படையாக அவர் பேசுவது எனக்கு புரியாது என்று நினைத்துக் கொள்வார் போல. அவருக்கும் காதலிகள் இருந்திருக்கலாம். அவரது அருமை மனைவியிடம் அவர் திட்டு வாங்குவதை நான் பலமுறை கேட்டிருப்பதால், அவருக்கு பல இளம் காதலிகள் இருக்கலாம் என அதிகாலை சூரியன் போல் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. காதலிகள் எப்பொழுதுமே அபாயமான தேவையாக இருக்கிறார்கள். அவர்களின் அருகாமையும், அவர்களின் பார்வையிலிருந்து பதுங்குவதும் மிக மிக அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது.
ஒரு முரட்டு சிங்கம் போன்ற என் மேலதிகாரி, நான் ஒன்றும் முரட்டு சிங்கம் அல்ல என தனது கழுத்தில் போர்டு போட்டு தொங்க விட்டிருப்பது பளிச்சென்று தெரிகிறது. அல்லது அவரது நெற்றியை உற்று பார்த்தால் அதில் தெளிவாக எழுதியிருக்கும்.
"நான் ஒரு டப்பாசு" என்று
மணி 7.45
என் மேலதிகாரி கூறினார். உங்களுக்கு கால் வருகிறது, எடுத்து பேசிவிட்டு வாருங்கள். அவர் சொல்லவில்லை என்றால் நான் கவனித்திருக்க மாட்டேன். அவருக்கு அந்த அட்டென்ஷனை கொடுத்த புண்ணியவதி வாழ்க.
நான் எடிசனைப் போல என்னை மறந்து வேலை செய்து கொண்டிருந்தேன் என்பதை அவளுக்கு எப்படி புரிய வைக்கப்போகிறேன் என்ற கவலையுடன், கைப்பேசியை ஆன் செய்தேன். அவள்தான்.... ஆனால் பேசவில்லை......
நான் ஹலோ, ஹலோ, ஹலோ. என்று 20 முறை கூற வேண்டுமாம். அதை அவள் கவனித்துக்கொண்டிருப்பாளாம். நான் இடையில் கட் பண்ணவும் கூடாது. அப்படி கட்பண்ணினால் திரும்ப அழைப்பு வரும். நான் வேலை செய்ய முடியாது. ஸ்விட்ச் ஆஃப்செய்தாலோ தொலைந்தேன். இரவு தூங்க முடியாது. அதனால் நான் தொடர்ச்சியாக 20 முறை ஹலோ..... ஹலோ..... என்று சீரியசாக குரலில் வேதனையுடன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். நான் அதிகமாக வருத்தப்பட்டதாக அவளுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ, அப்பொழுதுதான் அவள் பேசுவாள். அவள் சொல்லும் வரை ஹலோ சொல்ல எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நானும் நிறுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன். அவளும் அமைதியாக இருந்தாள். 3 நிமிடங்களுக்கு பிறகு அவளாக ஆஃப் செய்தாள். எனக்குத் தெரியும் மீண்டும் 3 நிமிடங்களுக்குப் பிறகு கூப்பிடுவாள் என்று. ஏன் என்றால் அப்பொழுதுதான் நான் வேலை செய்ய உட்கார்ந்திருப்பேனாம். அப்பொழுது கூப்பிட்டால் நன்றாக வெறுப்பேற்றியது போல் இருக்குமாம். நான் பாத்ரூம் ஓரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தான். இன்னொருவன் செல்ஃபோனில் வகையாக திட்டு வாங்கிக் கொண்டு அங்கே வந்து கொண்டிருந்தான். என்னை பார்த்துக்கொண்டே திட்டு வாங்கிக்கொண்டிருந்தான். நான் பரவாயில்லை. குறைந்த பட்சம் தப்பித்துக் கொள்வேன்.
மீண்டும் அழைப்பு வந்தது. நான் உடனே அலைபேசியை ஆன்செய்தேன். அவள் சுதாரித்துக் கொண்டாள். இவன் தயாராக இருக்கிறான். இப்பொழுது வெறுப்பேற்ற முடியாது என்று நினைத்தவளாய் மீண்டும் செல்போனை அனைத்துவிட்டாள்.
நான் நிம்மதியாக சென்று வேலையை பார்த்தேன். ஆனால் அங்கு வேலை முடிந்துவிட்டிருந்தது. என் உயரதிகாரியன் பார்வையில் அந்த வார்த்தைகள் மிக நன்றாக தெரிந்தது.
"எப்பொழுதும் இதுதானே நடக்கிறது. ஏதோ இன்றைக்கு மட்டும் இது நடப்பது போல் பயந்து கொண்டே வருகிறாய்" என்று அவர் மனதுக்குள் நினைத்தது சந்திரமுகி ரஜினியைப்போல் எனக்குமிக நன்றாக கேட்டது.
------------------
அதிகாலை வேளை...
நான் பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வரும் போது வெளியே நின்றிருந்த 2 பேரும் என்னை ஜென்ம விரோதி போல முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம்.... நான் கடந்த அரை மணி நேரமாக என் அருமைக் காதலியுடன் பேசிக்கொண்டிருந்தது குளிக்கும் அறையிலிருந்து என்பதுதான்...
அவள் கேட்கிறாள். நேற்று மாலை அலைபேசியில் அழைத்த போது ஏன் பேசவில்லை என்று. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நான் என்ன கூறினால் அவள் என்ன கூறுவாள் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவள் நன்றாக ரிகர்சல் பார்த்துவிட்டுதான் என்னிடம் பேசவே ஆரம்பிப்பாள். நான் ஒரு அப்பிராணியைப்போல் அவளிடம் மாட்டிக் கொள்வேன்.
அவளிடம் நான் இப்படி கூறியிருந்தாள், அவள் என்னிடம் எப்படி கூறியிருப்பாள் தெரியுமா?
அவள் : ஏன் நேற்று போனில் பேசவில்லை.
நான் : நீதான போன் செஞ்ச, ஏன் பேசல
அவள் : அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. நீ ஏன் பேசவில்லை.
