Friday, April 8, 2011

கருப்பு வெள்ளை

தலைமுடியில் நரை விழுவது குறித்து சந்தோஷமடையும் மனிதன் இந்த ஊரிலேயே ஒரே ஒருவன் என் நண்பன் முருகன்தான். வெள்ளை நிறத்தில் அப்படியொரு ஈர்ப்பு ஏற்படும் வகையில் அவனை ஏங்க வைத்து விட்டது அவனது தோலின் நிறம். அவன் இருளில் நடந்து வரும் பொழுது சிரித்தாலன்றி அடையாளம் கண்டு கொள்வது கடினம். இருளோடு இருளாக பிரிக்க முடியாத ஒரு இணைப்பாக ஒன்றியிருப்பான். தினசரி 4 வேளை பல் துலக்குவான். அந்த பல்லை தும்பைப் பூ போல் வெண்மையாக வைத்துக் கொள்வதற்கு அவன் காட்டும் ஈடுபாடு அசாதாரணமானது. அவனது வீட்டு அலமாரியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், கோல்கேட், க்ளோஸ்அப், பெப்சோடண்ட் மற்றும் வஜுர்தந்தி போன்ற உபகரணங்களை, காலை, மதியம், மாலை, இரவு என பிரிஸ்கிரிப்சன் எழுதி வைத்து உபயோகிப்பான். அன்று ஒரு நாள் அந்த பல்லை ஈஈஈஈ........... என்று திறந்து வைத்தபடி வெகு நேரமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவன் கூறுகிறான் அவனுக்கு 36 பற்கள் இருக்கின்றனவாம். அவன் அந்த பற்களைக் காதலிக்க ஆரம்பித்துவிட்ட ஒரே காரணத்துக்காகவாவது, எனக்கு 10 பற்களை குறைவாக வைத்திருக்கலாம் அந்த கடவுள். அவனுடைய துரதிர்ஷ்டம் எனக்கும் 36 பற்கள் தான்.

Black Man அந்த சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் தான் உண்டு. ஊருக்கு பொதுவான அந்த வண்ணத் தொலைக்காட்சியை மாலை 6 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். ஆம் அதை சுற்றி ஒரு வலிமையான கூண்டு அமைத்து இரண்டு ஆள் சேர்ந்து தூக்கக் கூடிய ஒரு இரும்புக் கதவை நிறுத்தி அதை பூட்டுவதற்கென்றே திண்டுக்கல்லுக்கு ஆள் அனுப்பி வாங்கி வந்த பூட்டை போட்டு பூட்டி அந்த தொலைக்காட்சியை பாதுகாத்து வைத்திருப்பார்கள். இதற்கு மேலும் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு திருடன் திருட முயலுவானேயானால், அவனுக்கு ஏதேனும் உயரிய விருது வழங்கலாம் என்று நான் மனப்பூர்வமாக சிபாரிசு செய்வேன். உண்மையில் ஒரு தொலைக்காட்சி பெருமைப்பட வேண்டுமானால் அந்த உரிமை எங்கள் ஊர் தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு. அதற்கு அவ்வளவு மரியாதை உண்டு.

மாலை வேலையில், எங்கள் ஊரில் இருக்கும் ஒரே கோவிலில் நடத்தப்படும் பூஜையின் போது தவறாமல் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் தீபாராதணை நடத்தப்படும். அதற்கு பொட்டு வைத்து, பூ வைத்து, சில சமயங்களில் தேங்காய் உடைத்து, அதன்பின் பயபக்தியுடன் அந்த தொலைக்காட்சி ஆன் செய்யப்படும். அதை ஆன் செய்யும் உரிமை பூசாரிக்கு மட்டுமே உண்டு. அதில் அவருக்கு ஏக பெருமை, ஒரு சமயம் உடைக்கப்பட்டத் தேங்காயின் ஒரு சில் டி.வியின் ஒரு முனையில் பட்டுவிட பதறிப் போன ஊர் மக்கள் பூசாரியை பஞ்சாயத்தில் நிறுத்திவிட்டார்கள். பின் சாமியாடி அவர் தப்பியிருக்காவிட்டால் அவர் ஊர் கடத்தப்பட்டிருப்பார்.

ஒரு முறை சென்சஸ் கணக்கெடுக்க எங்கள் ஊருக்கு வந்திருந்த அதிகாரிகள் தினறிப் போனார்கள். ஒரு குடும்பத்தை சந்திப்பதற்காக முள்காடு வழியாக இரண்டரை மணி நேரம் பயணம் செய்து விட்டு வர, இது போன்று 20, 30 வீடுகள் இருக்கின்றன என்பதை கேள்விபட்டு துவண்டு போனார்கள். எங்கள் ஊரில் மொத்தமிருக்கும் 147 பேரையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமானால் பஞ்சாயத்துத் தொலைக்காட்சி இருக்கும் இடத்திற்கு வருமாறு ஐடியா கொடுத்தது என் நண்பன் முருகன்தான். யாரையும் தொந்தரவு செய்யாமல் கணக்கெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் என் நண்பனால்.

கடைசியில் என் நண்பனை கணக்கில் சேர்க்காமல் விட்டுச் சென்று விட்டார்கள். காரணம் அவன் இருளில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். எப்படித் தெரிவான் அவர்கள் கண்களுக்கு. குறைந்த பட்சம் ஒரு சிரிப்பாவது சிரித்திருக்க வேண்டும். இந்த தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் ஓடும் பொழுது யாரேனும் சிரித்தால் அவர்களுக்கு புத்தி பேதலித்து விட்டதாக அல்லவா அர்த்தமாகிவிடும். அல்லது ஒரு புத்தி பேதலித்தவனால் மட்டும் வயலும் வாழ்வும் பார்த்து சிரித்து விட முடியுமா என்ன?. ஆனால் எங்கள் கிராமத்து மக்கள் மின்சாரம் இல்லையென்றால் கூட வெறும் தொலைக்காட்சியையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதன் மீது அவர்களுக்கு அவ்வளவு அன்பு.

அன்று ஒரு நாள் “உலாவரும் ஒளிக்கதிர்” நிகழ்ச்சியை கொட்டாவி விட்டபடி பாத்து கொண்டிருந்தான் முருகன். அன்றுதான் முதன் முதலாக பேர் அண்ட் லவ்லி விளம்பரத்தைக் காண்பித்தார்கள் கொலைக்காட்சியில். கண்களை அகல விரித்தபடி முதன் முதலில் தாஜ்மஹாலைப் பார்த்தவனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த விளம்பரத்தை. அடுத்த நாள் அவன் வீட்டில் உண்டியல் உடைபடும் சத்தம் கேட்டது. அந்த உண்டியல், திருவிழாவின் போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, தினம் ஒரு ரூபாய் என முருகனின் தாயாரால் சேர்த்து வைக்கப்பட்டது. முருகனுக்கு 5 வயது தாண்டிய பிறகு ஒரு வருடம் கூட அந்த உண்டியல் பணம் கடவுளை சென்றடையவில்லை என்பது அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்த சின்ன திருட்டுகளுக்காக அவன் பலமுறை தென்னங்கீற்றை கிழித்தெடுத்த பின் கிடைக்கும் குச்சிகளைக் கொண்டு செய்யப்பட்ட துடைப்பத்தால் (வெளக்கமாறு என்று வெளிப்படையாக கூறினால் என் நண்பன் கோபப்படுவான்) அடிவாங்கியது ஊருக்கே தெரியும். முருகனின் தாயார் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. அவர் கையில் விளக்கமாற்றிற்கு பதிலாக ஒரு வாள் கத்தி இருந்திருக்குமேயானால் அவர் ஜான்சிராணியை போல் புகழ்பெற்றிருப்பார்.

பல்வேறு விழுப்புண்கள் கிடைக்கும் என்பது உறுதியாக தெரிந்த பின்னும் துணிச்சலோடு இப்படி ஒரு முடிவெடுக்கும்படி அவனைத் தூண்டிய விஷயம் எதுவெனில், அது அந்த பேர் அண்ட் லவ்லிதான். சைக்கிள் கடை முத்துவிடம் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு, பெல் வைத்த சைக்கிளை தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டு நானும் அவனும் கிளம்பினோம். அருகிலிருக்கும் திண்டுக்கல் டவுனுக்கு. எங்கள் ஊரிலிருந்து டவுனுக்குச் செல்ல வேண்டுமென்றால் 22 கிலோமீட்டர். நான் பாதி தூரம், அவன் பாதி தூரம் என வாயில் நுரை தள்ளுவதற்குள் வந்துவிட்டோம் நகரத்திற்கு. எனக்கும் அந்த பேர் அண்ட் லவ்லியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டுதான் இருந்தது. பேர் அண்ட் லவ்லி எந்தக் கடையில் கிடைக்கும் என்று ஒரு 20 பேரிடமாவது கேட்டிருப்போம். யாரோ ஒருவன் கடும் கோபத்தில் இருந்திருப்பான் போல, எங்களைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டான். அவனை முருகனிடமிருந்து காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பின் ஒரு மணிநேர தேடலுக்குப்பின் அந்த கடையை கண்டுபிடித்து விட்டோம்.

மதிய வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நாங்கள் இருவரும் கடைக்குள் சென்றோம். யாரோ இரண்டு திருடர்கள் கடைக்குள் வந்து விட்டதைப் போன்ற தெறிநிலைக்குக் கடைக்காரர் வந்துவிட்டார். பின் முருகன் தான் கேட்டான், அந்த பசை எங்களுக்கு வேண்டுமென்று. ஆனால் நான் எதிர்பார்த்தது சரியாகத்தான் நடந்தது. அதற்குரிய பணத்தை ஒருஒரு ரூபாயாக சடசடவென கொட்ட கோவில் உண்டியல் திருடன் என உறுதியே செய்துவிட்டான் கடைக்காரன். அது எங்கள் சொந்த சேமிப்பு என்பதை உணர்த்தி அதை வாங்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நான் அதை கவனித்தேன். அந்த பேர் அண்ட் லவ்லியை கடைக்காரனிடமிருந்து தன் கையால் அவன் வாங்கிய பொழுது, அவன் கைகள் நடுங்கின. அவன் கோவில் பிரசாதத்தை வாங்குவதைப் போல இரு கைகளையும் குவித்து பயபக்தியுடன் வாங்கினான்.

கிடைத்தற்கரிய பொக்கிஷத்தை பெற்றுக் கொண்டு எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் இருந்த ஐயனார் கோவிலில் அதை வைத்து கும்பிட்டுவிட்டு சைக்கிளில் பறந்தோம். எனக்கு சிரிதும் நம்பிக்கையில்லை. அதன் வாசனையை எனக்கு முகரக் கொடுப்பான் என்று. எனக்கு உள்ள பெருமையெல்லாம் என்னவென்றால், எங்கள் ஊரில் முதன் முதலில் பேர் அண்ட் லவ்லி வாங்கியவர்கள் நாங்கள் தான் என்பது தான். நாளை கல்வெட்டு என்று ஒன்றை நடுவோமேயானால் அதில் என் பெயரும் இடம் பெயரும். கல்வெட்டு நடுவது குறித்து வெட்கப்படுபவர்கள் இல்லை எங்கள் ஊர் மக்கள்.

40 ரூபாய்க்கு ட்யூப் லைட் (கோவிலுக்கு) நன்கொடையாக வாங்கிக் கொடுத்துவிட்டு அதில் தன் பெயரையும், தன் வீட்டு விலாசத்தையும் எழுதி, அதிலிருந்து வெளிப்பட வேண்டிய ஒளியை மொத்தமாக மறைத்து விட்ட சிவலிங்கம் எங்கள் ஊரில் தான் இருக்கிறார். கோவிலுக்கு 701 ரூபாய் நன்கொடை அளித்துவிட்டு, ஆயிரம் ரூபாய் செலவு செய்து கல்வெட்டு வைத்த தர்மலிங்கம் எங்கள் ஊரில் தான் இருக்கிறார். எங்கள் ஊரிலேயே மச்சு வீடு வைத்திருக்கும் ஒரே பணக்காரர் கிருஷ்ணமூர்த்தி. 10 ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு நிதி உதவி அளித்துவிட்டு சும்மாவா இருப்பார். கோவிலின் முன் கிருஷ்ணமூர்த்தி என கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டார். இப்பொழுது அது கிருஷ்ணமூர்த்தி கோவில் என்றாகிவிட்டது. உள்ளே ஒரு கடவுள் அநாதைப் பயலைப் போல உட்கார்ந்திருப்பார்.

நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? ஊரில் இருக்கும் அத்தனை மரங்களிலும் பொறிக்கத்தான் போகிறோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விஷயத்தை. நான் எதிர்பாத்தது போல், ஊருக்குள் இல்லாமல் ஊருக்கு வெளியிலேயே காத்திருந்தார் முருகனின் தாயார். கையில் அந்த வலிமையான ஆயுதம். நான் தூரத்திலிருது வரும் பொழுதே கவனித்து விட்டதால் சைக்கிளை விட்டு இறங்கி ஓடிவிட்டேன். முருகன் தைரியமாக செல்வதைப் பார்த்தபொழுது, எனக்கு உடலெல்லாம் நடுங்கிப் போனது. நான் ஓடிச் சென்று ஒரு புளியமரத்தில் ஏறிக் கொண்டு வேவு பார்க்க ஆரம்பித்தேன். முருகன் நல்ல பிள்ளை போல் மீதி பணத்தை தாயாரிடம் கொடுத்துவிட்டு நடந்த உண்மையை கூறினான். அவன் கூறியதையெல்லாம் அவர் அமைதியாக காது கொடுத்து கேட்டதே ஆச்சரியமான விஷயம். என் ஆசிரியர் கூறுவார். அடிப்பவனை விட அடி வாங்குபவனுக்குத்தான் அதிக தைரியம் வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாக, ஆனால் அந்த வார்த்தைகள் தான் எவ்வளவு உண்மை. ஆசிரியர் கூறிய பொழுது, அதில் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது, என் கண் முன் நிகழும் அந்த கொடூரத்தைப் பார்க்கும் பொழுது அதை உண்மை என ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

முருகன் ஒரு பேர் அண்ட் லவ்லிக்காக இவ்வளவு தியாகங்களைச் செய்வான் என நான் எதிர்பார்க்கவேயில்லை. அவ்வளவு அடிகளையும் வாங்கிக் கொண்டு கனத்துப் போன இதயத்துடன் இரண்டு நாட்களாக அவன் சாப்பிடவேயில்லை. துரதிஷ்டம் என்னவெனில் அடிவாங்கி சிவந்துபோன அவன் முதுகை அவனால் பார்க்க முடியவில்லை, ஆம் முதன் முறையாக அவன் உடலில் சிவப்பேறியிருந்தது. பின் 3வது நாள் கறியும், சோறுமாக தின்ற வகையில் ஒரு முழு ஆட்டை கபளிகரம் செய்துவிட்டான்.

அந்த நேரங்களில் எங்களுக்கு புகலிடமாக அமைந்தது முத்துசாமி பிள்ளையின் தென்னந்தோப்புதான். தோட்டத்தின் நடுவில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு, உடலை வெயிலில் காய வைத்துவிட்டு மதியம் போல் மெதுவாக கல்லூரிக்குச் செல்வோம். தினசரி என்னை அழைத்துக் கொண்டுதான் தோட்டத்திற்கு செல்வான். ஆனால் இன்று ஏனோ பொழுது விடிந்து வெகு நேரமாகியும் அவனைக் காணவில்லை. எனக்கு அவன் வீடு சென்று விசாரிக்க சற்று பயமாகத்தான் இருந்தது. ஒரு வேளை கோபப்பட்டு வீட்டை விட்டு சென்றிருப்பானோ? என நடக்கவே நடக்காத அந்த விஷயத்தைப்பற்றி தேவையில்லாமல் யோசித்தபடி பொடிநடையாக தென்னந்தோப்பை வந்தடைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி இருக்கிறதே, உடல் முழுவதும் பேர்அண்ட் லவ்லியை தடவியபடி சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தான் முருகன். ஐயோ, நல்லவேளை உள்ளாடை போட்டிருந்தான்.

நான் அருகில் சென்றேன் மெதுவாக பூனை போல. பிதுக்கி எடுக்கப்பட்டு காலியாகிப் போயிருந்த அந்த பேர் அண்ட் லவ்லி பாக்கெட் வரிசையாக 10, 15 ரோடு ரோலர் ஏறியது போல சப்பிப் போய் கீழே கிடந்தது. அவன் அதை கீழே போட்டிருக்கிறான் என்றால் இனி அதில் ஒன்றும் இல்லை என்றுதான் அர்த்தம். அவனை மெதுவாகப் பின்னிருந்து தொட்டேன். அவன் கத்திய கதறலில் நியாயமாக நான்தான் பயந்திருக்க வேண்டும். ஜெகன் மோகினி படத்தில் வருகிற குட்டி பிசாசு போல இருந்து கொண்டு பயம் ஒரு கேடு அவனுக்கு. அவன்தான் எடுத்த முடிவைப்பற்றி விளக்கமாக என்னிடம் கூறினான். மாலை 5 மணி வரை அப்படியே இருந்து விட்டு, வெயில் அடங்கியபின் வீட்டுக்குச் செல்வதாக அவனது திட்டம் அமைந்திருந்தது.

