ஒரு நிமிடம் முந்தியோ அல்லது ஒரு நமிடம் பிந்தியோ சென்றிருக்கலாமே... இந்த ஒரு துர்சம்பவம் நிகழ்ந்திருக்காதே என்று எல்லோரும் அவரவர் வாழ்வில் விரக்தியின் உச்சத்தில் ஒரு நிமிடமாவது புலம்பியிருப்போம்..... ஆனால் அந்த ஒரு நிமிடநேர மாற்றத்தைக் கூட விரும்பாத ஒருவன், நேரத்திற்கு சென்று சமப்வத்தை சந்திக்க துணிந்த ஒருவன், நேரத்தை கடைபிடிப்பதில் தீவிரவாதியைப் போன்ற ஒருவன் எங்கள் அறையில் இருந்தான்.
புத்தருக்கு அடுத்தபடியாக முதுகெலும்பு மடங்காமல் உட்காருபவன் காந்தி கிருஷ்ணா மட்டும்தான். ஆனால் அவனது தலைக்குப் பின்னால் எந்தவொரு ஒளிவட்டமும் தோன்றவில்லை. அவன் தற்போதெல்லாம் ஜீஸஸ் ஒரு விரலை உயர்த்தி ஆசிர்வதிப்பது போல் அடிக்கடி முத்திரை காட்டுகிறான். முதலில் அவன் மறைமுகமாக குங்ஃபு கற்றுக் கொள்கிறானோ என்றுதான் நினைத்தோம். ஆனால் அது ஏசுவின் முத்திரை என்பதை பிற்பாடு தான் நான் புரிந்து கொண்டேன்.
'தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமென்ட்ஸ் வித் ட்ரூத்' புத்தகத்தில் சிவப்பு மையால் அடிக்கோடிட்டு வைக்கப்பட்டிருந்த அந்த வரியை தினசரி பகவத்கீதையை படிப்பதை போல் கண்கொட்டாமல் திரும்பத் திரும்ப படித்து கொண்டிருந்ததால் அவனது செயல்பாடுகளில் அதிக மாற்றம் இருந்தது. அவன் மேல், அறையில் உள்ள மற்ற அனைவருக்கும் நல்ல மரியாதையும் உண்டு. ஒரு முழு புத்தகத்தில் குறிப்பிட்ட அந்த தாள் மட்டும் சற்று அழுக்காகி இருண்டு போய் கருப்படித்திருந்தது. மற்ற பக்கங்கள் இன்னமும் பிரிக்கப்படவில்லை என்பது மற்ற நண்பர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ…
இரண்டு மாதங்களுக்கு முன் அறை நண்பன் மணிகண்டன் அடி வாங்கியபோதுதான் எனக்குப் புரிந்தது. அவனை கிருஷ்ணா என்று கூப்பிடக்கூடாது காந்தி கிருஷ்ணா என்று கூப்பிட வேண்டும் என்று. காந்தி அவனை அவ்வளவு கவர்ந்துவிட்டார் போல.
அந்த சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட்ட வரிகளை திருட்டுத்தனமாக நானும் படித்திருக்கிறேன்.
"எவனுடைய ஐம்புலன்களும் அவனடைய பேச்சைக் கேட்கிறதோ, அவனது பேச்சை இந்த உலகமே கேட்கும்" என்றுபொருள் வரும்படியாக இருந்தது. மகாத்மா காந்தி கூட அதனை நம்பியிருக்கிறார் போல. அதனால்தான் காந்தி என்ற தனிமனிதனின் பேச்சை இந்தியாவே மறுபேச்சின்றி கேட்டு நடந்ததோ என்னவோ. மகாத்மா காந்தி நேரத்தை கடைபிடிப்பதில் எவ்வளவு தீவிரமாக நடந்துகொண்டார் என்பதை இந்தியாவே அறியும். காந்தி கிருஷ்ணா இதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். அதனால்தான் அவனும் நேரத்தைக் கடைபிடிப்பதில் ஒரு தீவிரவாதியாக மாறிப்போனான்.
