சுந்தரேஷன் 10,570 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பொறுப்பான குடும்பஸ்தன். மனைவி லதாவிற்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு. காரணம் மாதமானால் முதல் தேதியன்று 10,570 ரூபாயை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட்டு 70 ரூபாயை கடன் வாங்கிச் செல்வார். அதில் 50 ரூபாயை மிச்சப்படுத்தி விடுவார். இவரை போன்ற சாதனையாளர்களைப் பற்றி உலகம் அறிவதேயில்லை. அந்த 20 ரூபாய்க்கு அப்படி என்ன செய்திருப்பார் என்றால், இப்படி ஒரு வழி இருப்பது யாருக்குமே தெரியாது, புளிப்பு மிட்டாய் பாக்கெட் ஒன்றை வாங்கி வைத்திருப்பார். காலை அலுவலகம் சென்றவுடன் ஒன்று, மாலை ஆனதும் ஒன்று அவ்வளவு தான் திருப்தியடைந்துவிடுவார். இன்றும் 5 பைசாவுக்கு கிடைப்பது புளிப்பு மிட்டாய் மட்டும்தானே.
திருமணத்திற்கு முன் டீ, காபி எல்லாம் கடைகளில் குடித்துக்கொண்டிருந்தார் என்பது இங்கு சிவப்பெழுத்துக்களால் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். திருமணமாகி என்று ஒரு பெண் குழந்தை பிறந்தாளோ அன்றோடு ஒரு துறவியைப் போலாகிவிட்டார். தன் மகள் ஸ்ருதிக்காக இன்றே பணம் சேர்க்க ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு சென்று தனது மகளுக்கான சேமிப்பு கணக்கில் பணம் சேர்த்து வருகிறார். ஏதோ அடுத்தவர் பணத்தை கையாள்வதைப் போல அதன் மீது பற்றற்று இருப்பார்.
சுந்தரேஷன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெனோவாக பணிபுரிகிறார். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு நேரத்திற்கு அலுவலகம் சென்றால் மரியாதைக் குறைவாக பேசிவிடுவார்கள் என்ற பயத்தினால் 10 மணிக்கு எழுந்து நிதானமாகக் கிளம்புவார். அந்த ஸ்கூட்டர், அதை அவர் மாமனார் திருமணத்தன்று பரிசளித்தது. கோவில் திருவிழாக்களில் ஆட்டை வெட்டுவதற்கு முன் அதற்கு மாலை மரியாதையெல்லாம் செய்து, நேர்த்தி கடனெல்லாம் கொடுப்பார்கள். அப்படி ஒரு நேர்த்திக்கடன்தான் இந்த ஸ்கூட்டர். தன் மகளுக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பதில் மாமனாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த ஸ்கூட்டர் மிகவும் பழையதாகிவிட்டது. சுந்தரேஷன் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் 2 மெக்கானிக் ஷாப்கள் உண்டு. சுந்ரேசன் வருகிறாரென்றால் அவ்வளவுதான். இரண்டு கடைகளின் மெக்கானிக்குகளும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அந்த ஸ்கூட்டர் இன்றும் ஓடுகிறதென்றால், ஏதோ நம்மை மீறிய சக்தி என்ற ஒன்று இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அன்று ஒரு நாள் மெக்கானிக் மாதவன், சுந்தரேஷனிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தான்.
‘பஸ்சுல போறது மாதிரி வசதி வேற எதுலயும் கிடையாது சார்! அப்படியே ஜன்னல தொறந்து விட்டோம்னா ஜிலு ஜிலுன்னு காத்துவரும். எத்தனை மக்கள் நம்மை சுற்றி பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் வருவாங்க. இதையெல்லாம் அனுபவிக்கனும் சார். நீங்களும் இந்த ஸ்கூட்டர விட்டுட்டு ட்ரை பண்ணிப் பாருங்களேன். நான் வேணா உங்களுக்கு பஸ்பாஸ் எடுத்து தர்றேன் சார். என் மச்சான் கூட ஆர்.எம்.டி.சி. லதான் வேலை பாக்குறான் ........ இவ்ளோ ஏன் சார் பஸ்சுல பயணம் செஞ்சா லிவருக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?’