கல்லூரியில் எனது சிந்தனை முழுவதும் முருகனை பற்றியதாகவே இருந்தது. ஒருவேளை முருகன் இன்று இரவு வெள்ளையாகி விடுவானோ? நினைத்து பார்க்கவே சிலிர்ப்பாக இருந்தது. அப்படி மட்டும் நடந்துவிட்டால் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது. அப்பாவின் மோதிரத்தை திருடி விற்றாவது வெள்ளையாகிவிடுவது என்கிற முடிவுக்கு வந்தவிட்டேன். நான் பரீட்சை ரிசல்ட்டுக்காக கூட இவ்வளவு தவிப்புடன் காத்திருந்தது இல்லை.

அடுத்த நாள், இடம் – கிணற்றடி. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என பல்வேறு உதாரணங்களை எடுத்துக் கூறியும், முருகனின் மனம் சமாதானமடையாமல் வெதும்பிக் கொண்டிருந்தது. தனது தியாகங்கள் எல்லாம் விழலுக்கிரைத்த நீரைப் போல் ஆகிவிட்டதே என வாய்கால் தண்ணீரில் காலை விட்டுக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கண்ணீர் விட்டு அழுவதைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவன் அழுது கொண்டே பரிதாபமாக என்னைப் பார்த்துக் கேட்டான்.

‘டேய் சூரி, வெள்ளக்காரன் கூடவா பொய் சொல்லுவான்” நான் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தேன். வெள்ளைக்காரர்களை பற்றி எனக்கென்ன தெரியும். நான் அவர்களுடன் பழகியிருக்கிறேனா என்ன? பின் ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே என்று இவ்வாறு கூறினேன். ‘விடுறா முருகா, வெள்ளக்காரனுக்கும் நமக்கும் என்னைக்குமே ஆகாதுடா”. அதிசயிக்கத்தக்க வகையில் அவனும் அதைக் கேட்டு சமாதானமடைந்துவிட்டான்.

சில மாதங்களுக்குப் பின் ஒருநாள், எங்கள் ஊரில் அந்த அதிசயம் நடந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. எங்கள் ஊரின் மேலும் பரிதாபப்பட்டு ஒரு திரைப்படக் குழுவினர் ஷூட்டிங் வந்திருந்தார்கள். விஷயம் தீ போன்று பரவியதற்கு முக்கிய காரணம் அந்த நடிகை தேவயானிதான். விஷயம் கேள்விப்பட்ட பொழுது நானும், முருகனும் மாங்காய் திருடிக் கொண்டிருந்தோம். நான்கைந்து வருடங்கள் கடினமாக ஓட்டப்பயிற்சி எடுத்திருக்கும் உலக மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் கூட எங்களைப் போல் ஓடியிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு ஓட்டம். தலைதெறிக்க ஓடிவந்ததில் எங்கள் இதயம் தொண்டைக்கு வந்துவிட்டது. முடிவில் வந்து சேர்ந்தே விட்டோம். அந்த புல் மேட்டில் தேவயானி உருண்டு பிரண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். என்ன ஒரு நிறம் அவர். லேசாக சுண்டிவிட்டால் ரத்தம் வந்துவிடும் போல. அப்படி ஒரு கலர். நான் கூட சற்று கண்களை அவ்வப்பொழுது இமைத்தேன், ஆனால் முருகன், அவனது கண்கள் நிழற்படத்தில் இருப்பது போல் அச்சடித்தாற் போன்று அப்படியே நின்றுவிட்டது. எப்படியாவது தேவயானியிடம் பேசிவிட வேண்டும் என பிரம்ம பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த திரைப்படத்தின் இயக்குநரிடம் சுமாராக 77 முறைதான் கேட்டிருப்போம் தேவயானியுடன் பேச வேண்டும் என்று. அதற்குப் போய் அவர் கோபித்துக் கொண்டார். பின் காவல்துறையினரிடம் புகார் செய்ய தேவயானிதான் பரிதாஷபப்பட்டு எங்களிடம் பேசினார். தேவயானியை அருகில் பார்த்த அதிர்ச்சியில் நான் அவரிடம் கேட்டது. “மேடம் ஒரு ஆட்டோகிராப்” என் நண்பன் முருகன் கேட்டது, (அது என்னவாக இருக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்).

“மேடம் நீங்க என்ன சோப்பு போட்டு குளிக்கிறிங்க”

தேவயானி பதிலுக்குச் சிரித்து விட்டு அந்த சோப்பின் பெயரை கூறினார். அன்று இரவு முழுவதும் அந்த புல் தரையில் படுத்து உறங்கினோம். நாங்கள் மட்டுமல்ல 20, 25 பேர் அங்கு தான் அன்றிரவு படுத்து உறங்கினார்கள். தேவயானி உருண்ட இடம் அல்லவா அது. நல்லவேளை கோவில் கட்டுவதை பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஊருக்குள் ஒன்றிரண்டு பேர் பெரியார் புத்தகத்தை வைத்திருப்பதை ஒரு சில சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

அடுத்தநாள், முருகன் வீட்டில் மீண்டும் உண்டியல் உடைபடும் சத்தம் கேட்டது. வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் கிளம்பினோம் திண்டுக்கல்லுக்கு. டவுனில் கடை, கடையாக ஏறி இறங்கினோம். எல்லா கடைகளிலும் அந்த லக்ஸ் சோப் இருந்தாலும், ஒரு பெரிய கடையில் 100, 150 லக்ஸ் சோப்புகளுக்கு நடுவிலிருந்து ஒன்றை உருவினால்தான் எங்களுக்குத் திருப்தி. அந்த சோப்பின் மேல் வெயில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே அவன் குடையை எடுத்து வந்திருந்தது பின்னர்தான் எனக்கு புரிந்தது. வழக்கம் போல் வரும் வழியில் அய்யனார் கோவிலில் வைத்து அபிஷேகம் செய்துவிட்டு சென்றோம். வழக்கம் போல் நடந்த அடிதடிகளுக்குப் பின்னர் அந்த லக்ஸ் சோப்பும் அவனை ஏமாற்றிவிட்டது. இத்தனை சோகத்துக்குப் பின்னரும் அவன் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்தவில்லை. என்னை பார்த்து வழியும் கண்ணீருடனும். பரிதாபத்துடனும் இவ்வாறு கேட்டான்

‘டேய் சூரி, தேவயானி கூடவா பொய் சொல்வாங்க”

எனக்கு என்ன தெரியும் தேவயானியைப் பற்றி, அவன் ஏன் இப்படியெல்லாம் கேட்கிறான். இருப்பினும் என் நண்பன் அல்லவா அவன்? ஏதேனும் சொல்ல வேண்டியதிருக்கிறது. ‘விடுறா முருகா, இந்த நடிகைகளுக்கும், நம்ம ஊருக்கும் ஆகவே ஆகாதுடா” . இது போதும் அவன் சமாதானம் அடைய என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அதன் பின் தனது முகத்தை வெண்மையாக்கும் முயற்சியில் கண்ட களிம்புகளை முகத்தில் தடவ, அவனது முகம் ஒரு மாதிரியாக வெளுத்துப் போனது. அவனது முகத்தின் இரு இடங்களில் வெண்படை ஏற்பட்டிருந்தது. முருகன் தன் கடும் முயற்சிகளுக்குப் பலனாக கடவுள் கொடுத்த பரிசாகவே நினைத்தான் அந்த இரு வெண்படைகளையும். நான் கூட முருகனை பயமுறுத்திப் பார்த்தேன் அது தொழுநோயாக இருக்கலாம், மருத்துவரிடம் சென்று கவனி என்று. அவன் அசைந்து கொடுக்கவில்லை. அவன் கேட்கிறான் முகம் முழுவதும் வெண்படை தோன்ற என்ன செய்ய வேண்டும் என்று. நான் யாரை நொந்து கொள்வது? என்னையா? அவனையா?

10 வருடங்களுக்குப் பிறகு சென்னையிலிருந்த எனது அலுவலகத்திற்கு 5 நாள் விடுமுறை கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றிருந்தேன். முருகனை பார்த்து பல வருடங்கள் ஆயிற்று. யாரோ ஒரு அந்நியன் ஊருக்குள் வந்து விட்டதைப் போல அனைவரும் பார்த்தனர். ஒரு வயதானவர் என் அருகே வந்து உற்றுப் பார்த்து சில நிமிடங்கள் யோசித்துவிட்டு இப்படிக் கேட்டார்.

‘யாரு ராசேந்திரன் பையனா?”

எனக்கு அந்த ராசேந்திரன் யார் என்றே தெரியாது. ஒரு வழியாக அவரது கேட்காத காதுகளில் என்னைப் பற்றி விவரங்களை போட்டு விட்டு. ஊருக்குள் சென்றேன். வெகு காலத்திற்கு முன்னரே நாங்கள் இந்த ஊரைவிட்டு சென்னைக்குச் சென்று விட்டதால், கிராமம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தது. ஊருக்குள் முருகனைப் பற்றி விசாரித்ததில், அவன் குழந்தை குட்டிகளுடன் டவுனில் வசதியாக இருப்பதாக தெரியவந்தது. திண்டுக்கல்லுக்குச் சென்றேன்.

வெகுநேர போராட்டத்திற்குப் பின் அவனை ஒரு மளிகைக் கடையில் பார்த்தேன். கையில் ஒரு பெண் குழந்தையுடன் நின்றிருந்தான். அந்த கடை அவனுடைய கடையாம். அந்த குழந்தையும் கூட. நான் ஆச்சரியத்தில் வெலவெலத்துப் போனது உண்மைதான். எனது ஆச்சரியம் எல்லை மீறிப் போனதிற்குக் காரணம், அந்தக் குழந்தைதான். அந்தக் குழந்தை செக்கச்செவேல் என முருகனுடன் சற்றும் ஒட்டாமல் தனித்து இருந்தது. நான் கூட சந்தேகப்பட்டேன். ஏதேனும் வெள்ளைக்காரக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறானோ என்று. ஆனால் விஷயம் இதுதான். அவன் ஒரு வெள்ளைக்கார பெண்மணியை திருமணம் செய்திருந்தான்.

அவளது சொந்த ஊர் கனடா. 7 வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள் அவள். மதுரை மீனாட்சியம்மன் கோவிலை பார்த்து விட்டு அப்படியே திண்டுக்கல் மலைக் கோட்டைக்கு வந்திருக்கிறாள். அங்கு சோகமாக ஒரு முகட்டின் மீது உட்கார்ந்த கொண்டு எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்திருக்கிறான். இவன் தற்கொலை தான் செய்யப் போகிறானோ? எனத் தவறாக நினைத்துக் கொண்டு அவளுக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் ஆறுதல் கூற பின் இருவரும் பேசிப் பழகி எப்படி திருமணம் வரை வந்தது என்று எனக்கும் புரியவில்லை.

கடைசியாக நான் கேள்விபட்ட விஷயம் இதுதான். அவள் ஒரு விதவை. ஆனால் அந்தக் குழந்தை நிச்சயமாக அவன் ஜாடையில் தான் இருந்தது.

- சூர்யா

மன்னிப்பு

வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல், அந்தச் சிறுவனை பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கராஜன். கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தது. அதன் கூர்மையை சந்திக்கும் திராணியற்று காழ்ப்புணர்ச்சியுடன் தரையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் மணிகண்டன். இந்த 14 வயதில் அவன் செய்திருக்கும் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல, எனினும் சட்டம் அவனை கடுமையாக தண்டிக்கும் நோக்கமற்று சிறுவர் சிறைக்கு அனுப்பியிருந்தது. மணிகண்டன் கடைசியாக பேசியது 2 மாதங்களுக்கு முன் ஏதோவொரு நாள். அவன் பேசுவதையே நிறுத்திவிட்டான். அவனுடன் பேசுகையில் அவன் கவனிப்புடன்தான் இருக்கிறான் என்பதற்கு அவன் கண்களில் இருந்து அவ்வப்பொழுது வழியும் ஒரு சொட்டு கண்ணீர் தான் சாட்சி.

Tears ரங்கராஜன் இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு முறைவைத்து 10, 12 முறையாவது நினைத்து நினைத்து அழுவார். தனது மகன் உடலிலிருந்து உயிர் பிரிந்த அந்த கடைசி நொடி, அவன் எத்தகைய வலி உணர்வை அனுபவித்திருப்பான். அதை நினைக்கையில், உடல் முழுவதும் கசப்பான திரவம் சுரப்பது போன்றதொரு உணர்வு மேலோங்கி, அவரது கண்ணீர் ஒட்டு மொத்தத்தையும் வெளிக் கொண்டு வந்துவிடும். இளம் வயதில் மகனை தொலைத்த தந்தையின் உணர்ட்வுகள் எந்த அளவிற்கு சகிக்கவொண்ணாத வேதனையாக இருக்கும் என்பது ரங்கராஜனைப் பார்த்தால் தெரியும்.

மகன் கார்த்திகேயன் பிறந்த பொழுது பாரதியரைப் போல மீசை வைத்திருந்த ரங்கராஜன் திடீரென ஒரு நாள் மொத்தமாக மழித்துவிட்டு ஹிந்தி நடிகனை போல் வீட்டிற்கு வந்து மனைவியை உரிமையோடு தொட அன்று வாங்கினார் வலிமையான அறை ஒன்று. அதில்ஆடிப்போன கடவாய் பல் அடுத்த இரண்டு வாரங்களில் தன் இருப்பிடத்திலிருந்து வெளிவந்துவிட்டது. அந்த அறைகுறித்து அவரது மனைவி மீனாட்சி வருத்தப்பட்டாரா? சந்தோஷப்பட்டாரா? என்ற கேள்விக் குறி வெகு நாட்கள் மண்டையை குடைந்து கொண்டுதான் இருந்தது. மகனின் பட்டு போன்ற தேகத்தில் தன் மீசை முடி குத்துவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ரங்கராஜனால். பாரதியை பற்றி கடந்த 10, 15 வருடங்களாக அங்கலாய்த்துக் கொண்டும், பின்பற்றிக் கொண்டும், பாவனை செய்து கொண்டும், நகல் எடுத்தாற்போன்று தன்னை மாற்றிக்கொண்டும் வாழ்ந்து வந்த ரங்கராஜன் மீசை எடுத்த சம்பவம் பரவிய வேகத்துடன் ஒப்பிட்டால் காட்டுத் தீ தோற்றுவிடும். குழந்தை கார்த்திகேயனை விட பாரதி அப்படி ஒன்றும் முக்கியமில்லையென்று முடிவிற்கு வந்திருந்தார்ட். அவர் தன் குழந்தையிடம் அடிமையான நிமிடங்களை நினைத்துப் பார்க்கையில், அவரது கண்களிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் திரவம் சிவப்பு நிறத்திலிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவரது மகனும், இந்த மணிகண்டனும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள். எப்படி ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு எதிரியானார்கள் என்பது விந்தையான விஷயம். குழந்தைகளுக்கிடையே முதன் முதலில் ஏற்படும் ஈகோ மனப்பான்மைக்குக் காரணம், அவர்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் போட்டி மனப்பான்மையும், குழுத்தன்மையும்தான். அவர்கள் தங்களுக்காக, தங்கள் குழுக்களுக்காக மறைமுகமாக போராட ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தைகளின் மூர்க்கத்தனத்தையெல்லாம் வெளிக்கொணரும் சக்தி இந்த குழு மனப்பான்மைக்கு உண்டு. அவர்கள் முதன் முதலில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட இடம் பள்ளி விளையாட்டு மைதானம். விஷயம் இவ்வளவுதான் கீப்பராக நின்று கொண்டிருந்த கார்த்திகேயன் பிடித்த பந்து, பேட்டிங் செய்து கொண்டிருந்த மணிகண்டனின் மட்டையில் பட்டதா? இல்லையா? என்பதுதான். இவன் பட்டது என்று 10 முறையேனும் வாதிட்டிருப்பான். அவன் படவில்லையென 10 முறை வாதிட்டிருப்பான்.

