Thursday, April 1, 2010
ஏமாற்று ஏமாற்று
ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான். அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான். இந்த நல்ல பெயர் என்ற ஒன்று இருக்கிறதே அதை வைத்துக் கொண்டு சவரம் கூட செய்ய முடியாது. வக்கனையாக வாய் கிழிய வாழ்க்கை முழுவதும் பெருமைபட்டுக் கொள்ள வேண்டியதுதான். 5 பைசா பிரயோஜனம் இல்லாத விஷயங்களின் வரிசையில் முன்னனி வகிக்கும் விஷயமும் இதுவே. 25 வருடம் நல்ல பெயர் எடுத்தானே ஒழிய பெரிதாக சொத்து எதுவும் சேர்க்க வில்லை. வாழ்க்கையை கலைக்கு அர்ப்பணம் செய்யும்போதே வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் அர்ப்பணிக்க வேண்டும். இத்தனை வருட அநுபவம் நிறைய கற்று கொடுத்து விட்டது.
20 வயதில் டச்சப் மேனாக வாழ்க்கையை ஆரம்பித்து இன்றுவரை பணம் என்று பெரிதாக எதுவும் சம்பாதித்து விடவில்லை. நேற்று வந்த சுண்டைக்காய் பசங்கலெல்லாம் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு காரில் இருந்து கொண்டே கையசைத்துக் கூப்பிடுகிறார்கள். 45 வயதாகிவிட்டது. இன்று ஜெயித்துவிடுவோம் நாளை ஜெயித்துவிடுவோம் என வாழ்க்கை முழுவதும் ஓட்டியாகிவிட்டது. பெண்ணின்பம் துய்க்க வேண்டிய காலங்கள் எல்லாம் பறந்தோடி விட்டது. வாழ்க்கையை நன்றாக அநுபவித்து அடங்கிய பெருசுகள் எல்லாம் அட்வைஸ் பண்ணும்போது கொலை செய்து விட வேண்டும் என கைகள் நடுங்கும். ‘உழைக்க வேண்டிய வயசுல உழைக்கணும்பா. இல்லண்ணா வாழ்க்கையே வீணா போயிடும். இந்த பொட்டச்சி பின்னால சுத்துரவனெல்லாம் வாழ்க்கைல உருப்பட்டதா சரித்திரமே இல்ல’.
இதையெல்லாம அடிவயிற்றில் எரியும் அனல் போன்ற நெருப்பு உடல் முழுவதும் பரவி கைகள் வழியாக வெளிப்பட்டு துடித்து நடுங்கி வேறு வழியில்லாமல் அடங்கும்.
இது போன்று அநுபவிக்க வேண்டியதையெல்லாம் அநுபவித்து விட்டு இளைஞர்களிடம் வேதாந்தம் பேசும் பெரிசுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். வாழ்க்கையில் உழைக்க வேண்டிய நேரங்களிலெல்லாம் உழைத்தாகிவிட்டது ஒன்றும் நடக்க வில்லை. இங்கு ஏமாற்றிப் பிழைக்க வேண்டும். ஏமாற்றுகிறோம் என்பது வெளியே தெரியாமல் ஏமாற்ற வேண்டும். ஏமாறுகிறவன் சந்தோஷமாக ஏமாற வேண்டும். ‘நீ ஏமாறுகிறாய் ஜாக்கிரதையாக இரு’ என்று யாரேனும் அறிவுரை கூறினாலும். ‘எனக்குத் தெரியும். நீ ஒன்றும் சொல்லத் தேவையில்லை. எனக்கு சுயபுத்தி உண்டு. நான் ஏமாறுகிறவன் இல்லை’என எதிர்த்துப் பேசுகிற அளவிற்கு ஒருவனை ஏமாற்ற வேண்டும். ஏமாறுகிறவனுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும். அவனை புத்திசாலி என்று சொல்ல வேண்டும். யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள் அவனுக்குக் கிடைத்திருப்பதாக கூற வேண்டும். இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் இன்னொரு பெயர் உண்டு. வியாபாரம். பச்சையாக கொச்சையாக சொல்வதென்றால் ஏமாற்றுவேலை. உலகமே இதனடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