நெற்றியை சுருக்கினார் சுந்தரேஷன்
‘என்னது லிவருக்கு நல்லதா’
‘ம்......இல்ல.........ஆமா....... ஆமா சார் உங்களுக்குத் தெரியாதா இப்போ அமெரிக்காவுல விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க சார். பஸ்சுல பயணம் செஞ்சா லிவருக்கு ரொம்ப நல்லதுன்னு. அட அத விடுங்க சார், பெட்ரோல் காசு எவ்ளோ மிச்சமாகும் தெரியுமா?’
சுந்தரேஷனை அநியாயத்துக்கு குழப்பிவிட்டான் அந்த மெக்கானிக். அவருக்கு மட்டுமென்ன, இந்த ஸ்கூட்டருடன் மாரடிக்க வேண்டும் என்று ஆசையா என்ன? அவருக்கும் காரில் செல்வது போன்ற கனவெல்லாம் வந்திருக்கிறது என்பது பிராய்டையும் குழப்பக்கூடிய விஷயம். சுந்தரேஷன் மனதிலும் ஆயிரம் கவலைகள், ஆயிரம் ஆசைகள் இருக்கத்தான் செய்தது. மாதச் சம்பளம் வாங்கியே வாழ்க்கை கரைந்துவிடும் போல என்று நினைக்கும் பொழுதே அவரது இதயம் வேகம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
அன்று ஒரு நாள் திருபாய் அம்பானியைப் பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்துவிட்டு ஒரு முழு இரவு தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தார். நகத்தைக் கடித்து துப்பினால் ஆறாவது அறிவு சிறப்பாக செயல்படும் என்று எங்கு கேள்விபட்டாரோ, யோசனையில் ஆழ்ந்துவிட்டால் போதும் கடித்துக் குதறி துப்பிக் கொண்டே இருப்பார். தொழில் செய்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற ஆசையை வெகு நாட்களாக யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தார்.
அன்று ஒரு மதிய இடைவேளையின் போது, அலுவலகத்தில் மதிய உணவு உண்ணும் கூடத்தில், சுந்தரேஷனின் அலுவலக நண்பர் (ஆத்ம நண்பர்) திரு, டேவிட் உடன் பேசிக் கொண்டிருந்தார். திரு, டேவிட்டுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அது ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்யக் கூடிய திறமை. ஆம் யாராலும் அவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது. அவர் துல்லியமாக செயல்படுவார். ஆம் அவர் உணவு உண்டு கொண்டிருக்கம் பொழுது, பேச்சை நிறுத்தவே மாட்டார். அவரது வாய் சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும், பேசிக் கொண்டும் இருக்கும். சற்று உற்று கவனித்தால்தான் அது எவ்வளவு கடினம் என்பது தெரியும். மற்றபடி அவர் உளறிக் கொண்டிருக்கும் விஷயம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்பதை இரண்டொரு நிமிடங்களில் கண்டு கொள்ளலாம். மற்றும் அவரிடம் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் அவருக்கு காதுகளே கிடையாது என்பது. அவர் பேசுவதைத் தான் அனைவரும் கேட்க வேண்டும். மற்றவர்கள் ஏதாவது அவரிடம் கூறினால் அவர்களுக்கு இதைப் போன்ற அதிர்ச்சியான உணர்வு ஏற்படும்.
‘நான் இப்பொழுது யாரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.’
சுந்தரேஷனுக்கு, திரு. டேவிட்டுடன் எவ்வாறு இப்படியொரு நட்பு ஏற்பட்டது என்றால், சுந்தரேஷன் பேசுவதே இல்லை. திரு. டேவிட்டோ பேச்சை நிறுத்துவதேயில்லை. சுந்ரேஷனின் காதுகள் கேட்கத் தயாராய் இருக்கும் பொழுது, திரு. டேவிட்டின் வாய் என்ன சும்மாவா இருக்கும்.