இருவருக்கும் பேசிக்கொண்டே போவதில் சலிப்பேற்பட்டதோ என்னவோ? கைகலப்பில் இறங்கிவிட்டார்கள். வெகு நேர சமருக்குப் பின் இருவரும் பிரித்துவிடப்பட்டார்கள் உடற்கல்வி ஆசிரியர் ரத்தினத்தால். இருவருக்கும் தலா ஒரு அறை வழங்கப்பட்டது. அதில் கேட்காமல் போன காதுடன் தான் மணிகண்டன் இன்று வரை வாழ்ந்து வருகிறான். ஆனால் அந்த பலி சாமர்த்தியமாக கார்த்திகேயன் மீது சுமத்தப்பட்டுவிட்டது. அன்று மாலை நடந்த சண்டையில் மணிகண்டனின் தாய் திட்டிய வார்த்தைகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு சுத்தமான, இலக்கண பிழையற்ற கெட்ட வார்த்தைகள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இழந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். மணிகண்டனின் தாய் யாருமற்ற வெளியில்தன்னந்தனியாக கால் மணி நேரத்திற்கு ஒரு திசை என நான்கு திசைகளிலும் சுற்றி சுற்றி திட்டிக்கொண்டிருந்தார்.

மணிகண்டனின் தந்தை ரிக்ஷா தொழிலாளி சண்முகம். எம்.ஜி.ஆர். தன் கையால் பரிசளித்தது என்கிற ஒரே காரணத்திற்காக காளை மாட்டைவிட கடுமையாக வண்டியிழுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தினசரி குடிக்கும் தெய்வீக பானம் (பட்டசாராயம்), உடல் சோர்வை போக்கிக்கொள்வதற்கு மட்டுமல்ல, மனைவி அங்கவையின் அன்பு மிகுந்த கனிவான, மேலும் சற்று காட்டமான வசை மொழிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், சேரிப்பகுதியின் நாற்றத்தால் தன் குடல் வெளியே வந்துவிடாமல் வயிற்றுக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பதற்கும் சேர்த்ட்துதான் என்பதை யாரிடமும் உளறிவிடாமல் மனதிற்குள்ளாகவே பூட்டி வைத்திருந்தார். தினசரி சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில், சொற்பத்தை மட்டும் மனைவி அங்கவையிடம் தந்துவிட்டு, அவர் தரும் தினசரி யதார்த்தங்களையும் வலுவாக வாங்கிக் கொண்டு வலிக்கிறது என்று ஒரு வார்த்தை கூட கூறாமல் குப்புற கவிழ்ந்துபடுப்பதுதான் அவரது தினசரி வாழ்க்கை முறை. இதில் தன் மகனின் ஒற்றை காது கேட்காமல் போனது அவரது ஒரு காதின் வழியாகக் கூட அவரது மூளையை சென்றடையவில்லை என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் அல்ல. அவர் மிகுந்த வேதனைப்பட்ட ஒரு விஷயம் அந்த அங்கவை என்ற பெயர்தான். யாரோ ஒரு தமிழாசிரியரை சவாரி கூட்டிச் செல்லும் பொழுது அவர் அங்கவை என்ற அழகான தமிழ் பெயரின் விளக்கத்தை சொல்ல, வெகுண்டெழுந்து பின் வெதும்பி போனார் சண்முகம்.

மணிகண்டன் காது செவிடாய் போனது குறித்து மிகுந்த வேதனையடைந்தவர் ரங்கராஜன்தான். தன் மகன் செய்ததாக நினைத்த தவறுக்காக அவனை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காட்டினார். அத்துனை மருத்துவர்களும் கை விரித்து விட்டார்கள். பின் காதுக்குள் விளக்கெண்ணெய் ஊற்றும் வைத்தியம் திருமதி. அங்கவையால் செய்யப்பட லேசாக கேட்டுக் கொண்டிருந்த காதும் சுத்தமாக கேட்காமல் போய்விட்டது. அவரது மருத்துவ அறிவெல்லாம் வீணாய் போனது குறித்து அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவிட்ல்லை. தான் பெற்றெடுத்த பொருளை, தானே நாசம் செய்வது குறித்து எந்த அறியாமை நிறைந்த பெண் வருத்தப்பட்டிருக்கிறாள்? திருமதி அங்கவை மட்டும் வருத்தப்படுவதற்கு, ஆண்டவன் எதற்கு இரண்டு காதுகளை படைத்திருக்கிறான் ஒன்று போனால் ஒன்றை உபயோகிப்பதற்குத்தானே என்கிற தத்துவத்தை உதிர்த்துவிட்டு சமாதானம் அடைந்துவிட்டார்.

சிறுவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி மனப்பான்மையை பொறுத்தவரை காரண, காரியங்களை அலசி ஆராய்ந்தால்ட் ஒன்றுமற்ற விஷயமாகத்தான் தோன்றும், ஆனால் அவை கவனிக்கத் தகுதயற்றவை என ஒதுக்கிவிடுவதால் ஏற்படும் இழப்பு என்பது அவர்களின் மொத்த எதிர் காலத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு மொத்தமாக பழிவாங்கிவிடும்.

மணிகண்டன், கார்த்திகேயன் இருவரை பொறுத்தவரை தங்களுக்கிடையே நடந்த சண்டை எப்பொழுது மறந்து போனது என்று யோசிக்க நேர்ந்தால் தோற்றுப் போய்விடுவார்கள். அவர்கள் இருவரும் தோள்களில் கைபோட்டுக் கொண்டு செல்ல வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளவில்லை அதே போல்தான் அடுத்த சண்டைக்கான நாளுக்காகவும் வெகுநாட்கள் காத்திருக்கவில்லை.

நண்பர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு எனும் பேதத்தை விதைத்து விடக் கூடாது என்கிற விஷயத்தில், இந்த ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தமிழ் நாட்டை பொறுத்தவரை மனநிலை குழப்பமற்ற ஆசிரியர்கள் இரட்டை இலக்க எண்களுக்குள் அடங்கி விடுவார்கள். இவர்களை சரி செய்வதற்கு ஒரு நூறு பிராய்டாவது தேவைப்படுவார்கள். நல்ல ஆசிரியர்களை கொண்டிருக்கும் சமுதாயம், நல்ல இளைஞர்களை பெற்றிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் இரண்டிரண்டு வரிகளில் தத்துவ விளக்கங்கள் ஏதேனும் சொல்லி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. இங்கு இந்த இரண்டாயிரம் வருடத்திற்குத்தான் எத்தனை மரியாதை.

யாரும், எதுவும் கூறாததால் தானோ என்னவோ? இந்த ஆசரியர்கள் மாணவர்களின் மனநிலையில் மைதானம் அமைத்து விளையாடுகிறார்கள். தங்கள் பணிச்சுமையை குறைப்பதாக நினைத்துக் கொண்டு வகுப்பு மாணவர்கள் அனைவரையும் சிறு சிறு குழுக்களாக பரித்துவிட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குழுத்தலைவனை நியமித்து விடுவார்கள். தங்களுக்கிடையே எந்தவித ஏற்றத்தாழ்வும் அற்று சகஜமாக பழகி வந்த அந்த சிறுவர்கள், புதிதாக வலிந்து உருவாக்கப்பட்ட அந்த ஏற்றத்தாழ்வு சூழ்நிலையை ஏற்க முடியாமல், தங்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்த்துக்கொள்கிறார்கள்.

நல்ல சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் சிறப்பாக படிக்க அவன் குழுத்தலைவனாக்கப்பட்டான் (லீடர்). ஏழ்மை, கல்வி என்றால் கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமா? என்று கேட்கும் தாய், தந்தை மற்றும் மோசமான வாழ்விடம் இவைகளுக்கிடையே கற்கும் திறனை நாள்தோறும் இழந்து வரும் மணிகண்டன் கார்த்திகேயனின் தலைமையின் கீழ் ஒரு அடிமையைப் போல் உணரத் தலைப்பட்டான். அந்த இரு சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட மனப்பிறழ்வை பற்றி உணரும் திறனை எந்த ஆசிரியராவது அன்று பெற்றிருந்திருப்பாரேயானால் இன்று கார்த்திகேயன் கொல்லப்பட்டிருக்க மாட்டான். மணிகண்டனும் ஒரு சமூக விரோதியாகியிருக்க மாட்டான். நியாயமாக தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் கண்டு கொள்ளப்படுவதேயில்லை.

குழந்தைகள் ஒரு வெற்று காகிதம் போன்று அழகாக இருக்கிறார்கள். அதில் கன்னாபின்னாவென கண்டதை கிறுக்கி வைப்பதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஏணிப்படிகளை பற்றி என்ன கூறுவது? அவர்களுக்குத்தான் இளைஞர்களை உருவாக்குவதில் எத்துனை துன்பங்கள்?

அன்று வகுப்பறையில் நடந்த சண்டையில் தான் தோற்றுவிடக் கூடாது என்பதில் தீவிரமான முனைப்புடன் காணப்பட்டான் மணிகண்டன். தன் ஒரு காது கேட்காமல் போனது குறித்து இந்த சண்டையின் போது யாரோ ஞாபகப்படுத்தியது போன்று இருந்தது அவனுக்கு. எத்தனை நாள்தான் அவன் இட்ட ஆணைகளை சிரமேற்கொண்டு செய்வது. அதற்கு இன்று ஒரு முடிவு கண்டுவிட வேண்டும் என்கிற தீவிரம் அவனுடைய வெறித்தனமான தாக்குதலில் தெரிந்தது. சில நிமிடங்களில் அது நிகழ்ந்து விட்டது. கார்த்திகேயன் சுவற்றின் ஏதோ ஒரு மூலையில் முட்டிக் கொண்டு தனது கடைசி மூச்சை விட்ட்டான்.

கண்கள் சொருகிய நிலையில் அன்று அவன் இறந்த கிடந்த காட்சி அனைவரையும் கலங்கடித்துவிட்டது. திரு. சண்முகம் தனது மைந்தனை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். துன்பங்களை அதீதமாக அனுபவித்து ஐம்பது, அறுபது வயதுகளில் வர வேண்டிய மனப்பிறழ்வு, ஸ்மரணையற்ற மனநிலை, அதீத காழ்ப்புணர்ச்சி போன்ற உணர்வுகளெல்லாம் இந்த சிறு வயதிலேயே ஆக்கிரமிக்க மணிகன்டன் உயிருடன் செத்துக் கொண்டிருந்தான்.

தனது மகனின் சடல்ததை பார்த்த திரு. ரங்கராஜன் ஆறுமுறையோ, ஏழு முறையோ மயக்கமடைந்து, அடைந்து எழுந்தார். அவரால் நம்பவே முடியாத அந்த இறப்பை உள்வாங்கியதிலிருந்து, கண்கள் கண்ணீரை வெளியிடுவதிலிருந்து தன்னை நிறுத்திக் கொள்ளவேயில்லை. சிவந்து போன கண்களிலிருந்து வலிந்து கொண்டிருக்கும் கண்ணீர் இன்னும் சிறிது நாட்கள் கழித்து சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மனமானது மயக்கமடைந்த நிலையில் மட்டுமே அவரது கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தவதை மறந்திருந்தது. புண்ணாகிப் போன ரங்கராஜனின் மனம். தன் மகனையொத்த வயதுடைய சிறுவர்களைப் பார்த்தால் பொங்கி வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழ ஆரம்பித்துவிடுகிறது.

திரு. சண்முகத்தை பொறுத்தவரை, முன்பெல்லாம் வேலை பளுவில் குடித்துக் கொண்டிருந்தார். இன்று வேதனை மிகுதியில் குடித்துக் கொண்டிருக்கிறார். திருமதி. அங்கவை இன்றும் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார் தெருமுனையில் நின்று கொண்டு. ஆனால் என்ன திட்டுகிறார், யாரை திட்டுகிறார் என்று தான் புரியவில்லை. அவரிடமிருந்து தங்கு தடையின்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கம் வசவு வார்த்தைகளை கவனிக்கும் பொழுது, புரியா மொழி இலக்கியத்தின், சர்ரியல் தன்மை கலந்த இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. திரு. சண்முகத்தின் நம்பிக்கையெல்லாம், தான் இன்னும் அரசாங்கத்திடமிருந்து 5 கிலோ அரிசியையும், 500 ரூபாய் பணத்தையும் வாங்கவில்லை என்பது மட்டும் தான்.

அன்று திரு. ரங்கராஜன் தன் மகனைக் கொன்ற, மணிகண்டனை சந்திக்க விரும்புவதாக மனு அளித்திருந்தார். நீண்ட விவாதத்திற்குப் பின் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இன்று இருவரும் ஒருவர் முன் ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல். கண்ணீர் விட்டபடி வெகுநேரமாக அப்படியே இருந்தார்கள். அனைத்து விதமான ஆதீத உணர்ச்சிகளும் அடங்கி ஒரு உயிரற்ற சவத்தை போல அமர்ந்திருந்த மணிகண்டன் கண்களில் கண்ணீர் மட்டும் ஒரு வற்றாத ஜீவ நதியை போல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருந்தது. இருவருமாக சேர்ந்து அரை டம்ளர் கண்ணீரை செலவழித்தபின், நிகழ்ந்த அந்த அழகான நிகழ்வை பற்றி எப்படி விவரிப்பது...

திரு. ரங்கராஜனின் இளஞ்சூடான அந்த கை, மணிகன்டனின் தலையை மென்மையாக கோதிவிட்டது. அவனை ஆதரவாக தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். மணிகன்டன் வெடித்து கதறி அழ ஆரம்பித்திருந்தான்.

(தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் திரு. ரங்கராஜனுக்கு மனநிலை குழம்பவில்லை என்பது மட்டுமே)

வேதனையின் ஊடாக மன்னிப்பை வழங்குவது பற்றி உணரத் தலைப்பட்ட அந்த சில நொடித் துளிகள், உணர்வின் உச்சத்தை உணர்ந்தறிய ஒரு ஆன்மாவுக்கு கிடைத்த அரிதான வாய்ப்பாக கருதலாம்.

- சூர்யா

அன்பு மகள்

புகை உடலுக்கு பகை என்று எழுதப்பட்டிருக்கும் அட்டைக்கு எதிர்த்தாற் போல் நின்று கொண்டு, ஆழ்ந்து ரசித்தபடி புகை விட்டுக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன், அந்த இடம் அவரது அலுவலக கேன்டீன். எதிரே நூறடி தூரத்தில் அவரது அலுவலக நண்பர் ராமகிருஷ்ணன், கையில் கைப்பேசியுடன், சிரித்த முகத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தார். அருகே வந்த ராம்கி (ராமகிருஷ்ணன் என்ற பெயர் மருவி ராம்கியாகிவிட்டது) அந்த கைப்பேசியை கோபாலகிருஷ்ணனின் கையில் திணித்தார், பின் அவரது வாயிலிருந்த சிகரெட்டை ஒரு நொடியில் பிடுங்கி தூக்கி எறிந்து விட்டார். அந்த சிகரெட் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத இடத்தில் (சாக்கடையில்) போய் விழுந்துவிட்டது. கோபாலகிருஷ்ணன் கோப கிருஷ்ணனாக மாறுவதற்குள் கைப்பேசியில் வந்த அந்த மகிழ்ச்சியான விஷயத்தை கூறினார் ராம்கி.

Daughter and father ‘கோபாலகிருஷ்ணா, உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது இப்பொழுது தான் போன் வந்தது.”

அதுக்கு எதுக்குடா சிகரெட்டை பிடுங்கி தூக்கி எறிஞ்ச, என்று பார்வையாலேயே கேட்டார் கோபாலகிருஷ்ணன். அந்த பார்வை குறிப்பை புரிந்து கொண்ட ராம்கி இவ்வாறு கூறினார்.

‘நீ இப்படி பொறுப்பில்லாமல் சிகரெட் பிடிச்சுகிட்டிருந்தா உன் பொண்ணுக்கு எப்படி நகை சேர்க்க முடியும்.............ம், சிகரெட் பிடிக்கிறத விட்டிடு, அந்த காச மிச்சப்படுத்துனா ஒரு பத்து பவுனாவது சேத்துடலாம்ல”

இவ்வளவு நேரமாக கோபாலகிருஷ்ணனின் மூக்கு மற்றும் வாய் வழியாகத்தான் புகை வந்து கொண்டிருந்தது. இப்பொழுது காதின் வழியாகவும் வழியமைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது புகை.