நான் : போன் பண்ணவங்க தான் பேசணும்.
அவள் : அப்படி ஒண்ணும் எந்த சட்டமும் இல்லையே. நீ ஏன் பேசவில்லை.
நான் : நீ பேசுவண்ணு நான் வெய்ட் பண்ணினேன்.
அவள் : நான் பேசலைன்னா நீ பேச மாட்டியா? ம்....
நான் : அப்படியெல்லாம் இல்லை. நீ பேசுற வரை வெய்ட் பண்ணலாம்னுதான்...
அவள் : உன்னை யாரு வெய்ட் பண்ண சொன்னது.
நான் : யாருமில்லை. நானாதான் வெய்ட் பண்ணினேன்.
அவள் : உன்னையா..... யாரு வெய்ட் பண்ணச் சொனன்து.
நான் : கடவுளே இப்ப என்ன பண்ணணும்னு சொல்ற..
அப்பொழுதுதான் அந்த முதல் இளைஞன் கதவை தட்டியிருக்கிறான் போல. நான் கவனித்திருக்கவில்லை.
அவளது அடுத்த ஆயுதம் அழுகையாக வெடித்தது. அதை சகிக்கவே முடியாது.
அவள் : அப்ப நான் பேசுனா உனக்கு கடவுள கூப்பிடனும் போல இருக்கு இல்ல
நான் : ஐயோ அப்படியெல்லாம் இல்ல. ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற. சரி நான் தெரியாம பேசாம இருந்திட்டேன் என்னை மன்னிச்சிரு
அவள் : ஏன் பேசலன்னு காரணம் கேட்டா ஏதேதோ காரணம் சொல்ற. நல்லா காரணம் சொல்ல கத்துகிட்ட.
நான் : இல்ல அப்படியெல்லாம் இல்ல.
அவள் : நீ உங்க அம்மா பாத்து வச்சிருக்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க
............
............
கத்திக்கு 2 பக்கம் தான் முனை உண்டு. ஆனால் என் காதலியின் பேச்சுக்கு 4 பக்கமும் கூர்மையான முனை உண்டு. தப்பிக்கவே வழியில்லை. என் மேல் ஏற்பட்ட பரிதாபம் காரணமாகவே அவர்கள் இருவரும் என்னிடம் சண்டை போடாமல் இருந்திருப்பார்கள் எனத் எனக்கு தெரிகிறது. அவர்கள் இருவரும் ஆளுக்கு 2 சிகரெட் என 4 சிகரெட்களை ஊதித் தள்ளியிருக்கிறார்கள் என நான் கண்டுபிடித்திருந்தேன்.
--------------------
இன்று திருமணமாகி 15 வருடங்களுக்குப் பிறகும் அவள் என் அம்மா பார்த்து வைத்திருந்த அந்த மர்மப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசியே என்னை டார்ச்சர் செய்கிறாள். நான் என் அம்மா பார்த்து வைத்திருக்கிற பெண்ணை கல்யாணம் செய்திருக்கலாமாம். அவளை கல்யாணம் செய்து கொண்டு அவளுக்கு பெரிய துரோகம் செய்து விட்டேனாம். அவள் என்மீது தொடுத்திருக்கு இந்த போர் முடிவடையப் போவதே இல்லை என்பதை நான் மிக கடைசியில் தான் புரிந்து கொண்டேன்.
அருஞ்சொற்பொருள் :
மிகக் கடைசியில் : இனி ஒரு பெண்ணும் ஏறெடுத்து பார்க்காத நிலை
- சூர்யா
நைனா வெர்சஸ் டாக்டர்
எங்கள் குடும்பம் மானமுள்ள குடும்பம். போலிஸ் ஸ்டேசன் வாசல்படியை கூட மிதிக்காத குடும்பம் என்று மார்தட்டிக்கொள்வதில் சலிப்படையாத ஒருவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த கிராமத்தில்தான் இருக்கிறார் தயவு செய்து அவர் வீட்டுக்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டால் போதும். கைசூப்பிக் கொண்டு, மூக்கில் சளி வழிந்தபடி 3 நாட்கள் குளிக்காமல் பரட்டைத் தலையுடன் இருக்கும் குழந்தை கூட கைபிடித்து இழுத்துக்கொண்டு போய் ராசு நைனா வீட்டில் தள்ளி விட்டு எகத்தாளமாக சிரிக்கும். இதுகூட தெரியவில்லையா உனக்கு என்பது போல.
முத்துவும், சாமியாத்தாலும் பேருந்தில் இருந்து இறங்கிய பொழுதே நன்றாக புரிந்து கொண்டார்கள். நரிக்குடி கிராமம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்று. மனிதர்களின் காலடித் தடங்களே படாத இடங்கள் இன்னும் பூமியில் பொலிவுடன் இயற்கை அழகு பொங்க காணப்படும். அதுபோன்ற ஒரு அழகுடன் அந்த ஊர் மிலிர்ந்தது. ஆனால்... சிங்கப்பூர், மலேசியாவில் எல்லாம் தார் ரோடு போட்டிருப்பார்களாமே என்று ஆச்சரியத்துடன் பேசக்கூடிய மனிதர்கள் இன்னும் அந்த ஊரில் இருப்பதால் அதற்குமேல் எதுவும் எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் போடப்பட்டிருக்கும் சாலைகளை விட செம்மண் சாலைகள் நேர்த்தியாகத்தான் இருந்தன. வெய்யில் கொடுமையிலிருந்து தப்பிக்க அவ்வூர் காரர்கள் இன்னும் ஆட்டுப் புழுக்கைகள் மீதுதான் நடந்து செல்கிறார்கள். செருப்புக் காலுடன் நடந்து வரும் இவர்களைப் பார்த்து அவர்கள் கேலியாக சிரித்துவிட்டுச் சென்றார்கள். அவர்களைப் பொருத்தவரை வெறும்காலில் வெய்யிலில் நடக்க முடியாதவர்கள் பூமியில் வாழத் தகுதியில்லாதவர்கள். அவர்களால் வாழ்க்கையில் வேறு எதைத்தான் தாங்க முடியும் என்பது அவர்களது எண்ணம்.
