தகதகவென சிவந்த கண்கள். கருவிழிகளோ மேல் நோக்கி சொருகிய நிலையில். முகமெல்லாம் வழிந்தோடிய வியர்வைத் துளிகள். கலைந்து போன முடி. அது நடையா நடனமா என்று சரியாக தெரியவில்லை, அப்படியொரு இடம் நகர்தல். சட்டையில் கடைசி ஒரு பட்டன் மட்டுமே போடப்பட்டிருந்தது. சட்டையில் போடப்பட்டிருந்த கடைசி பட்டன் இழுத்துவிடப்பட்டதில் நெஞ்சருகே இருந்தது. தண்ணியடித்து தொங்கிப்போன நிலையில் தொப்பை. கைலி என்னும் ஒரு வஸ்திரம். கட்டப்பட்டிருக்கும் நோக்கமிழந்து அரை டிராயரின் உதவியுடன் மானம் காக்கப்பட்டு. அந்த உருவம் வந்து கொண்டிருந்தது. பெயர் ஆட்டோ மணி.
மணி என்று கூப்பிட்டால் மணிக்கு கோபம் வந்து விடும். ஆட்டோ மணின்னு கூப்பிடு என்று கூறுவான். அது தொழிலுடன் ஏற்பட்ட ஒருங்கிணைப்பு வேறொன்றுமில்லை. கடந்த பத்து வருடங்களாக ஆட்டோ ஓட்டுகிறான். அத்தனை டிராபிக் போலிஸ்காரர்களும் தோஸ்த் முறை. 7 முறை சிறை சென்றிருக்கிறான். அதில் 3 முறை வேறு கேஸ் சிடைக்காத போலிசுக்கு உதவி செய்வதற்காக. முதல் நாள் ரஜினி படம், கட்ஆவுட் பாலாபிசேகம், அரசியல் கூட்டங்களுக்கு ஆட்டோ டீலிங், நகர் வெளிப்புறங்களில் ஆட்டோ ரேஸ், இரவு நேர பீச் சுண்டகஞ்சி, தினந்தோறும் மட்டன் பிரியாணி, ஓல்ட்மங்க் மற்றும் ஓல்ட் காஸ்க், கிண்டி குதிரை ரேஸ் என இத்தனை பிஸியான வாழ்க்கைக்கும் நடுவே ராணிபேட்டை உமா அதிகமாக அலைய விட்டாலும் ஏற்றுக் கொண்டாள்.
அவர்களின் அதிகபட்ச கல்வித்தகுதி இருவரையும் சேர்த்து கூட்டினாலும் 5ஐ தாண்டாது. உமா 3வது பாஸ். மணி 2வது பெய்ல். அதற்காக 2 வருடம் அலையவிட்டது அதிகம்தான். முதலிரவை முட்டுக்காட்டில் திருமணத்திற்கு முன்பே முடித்து விட்டான். திருமணம் தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ராணிப்பேட்டையிலிருந்து உமாவைக் கடத்தி வரும்பொழுது பின்னே துரத்தி வந்த பேட்டைவாழ் மக்கள் தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் வந்தபொழுது அவர்கள் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இன்ஸ்பெக்டருக்குப் பின் தான் தெரிந்தது பெண் கடத்தி வரப்பட்டிருக்கிறாள் என்று. மாமன் மகள் என்று பொய் சொல்லியிருக்கிறான் மணி. இருப்பினும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் மேஜர். அது மட்டுமில்லாமல் எத்தனை முறைதான் அடிப்பது. தோஸ்த் முறை வேறு.
திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் கடந்து விட்டது. கணவன் மனைவி சண்டை காதல் சண்டை இரண்டிற்கும் நடுவே ஒரு மகள் பிறந்தாள். பெயர் செல்சியா. உலகத்தரம் வாய்ந்த படைப்பு. 24 மணி நேரத்தில் 10 மணி நேரம் அழுது கொண்டிருக்கும். 10 மணி நேரம் தூங்கும். 4 மணிநேரம் மணி Vs உமா மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும். உமா நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒத்துழைக்க மறுத்து விட்டாள். ஆட்டோகாரனின் அடாவடித்தனத்தை அடக்க. அக்கம் பக்கம் வீட்டு 35 வயது கடந்த மாமிகளின் கலந்துரையாடலுக்குப் பிறகு ஏற்பட்ட அதிரடி முடிவுதான் இது. நல்லவன் மணி. நான்கு வருடங்களாக உமாவின் மேல் வைத்திருந்த போதையை கல்யாணியிடம் ஆரம்பித்தான். பின் நெப்போலியன், மெக்டுவெல், ஓல்ட் மங்க், ஓல்ட் காஸ்க். இன்று சைதாப்பேட்டை வெஸ்ட்ஜோன்ஸ் ரோட்டில் தள்ளாடியபடி..
வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் இரவு தூங்க வேண்டுமானால் ஏதேனும் ஒரு போதை வேண்டியிருக்கிறது. உழைத்த களைப்பு கூட அவ்வளவு திருப்தியான உறக்கத்தைத் தருவதில்லை. மணியைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளத்து ஆரோக்கியத்துக்கும் உமாவோ. கல்யாணியோ (பியர்) தேவையாய் இருக்கிறது. மற்றபடி அவள் மேல் எந்த கோபமோ வெறுப்போ இல்லை. மகள் மேலும் மிகுந்த பாசம் வைத்திருந்தான். இப்பொழுதே செல்சியா பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்திருந்தான். தனக்குப்பின் தன் மனைவிக்கு என இன்சுயரன்ஸ் போட்டிருந்தான்.
ஆனால் அந்த அசட்டுத்தனமான காரியத்தை யார் சொல்லி செய்தாளோ உமா தினந்தோறும் குடித்து விட்டு வரும் மணியின் பெயர் இப்பொழுது ஆட்டோ மணி அல்ல, குடிகாரன் மணி. தாம்பத்யம் விட்டுப் போய் 2 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இரவு வீட்டிற்குள் அவன் செல்வதில்லை. திண்ணையிலேயே திறந்த வெளித் தூக்கம். சில சமயம் உருண்டு ரோட்டில் கிடப்பான். வீட்டில் நெளியாமல் ஒரு பாத்திரம் கிடையாது. 5 வயது மகளுடன். எதிர்கால பயம் வேறு. வாழ்க்கை கசந்து விட்டது. இனிமையான ஒரு நிகழ்வில்லை வீட்டில். வெறுமனே சாப்பிடுகிறோம். சண்டை போடுகிறோம். தூங்குகிறோம். அவ்வளவுதான்.
அன்று இரவு உணவில் பூச்சி மருந்தைக் கலந்து சாப்பிட்டு விட்டாள். இதில் அசட்டுத்தனமான காரியம் என்னவென்றால் செல்சியாவுக்கும் இரவு உணவு அதுதான். நல்ல வேளை அந்த பூச்சி மருந்து ஒரு இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் அரைகுறை பாதிப்புடன் பிழைத்துக் கொண்டார்கள். சர்வமும் அடங்கிப் போனான் மணி. ஹாஸ்பிட்டலில் உமாவின் முன் இரண்டு சத்தியங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஒன்று குடிக்க மாட்டேன். இரண்டு சண்டை போடமாட்டேன். குழந்தை செல்சியா முழித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் கண்களில் முதன் முறையாக கண்ணீர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு
10 மணி நேரம் உழைப்பு. மனைவியின் சமையலில் மூன்று வேளை உணவு. தினந்தோறும் தேய்த்துப் போடும் காக்கிச் சட்டை, காக்கி பேண்ட். எண்ணெய் வைத்து படிய வாரிய தலை. மறக்காமல் நெற்றியில் சந்தனம் திருநீறு. கைநிறைய வருமானம். சாதாரண ஓட்டு வீட்டிலிருந்து நல்லதொரு டைல்ஸ் பதிக்கப்பட்ட மாடிகளுடன் கூடிய வீட்டிற்கு குடிபெயர்ப்பு. செல்சியாவின் கான்வென்ட் ஆரம்பக்கல்வி. வாழ்க்கைமுறையே மாறிவிட்டது. வாடா போடாவென மரியாதையில்லாமல் கூப்பிட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர்கள் கூட வாப்பா போப்பா என மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். குடிகாரன் மணி என்கிற பெயர் மறைந்து மிஸ்டர்.ஆட்டோ மணி ஆனார். சமுதாயம் மதிக்க ஆரம்பித்தது. அந்தஸ்து கிடைத்தது.