மருத்துவமனையில், பெண் குழந்தை அழகாக இருந்தாள். அனைவரும் பாராட்டினார்கள். இங்கு மட்டும் தான் பொழுது போகவில்லையென்றால் கூட பாராட்டுவார்கள். மருத்துவமனைக்குள் வேகமாக ஓடிவந்தாள் ஒரு பெண்மணி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டாள். கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார். அதை உற்றுப் பார்த்தால் தங்கம் போன்று தான் தெரிந்தது. இதயம் லேசாக ஆட்டம் கொடுத்தது, கண்கள் படபடத்தன. இந்த உலகைப் பற்றி நாம் தவறாக எண்ணிவிட்டோமோ? என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனார். பின் இரண்டு மணி நேரம் கழித்து அந்த தங்கச் சங்கிலியை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார் அந்த பெண்மணி. மீண்டும் கோபாலகிருஷ்ணனின் இதயம் ஆட்டம் கண்டது. கண்கள் படபடத்தன. இந்தியாவில் இதய நோய் பரவலாக காணப்படுவது இது போன்ற நிகழ்வுகாளால் தான். பின் ஒரு இதயம் இத்தனை முறை ஆட்டம் கண்டால் என்னதான் செய்வது.

சில மாதங்களுக்குப் பிறகு

தாய்பாலின் அருமை பெருமைகளை பற்றி தன் மனைவி கோகிலாவிடம் கூறிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். கோகிலா, தாய்பால் கொடுப்பதன் மூலம் தன் அழகு எங்கு கெட்டுவிடுமோ என்று நினைக்கும் மாடர்ன் பெண் இல்லையென்றாலும், தாய்பாலின் சிறப்புத் தன்மை குறித்த தனது கருத்தை நிலைநாட்டுவதில் குறியாக இருந்தார் கோபாலகிருஷ்ணன். அவர் கூறியதையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் படித்துக் குழம்பிப் போகும் சில ஆயிரம் பேர்களில் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட இருப்பார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இருக்காது. இவ்வளவு பொய், புரட்டுகளையும் காது கொடுத்து கேட்கும் பொறுமை ஒரு இந்திய மனைவியிடம் மட்டும் தான் இருக்கும் எனபதை நிரூபித்து கொண்டிருந்தார் திருமதி, கோகிலா. ஆனால் விஷயம் இவ்வளவு தான், ஒரு பால் பவுடர்; டின் விலை 199 ரூபாய் 50 பைசா.

அன்று திடீரென்று பெரியாரை பற்றி பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். பெரியாரை பற்றி இவ்வளவு விஷயங்கள் கோபாலகிருஷ்ணனுக்கு எப்பொழுது தெரிந்தது என்கிற விஷயம் அலுவலகத்தில் அனைவரின் புருவங்களையும் உயர்த்திவிட்டது. இந்த மத சடங்குகளை பற்றி கிழிகிழியென கிழித்துக் கொண்டிருந்தார்.

‘குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமானால், வைத்துவிட்டு போக வேண்டியது தானே, ஒரு ஐயர் வருவானாம், மந்திரங்களை ஓதுவானாம், பிறகு அந்த பெயரை 3 முறை குழந்தையின் காதில் சொல்ல வேண்டுமாம். என்ன மூட நம்பிக்கை இது. அமெரிக்கா காரனெல்லாம் இப்படியா செய்து கொண்டிருக்கிறான். சரி அதோடு விட்டார்களா? கடாவெட்டி சோறு போடணுமாம் சொந்த பந்தங்களுக்கு. என்ன கொடுமை சார் இது. இந்த நாடே மூட நம்பிக்கையால கெட்டு குட்டிச் சுவரா போச்சு சார். இவங்களயெல்லாம் நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாது சார்.”

ஹெட் கிளார்க் சீனிவாச ஐயர் கோபத்தில் முகம் சிவந்து போய் விஷயம் தெரியாமல் இவ்வாறு பேசினார்.

‘என்ன கோபாலகிருஷ்ணன், இவ்வளவு பகுத்தறிவு பேசுறேள், ஆனா திருநீறு மட்டும் தவறாமல் இட்டுண்டு வர்றேள்”

சற்று தடுமாறிப் போனாலும், கோபாலகிருஷ்ணன் சமாளித்தார்.

‘சீனிவாச ஐயரே, காலங்காத்தால குளிச்சிட்டு திருநீறு இட்டுகிட்டா தலையில் நீர் இறங்காது உமக்குத் தெரியுமா? இதெல்லாம் சயின்ஸ்”

கோபாலகிருஷ்ணனைவப் பொருத்தவரை எதைப் பற்றி பேசுகிறாரோ அதுவாகவே மாறிப் போவார். அவரது இத்தனை சமூக சிந்தனைகளுக்கும் அடிப்படைக்காரணம், குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் 17,500 ரூபாய் செலவானது தான். பின் இந்த புலம்பல் கூட இல்லையென்றால், அவர் ஒரு நடுத்தர குடும்பஸ்தனாக இருந்து என்ன பிரயோஜனம். லத்திகா என்று பெயர் வைக்க 17,500 ரூபாய் செலவு. என்ன கொடுமை இது. இந்த பணத்திற்கு ஒன்றரை பவுன் நகை வாங்கியிருக்கலாம் என்று நினைக்ககையில் அவருக்குத் துக்கம் தாளவில்லை. ஆனால் பெரியார் தான் எவ்வளவு உதவியாக இருக்கிறார். பின் இது போன்ற சமயங்களில் கூட அவரை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் அவர் எதற்கு. அவர் ஈரோட்டில் பிறந்து மடிந்த சாதாரண வயதான கிழவராக அல்லவா போயிருப்பார்.

அன்று ஒரு நாள் கோகிலா மற்றும் குழந்தை லத்திகாவுடன் கோவிலுக்கு சென்றிருந்த பொழுது. அங்கு சீனிவாச ஐயர் வந்துவிட எப்படியும் சமாளித்துவிடலாம் என அவரது கொளுத்த மூளையில் தேடித் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் போக, அவர் ஒளிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பின்னொரு நாள் குழந்தை லத்திகாவின் தீவிரவாதத் தனத்தை பார்த்து தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார் கோபாலகிருஷ்ணன். அந்த குழந்தைக்கு எப்பொழுதுமே ஒரு பொருள் தரமானதாக இருக்கிறதா? இல்லையா? என்று சோதித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம். லத்திகா தன் தந்தை வாங்கிக் கொடுத்த பல விளையாட்டு சாமான்களில் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கிறாள். சில சமயம் கட்டிலில் ஏறி நின்று கொண்டு அந்த பொருளை தூக்கி வீசுவாள் தரையை நோக்கி, சில சமயம் மாடியிலிருந்து, சில சமயம் சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியை நோக்கி. அந்த பொருள் உடையவில்லை என்றால் அது தரமான பொருள. உடைந்து விட்டால் அதை தொடக் கூட மாட்டாள். ஒரு சமயம் டி.வி.யை நோக்கி வீச ( அது ஒரு ரயில் பொம்மை) இடையில் புகுந்து டி.வியைக் காப்பாற்றினார் கோபாலகிருஷ்ணன். கடைசியாக வாங்கிக் கொடுத்த கார் பொம்மையை அவள் பரிசோதித்த விதமே தனி, அந்த குட்டிக் காரில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பினாள். பாருங்கள் அதில் ஏறி உட்கார்ந்ததுதான் தாமதம் அதன் நான்கு சக்கரங்களும் தரையோடு தரையாகிப் போனது. இது போன்ற தரமற்ற விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுக்கும் தன் தந்தையின் மீது அவளுக்கு கடுமையான கோபம். கோபாலகிருஷ்ணன பொம்மை கடைக்காரனிடம் இவ்வாறு கேட்டுப் பார்த்தார்.

‘முற்றிலும் இரும்பால் செய்த உடைக்கவே முடியாத விளையாட்டுப் பொருள் ஏதேனும் இருக்கிறதா?”

‘இருக்கிறது சார்” என்று கூறிய அந்த இளைஞன், புரூஸ்லி பயன்படுத்தும் ‘நின்சா” கட்டையை எடுத்து காட்டினான், லத்திகாவும் அது என்னவென்று புரியாமல் ஆசையாக வாங்கிப் பார்த்தாள். கோபாலகிருஷ்ணனுக்கு என்னவோ இது சரியாகப் படவில்லை. அவள் சாதாரண பிளாஸ்டிக் பொம்மைகளையே ஆயுதத்தை போலத்தான் பயன்படுத்துவாள். இதில் ஒரிஜினல் ஆயுதத்தை வாங்கிக் கொடுத்தால் தன் தலைக்கு உத்தரவாதம் இல்லை, பின் அவள் தன் தலையில் சோதனை செய்தாலும் செய்து விடுவாள். அந்த பொருள் என்னவோ உடையாது தான். ஆனால் அவர் தலை.

வேண்டாம் என்று கூறிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டார். அவரது ஆழ் மனதில் ஓடிய விஷயம் இது தான். இவளுக்கு வாங்கிக் கொடுத்த விளையாட்டுப் பொருட்களுக்குரிய பணத்தை வைத்து 2 பவுன் தங்க நகை வாங்கியிருக்கலாம்.

லத்திகாவை பொறுத்தவரை உடைப்பதற்கு ஒரு பொருள் இல்லையென்றால், அழ ஆரம்பித்துவிடுவாள். கோபாலகிருஷ்ணனுக்கு சிறு வயதிலிருந்தே கசல் என்னும் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம் உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் மதிய வேலையில் தூக்கம் வரவில்லை என்றால் ரேடியோவில் கசல் பாடலை போட்டுவிட்டு தூங்க ஆரம்பித்துவிடுவார். கசல் பாடல்களை தூக்க மாத்திரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்பது அவரது கருத்து. அன்று தான் நிதானித்துக் கேட்டார், தன் குழந்தை லத்திகா அழுவதும், அந்த கசல் பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது. அவர் ஏதோ கண்டுபிடித்துவிட்டதாகவும், நகைச்சுவை செய்வதாகவும் நினைத்துக் கொண்டு மனைவியிடம் கூற, திருமதி, கோகிலாவோ தன் மகளுக்கு மிகப்பெரிய இசைஞானம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒரு வீணை வாங்கிக் கொடுத்தால் தான் பச்சைத் தண்ணீர் கூட குடிப்பேன் என விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டார். வீணையின் விலையை கேட்ட பொழுது நெஞ்சு பதறியது. ஆனால் கோகிலா பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டுமே என்ன செய்வது.

அந்த மிகப்பெரிய விளையாட்டுப் பொருளை எப்படி உடைப்பது என்பது தெரியாமல் திகைத்துப் போயிருந்தாள் லத்திகா, பின் அதை ஒரு குதிரை பொம்மையாக பாவித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு சவாரி செய்ய ஆரம்பித்து விட்டாள். கோபால கிருஷ்ணனின் பயமெல்லாம் இது தான், கோகிலா ஒரு குதிரையை வாங்கி வந்தால் தான் தண்ணீர் குடிப்பேன் என்று சொல்லிவிடக் கூடாது. ஆனால் கோகிலா தனது ஆசையை முழுவதுமாக தீர்த்துக் கொண்டார். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து தினசரி இரு பார்வையாளர்களாவது அதை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அப்படி பார்த்தச் சென்ற மாமிகளின் ஆச்சரியப்படத்தக்க வசனங்கள் சில

‘ஏண்டீம்மா, கோகிலா திருடன் வரும் போது இதைத் தூக்கி ஓங்கி அவன் மண்டைல நச்சுன்னு அடிச்சா அவன் மிரண்டு ஓடிட மாட்டான், பிடிக்கிறதுக்கு நல்லா வாட்டமா இருக்கு பாறேன்”

‘ஏண்டி கோக்கி, எங்காத்து மாடில வடாம் காய போட்டிருக்கேன் உன் வீணைய செத்த எடுத்துட்டு வந்தண்ணா, காக்கா, குருவி, பக்கத்துல வராம இருக்கும்டி, அப்படியே நானும் வீணை கத்துக்குவேன்.”

‘அடியே கோக்கி இது என்ன மரத்தால செஞ்சது, இந்த மரத்த பார்தா அடுப்புக்கு நல்லா எரியும்னு தோணுதுடி”

‘கோகிலா (காதோரம் ரகசியமாக) வீணை ஒடைஞ்சு போச்சுன்னா அந்த கம்பிய தூக்கி போட்றாதடி, அதுல திரைசீலை செஞ்சு மாட்டிக்கலாம் சரியா”

குழந்தை லத்திகா பல்வேறு வழி முறைகளில் முயற்சி செய்தும் அதை உடைக்க முடியவில்லை. அதில் அவள் இருமுறை காபியை ஊற்றியிருக்கிறாள். பின் ஒரு முறை அதன் மேல் 2க்கு போய் விட்டாள். இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் கோபாலகிருஷ்ணனின் இதயம் தான் எவ்வளவு வலித்தது என்று யாருக்குத்தான் தெரியும்.

பின் ஒரு நாள் லத்திகாவிற்கு ஜுரம் வந்துவிட்டது, குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் கோபாலகிருஷ்ணன். எவ்வளவுதான் வைத்தியம் பார்த்தாலும் குழந்தைக்கு ஜுரம் நிற்கவேயில்லை. குழந்தைக்கு நோய்த்தடுப்பூசிகள் எதுவுமே போடவில்லை என்பது மருத்துவரின் குற்றச்சாட்டு. இந்த ஜுரம் சிறிது சிறிதாகத்தான் குணமடையும் என்று அவர் கூறிவிட்டார். இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க கோகிலா முனைந்தார். பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது, அதில் ராம்கியின் துணைவியார் கூறிய அந்த வழி முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது, அது என்னவென்றால் நோய்களை குணமடையச் செய்யும் சக்தி வாய்ந்த சாமியாரிடம் அந்த குழந்தையைக் காட்டி பரிகாரம் செய்வது. கோபால் இதிலெல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லையென்று கூறினால் அவ்வளவுதான், திருமதி. கோகிலா அவரை பார்வையாலேயே எரித்துவிடுவார்.

அன்று வாயில் விரல் வைக்காத குறையாக, கோகிலாவுக்கு பின்னே நின்று கொண்டிருந்தார் வரிசையில், அமைதியாகவும் மற்றும் பவ்யமாகவும். அவ்வளவு கூட்டம். ஒவ்வொருவராக கடந்து செல்ல, ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்அவர்களது முறை வந்தது. அந்த சாமியார் பார்க்கவே கொடூரமாக இருந்தார். அவரது கண்கள் சொருகிப் போய் கிடந்தது. பட்டசாராயம் குடிப்பார் போல என்று நினைத்துக் கொண்டார் கோபால். கொத்து திருநீரை கைநிறைய அள்ளி குழந்தையின் முகத்தில் வீசினார். தூங்கிக் கொண்டிருந்த லத்திகா கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு மட்டும் பேசத் தெரிந்திருந்தாள் இவ்வாறு கேட்டிருப்பாள்.

‘எந்த பரதேசி பயல் இப்படி செய்தது” என்று

அவள் குழந்தையல்லவா வேறு என்ன செய்ய முடியும். அந்த சாமியார் மட்டும் பிரான்ஸ் போன்ற தேசங்களில் இந்த செயலை செய்திருந்தால். குழந்தைக்கு எதிரான வன்முறைச் சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் உள்ளே போட்டு மிதித்திருப்பார்கள், இது இந்தியா அல்லவா?

அந்த சாமியார் எவ்வளவு நேரம் கண்களை மூடிக் கொண்டு மந்திரம் ஓதுகிறாரோ, அந்த அளவிற்கு பில் தொகை ஏறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். வெகு நேர ஜெபித்தலுக்குப்பின். கண்களை திறந்தார். கோபாலின் மனம் பதறியது. என்ன சொல்லப் போகிறானோ என்று. கோகிலாவின் கண்களில் கருணை ஒளி மின்னியது. பின் அந்த ஆள் இவ்வாறு கூறினான்.

‘ஆத்தா உன் குழந்தையை பார்த்துக் கொள்வாள் போய் வா”

தமிழக அரசு நிச்சயமாக அவருக்கு வரிச்சலுகை அளித்திருக்கும் அப்படி ஒரு சுத்த தமிழ்

கோகிலா : சாமி கட்டணம் எவ்வளவு

கோபால கிருஷ்ணனின், சட்டைப் பாக்கெட்டின் அந்தப் பக்கம் லப்டப் சத்தம் அதிகமாக கேட்டது.

சாமியார் : ஒன்றும் தேவையில்லை போய் வா

ஒரு லிட்டர் ஆரோக்கியா பாலை இதயத்தில் வார்த்ததை போல் உணர்ந்தார் கோபாலகிருஷ்ணன். ‘நீ நல்லவண்டா” என்று மனதிற்குள்ளாக பாராட்டினார்.

சாமியார் : ஒரு நிமிடம்,....... ஆத்தாவுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன மறக்காம செய்திடனும்.

கோகிலா : என்ன நேர்த்திக் கடன் சாமி

சாமியார் : உன் குழந்தையின் இடுப்பு அளவிற்கு ஒரு தங்க அருணாக்கொடி செய்து ஆத்தாவுக்கு சாத்தணும்

அந்த ஒரு நொடியில்;, கோபாலகிருஷ்ணனின் இதயம் வாய் வழியாக வெளியே வந்து விழுந்தது.