45 வருடங்களுக்குப் பிறகு இந்த ஞனோதயம் வந்து என்ன செய்வது? வாழ்க்கையில் 70 சதவிகிதம் முடிந்து போய்விட்டதே. இளைஞனாயிருந்த போது. ஏமாற்றுகிறவனைப் பார்த்தால் கோபம் வரும். ஏமாறுகிறவனைப் பார்த்தால் அதைவிட அதிகமாக கோபம் வரும். இவர்கள் ஏன் இப்படி ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள் என்று உண்மையாக வருத்தப்பட்டதுண்டு. ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லாத உலகம் ஏற்படாதா என ஏக்கம் கொண்டதுண்டு. ஏமாற்றுக்காரர்களின் தலையைக் கொய்தாலொழிய இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று நினைத்ததுண்டு. ஆனால். ஆனால்! என்ன பிரயோஜனம் நிறம் மாற்றி விட்டார்கள். உருவம் கொடுத்துவிட்டார்கள். ஏமாற்று வேலைக்கு வேறு வடிவம் கொடுத்து விட்டார்கள். ஏமாற்றுகிறவன் நண்பன். ஏமாறுகிறவன் உயிர்த்தோழன். இருவரும் சேர்ந்து புது உலகை படைத்து விட்டார்கள். இதில் நான் மட்டும் ஏன் தனியனாக இருக்க வேண்டும். நானும் அதே குட்டையில் ஊறி ஒரு மட்டையாகி விடுகிறேன். நியாயம் கேட்பவர்களுக்கும். தர்மம் அலசுபவர்களுக்கும் ஏற்கனவே பதில் தயாராக இருக்கிறது. உண்மையில் எல்லா கெட்ட விஷயங்களுக்கும் பதில் கண்டு பிடித்து விட்டார்கள். ஏதேனும் ஒரு பொருத்தமான தோலை போர்த்திக் கொண்டு பதிலை ஞபாபகத்திற்கு கொண்டு வந்து உணர்ச்சி பொங்க சொல்லிவிட வேண்டியதுதான். அது பசுத்தோலோ புலித்தோலோ. நேரத்திற்கு தகுந்தாற்போல் எடுத்து போர்த்திக் கொள்ள வேண்டியதுதான்.
மனம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் வறட்டுத்தனமாக பதில் சொல்லமுடியவில்லை. இப்பொழுது என் மனநிலைக்கு முன் மனு சாஸ்திரமும் தோற்றுவிடும். இழந்து போன வாழ்க்கை வேதனையை கக்கி கொண்டிருக்கிறது. மனம் கூறியது ஏமாற்று ஏமாற்று. ஏமாந்தது போதும். அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள. அவர்கள் பதில்கள் வைத்திருக்கிறார்கள். உனக்கும் பதில்கள் கிடைக்கும். எங்கே போய்விடப் போகிறது இந்த பதில்கள் உனக்கு மட்டும் கிடைக்காமல். தைரியமாக ஏமாற்று நான் உன் கூடவே இருக்கிறேன். இன்று முதல் நான் புதிய மனிதன். நான் பாரபட்சம் பார்க்க மாட்டேன். பாவம் புண்ணியம் பார்க்க மாட்டேன்.
நான் அடுத்தவர்களுக்கு போடும் வேஷத்தை எனக்கு போட்டுக் கொண்டால் என்ன. ம் . பெரிதாக ஒன்றும் இல்லை. முகம் இடம் மாறுகிறது. நான் என்றுமே நல்லவன்தான். எனக்கு தேவைகள் என்ற ஒன்று இல்லையென்றால். எனக்கு ஆசைகள் என்கிற ஒன்று இயல்பாகவே இல்லையென்றால். யாராவது ‘புத்தர் கூறினார் ஆசைப்படாதே துன்பம் நெருங்காது’ என்று என்னிடம் கூறினால் நிஜமாகவே வாயைக் கிழித்து விடலாம் என்று இருக்கிறேன். ஏற்கனவே கடைபிடித்து பார்த்தாகி விட்டது. ஆசை அடக்கப்படும்போது தான் அதிகப்படுகிறது. பேசுகிறவர்களுக்கெல்லாம் பேசுவது என்பது பிசினஸ் ட்ரிக். அதாவது ஏமாற்றுவேலையின் தந்திரம்.