அவனுக்கு நேரம் என்றால் நேரம் தான். சரியாக 5 மணிக்கு, தி எக்சார்சிஸ்ட் படத்தில் வரும் பேயைப் போல் படார் என்று எழுந்து உட்காருவான். அறைக்கு புதிதாக வருபவர்கள் சற்று திகில் அடைந்து தான் போவார்கள். அவன் 59 கிலோ எடைதான் கொண்டிருந்தாலும் தினசரி வாக்கிங் சென்று விடுவான். சற்று ஆவேசப்பட்டு வெகுதூரம் சென்றுவிட்டாலும் வாக்கிங் டைம் ஒரு மணி நேரம் தான் என்பதால் ஆட்டோ பிடித்தாவது ஆறுமணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவான். ஆனால் அவன் மிகவும் நல்லவன். 7:30 மணிவரை வயிற்று வலியால் உயிரே போனாலும் கழிப்பறைக் கதவை மட்டும் நெருங்க மாட்டான். அதற்கான நேரம் 7:30 என்பது அவனுக்குஅவனே விதித்துக் கொண்ட கொடூரத் தண்டனை என்றால் அது மிகையில்லை. 7:30க்கு மேல் எவரேனும் சற்று தாமதித்தாலும்,அறையில் பூகம்பம் வெடிக்கும், எரிமலை தெறிக்கம்... ஆதலால் அறைக்குள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பவர்களுக்கான உச்சக்கட்ட நேரம் 7:29...
ஆனால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களுள் ஒன்று. அதற்காக வெறும் 5 நிமிடம் மட்டுமே ஒதுக்க வேண்டுமா என்பது மட்டுமே? ஏன் ஒரு 10 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால்தான் என்ன. மகாத்மா காந்திதான் கோபித்துக் கொள்வாரா? இல்லை ஆன்மாதான் நிறைவடையாதா.... என்னவோ அந்த 5 நிமிடங்களைப் பொறுத்தவரை அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்... 10 நிமிடங்களில் முடிய வேண்டிய விஷயத்தை 5 நிமிடங்களில் முடித்துக் கொண்டு அறை குறையாக வெளிவரும் அவனது ஆன்ம வளர்ச்சியில் கிஞ்சித்து எங்களுக்கு விருப்பம் இல்லைதான். ஒருவேளை மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் எங்கேனும் அந்த 5 நிமிடத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாரோ?... என்ன செய்வது. காந்தி கிருஷ்ணா ஒருமுடிவெடுத்து விட்டால் அவ்வளவுதான், யார் பேச்சையும் கேட்கமாட்டான்.
காலை 7:35 முதல் 8:15 வரை தியானம்... நெற்றிப் பொட்டின் நடுவே எண்ணத்தைக் குவித்து, சுழுமுனை நாடிகள் வழியாக அதிர்வலைகளை பெருக்கி மூலாதாரத்திலிருந்து குண்டலினியை தட்டி எழுப்பி சிரசை ஒளிவெள்ளத்தில் நிரப்பி ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் போதுதானா சன் மியூசிக்கில்
"ஆத்தாடி பாவாடை காத்தாட...." என்கிற பாடலைப் போட வேண்டும். 8 மணி வரை அம்மன் பாடல்களும், முருகப்பெருமானின் திருப்பாடல்களையும்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். 8 மணிக்கு மேல் அவர்களின் குட:டு வெளிப்பட்டு விடுகிறது. 8 மணிக்கு மேல் பேரின்பத்திலிருந்து சிற்றின்பத்திற்கு அவர்கள் தாவி விடுகிறார்கள்.
இதனால் 8 மணிக்கு மேல் காந்தி கிருஷ்ணாவின் குண்டலினி சக்தி ரிவர்ஸ் அடித்து மீண்டும் மூலாதாரத்திற்கு சென்று தஞ்சமடைந்து விடுகிறது. அவனை தினசரி ஞானமடைய விடாமல் தடுப்பதில் சன் மியூசிக் திரை ஒலிப்பாடல்கள் தனது முக்கிய பங்கை தினசரி ஆற்றி வருகிறது என்றால் அது மிகையில்லை.
இருப்பினும் அஹிம்சையை கடந்த சில மாதங்களாக விரதமேற்றுக் கொண்டிருக்கும் காந்திகிருஷ்ணா அவர்களை மன்னித்து விடுவான். அவன் கடைசியாக அடித்தது மணிகண்டனை மட்டும்தான். இப்பொழுதெல்லாம் அவன் எதிர்வீட்டு மணியை கூட விரட்டுவதில்லை. சென்ற மாதம் காலை 5 மணிக்கு யாரோ ஒரு திருட்டுப்பயல் தினசரி நமது ஏரியாவுக்குள் நுழைந்து எதையோ திருடிவிட்டு செல்கிறான் என நினைத்து, வெறிகொண்ட வேங்கையாக மாறிவிட்டது மணி. நான்கு தெரு துரத்தி நியூ காலனியில் வைத்து கடித்து விட்டதாக அவன் கூறினான். நல்ல வேளையாக எதிர்காலத்தில் குழந்தை பிறப்பில் எவ்வித சிக்கலும் இருக்காது என மருத்துவர் உறுதியளித்தார். அன்றிலிருந்து மணியை கட்டிப் போட்டுவிட்டார்கள். காந்தி கிருஷ்ணா தனது அஹிம்சையை வெளிப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டான்.