பல வருடங்களுக்கு பின் சொந்த ஊருக்கு வந்ததால் மொக்கராசு நைனாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக ஆடு மேய்ப்பவர்களிடம் வழியைக் கேட்டு கண்டுபிடித்து நைனா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் முத்துவும், சாமியாத்தாளும்.
மொக்கராசு நைனாவிடம் பேசிக்கொண்டிருப்பவரை (மன்னிக்கவும்) மாட்டிக் கொண்டிருப்பவரை பார்த்தால் அழுது அழுது அவர் கண்கள் வீங்கியிருப்பது போல் காணப்பட்டது. என்னை யாராவது காப்பாற்றுங்கள். அப்படி மட்டும் காப்பாற்றி விட்டால் என் சொத்தையே உங்களுக்கு எழுதித் தந்து விடுகிறேன் என்று அவரது உள்மனம் கதறிக் கொண்டிருப்பது தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் முத்துவுக்கு கூட முகத்தில் அறைந்தாற் போன்று தெளிவாக தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் முத்துவுக்கு வந்த கடிதத்தில் என்னவோ, மொக்கராசு நைனா நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் உடல் நலிவுற்று உயிர் பிரிந்து விடும் நிலையில் இருப்பதாகவும் கடைசியாக ஒருமுறை வந்து பார்த்துவிட்டு போனால் அவரது கட்டை நன்றாக வேகும் என்றும் அல்லவா எழுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது என்னடாவென்றால் ஜிம்முக்கு சென்றுவிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் அர்னால்ட் ஸ்வாஸ்நேக்கரைப் போல் அல்லவா அமர்ந்திருக்கிறார். இந்த நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் ஒன்று என்றால் ஒன்பது என்று சொல்லக்கூடியவர்கள். மிகை உணர்ச்சிக்கு அடிமையானவர்கள். இதைப்பற்றி சாமியாத்தாளிடம் கூறினாள் எங்கு புரிந்து கொள்ளப் போகிறார்.
கடிதத்தை படித்ததிலிருந்து முத்துவின் அம்மா சாமியாத்தாள் வடித்த அரை டம்ளர் கண்ணீருக்கு இன்றுதான் விடிவுகாலம் பிறந்தது. ஒரு சொட்டு கண்ணீருக்கு ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அளவுக்கு வார்த்தைகளை உபயோகப்படுத்தும் சாமியாத்தாள், அரை டம்ளர் கண்ணீரை வடித்திருக்கிறார் என்றால் முத்து ஒரு முனிவருக்கு ஒப்பானவன் என்பதை மறு பேச்சின்றி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சாம, தான, பேத, தண்டம் என நான்கு வழிமுறைகளை மீறி இன்னும் சில புதிய கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தி அழுததில் துப்பாக்கி முனையில் செயல்படும் போர்க்கைதியை போல நரிக்குடி கிராமத்திற்கு தனது அம்மாவை அழைத்து வந்துள்ளான் முத்து.
நைனாவை பார்த்த மறுகனம் போரில் தன்மகனை இழந்த தாய் ஒருத்தி கதறி அழுவதை போல, துடி துடித்தபடி ஒரு ஒப்பாரி பாடலை பாடிக் கொண்டு 2 கைகளையும் விரித்துக் கொண்டு சாமியாத்தாள் ஓடினார். முத்துவால் திடீரென என்ன நடந்தது என்று கவனிக்க முடியவில்லை. யாரோ ரோட்டில் அடிபட்டு விட்டார்களோ என நினைத்துக் கொண்டு வெளியே ஓடிபோய் பார்த்தான். வெளியே ஒரு மாடு நடந்து போய் கொண்டிருந்தது எந்தவித கலவரமும் இல்லாமல். வீட்டிற்குள் இருந்துதான் சத்தம் வருகிறது என்பதை நிமிடத்தில் புரிந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால் அங்கே நைனாவின் அருகில் அமர்ந்தபடி சாமியாத்தாள் 8 கட்டையில் சுருதி சுத்தமாக ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார். நைனாவிடம் பேசிக் கொண்டிருந்தவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பொங்கியபடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று எழுந்து ஓடினார். அதற்குள் நைனா மண்டையை போட்டுவிட்டாரா? இருக்காதே என நினைத்து அருகில் சென்று பார்த்தான் முத்து. இன்னும் சாகவில்லை அவர். எப்படியும் இந்த ஒப்பாரி முடிய 20 நிமிடங்கள் பிடிக்கும் என நினைத்த முத்து வெளியே வந்து அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தான்.
நைனாவின் உடல்நிலையைப் பற்றி துல்லியமாக ஒப்பாரி பாடல் மூலமாக விசாரித்துக் கொண்டிருந்தார் சாமியாத்தாள். சுருட்டு பிடித்து கம்மிப் போயிருந்த தொண்டையிலிருந்து வெளிப்பட்ட நைனாவின் கனீர் குரல் லாப்ரடார் வகை நாயின் குரல் போல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் இருந்தது. அது அவ்வளவாக புரியவில்லை என்றாலும் ஏதோ புரிந்ததை போல தலையை ஆட்டிக் கொண்டிருந்தார் சாமியாத்தாள். அரைமணி நேர இடைவெளிக்குப் பிறகு உள்ளே சென்ற முத்துவை பார்த்த நைனா என்னவோ கேட்டார். அது நலம் விசாரிப்பாகத்தான் இருக்கும் என்று யூகித்தபடி அவனாக ஒரு பதிலை கூறினான் முத்து. அதை மறுபேச்சின்றி அவரும் ஏற்றுக் கொண்டார்.