‘ஒரு முழுச் சுற்று தங்க அருணாக்கொடி, அதை இதற்கு முன் அவன் கடையில்சென்று வாங்கியிருப்பானா? ஐயோ இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே செல்வேன். இந்த கோகிலா என்ன தன் நகைiயையா கழற்றித் தரப்போகிறாள், புதிதாக அல்லவா வாங்கி போடச் சொல்வாள்”

கோபாலின் உள் மன புலம்பலை யாருக்கு புரிந்ததோ இல்லையோ? ராம்கி புரிந்து கொண்டார். அவரை தனியாக அழைத்துச் சென்றார், பின் இவ்வாறு ஆறுதல் கூறினார்.

‘கோபால கிருஷ்ணன், கவலைப் படாதிங்க, விஷயத்தை சிம்பிளா முடிச்சிடலாம். அதிகம் தேவைப்படாது, அந்த சாமியாருக்கு ஒரு புட்டி சாராயம் போதும். இன்று இரவு வேலையை முடித்து விடலாம், எனக்கு ஏற்கனவே இதில் அனுபவம் உண்டு”

அன்று இரவு சாமியாருடன் நடைபெற்ற காக்டெய்ல் பார்ட்டியின் விளைவாக ஆத்தா விரும்பிய தங்க அருணாக்கொடி, பின் வெள்ளி அருணாக்கொடியாக மாறியது. இன்னொரு காக்டெய்ல் பார்ட்டி நடக்கும் பட்சத்தில் அது கருப்பு கயிறாகக் கூட மாறலாம்.

எத்தனை காட்டாறுகளை கடக்க வேண்டியதிருக்கிறது. தன் அன்பு மகளின் எதிர் காலத்துக்கு சிறிது பணம் சேர்த்து வைப்பதற்குத் தான் எத்தனை போர்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. உண்மையில் தன்னுடன் ஒப்பிடும்பொழுது ஒரு போர்க்கள வீரன் இரண்டாம் பட்சமாகத்தான் இருப்பான் என்று எண்ணிக் கொண்டார்.

மகள் வளர வளர செலவுகளும் அதிகரித்துக் கொண்டுதான் சென்றன. ஒரு ரூபாய் சேர்த்து வைப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. ஏதோ ரகசிய உளவாளியைப் போல பணத்தை சேர்க்க வேண்டியதிருக்கிறது. அடுத்ததாகத் தன் குழந்தைக்காக திரு. கோபால் செய்ய இருக்கும் போர் குழந்தையை படிக்க வைப்பது. பள்ளிகளில் கூட ஆங்கில வழி பள்ளிகூடம், தமிழ் வழிப் பள்ளிக் கூடம் என தனித்தனியாக பிரிந்து கிடக்கிறது. இதில் ஆங்கில வழி பள்ளியைத் தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள், கோபால் மட்டும் என்ன முட்டாளா?

இளம் வயதில் காவல் துறையில் சேர்வதற்காக கடுமையான உடற்பயிற்சிகளெல்லாம் மேற்கொண்டிருக்கிறார் திரு. கோபாலகிருஷ்ணன். அப்பொழுதெல்லாம் பொங்கி வராத வேர்வை, லத்திகாவை பள்ளியில் சேர்க்க சென்ற போது பள்ளித் தலைமை கேட்ட டொனேஷன் தொகையை கேட்டதும் மொத்தமாக வெளி வந்து விட்;டது. தமது நண்பர் ராம்கியிடம் கேட்டார் .

‘தலைச்சுற்றலுக்கு என்ன கூல்டிரிங் குடித்தால் நல்லது.”

‘அந்த ஏ.பி.சி.டி.யை சொல்லிக் கொடுக்க இவ்வளவு தொகை சற்று அதிகம்தான். வேறு என்ன செய்வது. சேமிப்பில்தான் கை வைக்க வேண்டும். எவ்வளவுதான் ஒழித்து; வைத்தாலும் பிடுங்கப்பட்டு விடுகிறதே. இந்த சமுதாயம் ஒரு மோசமான திருடனை விட அநியாயமானது. சற்று கூட மனசாட்சியற்றது. சிரித்துக் கொண்டே கேட்கிறானே அவ்வளவு பெரிய தொகையை”

தலை சுற்றி விழுவதற்குள் அந்த டொரினோவை குடித்து முடித்தார்.

பின் குழந்தை லத்திகா அநியாயத்துக்கு படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

எல்.கே.ஜி. யிலேயே இவ்வளவு ஆர்வமா என் வியந்து போனார். அது எவ்வாறெனில். இரவு 1.30க்கு எழுந்திருப்பாள், அப்பா மூச்சா வருது என்று கூறி அனைவரையும் எழுப்பி விட்டு கருப்பு பூனை பாதுகாப்பு படையுடன் பின் சூழ செல்வது போல் பாத்ரூம் வரை செல்வாள், பின் படுக்கைக்கு வந்து உடனே தூங்கிவிட மாட்டாள், ஏ.பி.சி.டி.யை முழுவதுமாக ஒரு முறை சொல்லிக் காண்பிப்பாள். கோபாலகிருஷ்ணன் தன் மகளுக்கு முன் கொட்டாவி விட்டு விடக் கூடாது எனக் கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பார். பின் அவளாக விருப்பப்பட்டாள் தூங்குவாள், இல்லையென்றால் உடனே ஒரு ரைம்ஸ். ரைம்சை மட்டும் கோகிலாவிடம் தான் கூறுவாள். பின் காலை ஒரு முறை குளிப்பாட்டும் பொழுது, பின் இட்லி சாப்பிட்டுக் கொண்டே ஒரு முறை, அது எந்த அளவிற்கு கோபால கிருஷ்ணனை பாதித்திருந்தது என்றால். அலுவலகத்தில் ஏதோ ஒரு பைலில் தவறுதலாக ரைம்சை டைப் செய்யும் அளவிற்கு பாதித்திருந்தது. கோபாலகிருஷ்ணன் என்றைக்கு மதியம் தூங்கிவிழாமல் டைப் செய்திருக்கிறார். அரை தூக்கத்தில் குத்துமதிப்பாக எதையாவது டைப்செய்வது தான் அரசு அலுவலகத்திற்கு அழகு.

குழந்தை லத்திகாவின் கல்விச் செலவு கண்ணைக் கட்டியது. அவள் 5 வகுப்பு வருவதற்குள் சில லட்சங்கள் செலவாகி விட்டன. கோபால கிருஷ்ணன் ஓவர் டைம்மாக பார்த்து பார்த்து ஒல்லியாகிப் போனார். ஆனால் கோகிலா அப்படியில்லை. திருமதி. கோகிலா இதே ரேஞ்சில் போய்கொண்டிருந்தால், ஒரு சீன மல்யுத்த வீரனைப் போல ஆகிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அன்று ஒரு நாள் குழந்தை லத்திகாவை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டார் கோபால். அவள் மட்டும் வகுப்பில் முதல் மாணவியாக வந்தால், ஒரு தங்கக் கைக்கடிகாரத்தைப் பரிசளிப்பதாக, லத்திகா வேறு புத்திசாலியாக இருந்தாள். அவளுக்கு தங்கத்திற்கும், தங்கமுலாம் பூசப்பட்டதிற்கும் இப்பொழுதே வித்தியாசம் தெரிந்திருந்தது. அவசரப்பட்டுவிட்டோமோ என்று மனம் வெதும்பிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். கடிகாரக் கடைக்கு சென்று ஒரு தங்க கைக்கடிகாரத்தின் விலையை கேட்ட பொழுது, அவரது ரத்த ஓட்டம் முழுவதுமாக நின்று போனது. இதயம் வேறு நான் இப்பொழுது துடிக்கவா? வேண்டாமா? என்று கேள்வி கேட்டது. மகளுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படி மீறுவது. லத்திகா படிப்பதை பார்த்தால் அவள் இப்பொழுது பி.ஹெச்.டி. முடித்துவிடுவாள் போல. இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் பீடிங் அதிகமாகிப்போன பூனை போல அன்பு மனைவி கோகிலா. அவளுக்கு என்ன கவலை. சாம்பாரில் உப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை தவிர.

லத்திகா சொன்னதை நிறைவேற்றிவிட்டாள். வேறு வழியில்லாமல் கோபால கிருஷ்ணன் முதன் முறையாக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியிருந்தது. மகளுக்கு அந்த வாட்சை போட்டுப் பார்த்து அன்று முழுவதும் அழகு பார்த்தார். கடினமான விஷயம் என்னவாக இருந்தது எனில் கோகிலாவை சமாளிப்பது தான். அவளது கேள்வி கேட்கும் திறமை ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கும் வராது. திரு. கோபாலகிருஷ்ணன் மட்டும் மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை படித்து விட்டு உணர்ச்சியேற்பட்டு பொய் கூற மாட்டேன் என்று உறு1தி மொழி ஏற்றிருந்தால் என்னாவது? இந்நேரம் அந்த வீணை அல்லவா உடைந்திருக்கும் அவர் தலையில் பட்டு. பின் கோகிலாவின் உடல் பலத்திற்கு பூரிக் கட்டை எல்லாம் தீக்குச்சி போல் அல்லவா இருக்கும். வீணைதான் அவருக்கு தகுதியானது.

அவர் அந்த கடனை அடைப்பதற்குள் கண்ணாம்முழி இரண்டும் பிதுங்கி வெளியே வந்து விட்டது. இந்த உலகில் ஒரு போர் வீரனாக வாழ்ந்துவிடலாம். பாகிஸ்தான் காரனுடன் சண்டை போடுவது கூட அப்படி ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. இரண்டில் ஒன்று தெரிந்துவிடும். வாழ்வு அல்லது சாவு. ஆனால் ஒரு நடுத்தர குடும்பஸ்தனாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. என்ன செய்வது என்று தெரியாத பல சூழ்நிலைகளை உருவாக்கி வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை. இங்கு வேறு ஆப்ஷனே கிடையாது. சாமாளித்து தான் ஆக வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்த வரை தந்தையிடம் பரிசு வாங்குவது என்பது அழாதியான விஷயம். இதற்காக லத்திகா ஒவ்வொரு முறையும் முதல் மாணவியாக வந்து கொண்டிருந்தாள். கோபாலகிருஷ்ணனும் தன் சக்திக்கு மீறி செலவு செய்து கொண்டிருந்தார். மகள் தன்னிடம் ஏதேனும் கேட்டு அதை இல்லை என்று சொல்லிவிடும்; நிலை மட்டும் வந்து விடக் கூடாது என்று அவர் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

லத்திகாவிற்கு, தான் தன் தந்தையை சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது புரியும் வயதும் வந்தது. அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். அவள் மெச்சூர்ட் ஆகியிருந்தாள். தந்தையிடம் கேட்பதை நிறுத்திவிட்டாள், ஆனால் பெரிய குழந்தை கோகிலா அப்படியில்லை. அவள் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் இப்பொழுதெல்லாம் வீட்டுக்குள் செல்ல வேண்டுமானால், இரண்டு கதவையும் திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. அன்று ஒரு நாள் கேட்டாள். தன் இடுப்புக்கு தங்க ஒட்டியானம் வேண்டும் என்று. குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில். கேட்டவுடன் மயங்கி மட்டுமே விழுந்தார் கோபால். இதயம் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று டாக்டர் கூறிவிட்டார். இதெல்லாம் தெய்வச் செயலாக இல்லாவிட்டால் வேறு என்னவாக இருக்க முடியும். அந்த இடுப்புக்கு தங்க ஒட்டியானம், அதை நினைக்கையில், அதை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுமாறு நிமிடத்திற்கு ஒருமுறை ராம்கி சமாதானம் கூறிக் கொண்டேயிருக்க வேண்டியிருந்தது. இந்தியப் பெண்கள் உடற்பயிற்சி செய்வதேயில்லை. கேட்டால் வீட்டு வேலை செய்கிறேன் என்பார்கள்.

அன்று ஒரு விரும்பத்தகு விஷயம் நடந்திருந்தது. லத்திகா 10ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மாணவியாக வந்து விட்டாள். அதை தன் தந்தையிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டாள். ஏனென்றால் இதைக் கேட்டதும், சந்தோஷ மிகுதியில் ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்கித் தர பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் ஒரு சாதாரண அரசு அலுவலர். அவருக்கு இவ்வளவு சுமை என்பது சற்று அதிகம். ஆனால் விஷயம் ஒன்றும் சாதாரணம் இல்லையே. எப்படித் தெரியாமல் போய்விடும். தன் மகளின் போட்டோவைப் பத்திரிகையில் பார்த்த பொழுது, கோபால் அலவலகத்தில் காபி (அலுவலக செலவில்) குடித்துக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் காபியானது மூக்கின் வழியாக வந்து விட்டது சூடாக. அலுவலகத்திற்கு 10 நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டார். அலுவலக தலைமை அவரை ஆச்சரியமாக பார்த்தது. ஏனெனில் எறும்பு கடித்து விட்டால் கூட 20 நாள் லீவ் போடுவார்கள் இந்த அலுவலகத்தில். கோபாலுக்கு அரசு அலுவலகத்தின் மேல் சற்று கருணை உண்டு.

கோபாலகிருஷ்ணன் தன் மகளுக்கு பிடித்த இனிப்புகளையெல்லாம் வாங்கிக் கொண்டார். அவளுக்கு என்ன பரிசளிக்கலாம் என வெகு நேரம் சிந்தித்தன் விளைவாய் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு அழகான ஸ்கூட்டி பெப் தான் அது, அது தன் மகளுக்கு ஏற்ற இரு சக்கர வாகனம். தன் மகளுக்கு ரோஸ்கலர் பிடிக்கும் என்று தெரியும். வீட்டிற்கு செல்லும் பொழுது வண்டியோடுதான் செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார். ஆனால் அவரது துரதிஷ்டம் ரோஸ் வண்ணத்தில் எந்த வண்டியும் ஸ்டாக் இல்லை. பிடிவாதம் என்றால் அப்படி ஒரு பிடிவாதம். வண்டி வந்தால் தான் கடையை மூடவிடுவேன் என ரௌடியிசம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருக்காக பக்கத்து ஊர் ஷோ ரூமிலிருந்து குட்டியானையில் (ஆட்டோவில்) ஏற்றி வரப்பட்டது அந்த வண்டி. மணி 10 ஆகிவிட்டது. தன் மகள் தான் முதன் முதலில் அந்த வண்டியை ஓட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம். ஷோரூமிலிருந்து வண்டி பார்சல் செய்து தூக்கி வரப்பட்டது. அந்த பகுதியே கோபாலகிருஷ்ணன் வீட்டில்தான் குடியிருந்தது. லத்திகாவிற்கு ஏக மகிழ்ச்சி இவ்வளவு பெரிய பரிசை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.

பின் தன் மகளின் படிப்பு விஷயத்தில் அதீத ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். இரவு நேரங்களில் ஒருகையில் ஹார்லிக்ஸ் மற்றொரு கையில் ப்ளாஸ்க் என கடிகாரத்தை பார்த்த படி காத்து கொண்டிருப்பார். படித்துக் கொண்டிருக்கும் லத்திகா கேட்கிறாளோ? இல்லையோ? அவளுக்கு ஹார்லிக்சை கலந்து குடுப்பது அவரது தலையாய கடமை. தன் மகள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கரண்ட் கட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான், ஈ.பி காரன் தொலைந்தான். பின் ஒரு ஜெனரேட்டரை வாங்கி வைத்துக் கொண்டார். தன் மகள் இரவு நேரங்களில் அதிக நேரம் படிப்பதால் கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகிவிடுமோ என பயந்து கொண்டிருந்தார். வைட்டமின் நிறைந்த கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொடுத்தார். நல்ல வேலையாக அவளுக்கு அப்படியொரு சூழ்நிலை உருவாகவில்லை. எதிர் பார்த்தது போல் 12ம் வகுப்பிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கினாள்.

இந்தியாவை பொறுத்தவரை மாவட்ட அளவில் யாரேனும் நல்ல மதிப்பெண் வாங்கி, அவர் மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் அவரது மூளை குழம்பிவிட்டது என்று அர்த்தம். நேராக அறைக்குள் சென்று கால்மேல் காலை போட்டுக் கொண்டு. தன் மகளுக்கான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்தார் கோபால். தமிழ் நாடு கல்வித்துறை மட்டும் ஏதேனும் காரணம் கூறி தட்டிக் கழித்திருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 4 பேருந்தையாவது கொழுத்தியிருப்பார். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. தனது சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி தனது மகளை படிக்க வைத்தார்.