தினசரி மணிக்கு பொறையும், பிரிட்டானியா பிஸ்கெட்டும் வாங்கிப் போடுகிறான். ஆனால் அந்த நன்றிகெட்ட மணி அவ்வளவையும் தின்றுவிட்டு இன்னமும் சீறிக் கொண்டுதான் இருக்கிறது. மணியைப் பொறுத்தவரை “அட் ஃபஸ்ட் சைட் லவ்” போல “ அட் ஃபஸ்ட் சைட் திருடன்” என்பது அதன் மெடுல்லா ஆப்லகேட்டாவில் பதிவாகிவிட்டது. இவன் காந்தியத்தை கடைபிடிக்கிறான் என்பது இனி மணிக்கு அடுத்த ஜென்மத்தில்தான் புரிய வரும்.
“இதற்குப் பெயர்தான் சத்திய சோதனை போல” என மணிகண்டன், காந்தி கிருஷ்ணாவை சமாதானப்படுத்தும் நோக்கில் கூறியதும், ஆவேசத்தில் அடிப்பதற்காக ஒரு அடி தூரம் அவன் கையை உயர்த்தியதை நான் கவனிக்கத் தவறவில்லை.
8:15 லிருந்து 8:30க்குள், காந்தி கிருஷ்ணா குளித்துவிட்டு சந்தியா வதனம்செய்து, காயத்தரி மந்திரம் கூறி, உடையை தேய்த்து உடுத்தி அலுவலகம் செல்ல வேண்டும். இந்த கலவர நேரத்தின்போது, அவனது உள்ளாடைக்குள் எறும்பு இருந்தாலும் சரி, பனியனுக்குள் பல்லி படுத்து உறங்கிக்கொண்டிருந்தாலும் சரி, காலணிக்குள் தேள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தாலும் சரி அவைகள் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் க.கிரிஷ் ஒரு முறை தனது அணிகலன்களை அணிந்து கொண்டுவிட்டான் என்றால் அவ்வளவுதான், மறபரிசீலனை செய்ய மாட்டான். நேரம் கடைபிடிக்கப்படுவதன் முக்கியத்துவம் கருதி சிற்சில சிற்றுயிர்களின் உயிரிழப்பைக் கூட அவன் கண்டுகொள்ள மாட்டான்.
தமிழ் சினிமா கிளைமேக்சில் வருவதுபோல் மலை உச்சியில் தொங்கியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மனைவி, தாய் இருவரில் யாரைக் காப்பாற்றுவது என்கிற இக்கட்டான சூழ்நிலைக்கு கதாநாயகன் தள்ளப்பட்டு விடுவதைப்போல, நேரத்தை கடைபிடிப்பதா அல்லது நேரம் போனாலும் பரவாயில்லை உள்ளாடைகளை உதறி சிறிசில உயிரினங்களை காப்பாற்றி அஹிம்சையை கடைபிடிப்பதா என்கிற நெக் ஆஃப் த மொமன்ட்டில் தள்ளப்படும் போது அவன் ஒரு சர்வாதிகாரியைப் போல நேரத்தைக் கடைபிடிப்பதையே தேர்ந்தெடுப்பான்.