சாமியாத்தாளின் தந்தை (முத்துவின் தாத்தா) இறந்த பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களையும் வளர்த்து திருமணம் செய்து கொடுத்தவர் நைனாதான். முத்துவுக்கு மாடு மேய்த்தல், விவசாயம் செய்தல், ஆடு வளர்த்து மொத்த வியாபாரம் செய்தல் போன்ற வருமானம் மிகுந்த தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுக்காமல், ஊர்க்கோடியில் இருந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தார் நைனா. முத்துவும் வேறு வழியின்றி படித்துவிட்டு பட்டணத்தில் (சென்னையில்) இன்று ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். நைனாவை தந்தையைவிட ஒரு படி மேலாக மதித்து வந்த சாமியாத்தாள், அவரது உடம்புக்கு ஏதோ வியாதி வந்துவிட்டது என்றவுடன் பதறிவிட்டார். சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அலுவலர்களுக்கு லீவ் என்ற கெட்டவார்த்தையை பற்றி பேச சற்றும் உரிமை இல்லை. நில நடுக்கம் வந்தாலும் சரி, சுனாமி வந்தாலும் சரி அலுவலகத்துக்கு வரவில்லை என்றால் அவ்வளவுதான். அப்படிப்பட்ட அலுவலகத்தில் விடுமுறை வாங்குவதற்கு விடியவிடிய யோசித்து போராடி, கண்ணீர் விட்டு கதறி வாங்கிய விடுமுறையில் தாய் சாமியாத்தாளை நரிக்குடி கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தான் முத்து.
முத்துக்குமரனை அருகில் அழைத்துப் பேசிய நைனா நிமிடத்துக்கு ஒருமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவர் இருமும் போதுதான் தெரிந்தது அவருக்கு நெஞ்சு முழுவதும் எவ்வளவு சளி இருக்கிறது என்று. ஒருவேளை டி.பி.யாக கூட இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தான் முத்து. முத்துவிடம் சில கடினமான கேள்விகளை கேட்டார் நைனா.
நைனா : எங்க வேல பாக்குற
முத்து : சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்
நைனா : எவ்வளவு சம்பளம் வாங்குற
முத்து : 12 ஆயிரம் ரூபாய்
நைனா : கட்டுப்படியாகுதா?
முத்து : ம்
நைனா: நம்ம வீட்டுக்கு பால் கறக்க வர்றானே, மூர்த்தி. அவன் எவ்வளவு சம்பாரிக்கிறான் தெரியுமா?
முத்து : ம்ஹும்
நைனா : மாசமானா 10 ஆயிரம் ரூவா சம்பாரிக்கிறான். நீ என்னாடானா சூட்டு கோட்டெல்லாம் மாட்டிகிட்டு 12 ஆயிரம் ரூவா சம்பாரிக்கிறேங்ற.
எதிர்பார்த்ததுதான் என்றாலும் அந்த அவமானத்தை ஏற்றுக்கொண்டான். ஏதோ அவனது பரிதாப நிலையை பார்த்து ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிப் போனது போன்று அவரது முகம் மாறிப் போனது. நைனாவுக்கு சூட்டு கோட்டு போட்டவனைப்பார்த்தால் மனதிற்குள் கோபம் வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது அவனால், அவரைப் பொருத்தவரை கோவணத்தைக் கட்டிக்கொண்டு உடலை வளைத்து வேலை செய்பவன் தான் உண்மையான வேலைக்காரன். அதற்கு மேல் எதற்கு ஒருவனுக்கு உடை என்பது அவரது நியாயமான கேள்வி. காந்தி கடைசி வரை சட்டை போடவில்லை என்று யாரேனும் அவரிடம் ஆச்சரியம் பொங்க கூறினால் அவரால் புரிந்து கொள்ள முடியாது. சட்டை போடாமல் இருப்பது என்ன ஒரு சவாலான விஷயமா? என்று கேட்பார். அவரைப் பொருத்தவரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் மட்டும் தான் சட்டை போடுவார். அவருக்கு துணிப்பிரச்னையே வந்ததில்லை. 2 வேட்டி போதும், அதை 10 வருடங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்று உலகம் அவரைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடைசியாக காலில் பட்ட காயத்திற்கு கட்டு போடுவது வரை அந்த துணி பயன்படுத்தப்படும்.
நைனாவின் முதல் மகன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு வருடத்தில் மொத்தமாக ஆயிரம் ஆடுகளையாவது உருவாக்கி விடுவான். மொத்தமாக வளர்க்கப்பட்ட ஆடுகளை அருகில் இருக்கும் டவுனுக்கு ஓட்டிச் சென்று சந்தையில் விற்று விடுவான். சும்மா இல்லை பல லட்சம் ரூபாய்கள் கிடைக்கும். 12 வயதிலிருந்து அவன் இந்தத் தொழிலை செய்து வருகிறான். இப்பொழுது அவனுக்கு வயது 23. அவன் இப்பொழுது பல லட்சங்களுக்கு அதிபதி. யார் கண்டது கோடிகளை கூட வைத்திருக்கலாம். பேன் கார்டெல்லாம் வைத்திருக்கிறான். டேக்ஸ் கட்டுவான் போல. அவனிடம் உயர் ரக டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது மகன் பால் பண்ணை வைத்திருக்கிறான். மொத்தம் 120 பால் கரக்கும் மாடுகள். 40 ஜோடி எருதுகள், 70 எருமைகள், 45 தொழிலாளர்கள். அவன் ஒரு குட்டித் தொழிலதிபர் என்று சொன்னால் அது மிகையில்லை. அவனை நம்பி சில கிராமங்கள் உள்ளன. தமிழகத்தின் பால் தேவையை நிறைவேற்றுவதில் அவனுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அவன் முதுகில் எப்பொழுதும் ஒரு பை தொங்கும். அதற்குள் ஒருவேலை லேப்டாப் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
மூன்றாவது மகன் விவசாயம் பார்க்கிறான். அவனைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், வெளிநாடுகளில் செய்வது போல் விமானத்தில் பறந்து உரமிடுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளான். மூன்று பேருக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்த ஞானோதயம் உதித்தது. ஆசிரியரிடம் அதிகபட்சமாக கூட்டல், கழித்தல் கணக்கு கற்றுக் கொண்டதே அதிகம் என்று முடிவெடுத்து அன்றே வெளியேறிவிட்டனர்.