அந்த மதிய இடைவேளையில் தனது தினசரி சாதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தார் டேவிட். என்றும் இல்லாமல் இன்று சுந்தரேஷன் சற்று உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தார். காரணம் திரு. டேவிட் அம்பானியை பற்றிய தனது உரையை ஆரம்பித்திருந்தார். ஆனால் அம்பானி மட்டும் அங்கிருந்திருந்தால் ஆச்சரியப்பட்டுப் போயிருப்பார். தன்னைப் பற்றி சங்கடமே இல்லாமல் கற்பனைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் இவரை போன்ற மனிதர்கள் எல்லாம் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்று. திரு. டேவிட் அம்பானியை ஒரு நியூட்டன் ரேஞ்சுக்கு கற்பிதம் செய்துக் கொண்டிருந்தார். சுந்தரேஷன் அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை என்றாலும், அவருடைய காதுகள் வழக்கம் போல தங்களது பணியை செய்து கொண்டிருந்தன. அவரது பிசினஸ் செய்யும் ஆர்வம் அவரை உந்தித் தள்ள ஆரம்பித்துவிட்டது. டேவிட் பேச பேச அந்த ஆர்வம் பெரிதாக ஊதி வெடித்து விடும் போல இருந்தது. கட்டுப்படுத்த முடியாமல் கத்திவிட்டார் சுந்தரேஷன்.
‘போதும்....... நிறுத்துங்க...... டேவிட்’
திரு. டேவிட் அதிர்ந்து போனார். சுந்தரேஷனுக்கு தான் பேசியது பிடிக்கவில்லையோ என்று தவறாக நினைத்துக் கொண்டார். அருகிலிருந்த, கிளார்க் ராகவனிடம் கேட்டார்.
‘நான் ஏதும் அதிகமாக பேசிவிட்டேனா? ஏன் இவ்வாறு கோபித்துக்கொண்டு செல்கிறார், சுந்தரேஷன்’
ராகவன் மனதிற்குள்ளாக இவ்வாறு நினைத்துக் கொண்டார்.
‘நீ பேசி பேசி என் காது என்னைக்கோ செத்துப் போச்சுயா. செத்துப் போன காதுல நீ பேசுறது எப்படியா கேக்கும். லூசா நான் நீ பேசுறதை எல்லாம் கேக்குறதுக்கு’
பின் கனிவுடன் திரு. டேவிட்டின் காதுகளில் விழும்படி இவ்வாறு கூறினார் ராகவன்.
‘அவருக்கு வேற எதாவது டென்ஷன் இருந்திருக்கும்’
வெகு நாட்கள் கழித்து சுந்தரேஷன் தன் மனைவியிடம் தனது பிசினஸ் செய்யும் ஆர்வத்தைக் கூறினார். அது ஒரு அழகான இரவு நேரம் என்பதால் சுந்தரேஷன் காயமின்றி தப்பினார். பின் சோத்துப் பானையை எடுத்து நடு மண்டையில் அடித்தால் காயம் ஏற்படாதா? அந்த பானை வேறு பல இடங்களில் நெளிந்து போயிருக்கிறது. ஸ்ருதி பிறக்கும் வரைதான் சுந்தரேஷனுக்கு திருமதி. லதா ஒரு அன்பான மனைவி. ஸ்ருதிக்கு பிறகு அது லதாவா? விஜயசாந்தியா? என் பலமுறை தனது சோடா புட்டி கண்ணாடியை அவிழ்த்துவிட்டு கண்களை கசக்கியபடி பார்த்திருக்கிறார் சுந்தரேஷன்.
அவருக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது என்றால், அவரது தொழில் செய்யும் ஆர்வம் எந்த அளவுக்கு தூண்டப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ அவர் முற்பிறவியில் செய்த தர்மம் மற்றும் நற்பலன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை இன்று காப்பாற்றிவிட்டது.
தனது நண்பர்களிடம் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சுந்தரேஷன். டேவிட் தான் தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் ஒரே ஆத்ம நண்பர். விடிந்ததும் அவரிடம் இதைப் பற்றி விவாதிப்போம் என்று நினைத்தபடியே உறங்கிப் போனார். விடிந்ததும், விடியாததுமாக எழுந்து கிளம்பிவிட்டார். கிளம்புவதற்கு முன்னர் ஏதோ ஒரு சக்தி அவரை தடுத்து நிறுத்தியது.