இதுபோன்று நடைபெறுவது எங்களது அறையில் மிக சகஜமானதாகும். எங்கள் அறையை மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்தபோது, டிஸ்டம்பர் வாசனை அறை முழுவதும் கமழ்ந்தது. ஆனால் இப்பொழுது அது என்ன விதமான வாடை என்று துல்லியமாக கூற முடியவில்லை. இதுவரை 4 எறும்பு புற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிமெண்ட் சுவரை துளைக்கக் கூடிய அளவுக்கு எறும்புகளுக்கு சக்தி இருக்கிறது என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. சுமாராக 20க்கும் மேற்பட்ட பல்லிகள் காலை, மாலை, இரவு என நேரம் காலம் இல்லாமல் கத்திக்கொண்டு காதல் புரிந்து கொண்டிருக்கும். எங்கள் அறையில் இருக்கும் கரப்பான் பூச்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, அவற்றின் மீது ஹிட் அடித்தால், ஏதோ சென்ட் அடிப்பதுபோல் இப்படியும், அப்படியுமாக அசைந்துகொடுத்தபடி நிதானமாக நடந்து செல்கின்றன. ஒரு முறை பாம்பு ஒன்று கூட ஒரு விசிட் அடித்துவிட்டு சென்றது. ஏதோ பாம்புடன் பத்து வருடங்கள் ஒன்றாக படித்தவன் போல, அதனிடம் பேச்சுவார்ததை நடத்தி வழியனுப்பி வைத்தவன் காந்தி கிருஷ்ணாதான்.
ஆகையால் எந்த உயிரினமும், எந்த உடையில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற உயர்ந்தபட்ச ரிஸ்குக்கு நடுவே, நேரத்தை கடைபிடிப்பதில் ஒரு வெற்றியாளனாக திகழ்வதன் மூலம் காந்தி கிருஷ்ணா உள்ளூர திருப்தியடைந்திருந்தான்.
அவன் 9 மணிக்கு அலுவலத்தில் இருக்க வேண்டும். சென்றவாரம் அவன் அலுவலகத்துக்குள் நுழையும் போது அலுவலகக் கடிகாரம் 9:05ஐக் காட்டியது. அலுவலக எம்.டி. காட்டுக் கூச்சல் போட்டார்.
"எந்த மடையண்டா கடிகாரத்தை 5 நிமிடம் ஃபாஸ்டா வச்சது"
அதன் பிறகு அந்த கடிகாரத்தில் முற்கள் 9 மணியில் நிறுத்தி சரி செய்யப்பட்டது. அப்படியொரு நேரந்தவறாமைக்கு பெயர் போன காந்திகிருஷ்ணா இன்னமும் அலுவலகம் செல்வதற்கு அரசு பேருந்தையே நம்பிக் கொண்டிருந்தான்.
அரசுப் பேருந்துகளைப் பொறுத்தவரை, பேருந்தை தவறிவட்டவர்கள் முந்நாட்களில் எல்லாம் ஓடிச்சென்று ஏறினார்கள். ஆனால் தற்போது அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு அவசியம் இல்லை... மெதுவாக நடந்துசென்றே ஏறிக் கொள்ளலாம். அப்படியொரு அகில உலக தரமான சாலைகளில்தான் அரசுப் பேருந்துகள் பயணம் செய்கின்றன. அப்படியே பேருந்தை தவறவிட்டு விட்டாலும் அடுத்த சிக்னலில் ஏறிக் கொள்ளலாம். அல்லது 100 அடி தூரத்தில் ட்ராஃபிக்கில் நின்று கொண்டிருக்கும். இரவில் சரியாக தூக்கம் இல்லாதவர்கள் பேருந்தில் தூங்கி புத்துணர்ச்சி பெறுவார்கள், (இன்க்லூட் ஓட்டுனர்) முதல்நாள் பார்த்த சினிமாவையோ, சீரியலையோ சீன் பை சீன் கதை சொல்லி, தங்கள் கதை சொல்லும் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.
கலியுகத்தின் இறுதியில் நடப்பவை அனைத்தும் விநோதமாக, வழக்கத்துக்கு மாறாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு, தறிகெட்ட செயல்கள் எல்லாம் நடைபெறும் என்று சில இந்து ஆன்மீகப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதை மெய்பிக்கும் விதமாக சில விஷயங்கள் எல்லாம் என் கண்முன் நடைபெறுவதைப் பார்க்கும்போது உலக அழிவு நெருங்கிவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.
இதுவரை எந்த மாநகர அரசு பேருந்தாவது குறிப்பிட்ட நேரத்தில் வண்டியை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றிருப்பார் என்றால், அவருக்கு நோபல், ஆஸ்கர், புக்கர், சாகித்ய அகாடமி என அனைத்து அவார்டுகளையும் ஒட்டுமொத்தமாக கொடுத்துவிடலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறெல்லாம் நடைபெறுவதில்லை.