கோபாலகிருஷணன் ஓவர் டைமாக பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அலுவலக தலை மிரண்டு போனது. பின அந்த பதவி உயர்வை அவருக்கு அளித்து தன்னை கவுரவித்துக் கொண்டது அரசு அலுவலகம். அவர் தனக்கான சம்பள உயர்வை பற்றி மனைவி கோகிலாவிடம் கூறவில்லை. காரணம் தன் மகளுக்கான சேமிப்பிற்கு அது உதவும் என்பதுதான்.

அன்று ஒரு நாள், உடல் நிலை சரியில்லாமல் போகவே. நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த லத்திகா. தன் தந்தைக்கு மருத்துவம் செய்தாள். அவள் குத்திய ஊசியால் அழுகை வந்து விட்டது அவருக்கு. அனைவருக்கும் தெரியும் ஊசி என்றால் உயிர் போகக் கத்துவார் என்பது. ஆனால் அன்று அழுத அழுகை. அது என்ன விதமானது என்பது லத்திகாவிற்குத் தெரியும். தன் உடல்நிலை சரியில்லாமல் போனது குறித்து அன்று மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார் கோபாலகிருஷ்ணன். வலி சுகமாகும் தருணம் அழகானது. அந்த அனுபவம் கிடைத்ததற்காக நன்றி கூறினார் கடவுளுக்கு.

தன்னை மொத்தமாக இழந்து தன் மகளை உருவாக்கிவிட்ட சந்தோஷத்தில் திளைத்திருந்த சமயத்தில் தான் அவளின் திருமண வயது நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இன்னும் ஓய்வெடுக்கும் வயது வரவில்லை என்பதை உணர்ந்தவராய் செயல்பட ஆரம்பித்தார். தான் இதுவரை ரகசியமாக சேர்த்து வைத்தது, தனது சம்பள உயர்வு சேமிப்பு மற்றும் தான் ஆசையாக கட்டிய வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் வாங்கிய சில லட்சங்கள் என ஒட்டு மொத்தமாக தன்னை காலி செய்து தனது பெண்ணிற்கான மணமகனை தேர்வு செய்து திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார். தனது ரிடையர்டுமென்ட் பணத்தை வைத்து தான் அவர் வீட்டை திருப்ப வேண்டும். இப்பொழுது அவர் ஒரு ஜீரோ. ஒன்றுமற்றவர். ஒட்டு மொத்தமாக, எந்த எதிர்பார்ப்புமற்று தன்னை பங்கிட்டு கொடுத்தவர்.

அன்று கோகிலா, கோபாலிடம் எதார்த்தமாக இவ்வாறு கூறினாள்.

‘உங்க சம்பள உயர்வ வச்சு எனக்குத்தான் தங்க ஒட்டியானம் வாங்கிக் கொடுக்கல. ஆனா நம்ம பொண்ணுக்கு பண்ணி போட்டிங்களே, எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று கோபால், தான் மறைத்ததாக நினைத்த விஷயம் கோகிலாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. என்ன அழகான புன்னகை அவரிடமிருந்து வெளிப்பட்டது தெரியுமா.

இழப்பு எப்பொழுது சுகமாகும் என்பது, அது யாருக்காக என்பதை பொருத்தது. தனது அன்பு மகள் தன்னை ஏதோ ஒரு வகையில் நிறைவடையச் செய்துவிட்ட பிறகு இழப்பு குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது. அவள் அழகானவள். அவள் தைரியமானவள். அவள் புத்திசாலி. அவள் அவர் மகள்.

சில வருடங்களுக்கு பிறகு

உடல் வலுவிழந்து மரணப் படுக்கையில் இருந்தபடி நேரத்தை எண்ணிக் கொண்டிருந்த சமயம். உயிர் போய் விடும் முன் மகளைப் பார்க்கும் ஆர்வம் கண்களில் மின்னியது. கோபாலகிருஷ்ணன் ஏக்கத்தின் உச்சத்திலிருந்தார். லத்திகாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் டெல்லியிலிருந்தாள் தனது குடும்பத்துடன்.

லத்திகா : அப்பா உடம்புக்கு எப்படியிருக்கு

கோபால் : (பேச முடியாவிட்டாலும் குரலை கேட்டுவிட்ட சந்தோஷத்தில் கண்ணீர் வழிந்தது.)

லத்திகா : அப்பா நான் உடனே வருகிறேன்.

கோபால் : (தான் அவ்வளவு கொடுத்து வைத்திருக்கும் பட்சத்தில், தனது கண்கள் மூடிவிடாது என்று தன்னம்பிக்கையோடு கார்த்திருக்க ஆரம்பித்தார்)

அவரது கண்கள் வாசலை வாசலை நோக்கியிருந்தது.

- சூர்யா

நேரக் கொடுமை

தொலைக்காட்சி பார்ப்பதைவிட சேனலை மாத்திக் கொண்டே இருப்பதில் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். ஏதேனும் ஒரு பாடல் இனிமையாக ஒலிக்கும் பட்சத்தில் நிறுத்திக் கேட்பதுண்டு. அநத் ரிமோட்டுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் என் மேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்கும். ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட அந்த ரிமோட் என் அருகிலேயே தலையணைக்கு பக்கத்திலேயே இருக்கும். யாரேனும் எடுத்துவிட்டால் அவ்வளவு தான். என் உள்மனம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் என்னிடம் இவ்வாறு கூறும். “ஐயோ உனது வலது கையை யாரோ எடுத்துச் செல்கிறார்கள் ஜாக்கிரதை” என்று

Comic man அதிர்ந்து போய் கண்விழித்து பார்த்தால் அந்த ரிமோட் காணாமல் போயிருக்கும். அந்த அளவிற்கு என் உள்ளுணர்வோடு ஊறிப் போனது அந்த ரிமோட். வீட்டிலிருப்பவர்களும் வெறுத்துப் போனார்கள். அவர்கள் டி.வி. பார்ப்பதையே விட்டுவிட்டார்கள். பின் ஒரு நிமிடத்திற்கு 20 தடவை சேனலை மாற்றினால் யார்தான் பொறுத்துக் கொள்வார்கள். அந்த ரிமோட்டை 4 முறை பிரித்து வேலை பார்த்து விட்டேன். எனக்கு இப்பொழுது ரிமோட் மெக்கானிசம் கூட நன்றாகத் தெரியும். அன்று ஒரு நாள் என் அம்மா பக்கத்து வீட்டு மாமியின் ரிமோட்டை எடுத்து வந்து சரிபார்த்து கொடுக்கச் சொல்கிறார், நான் எப்பொழுது ரிமோர்ட் மெக்கானிக் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை.

இந்த நான்கு வருடத்தில் நான் எப்பொழுது ரிமோட் மெக்கானிக் ஆனேன் என்று யோசித்தால் புரிபடவே மாட்டேன் என்கிறது. கல்லூரிபடிப்பை முடித்த இந்த நான்கு வருடங்களில், எனக்கு டி.வியை தவிர ஆத்ம நண்பர்கள் மிகக்குறைவு. பெரும்பாலோனோரின் தொடர்பு விட்டுப் போய்விட்டது. எப்பொழுதாவது சந்தித்துக் கொண்டால் தான் உண்டு.

அன்று அதிகாலை 11 மணிக்கு (எனக்கு அதிகாலை என்பது 11 மணிதான்) அரைத்தூக்கத்தில் சேனலை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென கண்ணில் மறைந்து சென்றது அந்த உருவம். எங்கேயோ பார்த்த நியாபகம். அதற்குள் 5, 6 சேனல்கள் கடந்து சென்று விட்டேன். என்னிடமா நடக்கும். நான் ஒரே நேரத்தில் அனைத்து சேனல்களையும் பார்க்கும் திறமை படைத்தவன், தொலைக்காட்சியில் வரும் அனைத்து சேனல்களும் என் விரல் நுனியில் அல்லவா இருக்கிறது, தப்பிவிடுவானா அவன். கண்டுபிடித்துவிட்டேன். அது ஒரு ஆங்கில செய்தி சேனல், அந்த முகம்....... ஆஹா வேறு யாருமல்ல, அவன் என் நண்பன் முத்துகிருஷ்ணன். என் நண்பன் தொலைக்காட்சியில், அவன் ஏதோ சாதனை செய்திருக்கிறான். அவனைப்பற்றிய அந்த செய்தி அதற்குள்ளாக முடிந்துவிட்டது, இனி அடுத்த செய்தியில் தான் கேட்க வேண்டும். என் மனம் துடித்துக் கொண்டிருந்தது. அது என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள, 24 மணி நேர தமிழ் செய்திச் சேனலை மாற்றி வைத்துக் கொண்டேன். இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே மனம் கொள்ளவில்லை.

அவனும் நானும் கல்லூரி காலங்களில் எத்தனை சேஷ்டைகள் செய்திருக்கிறோம். கல்லூரியின் ஆரம்ப காலங்களில் அவன் தான் எனக்கு ஹீரோவாகத் தெரிந்தான். கல்லூரிக்கு நேரத்திற்கு வருவது எவ்வளவு அவமானமான விஷயம் என்பதை எனக்கு உணர்த்தியவன் அவன்தான.; நேரத்திற்கு கல்லூரி உள்ளே சென்று விட்டால் பின் நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறுவான். வி.ஐ.பி.க்கள் எல்லாம் நேரம் கழித்துதான் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வார்கள், நாம் வி.ஐ.பி. ஐ போல் நடந்து கொள்ள வேண்டும். நாம் எதைப் போல் நினைக்கிறோமோ, அதுவாகவே மாறி விடுவோம் என்பது உனக்குத் தெரியாதா? என்று கூறுவான். என்னுடைய அதிர்ச்சியெல்லாம், அவன் விவேகானந்தருடைய வார்த்தைகளை உபயோகித்தது தான், எப்படிப்பட்ட ஒரு அதீதமான சூழ்நிலையில் அவன் அதை படித்திருப்பான் என்பது விளங்கவில்லை.

பின் அவன் புத்தகங்களை தன் உடலில் மறைத்து வைத்திருக்கும் இடம், ஏதோ ஆயுதத்தை ஒளித்து வைத்திருப்பது போல், எங்கிருந்து உருவுவான் என்றே தெரியாது. என்னதான் அவன் என் நண்பனாக இருந்தாலும் அவனடைய புத்தகத்தை நான் தொடுவது கூட கிடையாது, காரணம் ஒரு நாள் அவன் புத்தகத்தை உருவிய இடம், அங்கு எப்படி அவனால் வைக்க முடிந்தது என்று புரியவில்லை, அவன் திறமைசாலி என்பது எனக்கு நன்றாகத் தெரியும், இருப்பினும் ரோட்டில் பார்ப்பவர்கள் அசிங்கமாக நினைத்திருக்க மாட்டார்கள். அவன் அங்கிருந்து உருவியபொழுது ஆச்சரியத்துடன் நான் கேட்ட கேள்வி இதுதான்.

நண்பா, திடீரென்று யூரின் வந்துவிட்டால் உனக்கு சிரமமாக இருக்காதா?” அவனுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு நாள் ரௌண்ட் நெக் டி.சர்ட் வாங்கிக் கொடுத்தேன். இதில் ஒரு குரூரமான ஆசை உண்டு எனக்கு, அவன் சட்டையின் மேல் பட்டனை போட்டு நான் பார்த்ததேயில்லை. முதல் பட்டனை கழற்றிவிட்டு தூக்கிவிட்டிருப்பான், சில சமயம் சார்ட் சர்ட் போட்டு வந்திருப்பான். அப்பொழுதெல்லாம் அவன் தொப்புள் தெரிகிற அளவிற்கு சட்டையை தூக்கிவிட்டிருப்பான் ஏதோ கவர்ச்சி நடிகையை போல. சட்டையை போட்டால் தானே பட்டனை கழற்றிவிட முடியும், அந்த டி.சர்ட்டில் பட்டனே கிடையாது. அவன் ஒரு நாள் முழுவதும் எனக்காக போட்டிருந்தான் ஏதோ சாதனை முயற்சியாக.

நான் பள்ளியில் படிக்கும் பொழுது கண்ட விஷயம் இது, மணி அடித்துவிட்டால் அவ்வளவுதான் அந்த சூழ்நிலையே பரபரப்பாகிவிடும், அனைவரும் வகுப்பறையை நோக்கி தெறித்து ஓடுவார்கள். இந்தியாவில், பள்ளிகளுக்கும், சிறைகளுக்கும் பெரிதாக 6 வித்தியாசங்கள் கூட இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் எனது கல்லூரியில் மணி, ஏதோ அநாதையை போல் தேவையில்லாமல் அடித்துக் கொண்டிருக்கும். யாரும் கருத்தில் கொள்ள மாட்டார்கள். ஆனால் என் நண்பன் அவ்வாறில்லை, அவன் மணி ஓசை கேட்டதும் அதற்கு உரிய மரியாதை கொடுப்பான், அது எவ்விதமென்றால், என்றாவது ஒரு நாள் கல்லூரிக்கு முன்னதாக வந்து விடுவான், என்ன செய்வது என்பது தெரியாமல் ஒரு குட்டித்தூக்கம் போடுவான், மணி அடித்ததும் பரபரப்பாக எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு, கர்ச்சீப்பில் தயாராக கொட்டி வைக்கப்பட்டிருந்த பவுடரை முகத்தில் அப்பிக் கொண்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் வெளியேறிவிடுவான், பின் யாராவது தவறாக நினைத்துவிட்டால் அவன் மரியாதை என்னாவது.

‘என்ன இந்த பையன் மணி அடித்ததும் வகுப்பறைக்குள் உட்கார்ந்திருக்கிறானே.” என்று எந்த ஆசிரியராவது நாக்கின் மேல் பல்லை போட்டு பேசிவிட்டால் என்னாவது. அது எவ்வளவு பெரிய அசிங்கம். அதனால் சரியாக மணி அடித்ததும் வெளியேறிவிடுவான், நான் சற்று நல்ல பையன், வகுப்பறைக்குள் அந்த ஆசிரியர் அநாதைப் பயலை போன்று உட்கார்ந்திருப்பாரே என்ற பரிதாப உணர்வு எனக்குண்டு. அதனால் ஒரு அரைமணி நேரம் கழித்து வகுப்பறைக்குள் சென்றுவிடுவேன், என்னைப் போல் தான் மற்றவர்களும்.

பொதுவாக குழந்தைகளை சற்று கவனித்துப் பார்த்தால், அவர்களிடமிருக்கும் தனித்திறமை தெளிவாகத் தெரியும், அவர்களின் பேச்சு செயல்பாடுகளை வைத்து அவர்கள் பிற்காலத்தில் என்னவாக வருவார்கள் என்பதை யூகித்துவிட முடியும், என் நண்பனை பார்த்த முதல் தினத்திலிருந்து அவனிடம் இந்த ஆர்வத்தை கவனித்து வருகிறேன், அவன் ரயில்வே துறையில் பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்று நினைத்திருந்தான் போல, எப்பொழுதும் வானத்தை பார்த்து வட்ட வட்டமாக புகை விட்டுக் கொண்டிருப்பான். ஆம் வட்ட வட்டமாக, அதில் கலை உணர்ச்சி வேறு அவனுக்கு. நான் அவனுக்காக பரிதாப்பட்டேன், இந்தியாவில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வே கிடையாது இளைஞர் மத்தியில், ஆனால் வெகு நாட்கள் கழித்துதான் இந்த விஷயம் என் புத்திக்கு உணர்த்தப்பட்டது. புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல அருகிலிருப்பவர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் என்று, நான் வேண்டிக் கொண்டேன் கடவுளிடம்.

‘கடவுளே எனக்கு மட்டும் கேன்சர் வந்தால், நான் நாத்திகன் ஆகிவிடுவேன் ஜாக்கிரதை” நீதி பரிபாலனை தெரியாத மடக்கடவுள், அவன் சிகரெட் பிடித்தால் எனக்கு நோய் வரவேண்டுமா? இது என்ன முட்டாள் தனம். அவர் நடு நிலைமை பற்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறத. என்ன தான் அவன் என் நண்பனாக இருந்தாலும் அவன் மடத்தனங்களுக்கு நான் இலக்காக முடியுமா என்ன? இரண்டாமாண்டின் பின்னொரு நாள், அவன் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்ட செய்தி கேட்டு, அதிர்ச்சியில் குடித்துக் கொண்டிருந்த டீ கோப்பையை கீழே போட்டுவிட்டேன். டீ மாஸ்டர் இவ்வாறு என்னிடம் கேட்டார்.