அக்டோபர் 10 அதிகாலை
வேளைஇன்று செல்சியாவின் பிறந்த நாள். அதிகாலை நேரம் மணியின் கையில் ஒரு லிஸ்டை திணித்தாள் உமா.
‘சீக்கிரம் போய் வாங்கிட்டு வாங்க. செல்சி குட்டி எந்திரிக்கறதுக்குள்ள எல்லா பலகாரமும் பண்ணிரனும். ம்....... அப்படியே. அந்த முக்குல அயர்ன் பண்ணுவான்ல (யோசித்தான்) அதாங்க கிருஷ்ணா அயர்ன கடை. (நியாபகம் வந்தது) என்னோட ரவிக்கை நாலு தர்றேன் அயர்ன் பண்ணிட்டு வந்துருங்க. அப்புறம் மண்ணென்ணெய் தீந்து போச்சு. ஒரு பதினோரு மணிக்கு கால் பண்றேன். உங்க ஸ்டாண்ட் பக்கத்துலதான ரேஷன் கடை. இரண்டு டின்ன உங்க ஆட்டோல வச்சுருக்கேன் மறந்துறாதிங்க. சரி சீக்கிரம் போய்ட்டு வாங்க”
மணி 8:30....... மணியின் கையில் காபியை திணித்தாள். பழகிப்போனது அந்த ஆடை விழுந்த ஆறிப்போன காப்பி. ஒண்ணரை மணி நேரத்துக்கு முன் போட்ட காபி. இருப்பினும் அன்பு மனைவி கையால் போட்ட காபி அல்லவா !!!! ஆறிப்போன காபியின் கசப்பும் சர்க்கரையின் இனிப்பும் கலந்து அது என்ன சுவை???. யோசனையில் இருக்கையில் உமாவும் செல்சியாவும் எங்கோ கிளம்பி கொண்டிருந்தார்கள்.
‘என்னங்க. நானும். செல்சியாவும் போத்திஸ் போறோம். எங்கள அங்க இறக்கி விட்டுருங்க. பட்டுப்புடவை 20% தள்ளுபடில போட்டிருக்கான். அப்படியே செல்சிக்கு ஒரு பவுன் நகை வாங்கலாம்னு இருக்கேன். அதனால மத்தியானத்துக்கு நீங்க வெளில சாப்டுக்கோங்க. சரியா.”
மணி 9:00
‘என்னங்க சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. பொம்பள நானே கிளம்பிட்டேன். நீங்க ஏன் இவ்வளவு நேரமாக்குறிங்க. “
மணி 9:20
ஆட்டோ மேட்டுப்பாளைம் தாண்டி ஸ்ரீநிவாசா தியேட்டர் வளைவில் சென்று கொண்டிருந்தது.
‘என்னங்க அந்த ஓரத்துல நிப்பாட்டுங்க.......... அந்த அம்மாகிட்ட 3 முழும் பூ வாங்குங்க......... சீக்கிரம் வாங்க டைம் ஆகுது.”
ஆட்டோ டி நகர் போக்குவரத்துகளுக்கு நடுவே புகுந்து போத்திஸ் முன் நின்றது.
‘என்னங்க நான் மதியம் கால் பண்றேன். மறக்காம வந்து பிக் அப் பண்ணிக்குங்க. அப்புறம ரேஷனுக்கு போக மறந்திராதிங்க”
செல்சி அப்பாவுக்கு டாட்டா காட்டியது.