நானும் ஏமாற்ற துணிந்து விட்டேன். தனக்குத்தானே வாதம் புரிந்து கொண்டிருந்த ராகவன். தனக்குத்தானே போட்டுக் கொண்ட மேக்கப்பை கண்ணாடியில் பார்த்தான். சிரித்தான்.
‘நன்றாகத்தான் இருக்கிறது. களவும் கற்றுமற. நாலு பேரு நல்லாருக்கனும்னா என்ன வேணாலும் செய்யலாம்னு கமலே சொல்லிருக்காரு. அந்த நாலு பேர்ல இப்ப நானும் ஒருத்தன். இப்போ நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.’ நடக்க ஆரம்பித்தான். புது உத்வேகத்துடன். அவனுடைய உடையையும் நடையையும் பார்த்தால் கோடிகளில் புரண்டவன் போலத் தெரிந்தது.
ஆட்கள் அதிகமாக நடமாடும் தி.நகர். கூட்டம் தேனிக்களுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. அதோ ஒரு கூமுட்டை பெரியவர். பார்த்தாலே தெரிகிறது. அக்குளில் அழுத்தமாகப் பிடித்தபடி பை. நிச்சயமாக பணப்பைதான். அடித்து விட வேண்டியதுதான். பாவம் புண்ணியம் பார்க்கக்கூடாது. நேரம் பார்த்து அடித்துவிட வேண்டியது தான். திடீரென கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு முட்டி மோதி நகர்ந்து செல்ல பெரியவர் கூட்டத்தில் இருந்து நகர்ந்து பிளாட்பாரத்தின் ஓரமாக வந்து தனது அக்குளைப் பார்க்க அங்கே பணப்பைக்கு பதிலாக நியூஸ் பேப்பர் சொருகப்பட்டிருந்தது.
கிராமத்து ஆள் போல கூச்சம் நாச்சம் இல்லாமல் சத்தம் போட்டு கத்தி அழ ஆரம்பித்து விட்டார். வழக்கம் போல நமது தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய வழக்கமான ரவுண்டு கட்டி சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் தொழிலை ஆரம்பித்து விட்டார்கள். கழுதை செத்து கிடந்தாலும் சரி ஒரு மனிதன் கதறி அழுதாலும் சரி சுற்றி நின்று பார்த்து ரசிப்பதை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாளாக பழகி வந்திருக்கிறார்கள் நமது மக்கள். 20 மீட்டர் இடைவெளிவிட்டு சரவணா ஸ்டோர் படிக்கட்டுகளில் ஏறி நின்று கொண்டிருந்தான் ராகவன்.
அவர் கிட்டத்தட்ட மயக்கம் போடும் வரை கதறினார். போலிஸ் வந்தது. அந்த சோடா எங்கு தான் கிடைக்குமோ. நான் கடந்த 25 வருடத்தில் ஒரு முறை கூட அங்கே சோடா வாங்கியதில்லை. சோடாவை பெரியவர் முகத்தில் பீய்ச்சி அடித்தார்கள். விழித்தவர் திரும்பவும் பிதற்ற ஆரம்பித்தார் பைத்தியம் பிடித்தவர் போல. அவர் பிதற்றலிலிருந்து சில விஷயங்கள் புரிந்தது. தனது பெண்ணிற்கு திருமண நகை வாங்குவத்றகாக. ஏதோ ஒரு பட்டியிலிருந்து நிலத்தை விற்ற பணத்தோடு சென்னை வந்துள்ளார். வந்த இடத்தில் கொள்ளை போன பணம் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உயிரை எடுத்துவிடும் போல இருந்தது.