பரிதாபத்திற்குரிய முத்துவை மட்டும் படிக்க வைத்து ஓரவஞ்சனை செய்துவிட்ட நைனாவை நினைத்து முத்து மட்டுமே மனதிற்குள்ளாக பொருமிக் கொண்டிருந்தான். 3 மகன்கள் இருந்தும் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லவில்லை என்றால் என்ன அர்த்தம். ஒவ்வொரு முறையும் குத்தி காமித்து பேசியே வந்தால் எந்த மகன் தான் மதிப்பான். என்னதான் படிக்கவைத்து ஓர வஞ்சனை செய்தாலும் தான் தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்போவதாக பெருமையாக நினைத்துக் கொண்டான்.
ஆனால் ராசு நைனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. திருவாரூர் தேரை தனியாக நின்று வடம் பிடித்து இழுத்துச் செல்வதும் ஒன்றுதான், மொக்கராசு நைனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் ஒன்றுதான். மொக்க ராசு உங்களுக்கு ஹாட் அட்டாக் வந்துள்ளது, தயவு செய்து மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறினால் கூட, பரவாயில்லை நான் கருப்பட்டி கசாயம் காச்சி குடிச்சிக்கிறேன். நீ கவலைப் படாதே என்று கூலாக கூறுவார். நிகழவே நிகழாது என்ற வரைமுறைக்குள் உள்ள விஷயங்களில் ராசு நைனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் ஒன்று. மேற்கில் என்றுமே சூரியன் உதிப்பதில்லை.
அதனால், மேலும் அரை டம்ளர் கண்ணீர் வடிக்க வேண்டியிருந்தது சாமியாத்தாளுக்கு. உலகில் அணு ஆயுதத்திற்கு அடுத்த மிகவும் வலிமையான ஆயுதம் பெண்களின் கண்ணீர். அதிலும் சாமியாத்தாளிடம் சீரியல் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். நைனாவையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது என்றால் அந்த கண்ணீரின் வலிமையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மூன்றாவது ஆள் தனது உடலை ஆராய்ந்து நோயை கண்டுபிடித்துவிடுவானா? அவனுக்கு அவ்வளவு துணிச்சலா? என ஏதோ ஒரு அசரீரி கேட்டது முத்துவுக்கு. ஆனால் நைனா அதுபோன்று எதுவும் சொல்லவில்லை என்பது அன்று பூமியில் நிகழ்நத மிகமுக்கிய அதிசயங்களுள் ஒன்றாகும். அவர் தனக்குத் தானே ஒரு புது மருத்துவ முறையை கண்டுபிடித்து வைத்திருக்கிறார். அதன்படி தலைவலி, காய்ச்சல், கேன்சர், பன்றிக் காய்ச்சல், மற்றும் தீர்க்க முடியாத அனைத்து நோய்களுக்கு தெரியாது என்று கூறாமல் மருத்துவம் சொல்ல அவரால் தான் முடியும். ஆஃப்ட்ரால் சளிக்கு மருத்துவரை பார்க்க அழைத்துச் செல்ல நினைக்கும் சாமியாத்தாளை நினைத்தால் எப்படி சிரிக்காமல் இருப்பது என்றே அவருக்குத் தெரியவில்லை. முத்து படத்தில் தந்தை ரஜினி சிரிப்பது போல் ஒரு பெரிய சிரிப்பை உதிர்த்து விட்டு மருத்துவரிடம் வர ஒப்புதல் அளித்தார் நைனா.
நைனா மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும்போது வழியில் இருந்தவர்கள் அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உட்பட்டு வாய்பிழந்து நின்றனர். சிலர் மயக்கநிலைக்குச் சென்றனர். காட்டுத்தீ போல் பரவிய செய்தியை கேள்விபட்ட சிலர் வதந்தியை கிளப்பாதே என கோபப்பட்டனர். ஆனால் நைனா சாமியாத்தாளின் அழுகைக்கு மதிப்பளித்து அவருக்கு வரம் கொடுப்பது போன்றதொரு சூழ்நிலையில் மருத்துவமனைக்கு ஒப்புக் கொண்டார் என்பதை நாளை சரித்திரம் கூறும்.
ஊரின் தென்கோடியில் இருந்த மருத்துவமனையில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் அந்த மருத்துவர் வெகுநாட்களாக வருமையில் வாடிக்கொண்டிருந்தார். அவர் இப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் மருத்துவமனை அமைத்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஏழை- எளிய மக்களுக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என்று வீரவசனம் பேசிவிட்டு இங்கு வந்திருக்கலாம். அல்லது அரசாங்கத்தின் கடுமையான உத்தரவின் பேரில் ஒருவருட சேவைக்காக அவர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஏதேனும் தவறு செய்து தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றலாகி வந்திருக்கலாம். அல்லது ப்ளஸ் டூ ஃபெயில் ஆனவரை நகரங்களில் மருத்துவராக ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அவர் இங்கு வந்திருக்கலாம். எது எப்படியோ அவ்வூரில் எல்லோருக்கும் காய்ச்சல் சரியானது. தலைவலி சரியானது. அதனால் அவரும் மருத்துவராக அங்கே உட்கார்ந்திருக்கிறார். மேலும் 5 ரூபாய்க்கு மேல் அவ்வூரில் பரவலாக பணப்புழக்கம் இல்லை என்பதால் அவர் டீ குடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.