மணி 11:45
ரேஷன் கடைக்கும் போர் முனைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு இடங்களிலும் கத்தி சண்டை நடக்கும். மணிக்கு ஆறு மாத ப்ராக்டிஸ் இதில் உண்டு. தனக்குரிய 2 லிட்டர் மண்ணெண்ணையை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.
மணி 1:15
மணியின் செல்போன் ஒலித்தது.
‘என்னங்க இன்னும் அரைமணி நேரத்துல நாங்க பர்சேஸ் முடிச்சிருவோம். 1:30க்கெல்லாம் வந்துருங்க சரியா.”
மணி 2:15
உமா, செல்சி இருவரும் வீட்டில் வந்து இறக்கி விடப்பட்டார்கள்.‘என்னங்க உதயம் போய் 3 டிக்கெட் புக் பண்ணிருங்க . 3:45க்கெல்லாம் ஸ்டாண்டுல இருந்து வந்திருங்க. மறந்திராதிங்க இன்னைக்கு சினிமாவுக்குப் போறோம்”
மணி 3:30
பட்டுப்புடவையில் ஜொலித்தாள் உமா. செல்சியா அந்த கவுனில் குட்டி தேவதை போல இருந்தாள்.‘என்னங்க இந்த கர்சீப்ப பாக்கெட்ல வச்சுக்குங்க. தள்ளுபடில வாங்குனது. அந்த பூ டிசைன் ரொம்ப நல்லாருந்தது. உங்களுக்காகத்தான் வாங்கினேன்.”
மணி 5:30
சினிமா தியேட்டரில் ஐஸ்கிரீமை குதப்பியபடி செல்சி.
‘டாடி எனக்கு ஆய் வருது”
இரவு மணி 8:00
‘என்னங்க தோசை மாவு ஒண்ணரை கிலோ வாங்கிட்டு வாங்க”
மணி 10:30
‘என்னங்க........என்ன்ன்னனனங்ங்ங்ககக............ஏன் இவ்ளோ தள்ளி படுத்துருக்கிங்க. இந்த பக்கம் திரும்பி படுங்க. (மௌனம்). ரொம்ப நாள் ஆச்சுல........ நாம சந்தோஷமா இருந்து.”
மணி 12:00
வியர்வைத் துளிகளுடன் திரும்பி படுத்துக் கொண்டாள்.
மணி இந்த ஆறு மாத காலத்தில் மொத்தமாக மௌனமாகி விட்டான். வாழ்க்கை சரியாக போய் கொண்டிருந்தது. ஆனால் ஏதோ ஒரு குறை உமாவுக்கு. என்னவென்று சொல்லத் தெரியவில்லை. மணி ஏதோ பொம்மைத்தனமாக நடந்து கொள்கிறானோ? மிகச்சிறந்த ஜப்பானிய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் போல மூளை, சதை, ரத்தம், நரம்பு, தோல், இவற்றுடன் பாசம், காதல், அன்பு இவைகளையும் சேர்த்துக் கொண்டு ஒரு ரோபோவை போல. முன்பு அவன் அணைத்தலில் ஒரு ஆண்மையின் ஆக்கிரமிப்பு இருக்கும். ஆனால்........ இப்பொழுது...... உமாவால் யூகிக்க முடிகிறது, உணர முடிகிறது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. வாழ்க்கை சரியாகத்தான் செல்கிறது. ஆனால் ஏதோ ஒரு குறை. மிகப்பெரிய குறை. கணவனின் ஆக்கிரமிப்பில் கிடைத்த சுகம். அவன் அடங்கிய நிலையில் கிடைக்கவில்லை. வாழ்க்கையின் மொத்தமான ஒரு பாதி இழந்து விடப்பட்டது தெரியாமல் உமா-மணியின் மீதி காலங்கள் கண்டு கொள்ளப்பட முடியாத மெலிதான நிறைவின்மையுடன் சென்று கொண்டிருந்தது.
nandri keetru