சம்மட்டியால் ஒரே இடத்தில் திரும்ப திரும்ப அடிக்கும் போது இரும்பு உருமாறுமாமே. ராகவன் உடைந்து போனான். பெரியவரை நோக்கிப் போனான். போலிஸ்காரர்களுக்கு மத்தியில் உலகை மறந்து புலம்பிக் கொண்டிருந்த பெரியவரை நோக்கி ‘பெரியவரே நீங்க கொண்டு வந்த பணப்பை ஊதா கலர் தோல் பையா” பெரியவர் எம்.ஜி.ஆரைப் பார்த்த நம்பியாரைப் போல வெடுக்கென்று தாவி அவனது கையை பிடித்தார்.
‘ஆமா தம்பி நீங்க பாத்திங்களா”
‘அதோ அந்த ரெண்டு கல்லுக்கு நடுவுல ஒரு இடுக்கு பாருங்க” அதுக்குள்ள கெடக்கு பாருங்க. சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடக்க ஆரம்பித்தான். பெரியவர் அவிழ்ந்து விழ இருந்த வேட்டியை கையில் பிடித்தபடி இடுக்கை நோக்கி ஓடினார். பையும் பணமும் இருந்தது. பெரியவர் சந்தோஷத்தில் அழ ஆரம்பித்தார். திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளிலெல்லாம் வயதான பெரியவர்கள் சந்தோஷத்தில் நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்து ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுவார்கள். ஆனால் பெரியவருக்கு அவ்வாறு நடக்கவில்லை. கிராமத்தில் உழைத்த உடம்பு. எதையும் தாங்கும் என்றது. கிராமத்து ஆட்களுக்கு பொதுவாகவே நன்றி அதிகம். அந்த கூட்டத்துக்கு நடுவே ராகவனை தேடினார். துரத்திப் பிடித்தார்.
‘தம்பி தம்பி........ தம்பி. என் குலத்தையே காப்பாத்திட்டீங்க. ரொம்ப நன்றி தம்பி. உங்களுக்கு நான் ஏதாவது செய்யனும் தயவு செஞ்சு தம்பி எங்கூட ஊருக்கு வரனும். மாட்டேன்னு சொல்ல கூடாது”
‘பெரியவரே எனக்கு நெறைய வேலை கிடக்கு. பணம் கிடைச்சுடுச்சுல. சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க”
‘தம்பி. தம்பி அப்டில்லாம் சொல்லக்கூடாது தம்பி. வூட்டுக்கு ஒரு தடவையாவது வந்து கைய நனைச்சுட்டு போகணும். உங்களப் பாத்தா வீட்டுல எல்லாரும் சந்தோஷப்படுவாங்க”
‘பெரியவரே சொன்னா கேளுங்க. போயிட்டு வாங்க”
‘சரி. சரி. அப்டினா உங்க விலாசமாவது கொடுங்க”
பெரியவர் விட மாட்டார் போல. விலாசத்தைக் கொடுத்து தொலைத்தான்.
‘தம்பி என் மக கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் தம்பி சொல்லிபுட்டேன்”
‘ம். சரி. சரி “
தப்பிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
ராகவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். இது 5 வது தடவை. சே. அடுத்த தடவையாவது பாவம் பாக்காம ஏமாத்திடணும். ஒவ்வொரு தடவை தப்பு செய்யும் போதும் யார் தன்னை தடுப்பது. புரியாமல் தவித்தான் ராகவன். ஒவ்வொரு முறையும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு கிளம்புவதும் பின்தனக்குள் உள்ள யாரோ ஒருவன் தடுக்க தோற்றுவிட்டு வெறுங்கையுடன் வருவதும் வழக்கமாகிவிட்டது. யாரவன்? வலிமையானவனா இருக்கானே. அவனுக்கு சமாதானம் சொல்லவே முடியலையே.
நன்றி கீற்று