ஆனால் அந்த அதிசயம் யாருக்கும் தெரியாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. உலகத்துக்கே சவால் விடும் வகையில் ஒரு மாநகர பேருந்து ஓட்டுனர் தனது கடமையை சரியான நேரத்தில் கடைபிடிக்கிறார். 8 மணி 29 நிமிடம் 30 வினாடிகளில் உறுஞ்சிக் கொண்டிருந்த 3 ரோஸஸ் டீயை கொதிக்க கொதிக்க வாய்க்குள் கவிழ்த்துவிட்டு பேருந்தை எடுக்க ஓடுகிறார் என்றால் அதற்குக் காரணம் காந்தி கிருஷ்ணா தான்.
கடந்தசில மாதங்களாக காந்திகிருஷ்ணாவால் கடைபிடிக்கப்பட்டு வரும் நேரம் தவறாமை, அவனிடம் மட்டுமல்லாமல் அவனை சுற்றி உள்ளவர்களிடமும் ஒரு ஒழுங்கை சிறிது சிறிதாக ஏற்படுத்திவிட்டது என்பது ஒரு ஆச்சரியமான உண்மைதான். அவன் சில விஷயங்களை கட்டாயப்படுத்தி கடைபிடிக்கிறான் என்பதால் மற்றவர்களும் அதை கடைபிடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அவ்வாறுதான் நடைபெறுகிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் உங்களைச் சுற்றிய உலகமும் கட்டமைக்கப்படுகிறது. பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்ற பழமொழி எவ்வளவு உண்மையாக இருக்கிறது. கெயாஸ் தியரி வேறு எதற்கு பொருந்துகிறதோ, இல்லையோ காந்திகிருஷ்ணா விஷயத்தில் மிகச் சரியாக பொருந்துகிறது. அவன் ஏற்படுத்தும் அதிர்வலைகள் அனைவரையும் பாதிக்கிறது. அவனிடம் உள்ள ஒழுங்கு அனைவரையும் ஒழுங்குபடுத்துகிறது. அவன் சத்தமில்லாமல் அனைவரையும் பாதிக்கிறான்.
8:30க்கும் பேருந்தை கிளப்பும் ஓட்டுனர் சுடலைமாடன் அண்ணன், ஜேம்ஸ்பாண்ட்டுக்கு ஆட்டோ ஓட்டும் அசோக் அமிர்தராஜைப்போல், மிக்-21 ரக ஜெட் விமானிபோல, விபத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் சென்னை மெட்ரோ ரயில் குளறுபடிகளுக்கெல்லாம் சவால்விட்டபடி சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து 8:55 மணிக்குள் கா. கிரிஷை அலுவலகத்தில் கொண்டு சேர்க்கிறார் என்றால் கலி முற்றிவிட்டது என நம்பத்தான் தோன்றுகிறது.
ஆனால் காந்தி கிருஷ்ணாவிடம் இன்னும் சில மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழர்களின் மூலாதாரத்தில் ஆழப்பதிந்த விஷயம் மூடநம்பிக்கைகள். குழந்தைகளை பெற்றெடுப்பதுபோல், மூடநம்பிக்கைகளையும் பெற்றெடுத்து சீராட்டி பாராட்டி வளர்ப்பவர்கள் தமிழர்கள். நிலாவுக்கே சென்று கால்பதித்தாலும் முதல் காலை எடுத்து வைத்தவுடன், "சுடலைமாட சாமி துணை" என கண்களை மூடியபடி கூறிக்கொள்வான். கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சையத் காதர் பாஷா மந்திரித்து கொடுத்த தாயத்தை தொட்டு ஒரு முத்தம் கொடுத்துக் கொள்வான். நிலாவில் நின்றபடி வானத்தைப் பார்த்து பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவுக்கு தனது இ.எஸ்.பி. சக்தியின் மூலம் ஏதோ செய்தி அனுப்புவான். ஆபத்து நேரத்தில் மட்டும் அவனுக்கு மும்மதமும் சம்மதமாகிவிடும். இவ்வளவு கடவுள்களையும்தாண்டி நிலாவில் ஒரு ஏலியன் வந்து தன்னை தாக்கி விடுமா என்ன? என்கிற குருட்டு தைரியத்தில் நிலாவில் இறங்கி ஹெல்மட்டை இறக்கிவிட்டு ஒரு தம் அடித்தாலும் அடிப்பான.