“என்ன தம்பி கை சுட்டுடுச்சா” சுட்டது என் நெஞ்சமல்லவா, அதைவிட ஆச்சரியமானது அவன் சிகரெட் பிடிப்பதை விட்டதற்கான காரணம் , ஆம் அவன் காதலில் விழுந்து விட்டானாம். அந்த பெண் கூறியதன் விளைவாக இன்று சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டானாம். நான் எத்தனை முறை அவனுக்கு கூறியிருப்பேன். ஒரு முறையாவது கேட்டிருப்பானா. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. இப்பொழுது நான் எதைபோட்டு உடைப்பது. அவன் இப்பொழுதெல்லாம் சட்டையில் இருக்கும் 5 பட்டன்களையும் போட்டு வருகிறான். சரியாக நேரத்துக்கு வகுப்பறைக்குள் நுழைந்து விடுகிறான். எங்கள் வகுப்பறைக்கு அல்ல, அந்த பெண் படிக்கும் வகுப்பறைக்கு, இந்த ஆசிரியர்கள் கரும்பலகையை தவிர வகுப்பில் எதையுமே பார்ப்பதில்லை போல, வகுப்பறைக்குள் வந்ததும் வாந்தியெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் அவர்கள் படித்ததை. ஆம் அவர்கள் பாடம் எடுப்பது அவ்வாறுதானிருக்கும். தன் வகுப்பில் யார் யார் படிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதே இல்லை.

என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும், பூமியில் ஒவ்வொரு வாழ்விடத்துக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் சிலசில சிறப்பம்சங்கள் உண்டு. இதில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்டது. காதல் என்றால், அது தோல்வியை நோக்கிதான் என்பது, ஒரு இந்திய பெண் காதலிப்பவனை ஏமாற்றவில்லையென்றால், அவளுக்கு சொர்க்கத்தில் எப்படி இடம் கிடைக்கும், ஏமாற்றுவது என்பது அவளுடைய தொழில் தர்மம். அதற்காகவெல்லாம் பெண்களை பழித்து பேசக் கூடாது. அது அவர்களுடைய இயல்பு. பெண்கள் நம் நாட்டின் கண்கள் அல்லவா?

இந்த மடையனிடம் இதையெல்லாம் சொன்னால் எங்கே புரியப் போகிறது, நமது நாட்டில் வயதிற்கு வந்த ஆண்கள் உளரீதியாக கவனிக்கப்படுவதேயில்லை. இவர்களுக்கு விதிக்கப்பட்டதெல்லாம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட ஒழுக்கவிதிகள் தான். அடக்கு அடக்கு என்பதை தவிர வேறொன்றும் தெரியாது, பின் என்னதான் செய்வார்கள் இந்த இளைஞர்கள். ஒரு பெண் தன் கண்களால் முதல் ஒப்புதலை அளித்து விட்டால் போதும். காஞ்ச மாடு கம்பங்கொள்ளைக்குள் புகுந்த மாதிரி தன் தன்மான உணர்வையெல்லாம் இழந்து, எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. வெறும் வயதுக் கோளாறு என்று ஒதுக்கிவிடுவது சரியாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த நாளை, எங்கள் ஊரில் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பவர்களின் முயற்சியையெல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கும் அந்த மருத்துவர் பெயர் திரு. ராஜமாணிக்கம், அவரது வேலை நேரங்களை சரியாக குறித்து வைத்துக் கொண்டேன். பின் அவரது முகவரியையும் குறித்து வைத்துக் கொண்டேன். தமிழக விவசாயிகள் அனைவரும் என் நண்பன் போன்ற மடையர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு நடத்தவில்லையென்றால் ஆபத்து அவர்களுக்குத்தான். பின் அவர்கள் வயலில் அடிப்பதற்குரிய பூச்சி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும், இந்த தற்கொலை செய்து கொள்பவர்கள் ரயிலில் விழுவது, தூக்கு மாட்டிக் கொள்வது, உயரமான கட்டிடத்திலிருந்து குதிப்பது இதையெல்லாம் ஓல்;டு பேஷனாக்கி விட்டார்கள். மெடிக்கல்லுக்கு சென்று தூக்க மாத்திரை கேட்டால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் நேராக உரக் கடைக்கு செல்ல வேண்டிது. கண்ணில்படும் டப்பாவை வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டியது. அதை பாலில் கலந்து குடித்து விட வேண்டியது. விஷத்தைக் குடிக்கும் பொழுது கூட சுவையாக இருக்க வேண்டுமாம். அப்படியே குடித்தால் கசக்குமாம். இவர்களை என்ன செய்வது.

என் நண்பன் சென்று அந்த உரக் கடையில் கை நீட்டிய பொழுது, அவன் ஆள் காட்டி விரலுக்கு நேராக இருந்த டப்பாவில் இருந்தது ஒரு எலிமருந்து, இந்த எலிமருந்து என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அது எலிக்கு பூஸ்ட் சாப்பிடுவது போல. நாம் தான் நினைத்துக் கொள்ள வேண்டும் இதை சாப்பிட்டால் எலி செத்துவிடும் என்று. என் நண்பனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றாலும், சற்று அஜீரணமாக உணர்ந்தான். அதனால், அந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றோம்.

டாக்டர் ராஜமாணிக்கம் என் நண்பனுக்கு சில உடற்பயிற்சிகளையெல்லாம் பயிற்றுவித்தார். ‘தம்பி எந்திரிங்க.........கை, கால ஆட்டுங்க......... ரெண்டு குதிகுதிங்க” பின் கண்களை உற்று பார்த்தார். அடி வயிற்றை அமுக்கி பார்த்தார். நாக்கை வெளியே நீட்டச் சொன்னார். அவன் காளியாத்தாவை போல் நாக்கை முழுவதுமாக வெளியே தொங்கவிட்டான். அதை எதுக்கு டார்ச் அடித்து பார்க்க வேண்டும். அப்படியே பார்க்க வேண்டியது தானே. ‘தம்பி சிகரெட் பிடிப்பிங்க போல இருக்கு, மறைக்காம உண்மைய சொல்லணும்” அவன் ஒத்துக் கொண்டான், ஆனால் அவன் கஞ்சா அடித்ததை சொல்லவேயில்லை

‘இனிமே, சிகரெட்டெல்லாம் பிடிக்கக் கூடாது, புரியுதா” வேகவேகமாக பிரிஸ்கிரிப்சனில் மலாய் மொழியில் எழுதினார். ‘இத வாங்கிக் கொடுங்க, மூணு வேளையும் கஞ்சிதான், நேரத்துக்கு சாப்பிடணும், நேரத்துக்கு தூங்கணும்” எனக்கு லேசாக சந்தேகம் வந்தது. ‘ஏதோ மருந்தைக் குடித்து விட்டான் என்று கூட்டி வந்தால், குதி, கைய கால ஆட்டு, கஞ்சிகுடி, சிகரெட் பிடிக்காதன்னு, சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிகிட்டுடிருக்கார், இவரை பற்றி வெளியில் பிரமாதமாக பேசிக் கொண்டார்களே?”

எனது நண்பனின் தந்தை லேசாக இழுத்தார் “டாக்டர் ஊசி எதும் .......... போட வேணாமா?” இந்த ஊரில் ஊசி போடவில்லையென்றால் அவரை டாக்டராகவே மதிக்க மாட்டார்கள். அந்த வார்த்தைகளை கேட்டு பதறிப் போன டாக்டர் வேகவேகமாக ஒரு ஊசியை எடுத்து மருந்தை ஏற்றி குப்புறபடுக்க வைத்து கு....... ஏற்றினார். ‘ம்.......... நல்லா படுத்து ரெஸ்ட் எடுக்கணும்” அதட்டலாக கூறினார். எலி மருந்துக்கு இவ்வளவு பதற்றமடைவது அநாவசியமான விஷயம், ஏன் இந்த தந்தைமார்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது என்பது தான் புரியவில்லை.

பின் பெண்களை கண்டாலே வெறுக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு சும்மாவே படிப்பு வராது. இதன் பின் அவன் படித்து பட்டம் வாங்குவானேயானால் அது சூரியன் மேற்கில் உதிப்பதற்கு சமம். சிறிது நாள் ஆசிட்டுடன் அலைந்து கொண்டிருந்தான். அந்த பெண் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்று விட்டாள் என்பதை அறிந்த பின்தான் அந்த ஆசிட்டை தூக்கி போட்டான். திடீர் திடீர் என நினைத்து அழுவான், அவனால் அழ முடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

வெகு நாட்களுக்குப் பின், இன்றுதான் அவன் என் நியாபகத்திற்கு வந்தான், எனது நண்பன், தொலைக்காட்சியில் ஆஹா, ‘நண்பா காதல் தோல்வியில் உணர்ச்சிபெற்று ஏதேனும் சாதித்து விட்டாயா உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறதே” அடுத்த செய்தி ஆரம்பித்து 5 நிமிடம் கடந்து விட்டது. இன்னும் என் நண்பனை பற்றிய செய்தி வரவில்லை. காத்துக் கொண்டிருந்தேன். ஆஹா இதோ வந்து விட்டது, செய்தி: நேற்று காதலர் தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையோர ரெசார்ட் ஒன்றில் நடைபெற்ற காதலர் தின கொண்டாட்டத்தின் பொழுது ஆண்களும், பெண்களுமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென அங்கு வந்த ஒரு கும்பல் அங்கிருந்த இளம் பெண்களையும், அவர்களின் ஆண் நண்பர்களையும் கண்மூடித்தனமாக அடித்து விரட்டியது. இதனிடையே கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை....... அமைப்பினர் நடத்தியதாக தெரியவந்ததை அடுத்து சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நான் பார்த்தேன், அந்த ரோஸ் சட்டைக்காரன்,அவன் தான் என் நண்பன். பெண் பிள்ளைகளை தாவித்தாவி மண்டையில் அடித்துக் கொண்டிருந்தான். என்ன ஒரு வெறி அவன் தாக்குதலில், அதைப் பார்த்தால் சமுதாய அக்கறை போல் தெரியவில்லை எனக்கு. சமுதாயம் தான் எவ்வளவு உபயோகப்படுகிறது நமது சொந்த கோபத்தை, மற்றும் உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்துவதற்கு, ‘அடே நண்பா, நீ மட்டும் ஒழுங்காக படிப்பை முடித்து, ஒரு வேலையிலமர்ந்து, ஒரு இனிமையான பெண்ணுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கியிருப்பாயேயானால், இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பாயா? நீ சமுதாயத்தை, கலாச்சாரத்தை காப்பாற்ற கிளம்பிவிட்டாய். அதை கூட விட்டுவிடு, சமுதாயம், கலாச்சாரம் எல்லாம் பின் எதற்காக இருக்கிறது. நாம் காப்பாற்றத்தானே, பின் அதை வைத்துக்கொண்டு ஒரு பீடித்துண்டு கூட வாங்க முடியாது. சல்லிக் காசு பெறாதது நாம் காப்பாற்றுவதற்காவது உதவிவிட்டு போகட்டுமே. பிரச்சனை அதுவல்ல நண்பா, நீ அடிக்கும் பெண்களில் உன் காதலி இல்லை என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறாய். உனக்கே உன்னைப்பற்றி தெரியவில்லை, உனக்கு மட்டும் சொந்த ரிவென்ச் இல்லையென்றால், பின் சமுதாயமாவது, கலாச்சாரமாவது.

இந்திய அரசாங்கம் உனக்காக ஒரு நல்ல மனநல மருத்துவரை நியமிக்குமானால், அவர் செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள் மட்டும் தான். உனக்கு ஒருநல்ல வேலை. உன்னை ஏற்றுக் கொண்ட ஒரு இனிமையான பெண். விஷயம் அவ்வளவுதான். உன்னை சிறையில் போட்டு என்ன ஆகப் போகிறது. நீ வெளியில் வரும் பொழுது தியாகியை போல் அல்லவா உணருவாய், நண்பா நேரக் கொடுமை என்று கூறுவார்கள் தெரியுமா? அது வேறொன்றும் இலலை. நீ நாளை தியாகியாகப் போவது தான். நீ உன்னை சமுதாய சீர்திருத்தாளன் என்று பறைசாற்றிக் கொள்ளப் போவது தான். என்னுடைய கோபமெல்லாம் அந்த எலிமருந்தை கலப்படமாக தயாரித்த நிறுவனத்தின் மேல் தான், அவன் ஒரு நேர்மையானவனாக இருந்திருப்பானேயானால் இன்று எவ்வளவு பெரிய நன்மை நடந்திருக்கும்.”

- சூர்யா

ஆத்ம நண்பன்

சுந்தரேஷன் 10,570 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பொறுப்பான குடும்பஸ்தன். மனைவி லதாவிற்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு. காரணம் மாதமானால் முதல் தேதியன்று 10,570 ரூபாயை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட்டு 70 ரூபாயை கடன் வாங்கிச் செல்வார். அதில் 50 ரூபாயை மிச்சப்படுத்தி விடுவார். இவரை போன்ற சாதனையாளர்களைப் பற்றி உலகம் அறிவதேயில்லை. அந்த 20 ரூபாய்க்கு அப்படி என்ன செய்திருப்பார் என்றால், இப்படி ஒரு வழி இருப்பது யாருக்குமே தெரியாது, புளிப்பு மிட்டாய் பாக்கெட் ஒன்றை வாங்கி வைத்திருப்பார். காலை அலுவலகம் சென்றவுடன் ஒன்று, மாலை ஆனதும் ஒன்று அவ்வளவு தான் திருப்தியடைந்துவிடுவார். இன்றும் 5 பைசாவுக்கு கிடைப்பது புளிப்பு மிட்டாய் மட்டும்தானே.


திருமணத்திற்கு முன் டீ, காபி எல்லாம் கடைகளில் குடித்துக்கொண்டிருந்தார் என்பது இங்கு சிவப்பெழுத்துக்களால் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். திருமணமாகி என்று ஒரு பெண் குழந்தை பிறந்தாளோ அன்றோடு ஒரு துறவியைப் போலாகிவிட்டார். தன் மகள் ஸ்ருதிக்காக இன்றே பணம் சேர்க்க ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு சென்று தனது மகளுக்கான சேமிப்பு கணக்கில் பணம் சேர்த்து வருகிறார். ஏதோ அடுத்தவர் பணத்தை கையாள்வதைப் போல அதன் மீது பற்றற்று இருப்பார்.

சுந்தரேஷன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெனோவாக பணிபுரிகிறார். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு நேரத்திற்கு அலுவலகம் சென்றால் மரியாதைக் குறைவாக பேசிவிடுவார்கள் என்ற பயத்தினால் 10 மணிக்கு எழுந்து நிதானமாகக் கிளம்புவார். அந்த ஸ்கூட்டர், அதை அவர் மாமனார் திருமணத்தன்று பரிசளித்தது. கோவில் திருவிழாக்களில் ஆட்டை வெட்டுவதற்கு முன் அதற்கு மாலை மரியாதையெல்லாம் செய்து, நேர்த்தி கடனெல்லாம் கொடுப்பார்கள். அப்படி ஒரு நேர்த்திக்கடன்தான் இந்த ஸ்கூட்டர். தன் மகளுக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பதில் மாமனாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த ஸ்கூட்டர் மிகவும் பழையதாகிவிட்டது. சுந்தரேஷன் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் 2 மெக்கானிக் ஷாப்கள் உண்டு. சுந்ரேசன் வருகிறாரென்றால் அவ்வளவுதான். இரண்டு கடைகளின் மெக்கானிக்குகளும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அந்த ஸ்கூட்டர் இன்றும் ஓடுகிறதென்றால், ஏதோ நம்மை மீறிய சக்தி என்ற ஒன்று இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அன்று ஒரு நாள் மெக்கானிக் மாதவன், சுந்தரேஷனிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தான்.

‘பஸ்சுல போறது மாதிரி வசதி வேற எதுலயும் கிடையாது சார்! அப்படியே ஜன்னல தொறந்து விட்டோம்னா ஜிலு ஜிலுன்னு காத்துவரும். எத்தனை மக்கள் நம்மை சுற்றி பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் வருவாங்க. இதையெல்லாம் அனுபவிக்கனும் சார். நீங்களும் இந்த ஸ்கூட்டர விட்டுட்டு ட்ரை பண்ணிப் பாருங்களேன். நான் வேணா உங்களுக்கு பஸ்பாஸ் எடுத்து தர்றேன் சார். என் மச்சான் கூட ஆர்.எம்.டி.சி. லதான் வேலை பாக்குறான் ........ இவ்ளோ ஏன் சார் பஸ்சுல பயணம் செஞ்சா லிவருக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?’