மருத்துவமனை அருகில் நெருங்கிவிட்டது என்பதை உணர்வதற்கு ஒரு ட்ரிக் உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு முகர்ந்து பார்த்தால் போதும். ஒருவித சாணி நாற்றம் அடிக்கும். அந்த மருத்துவமனை சுவரில் வராட்டி தட்டி உலர்த்தப்பட்டிருந்ததே அதற்கு முக்கிய காரணம். நல்லவேலையாக கதவு வைக்கப்பட்டிருந்த இடத்தில் கதவு இல்லை என்கிற ஒரே காரணத்தால் அங்கு வராட்டி தட்டமுடியவில்லை. மருத்துவர் ராஜேந்திரன் ஒரு பழைய வேட்டியில் தனது மருத்துவ உபகரணங்களை எல்லாம் எடுத்து வருவார். அதே வேட்டியில் மீண்டும் கட்டி எடுத்துச் சென்று விடுவார். ஏனெனில் இரவு நேரங்களில் அங்கு தங்குவது என்பது ஆபத்தானது. திருடர்களுக்கு அங்கு வர பயம் என்றாலும் பாம்புகளுக்கு அப்படியல்ல. அவை சுதந்திரமாக இரவு நேரங்களில் அங்கு சுற்றுலா வந்து செல்லும். அந்த சின்ன கிராமத்தில் இயற்கை பாம்புகளுக்கு அமைத்துக் கொடுத்த பண்ணை வீடுதான் அந்த மருத்துவமனை. மேலும் அந்த மருத்துவமனைக்கு ஒருஒற்றையடிப்பாதை உள்ளது. வரப்பு போன்று அமைக்கப்பட்ட அந்த ஒற்றையடிப்பாதையில் கயிற்றில் நடக்கும் திறமை உள்ளவர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். இருபக்கமும் வளர்ந்துள்ள புதர்களுக்கு மத்தியில் தேள்களும், பாம்புகளும் உண்ட களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கும். அவைகளின் உறக்கம் களைக்கப்படாமல் இருக்கும் வரை உயிருக்கு உத்தரவாதம் என்ற ரகசியம் மருத்துவர் ராஜேந்திரனுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.
மருத்துவமனை அருகே நெருங்கிய முத்துக் குமரன், நாகரீகமாக சென்று கதவைத் தட்டலாம் என் வெகுநேரமாக கதவைத் தேடிக்கொண்டிருந்தான். அது மருத்துவமனைக்கு பின்புறம் கழற்றி அழகாக சாத்தி வைக்கப்பட்டிருந்தது. வெகுகாலமாக தவமிருக்கும் முனிவர்களை புற்று மூடிவிடுவது போல, கரையான் புற்று ஒன்றுஅந்தக் கதவை மூடிவிட்டிருந்தது. உள்ளே கதவு இருக்கிறதா? இல்லையா என யாரேனும் தைரியம் உடையவர்கள் அதை உடைத்துப் பார்த்தால்தான் தெரியும். டாக்டர். ராஜேந்திரனுக்கு எம்.பி.பி.எஸ். என்றால் என்னவென்று தெரியாததால், வெகு காலமாக அந்த ஊர் காளை மாடுகளுக்கும், எருமை மற்றும் ஆட்டுக் குட்டிகளுக்கும், மருத்துவம் பார்த்து வந்தார். கோழிகளுக்கும், சேவல்களுக்கும் பெரும்பாலும் அந்த மஞ்சள் நிற மருந்தையே கொடுத்து வந்தார். எருமை மாடுகளுக்கு எப்பொழும் அந்த சிவப்பு கலர் மருந்துதான். பசுமாடுகள் நமது தெய்வம் என்பதால் அவற்றுக்கு வெள்ளை அல்லது பச்சை நிற மருந்துகள் கொடுக்கப்பட்டன. அதனால் நரிக்குடி கிராம மக்கள் இங்கிலீஷ் மருத்துவத்தை எளிமையாக கற்றுக் கொண்டுவிட்டார்கள். மருத்துவருக்கு வயிற்றைக் கலக்கி எங்கேனும் வெளியே சென்றிருந்த சமயமாக யாரேனும் கோழியை எடுத்து வந்தார்களேயானால், அவர்கள் மருத்துவருக்காக காத்திருப்பதில்லை. அந்த மஞ்சள் நிற மருந்தை தாங்களே தேடி எடுத்து தங்கள் கோழிகளுக்கு கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
அதேபோல் மனிதர்கள் யாரேனும் உடல்நிலை சரியில்லை என்று வந்தால் அவர்களுக்கு இரண்டு ஊசிகள் போடாமல் விடமாட்டார். அந்த 2 சிறியரக பாட்டில்களிலும் டிஸ்டில் வாட்டர் என்றுமே குறைந்ததில்லை. மாற்றி மாற்றி ஊசி போடுவதில் வல்லவர். அன்று ஒருநாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒரு விவசாயிக்கு அதே இரண்டு ஊசியை போட்டார். அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை மாறிமாறி வாந்தியெடுத்து பிழைத்துக் கொண்டான். அன்றிலிருந்துதான் மருத்துவமனை சுவரில் வராட்டி தட்டுவதை சற்று குறைத்துக்கொண்டார்கள் அவ்வூர் மக்கள். கண்ணில் தூசி விழுந்தாலும் சரி, தலைவலி என்று வந்தாலும் எப்பொழுதும் 2 ஊசிகளுக்கு மேல் இல்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார். பெரும்பாலும் வயிற்றுவலிகாரர்களுக்கு பச்சைநிற நட்சத்திரவடிவ மாத்திரைகளை கொடுப்பார். குத்துமதிப்பாக கைகளில் கொட்டி கொடுப்பார். அதில் எத்தனை வருகிறதோ அதை அவன் விழுங்க வேண்டும். அன்று ஒருநாள் அல்சர் வியாதியால் அடிக்கடி மருத்துவமனை வரும் ராமசாமிக்கு ஏதோ மறதியாக வட்டவடிவ மாத்திரையை கொடுத்து விட்டார். கேலியாக சிரித்த ராமசாமி, டாக்டர். ராஜேந்திரனை கிண்டல் செய்யும் விதத்தில் இவ்வாறு கூறினான்.
"டாக்டர் ஐயா அப்படி என்னத்ததான் படிச்சிங்களோ, வயித்த வலிக்கு நச்சத்திர மாத்திரையதான் கொடுக்கனும்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலயா, அப்படி என்னத்ததான் படிச்சிங்களோ, இப்டி மாத்திரைய மாத்தி மாத்தி கொடுத்தா வியாதி எப்படி கொனமாகும்" என்றான் அதட்டலாக.....நிறங்களில்தான் டாக்டரின் வாழ்ககை ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அதில் துளியும் மிகையில்லை.