‘வேண்டாம் ஜாக்கிரதை’
அந்த குரல் அவரது உள்ளுணர்வுதான், இந்த காலத்தில் யார் உள்ளுணர்வின் பேச்சையெல்லாம் கேட்கிறார்கள். சுந்தரேஷன் மட்டும் கேட்பதற்கு, இருந்தாலும் பல் துலக்கிவிட்டு சென்றிருக்கலாம்.
வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு குரல்.
‘வாங்கண்ணே, நல்லாருக்கீங்களா’
என்னவோ அவர் வெளியூரிலிருந்து வந்தது போல, அந்த குரலுக்கு சொந்தக்காரர் திருமதி. மெர்சி. டேவிட்டின் மனைவி. இவரைப் பற்றி ஒரு வரி. இவர் ஜேம்ஸ் பாண்டின் தீவிர ரசிகை. காரணமுண்டு.
சுந்தரேஷன் : டேவிட் இல்ல
மெர்சி : அவர் பாத்ரூம்ல் கொஞ்சம் வேலையா இருக்காரு.
புரிந்து கொண்டார் சுந்தரேஷன். டேவிட் என்ன பாத்ரூமில் பட்டப்படிப்பா படித்துக் கொண்டிருப்பார். வேலையை முடித்துக் கொண்டு வரட்டும் என்று கார்த்திருந்தார். தனது ஆர்வத்தை யாரும் புரிந்து கொள்ளவதில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். ஆனால் கிட்டதட்ட சுந்தரேஷன் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. பாத்ரூமிற்குள்ளிருந்து டேவிட் நாளிதழுடன் வெளியே வந்தார். இந்தியாவைப் பொறுத்தவரை படிக்கும் அறை என்று ஒன்று தனியாக இருப்பதில்லை.
சுந்தரேஷனும், டேவிட்டும் இரண்டரை மணி நேரம் பேசினார்கள். பெட்ரோல் பங்கில் தீ மூட்டி குளிர் காய நினைத்தால் என்னவாகும் தெரியுமா? ஆம், சுந்தரேஷன் பற்றிக் கொண்டார். அவரது ஆர்வம் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இறுதியில் சுந்தரேஷன் கெஞ்ச வேண்டியதிருந்தது.
‘டேவிட் அலுவலகம் சென்று இதைப் பற்றி பேசுவோம்’
‘இல்ல சுந்தரேஷன் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்களேன் ப்ளீஸ்’
‘இல்ல டேவிட் டைம் ஆயிடுச்சு, நான் பல் கூட விலக்க வில்லை......’
சுந்தரேஷன் மனதிற்குள்ளாக
‘இவனுக்கெல்லாம் வாயே வலிக்காதா?’
சுந்தரேஷன் வேக வேகமாக கிளம்பினார். இறுதியாக தனது ஷுவை எடுத்து பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது திருமதி. மெர்சி காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
‘என்ணண்னே ஆபிஸ் கிளம்பிட்டீங்களா’
‘ஆமாம்மா’
பின் என்ன தினந்தோறும் சந்திரமண்டலத்துக்கா போய் வந்து கொண்டிருக்கிறேன். இவள் ஏன் இந்நேரத்தில் என் மனைவியை பார்க்க போகிறாள். ஏதேனும் விபரீதம் நடப்பதற்குள் அலுவலகத்திற்கு ஓடி விட வேண்டும் என்று நினைத்தபடி விறுவிறுப்புடன் கிளம்பினார்.