காந்தி கிருஷ்ணா ஒன்றும் இதற்கெல்லாம் விதிவிலக்கல்லவே. பல ஜென்மங்களாக தொடர்ந்து வநத மூட நம்பிக்கைகள் அவனை விட்டு அவ்வளவு எளிதில் சென்றுவிடுமா என்ன. 8:55 மணிக்கு அலுவலகம் வந்தடைந்துவிடும் அவன் 8:59 மணி வரை அலுவலக வாசலிலேயே காத்துக் கொண்டிருப்பான். 9 மணிக்குத்தான் அலுவலகத்திற்குள் அவனது வலது காலை எடுத்து வைப்பானாம். அவலுவலக காவலாளி வெகு நாட்களாக அவனை சந்தேகப்பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். சென்ற மாதம் அலுவலகத்தில் காணாமல்போன ஸ்டேபளர்பின் பாக்ஸ்களும், பேப்பர் ரோல்களுக்கும் இவன் காரணமாக இருப்பானோ என்று மனதிற்குள்ளாகவே யோசித்துக் கொண்டிருந்தார். திருடர்கள எல்லாம் இப்படித்தான் வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்டிருப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக நடந்து கொள்வார்கள். ஆனால் உறுதிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் காவலாளி.
காந்தி கிருஷ்ணா அலுவலகத்திற்குள் வந்து விட்டானா? அப்படியென்றால் மணி 9 என்று எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. அலுவலகத்தில் தண்டத்திற்கு 3 கடிகாரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதை யாரும் கவனிப்பதே இல்லை. அவை பலராலும் கவனிக்கப்படுவது என்றோ நின்று விட்டது. இப்பொழுதெல்லாம் காந்தி கிருஷ்ணாதான் அலுவலக ஊழியர்களுக்கு கடிகாரமாகக் காட்சியளித்தான். 9 மணிக்கு அலுவலகம்... 11 மணிக்கு டீ... 1:30க்கு மதிய உணவு... மீண்டும் 2 மணிக்கு அலுவலகம்... 4 மணிக்கு காஃபி... 5 மணிக்கு கிளம்புதல் என அனைத்தும் காந்திகிருஷ்ணாவைப் பார்த்து அனைவரும் செயல்பட ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் அவனையும் ஒரு விஷயம் அசைத்துப் பார்த்து விட்டது....பெரிதாக ஒன்றும் இல்லை.
அன்று ஒருநாள் அதிகாலை வேளையில் சூரிய உதயத்தை தன்னை மறந்து ரசித்தபடி காந்தி கிருஷ்ணா சிலை போல் நின்று கொண்டிருந்தான். அதன் பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை....
அன்றிலிருந்து அனைவரும் அதிர்ச்சியடையும்படி நேரத்தை கடைபிடிப்பதை நிறுத்திக் கொண்டான் காந்தி கிருஷ்ணா. அதிர்ச்சியடையும்படியாக இரவு வெகு நேரம் நிலவை ரசித்தான். அதிகாலையில் நன்றாகத் தூங்கினான். காலை வேளையில் இனிமையான பாடல்களைக் கேட்டான். தியானிப்பதை விட்டு விட்டான். ...குறிப்பிடும் படியாக காலைக் கடனை நேரத்துடன் முடித்துக் கொள்ளவில்லை... ஆச்சரியப்படும்படியாக கனவு கண்டதைப் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான். அவன் இப்பொழுதெல்லாம் முதுகை நிமித்துக் கொண்டு கடப்பாறையை முழுங்கியவன் போல் அமர்வதில்லை. இயல்பாக அமர்கிறான்.
அலுவலகத்திலும் அனைவருக்கும் அதிர்ச்சி....
அவனுக்குள் என்ன நிகழ்ந்ததோ தெரியவி்ல்லை... என்ன மாயமோ... என்ன மந்திரமோ...
அந்த அதிகாலை சூரியனில் என்ன தெரிந்ததோ தெரியவில்லை...
அவன் நேரத்தை துரத்துவதை நிறுத்திக் கொண்டு, நேரத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.
அன்று முதல் அவன் நேரம் மறந்து வேலை செய்ய ஆரம்பித்தான். நேரம் மறப்பதற்கும், நேரத்தை துரத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான். நேரம் மறந்து வேலை செய்வது சோம்பேறித்தனம் அல்ல என்பதை தெரிந்து கொண்டான். வாழ்க்கை என்பது ரசனையே.... ஒரு போட்டி அல்ல என்பதை இவ்வளவு சின்ன வயதில் புரிந்து கொண்டதற்காக அவன் இயற்கைக்கு நன்றி சொன்னான்.