மருத்துவர் ராஜேந்திரனும் அவ்வூர் மக்களிடமருந்து நிறைய கற்றுக் கொண்டார். மாடுகளை சேரவைத்து இனப்பெருக்கத்துக்கு உதவுவது, காலில் அடிபட்ட ஆடுகளுக்கு கட்டுப் போடுவது, வியாதியே ஏற்படாத கோழிகளுக்கு வியாதி வந்துவிடும் என்று கூறி ஊசி போடுவது (2 ஊசிகள்) போன்று நிறைய கற்றுக்கொண்டார். அன்று ஒருநாள் ஒருகோழிக்கு ஒரு ஊசி மட்டுமே போட்டுவிட்டார். அதனால் அவர் அடைந்த மனவருத்தத்திற்கு அளவே இல்லை.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நரிக்குடி கிராமத்தில் உள்ள ஒரே அனைத்து உயிரின மருத்துவராகிய ராஜேந்திரனை, டாக்டரையும், திருட்டுப்பயலையும் ஒரே மாதிரியாக நினைக்கும் நைனா இன்று பார்க்க வருகிறார். பின் ஒரு ஊசிக்கு 2 ரூபாய் டாக்டர் ஃபீசாக வாங்கினால் அது பகல் கொள்ளையாக அல்லவா? இருக்கிறது. திருட்டு பயல்கள் என்று வாய்க்கு வந்த மாதிரி பேசும் நைனாவைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப் பட்டிருக்கும் டாக்டருக்கு பயத்தில் சற்று வயிற்றைக் கலக்கிக் கொண்டுதான் இருந்தது. இருப்பினும் நைனாவுக்கு மட்டும் இன்று ஊசி போட்டுவிட்டால் இந்த கிராமத்தில் இனி தான் முழுமையான மருத்துவர் என்பதை நிரூபித்துவிடலாம் என்று நம்பினார். தனக்கு போட்டியான மூலிகை முனியம்மா, சித்த மருத்துவம் பார்க்கும் சீத்தம்மா போன்றவர்களை ஓரங்கட்டிவிடலாம் என்று கணக்கு போட்டார். மோக்கராசுவுக்கு வைத்தியம் பார்த்ததை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டார். தேவைப்பட்டால் வால்போஸ்ட் அடித்து ஒட்டவும் தயாராக இருந்தார். தொழில் போட்டி என்று வந்துவிட்டால் எந்த அளவிலும் இறங்கி பார்த்துவிட வேண்டும் என்ற வேகம் அவரை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்தது. பின் படிக்காத பதர்களான கிளவிகள் எல்லாம் இங்கிலீஷ் மருத்துவம் படித்திருக்கும் தனக்கு போட்டியாக வந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? என்று தனக்குள் கருவிக் கொண்டார்.
நைனா படிக்கட்டின் அருகில் நின்றபடி ஒருநிமிடம் யோசித்தார். பின் அதே முத்து பட ரஜினி சிரிப்பு. தனது இடது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றார். டாக்டர் முகெலும்பு மடங்காமல் நேராக உட்கார்ந்திருந்தார். அவரது உடலில் ஒரு சிறிய உதறல் ஏற்பட்டது. இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உடலை முறுக்கி இறுக்கிக் கொண்டார். மேசையின் இடது புறம் நோக்கினார். இரண்டு பாட்டில்களும் நிறைந்திருந்தன. 2 வருடங்களாக தான் பயன்படுத்தி வந்த முனை மழுங்கிய ஊசி ஒரு புறம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் வெகுநாட்களாக பயன்படுத்தி வருகிறார். தனது இரண்டு காதுகளிலும் அதை பொறுத்தி அதன் முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து லப்டப் என்ற ஓசை வருகிறதா? என்று கேட்பார். அதை கடந்த ஒரு மணிநேரமாக தேடி தூசி தட்டி இப்பொழுதுதான் டேபிள் மேல் எடுத்து வைத்திருந்தார். (அதன் பெயர் ஸ்டெதஸ்கோப்).
டாக்டர். ராஜேந்திரன் என்று எழுதப்பட்ட அந்த சின்னப் பலகையை எங்கெங்கெல்லாமோ தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. போன பொங்கலுக்கு வெள்ளையடித்த போது அதைப் பார்த்த நியாபகம். நட்சத்திர மாத்திரை தீர்ந்து போனது பற்றி தன்னையே நொந்து கொண்டார். இருப்பினும் வட்டவடிவ மாத்திரையை வைத்து சமாளித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டார். நல்லவேளை அந்த ராமசாமி ஊரில் இல்லை. இல்லையென்றால் போட்டுக் கொடுத்துவிடுவான். வயித்தவலிக்கு நட்சத்திர மாத்திரைதான் அமெரிக்காவில் கூட கொடுப்பார்கள். நான் எத்தனை நாளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாதா? என்று கருணையே இல்லாமல் போட்டுக் கொடுத்துவிடுவான். நாளை எப்படியும் உரம் வாங்கச் செல்லும் மாரிமுத்துவிடம் பத்து ரூபாயை கொடுத்து கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலில் ஒரு படி நட்சத்திர மாத்திரை வாங்கி வரச் சொல்ல வேண்டும்.
இப்படித்தான் போன முறை நட்சத்திர மாத்திரை வாங்கச் சென்ற ராமசாமியிடம் எவனோ, அது குடும்ப கட்டுப்பாட்டுக்காக சாப்பிடும் மாத்திரை என்று தவறாக சொல்லியிருக்கிறான். அதை கவர்ன்மென்ட் இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருகிறது என்று வேறு சொல்லிவிட்டான். நல்லவேளை ராமசாமி அதையெல்லாம் நம்பவில்லை. அவன் வெகுஉறுதியாக நம்பினான். நட்சத்திர மாத்திரை என்றால் அது நிச்சயம் வயிற்று வலிக்குத்தான் என்று. அந்த மாத்திரையை கண்டுபிடித்தவனே வந்து சொன்னாலும், அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டி, இதை வயிற்றுவலிக்குத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறுவான். ஆனால் இந்த முறை அவன் வெளியூருக்கு சென்றவிட்டான். அதனால் வேறு வழியில்லை. மாரிமுத்துவிடம் தான் கொடுக்க வேண்டும்.