5 நிமிடங்கள் கழித்து அந்த பெண் வேகவேகமாக வெளியே ஓடினாள் தனது உளவு வேலையை முடித்துவிட்டு. மெர்சியும் அவளது 5 வயது மகனும் அவர்களது வீட்டிற்குள்ளிருந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நிமிடத்திற்குப் பின்
சுந்தரேஷனுக்கும், லதாவிற்கும் இடையே கடுமையான வாக்கு வாதம். சுந்தரேஷன் பிய்த்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். ஸ்கூட்டரை உதைத்து விரட்டினார். ஒரு செருப்பு வீட்டிற்குள்ளிருந்து பறந்து வந்தது. பின் ஒரு டிபன் பாக்ஸ் வேறு. அந்த 5 வயது சிறுவன் தன் அம்மாவிடம் தன் சந்தேகத்தை இவ்வாறு கேட்டான்.
‘அம்மா அந்த அங்கிள்தான் ஷு போட்டு போறாங்கள்ள அப்புறம் ஏன் அந்த ஆன்ட்டி செருப்ப தூக்கி வீசுறாங்க’
‘சு......... அதெல்லாம் உனக்கு புரியாது’
‘அப்புறம், அம்மா அந்த அங்கிள் டிபன் பாக்சை எடுத்துட்டு போகாம மறந்துட்டு போயிட்டாரு. அவரு மத்தியானம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாரு’
ஜன்னல் மூடப்பட்டது.
சுந்தரேஷன் அன்று மாலைக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். ஒரு 6 மாதத்திற்கு மனைவிக்குத் தெரியாமல் வியாபாரம் செய்யலாம் என்கிற விபரீதமான முடிவு அது. திரு. டேவிட் 200க்கும் மேற்பட்ட ஐடியாக்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தால் கண் வலிக்கும், ஜலதோஷம் பிடித்துக் கொண்டால் மூக்கு வலிக்கும், பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும் (விதிவிலக்கு திரு.டேவிட்), ஆனால் காது வலிக்குமா? ஆம், அது கூட வலிக்கும், திரு. டேவிட்டிடம் மாட்டிக் கொண்டால். சிறிது ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியது போல், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் பரிதாபப்பட்டு விட்டுவிடுவாரா? என்று யோசித்துக் கொண்டிருந்தார் சுந்தரேஷன், வலிக்கும் காதுகளுடன்.
அலுவலகத்தில் ஜி.பி.எப். பணம் முழுவதையும் எடுத்துவிட்டார். திரு. டேவிட்டின் அறிவுரைப்படி வாயில் நுழையாத பெயர் கொண்ட அந்த கிரீம் பிஸ்கட் பாக்கெட்டின் விநியோக உரிமையை 15 ஆயிரம் ரூபாய் கட்டி எடுத்தார். திருபாய் அம்மபானி கூட, 15 அயிரம் ரூபாயை வைத்துதான் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். அதை நினைக்கையில் பெருமிதம் பொங்கியது சுந்தரேஷனுக்கு, பிஸ்கட் பாக்கெட்டுகளை விநியோகிக்க 2 சிறுவர்களை பணியில் அமர்த்தினார்.
அந்த இரு சிறுவர்களையும் உட்கார வைத்து, ஒரு மணி நேரம் தான் படித்த தொழில் நட்பங்களையெல்லாம் ஒரு பேராசிரியர் போல விளக்கிக் கொண்டிருந்தார். இடையிடையே ஆங்கிலம் வேறு. அந்த சிறுவர்கள் இருவரும் குளிர் காய்வது போல் கைகளிரண்டையும் கட்டிக் கொண்டு பணிவுடன் மலங்க மலங்க விழித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் புது சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
வேலை தொடங்கியது. தினசரி பிஸ்கெட் பாக்கெட்டுகள் காலியாகி கொண்டிருந்தன. சுந்தரேஷனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னைப் போல் தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவர்கள் யாரும் இல்லை என்று பெருமிதமாக எண்ணிக் கொண்டார். அந்த சிறுவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். அவர்களும் உற்சாகமாக வேலை செய்தார்கள். தமிழ் நாட்டில் ஒரு அம்பானி சத்தமில்லாமல் உருவாகிக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் எப்பொழுதும் லேட் பிக்அப் தான் தன்னைப் பற்றி புரிந்து கொள்ள சில வருடங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஒரு மாதம் கடந்திருந்தது. வரவு செலவு கணக்குகளை பார்த்துவிட வேண்டியது தான் என்று கங்கணம் கட்டியபடி அலுவலகத்திற்கு விடுமுறை கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டார். தனது தனி அலுவலகத்திற்கு (வாடகைக்கு எடுத்திருந்தார். திரு. டேவிட்டின் அறிவுரைப்படி) வந்து நாற்காலியில் அமர்ந்தார். ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். அந்த நாற்காலி ஒரு மின்சார நாற்காலியாக மாறிப்போனது. அவருக்குள் வோல்டேஜ் கணக்கில் மின்சாரம் ஏறிக் கொண்டிருந்தது. பின் இரு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் சில விஷயங்கள் அவருக்கு தெரியவந்தது.
1. விநியோகிக்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகளில் பாதிதான் கடைகளுக்கு சென்றன. மீதி அந்த சிறுவர்களின் வயிறுகளில் தஞ்சமடைந்து விட்டன. பின் தான் யோசித்தார், அவர்களுக்கு மதிய உணவு பேட்டா கொடுக்காமல் போனது எவ்வளவு பெரிய தப்பாகி விட்டது என்று. சுந்தரேஷனின் கணக்குபடி 3570 ரூபாய்க்கு பிஸ்கட்டுகளை சாப்பிட்டிருக்கிறார்கள். இது ஒரு சாதனையும் கூட.
2. ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 7 ரூபாய் 50 பைசா. அதை செவன் ருபீஸ் பிப்டி பைசே என்று ஆங்கிலத்தில் சொல்லவில்லை என்று யார் அழுதது. அதை குத்துமதிப்பாக புரிந்து கொண்ட அந்த சிறுவர்களில் ஒருவன் 3.50க்கும், மற்றொருவன் 4.50க்கும் விநியோகம் செய்திருக்கிறார்கள். இப்பொழுதான் புரிந்தது பிஸ்கட் பாக்கெட்டுகள் அவ்வளவு வேகமாக ஏன் விற்றுத் தீர்ந்தன என்று.
3. மூன்றாவது முக்கியமான விஷயம், ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டிருக்க வேண்டிய விஷயம், அவர்கள் இருவரில் ஒருவன் 2 வது படிக்கும் பொழுது அவனது ஆசிரியரின் அழகான, முடியில்லாத மண்டையில், ஒரு அழகான வழவழப்பான மற்றும் உருண்டையான வெள்ளை நிற பளிங்கு போன்ற கல்லை போட்டு விட்டான். நியாயமாக அந்த கல் உடைந்திருக்க வேண்டும். அந்த சிறுவனின் போதாத காலம் ரத்தம் தோய்ந்த சிவப்பு நிறக் கல் நீதிமன்றத்தில் சாட்சியாகிப் போனது. சென்ற வருடம் தான். சிறுவர் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தான். மற்றொருவன் அவனது சிறைத்தோழன். அவன் பள்ளிக்கு செல்ல சொன்ன அவனது தந்தையின் மண்டையில் கபடி விளையாடியவன்.
இந்த இரு கல்வி மேதைகளிடமும், செவன் ருபீஸ் பிப்டி பைசே என்று சொல்லவில்லை என்றால் தான் என்ன? சுந்தரேஷனின் கண்களில் கண்ணீர் துளிகள் ரயில் பூச்சி போன்று வழிந்து கொண்டிருந்தது. இது ஆனந்த கண்ணீரா, சுயபச்சாதாப கண்ணீரா, அல்லது பயக் கண்ணீரா, இல்லை கோபக் கண்ணீரா ஒரு முடிவுக்கு வர முடியாத ரியாக்ஷன்.
இந்த விஷயம் மட்டும் மனைவி லதாவிற்கு தெரிந்தால், ஐயோ, அந்த வெண்கலப் பானையால் மட்டும் தன்னால் அடி வாங்க முடியாது. அது இரும்பை விட கடினமாக இருக்கிறது. நினைக்கும் பொழுதே உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் இருவருக்கும் கடைசியாக இருந்த 4 பிஸ்கட் பாக்கெட்டுகளை ஆளுக்கு இரண்டாகப் பிரித்து கொடுத்து வழியனுப்பி வைத்தார் சுந்தரேஷன். தனது சோடாபுட்டியை கழற்றி உறைந்து போயிருந்த கண்களை துடைத்துக் கொண்டார்.