அந்த ஸ்டெதஸ்கோப் இவ்வளவு நாள் ஒரு கோணிப்பைக்குள் கிடந்தது. அதன் ஓரங்கள் தோல் உறிந்து துருபிடித்துப் போய் இருந்தது. அதையெல்லாம் நன்றாக எண்ணெய் விட்டு தேய்த்து துடைத்து வைத்தும் துரு போகமாட்டேன் என்கிறது. இருப்பினும் ஒரு பந்தாவுக்காக எடுத்து வைத்துக் கொண்டார். ரூபாய்க்கு ஒன்று என்று 2 ஊசிகளை இன்று நைனாவுக்கு போட்டு விட வேண்டும். 2 ரூபாய் நஷ்டமடைந்தாலும் சரி. இன்று தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். என்று மௌனமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார் டாக்டர் ராஜேந்திரன்.
நைனா இளக்காரமாக பார்த்தபடி சிரித்துக் கொண்டே வந்து அருகில் இருந்த சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார். தனது ஒருகாலை மடக்கி இன்னொரு காலில் போட்டு கொண்டார். சாமியாத்தாள் தனது புலம்பலை ஆரம்பித்தார். அரைமணி நேரத்திற்கு பின், தனக்கு ஒரு உளவியல் மருத்துவர் அவசரமாக தேவை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் டாக்டர். ராஜேந்திரன். வேக வேகமாக அந்த ஊசியை எடுத்து அதில் டிஸ்டில்டு வாட்டரை நிரப்பி நைனாவின் இடது கையில் சொருகினார். உழைத்து, உழைத்து உருவேறிய அவரது கையில் அந்த முனை மழுங்கிய ஊசி இறங்க மறுத்தது. இருப்பினும் பல்லைக் கடித்துக் கொண்டு ஊசியை அழுத்தினார் டாக்டர். நைனா வலியை பொருத்துக் கொண்டு சிரித்தார். நல்லவேளையாக அந்த ஊசி வளைந்து டாக்டரை அசிங்கப்படுத்தாமல் கைக்குள் சென்றது. வேகமாக டிஸ்டில்ட் வாட்டரை உள்ளே செலுத்தினார். நைனாவின் முகத்தில் இன்னும் அந்த சிரிப்பு தாண்டவமாடியது. பின் ஒவ்வொரு கலரிலும் 2 மாத்திரைகளை எடுத்து பொட்டலம் மடித்தார். கோழி, ஆடு, மாடு சாப்பிட வேண்டிய மாத்திரைகளில் எல்லாம் இரண்டிரண்டு மாத்திரைகள் என 5 பொட்டலங்களை வேகவேகமாக மடித்து கொடுத்தார் டாக்டர்.
மொக்கராசு நைனா பெரிய மனது பண்ணி அவரது வாழ்க்கையிலேயே இன்று அதிக செலவு செய்தார். 5 ரூபாயை எடுத்து டேபிளில் தூக்கி எறிந்தார். மீதியை டிப்சாக வைத்துக் கொள் என்பது போன்ற அவரது பாவனை அவரது சிரிப்பிலிருந்து தெரிந்தது. இதே வேறு ஆளாக இருந்தால் 8 ரூபாய் 25 காசுகளை வாங்காமல் விட மாட்டார் டாக்டர். ஏதோ வராத விருந்தாளி வந்திருப்பதால்தான் இந்த சலுகை என டாக்டர் தனது மனதுக்குள்ளாக மேதுவாக சொல்லிக் கொண்டார்.
அடுத்த நாள்..........
மொக்கராசு நைனாவை முனி அடித்துவிட்டதாக ஊருக்குள் பரவலாக பேச்சு எழுந்தது. கருக்கலில் வெளியே சென்ற அவரை ஊர்ப்புறத்தில் உள்ள பேய் முடி அறையப்பட்ட புளிய மரத்தருகே முனி அடித்துவிட்டதாக கிராமத்து மக்கள் அனைவரும் பெசிக்கொண்டார்கள். அவர் ரத்தவாந்தி எடுத்திருந்தார். இந்த சிம்பலை முனியை தவிர வேறு எதுவும் (பேய், பிசாசு, குட்டிப்பிசாசு) ஏற்படுத்த முடியாது. இந்த சிம்பல் முனியின் அதாரிட்டி சிம்பல். முனியை தவிர வேறு யாரும் அந்த சிம்பலுக்கு உரிமை கொண்டாட முடியாது. அது முனியின் எக்ஸ்க்ளூசிவ் சிம்பல்.
ஆனால் அவருக்கு வந்ததோ கார்டியாக் அரஸ்ட். இதயத்தின் ரத்தக் குழாயில் கொளுப்பு அடைத்து விட்டது. இதயத்துக்கு வரும் ரத்தம் தடுக்கப்பட்டதால் ரத்தவாந்தி எடுத்து செத்தார். இதே போன்று நரிக்குடியில் பலபேர் ரத்தவாந்தி எடுத்து இறந்திருக்கிறார்கள். தமிழ் மொழியில் கார்டியாக் அரெஸ்ட் என்றால் முனி அவ்வளவுதான். நைனா கடைசியாக துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த சிலர் கூட அவரை தூக்கிக்கொண்டு டாக்டர். ராஜேந்திரன் வீட்டை நோக்கித்தான் ஓடினார்கள். அந்த கிராமத்தின் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்திருக்கிறார். அவர் நிச்சயமாக ஒரு டாக்டர் இல்லை. ஆனால் அவர்தான் அந்த ஊரின் நிச்சயமான நம்பிக்கை. நைனா எதற்காக இறந்தார் என்று அவருக்கும் தெரியாது. நைனா எப்படி இறந்திருப்பார் என்று டாக்டருக்கும் தெரியாது. நரிக்குடி கிராமத்து மக்களுக்கும் அவர் இறந்ததின் காரணம் தெரியாது. ஆனால் ஒரு நம்பிக்கை இன்றும் உண்டு டாக்டர் என்று ஒருவர் இருக்கிறார் அவர் நம்மை எல்லாம் காப்பாற்றுவார்.
- சூர்யா