தனது தனி அலுவலகத்தை மூடிவிட்டு, ஸ்கூட்டரை உதைக்க தெம்பில்லாமல் உருட்டிக் கொண்டே சென்றார். மொத்தமாக கணக்கு பார்த்ததில் 33,270 ரூபாய் நஷ்டம். தனது 3 மாத சம்பளம். வேதனையில் வாய் குளறி தனக்குத் தானே இவ்வாறு கூறிக் கொண்டார்.
‘ஐயோ, லதா! எனக்கு 33,270 ரூபாய் நஷ்டம் கூட பெரிய விஷயம் அல்ல. நமது வீட்டு புறக்கடையில் உள்ள அந்த உரல் குத்தும் தேக்கு மரத்தாலான உலக்கைதான். அதை நினைக்கும் பொழுதே வேர்வை அனைத்தும் மொத்தமாக வெளிவருகிறது. உன் அப்பன் சொட்டைத் தலையன் கொடுத்த சீதனங்கள் எல்லாம் மிகக் கொடூரமான ஆயுதங்களாக அல்லவா இருக்கின்றன.’
இடம் திரு. டேவிட்டின் வீடு
திரு. டேவிட் தன் நண்பனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.
‘இதற்கெல்லாம் வருத்தப்படலாமா. பிசினஸ்னா அப்படித்தான் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இதையெல்லாம் சமாளிச்சுதான் மேல வரணும். என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு......... இந்த சாக்கலேட் சாப்பிட்டுருக்கீங்களா.......... ஆதித்யா சாக்லேட்டுன்னு புது பிராண்ட் ஒண்ணு மார்கெட்ல வந்திருக்கு............ சுந்தரேஷன்.........சுந்தரேஷன்.......... சுந்தரேஷன் எங்க எழுந்து போறிங்க..... சுந்தரேஷன்......... இதுக்கெல்லாம் மனசு ஒடிஞ்சு போகக் கூடாது........
புத்தர் கூட தோற்று போவார். அவ்வளவு அமைதியாக எழுந்து தனது வீட்டை நோக்கி நடந்தார் சுந்தரேஷன்.
அதிகாலை நேரம்
ஸ்ருதி, தூங்கிக் கொண்டிருக்கும் சுந்தரேஷன் மீது வந்து குதித்தாள்.
டாடீடீ.......... டாடீடீ........... எனக்கு பிஸ்கட் எடுத்து தாங்க டாடி. எந்திரிங்க டாடீடீ..... எனக்கு பிஸ்கட் வேணும் டாடி.
பதறி எழுந்த சுந்தரேஷன், அவிழ்ந்து விழப்போன வேட்டியை இறுக்கி பிடித்தபடி
‘ஐயோ, நான் இல்ல....... நான் இல்ல......என்னை மன்னிச்சிடுங்க....... மன்னிச்சிடு லதா.......தெரியாம பண்ணிட்டேன்........... லதா... ல.........ல.........’
மிரண்டு போன ஸ்ருதி சுவரின் மூலையில் நின்று கொண்டு வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்பொழுதெல்லாம், சுந்தரேஷன் தனது ஆத்ம நண்பர் திரு. டேவிட்டைப் பார்த்தால் ஒரு நூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரரைப் போல் மாறிவிடுகிறார். வாழ்க்கையில் தப்பிக்கும் கலைதான் எவ்வளவு முக்கியமானது. திரு. டேவிட்டின் வார்த்தைகளிலிருந்து, திருமதி லதாவால் தூக்கியெறியப்படும் ஆபத்து மிகுந்த கணைகளிலிருந்து. 33,270 ரூபாய் செலவு செய்து திரு. சுந்தரேஷன் கற்றுக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கைக்கு மிக அவசியமான மற்றும் அழகான இந்த தப்பிக்கும் கலை, அனுபவப்படாதவர்களுக்கு ஒரு இலவச பாடம்.
- சூர்யா
- சூர்யா