நெற்றியை சுருக்கினார் சுந்தரேஷன்

‘என்னது லிவருக்கு நல்லதா’

‘ம்......இல்ல.........ஆமா....... ஆமா சார் உங்களுக்குத் தெரியாதா இப்போ அமெரிக்காவுல விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க சார். பஸ்சுல பயணம் செஞ்சா லிவருக்கு ரொம்ப நல்லதுன்னு. அட அத விடுங்க சார், பெட்ரோல் காசு எவ்ளோ மிச்சமாகும் தெரியுமா?’

சுந்தரேஷனை அநியாயத்துக்கு குழப்பிவிட்டான் அந்த மெக்கானிக். அவருக்கு மட்டுமென்ன, இந்த ஸ்கூட்டருடன் மாரடிக்க வேண்டும் என்று ஆசையா என்ன? அவருக்கும் காரில் செல்வது போன்ற கனவெல்லாம் வந்திருக்கிறது என்பது பிராய்டையும் குழப்பக்கூடிய விஷயம். சுந்தரேஷன் மனதிலும் ஆயிரம் கவலைகள், ஆயிரம் ஆசைகள் இருக்கத்தான் செய்தது. மாதச் சம்பளம் வாங்கியே வாழ்க்கை கரைந்துவிடும் போல என்று நினைக்கும் பொழுதே அவரது இதயம் வேகம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.

அன்று ஒரு நாள் திருபாய் அம்பானியைப் பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்துவிட்டு ஒரு முழு இரவு தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தார். நகத்தைக் கடித்து துப்பினால் ஆறாவது அறிவு சிறப்பாக செயல்படும் என்று எங்கு கேள்விபட்டாரோ, யோசனையில் ஆழ்ந்துவிட்டால் போதும் கடித்துக் குதறி துப்பிக் கொண்டே இருப்பார். தொழில் செய்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற ஆசையை வெகு நாட்களாக யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தார்.

அன்று ஒரு மதிய இடைவேளையின் போது, அலுவலகத்தில் மதிய உணவு உண்ணும் கூடத்தில், சுந்தரேஷனின் அலுவலக நண்பர் (ஆத்ம நண்பர்) திரு, டேவிட் உடன் பேசிக் கொண்டிருந்தார். திரு, டேவிட்டுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அது ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்யக் கூடிய திறமை. ஆம் யாராலும் அவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது. அவர் துல்லியமாக செயல்படுவார். ஆம் அவர் உணவு உண்டு கொண்டிருக்கம் பொழுது, பேச்சை நிறுத்தவே மாட்டார். அவரது வாய் சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும், பேசிக் கொண்டும் இருக்கும். சற்று உற்று கவனித்தால்தான் அது எவ்வளவு கடினம் என்பது தெரியும். மற்றபடி அவர் உளறிக் கொண்டிருக்கும் விஷயம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்பதை இரண்டொரு நிமிடங்களில் கண்டு கொள்ளலாம். மற்றும் அவரிடம் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் அவருக்கு காதுகளே கிடையாது என்பது. அவர் பேசுவதைத் தான் அனைவரும் கேட்க வேண்டும். மற்றவர்கள் ஏதாவது அவரிடம் கூறினால் அவர்களுக்கு இதைப் போன்ற அதிர்ச்சியான உணர்வு ஏற்படும்.

‘நான் இப்பொழுது யாரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.’

சுந்தரேஷனுக்கு, திரு. டேவிட்டுடன் எவ்வாறு இப்படியொரு நட்பு ஏற்பட்டது என்றால், சுந்தரேஷன் பேசுவதே இல்லை. திரு. டேவிட்டோ பேச்சை நிறுத்துவதேயில்லை. சுந்ரேஷனின் காதுகள் கேட்கத் தயாராய் இருக்கும் பொழுது, திரு. டேவிட்டின் வாய் என்ன சும்மாவா இருக்கும்.

அந்த மதிய இடைவேளையில் தனது தினசரி சாதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தார் டேவிட். என்றும் இல்லாமல் இன்று சுந்தரேஷன் சற்று உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தார். காரணம் திரு. டேவிட் அம்பானியை பற்றிய தனது உரையை ஆரம்பித்திருந்தார். ஆனால் அம்பானி மட்டும் அங்கிருந்திருந்தால் ஆச்சரியப்பட்டுப் போயிருப்பார். தன்னைப் பற்றி சங்கடமே இல்லாமல் கற்பனைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் இவரை போன்ற மனிதர்கள் எல்லாம் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்று. திரு. டேவிட் அம்பானியை ஒரு நியூட்டன் ரேஞ்சுக்கு கற்பிதம் செய்துக் கொண்டிருந்தார். சுந்தரேஷன் அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை என்றாலும், அவருடைய காதுகள் வழக்கம் போல தங்களது பணியை செய்து கொண்டிருந்தன. அவரது பிசினஸ் செய்யும் ஆர்வம் அவரை உந்தித் தள்ள ஆரம்பித்துவிட்டது. டேவிட் பேச பேச அந்த ஆர்வம் பெரிதாக ஊதி வெடித்து விடும் போல இருந்தது. கட்டுப்படுத்த முடியாமல் கத்திவிட்டார் சுந்தரேஷன்.

‘போதும்....... நிறுத்துங்க...... டேவிட்’

திரு. டேவிட் அதிர்ந்து போனார். சுந்தரேஷனுக்கு தான் பேசியது பிடிக்கவில்லையோ என்று தவறாக நினைத்துக் கொண்டார். அருகிலிருந்த, கிளார்க் ராகவனிடம் கேட்டார்.

‘நான் ஏதும் அதிகமாக பேசிவிட்டேனா? ஏன் இவ்வாறு கோபித்துக்கொண்டு செல்கிறார், சுந்தரேஷன்’

ராகவன் மனதிற்குள்ளாக இவ்வாறு நினைத்துக் கொண்டார்.

‘நீ பேசி பேசி என் காது என்னைக்கோ செத்துப் போச்சுயா. செத்துப் போன காதுல நீ பேசுறது எப்படியா கேக்கும். லூசா நான் நீ பேசுறதை எல்லாம் கேக்குறதுக்கு’

பின் கனிவுடன் திரு. டேவிட்டின் காதுகளில் விழும்படி இவ்வாறு கூறினார் ராகவன்.

‘அவருக்கு வேற எதாவது டென்ஷன் இருந்திருக்கும்’

வெகு நாட்கள் கழித்து சுந்தரேஷன் தன் மனைவியிடம் தனது பிசினஸ் செய்யும் ஆர்வத்தைக் கூறினார். அது ஒரு அழகான இரவு நேரம் என்பதால் சுந்தரேஷன் காயமின்றி தப்பினார். பின் சோத்துப் பானையை எடுத்து நடு மண்டையில் அடித்தால் காயம் ஏற்படாதா? அந்த பானை வேறு பல இடங்களில் நெளிந்து போயிருக்கிறது. ஸ்ருதி பிறக்கும் வரைதான் சுந்தரேஷனுக்கு திருமதி. லதா ஒரு அன்பான மனைவி. ஸ்ருதிக்கு பிறகு அது லதாவா? விஜயசாந்தியா? என் பலமுறை தனது சோடா புட்டி கண்ணாடியை அவிழ்த்துவிட்டு கண்களை கசக்கியபடி பார்த்திருக்கிறார் சுந்தரேஷன்.

அவருக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது என்றால், அவரது தொழில் செய்யும் ஆர்வம் எந்த அளவுக்கு தூண்டப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ அவர் முற்பிறவியில் செய்த தர்மம் மற்றும் நற்பலன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை இன்று காப்பாற்றிவிட்டது.

தனது நண்பர்களிடம் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சுந்தரேஷன். டேவிட் தான் தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் ஒரே ஆத்ம நண்பர். விடிந்ததும் அவரிடம் இதைப் பற்றி விவாதிப்போம் என்று நினைத்தபடியே உறங்கிப் போனார். விடிந்ததும், விடியாததுமாக எழுந்து கிளம்பிவிட்டார். கிளம்புவதற்கு முன்னர் ஏதோ ஒரு சக்தி அவரை தடுத்து நிறுத்தியது.

‘வேண்டாம் ஜாக்கிரதை’

அந்த குரல் அவரது உள்ளுணர்வுதான், இந்த காலத்தில் யார் உள்ளுணர்வின் பேச்சையெல்லாம் கேட்கிறார்கள். சுந்தரேஷன் மட்டும் கேட்பதற்கு, இருந்தாலும் பல் துலக்கிவிட்டு சென்றிருக்கலாம்.

வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு குரல்.

‘வாங்கண்ணே, நல்லாருக்கீங்களா’

என்னவோ அவர் வெளியூரிலிருந்து வந்தது போல, அந்த குரலுக்கு சொந்தக்காரர் திருமதி. மெர்சி. டேவிட்டின் மனைவி. இவரைப் பற்றி ஒரு வரி. இவர் ஜேம்ஸ் பாண்டின் தீவிர ரசிகை. காரணமுண்டு.

சுந்தரேஷன் : டேவிட் இல்ல

மெர்சி : அவர் பாத்ரூம்ல் கொஞ்சம் வேலையா இருக்காரு.

புரிந்து கொண்டார் சுந்தரேஷன். டேவிட் என்ன பாத்ரூமில் பட்டப்படிப்பா படித்துக் கொண்டிருப்பார். வேலையை முடித்துக் கொண்டு வரட்டும் என்று கார்த்திருந்தார். தனது ஆர்வத்தை யாரும் புரிந்து கொள்ளவதில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். ஆனால் கிட்டதட்ட சுந்தரேஷன் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. பாத்ரூமிற்குள்ளிருந்து டேவிட் நாளிதழுடன் வெளியே வந்தார். இந்தியாவைப் பொறுத்தவரை படிக்கும் அறை என்று ஒன்று தனியாக இருப்பதில்லை.

சுந்தரேஷனும், டேவிட்டும் இரண்டரை மணி நேரம் பேசினார்கள். பெட்ரோல் பங்கில் தீ மூட்டி குளிர் காய நினைத்தால் என்னவாகும் தெரியுமா? ஆம், சுந்தரேஷன் பற்றிக் கொண்டார். அவரது ஆர்வம் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இறுதியில் சுந்தரேஷன் கெஞ்ச வேண்டியதிருந்தது.

‘டேவிட் அலுவலகம் சென்று இதைப் பற்றி பேசுவோம்’

‘இல்ல சுந்தரேஷன் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்களேன் ப்ளீஸ்’

‘இல்ல டேவிட் டைம் ஆயிடுச்சு, நான் பல் கூட விலக்க வில்லை......’

சுந்தரேஷன் மனதிற்குள்ளாக

‘இவனுக்கெல்லாம் வாயே வலிக்காதா?’

சுந்தரேஷன் வேக வேகமாக கிளம்பினார். இறுதியாக தனது ஷுவை எடுத்து பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது திருமதி. மெர்சி காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

‘என்ணண்னே ஆபிஸ் கிளம்பிட்டீங்களா’

‘ஆமாம்மா’

பின் என்ன தினந்தோறும் சந்திரமண்டலத்துக்கா போய் வந்து கொண்டிருக்கிறேன். இவள் ஏன் இந்நேரத்தில் என் மனைவியை பார்க்க போகிறாள். ஏதேனும் விபரீதம் நடப்பதற்குள் அலுவலகத்திற்கு ஓடி விட வேண்டும் என்று நினைத்தபடி விறுவிறுப்புடன் கிளம்பினார்.

5 நிமிடங்கள் கழித்து அந்த பெண் வேகவேகமாக வெளியே ஓடினாள் தனது உளவு வேலையை முடித்துவிட்டு. மெர்சியும் அவளது 5 வயது மகனும் அவர்களது வீட்டிற்குள்ளிருந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நிமிடத்திற்குப் பின்

சுந்தரேஷனுக்கும், லதாவிற்கும் இடையே கடுமையான வாக்கு வாதம். சுந்தரேஷன் பிய்த்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். ஸ்கூட்டரை உதைத்து விரட்டினார். ஒரு செருப்பு வீட்டிற்குள்ளிருந்து பறந்து வந்தது. பின் ஒரு டிபன் பாக்ஸ் வேறு. அந்த 5 வயது சிறுவன் தன் அம்மாவிடம் தன் சந்தேகத்தை இவ்வாறு கேட்டான்.

‘அம்மா அந்த அங்கிள்தான் ஷு போட்டு போறாங்கள்ள அப்புறம் ஏன் அந்த ஆன்ட்டி செருப்ப தூக்கி வீசுறாங்க’

‘சு......... அதெல்லாம் உனக்கு புரியாது’

‘அப்புறம், அம்மா அந்த அங்கிள் டிபன் பாக்சை எடுத்துட்டு போகாம மறந்துட்டு போயிட்டாரு. அவரு மத்தியானம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாரு’

ஜன்னல் மூடப்பட்டது.

சுந்தரேஷன் அன்று மாலைக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். ஒரு 6 மாதத்திற்கு மனைவிக்குத் தெரியாமல் வியாபாரம் செய்யலாம் என்கிற விபரீதமான முடிவு அது. திரு. டேவிட் 200க்கும் மேற்பட்ட ஐடியாக்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தால் கண் வலிக்கும், ஜலதோஷம் பிடித்துக் கொண்டால் மூக்கு வலிக்கும், பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும் (விதிவிலக்கு திரு.டேவிட்), ஆனால் காது வலிக்குமா? ஆம், அது கூட வலிக்கும், திரு. டேவிட்டிடம் மாட்டிக் கொண்டால். சிறிது ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியது போல், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் பரிதாபப்பட்டு விட்டுவிடுவாரா? என்று யோசித்துக் கொண்டிருந்தார் சுந்தரேஷன், வலிக்கும் காதுகளுடன்.

அலுவலகத்தில் ஜி.பி.எப். பணம் முழுவதையும் எடுத்துவிட்டார். திரு. டேவிட்டின் அறிவுரைப்படி வாயில் நுழையாத பெயர் கொண்ட அந்த கிரீம் பிஸ்கட் பாக்கெட்டின் விநியோக உரிமையை 15 ஆயிரம் ரூபாய் கட்டி எடுத்தார். திருபாய் அம்மபானி கூட, 15 அயிரம் ரூபாயை வைத்துதான் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். அதை நினைக்கையில் பெருமிதம் பொங்கியது சுந்தரேஷனுக்கு, பிஸ்கட் பாக்கெட்டுகளை விநியோகிக்க 2 சிறுவர்களை பணியில் அமர்த்தினார்.

அந்த இரு சிறுவர்களையும் உட்கார வைத்து, ஒரு மணி நேரம் தான் படித்த தொழில் நட்பங்களையெல்லாம் ஒரு பேராசிரியர் போல விளக்கிக் கொண்டிருந்தார். இடையிடையே ஆங்கிலம் வேறு. அந்த சிறுவர்கள் இருவரும் குளிர் காய்வது போல் கைகளிரண்டையும் கட்டிக் கொண்டு பணிவுடன் மலங்க மலங்க விழித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் புது சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

வேலை தொடங்கியது. தினசரி பிஸ்கெட் பாக்கெட்டுகள் காலியாகி கொண்டிருந்தன. சுந்தரேஷனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னைப் போல் தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவர்கள் யாரும் இல்லை என்று பெருமிதமாக எண்ணிக் கொண்டார். அந்த சிறுவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். அவர்களும் உற்சாகமாக வேலை செய்தார்கள். தமிழ் நாட்டில் ஒரு அம்பானி சத்தமில்லாமல் உருவாகிக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் எப்பொழுதும் லேட் பிக்அப் தான் தன்னைப் பற்றி புரிந்து கொள்ள சில வருடங்கள் எடுத்துக் கொள்ளும்.

ஒரு மாதம் கடந்திருந்தது. வரவு செலவு கணக்குகளை பார்த்துவிட வேண்டியது தான் என்று கங்கணம் கட்டியபடி அலுவலகத்திற்கு விடுமுறை கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டார். தனது தனி அலுவலகத்திற்கு (வாடகைக்கு எடுத்திருந்தார். திரு. டேவிட்டின் அறிவுரைப்படி) வந்து நாற்காலியில் அமர்ந்தார். ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். அந்த நாற்காலி ஒரு மின்சார நாற்காலியாக மாறிப்போனது. அவருக்குள் வோல்டேஜ் கணக்கில் மின்சாரம் ஏறிக் கொண்டிருந்தது. பின் இரு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் சில விஷயங்கள் அவருக்கு தெரியவந்தது.

1. விநியோகிக்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகளில் பாதிதான் கடைகளுக்கு சென்றன. மீதி அந்த சிறுவர்களின் வயிறுகளில் தஞ்சமடைந்து விட்டன. பின் தான் யோசித்தார், அவர்களுக்கு மதிய உணவு பேட்டா கொடுக்காமல் போனது எவ்வளவு பெரிய தப்பாகி விட்டது என்று. சுந்தரேஷனின் கணக்குபடி 3570 ரூபாய்க்கு பிஸ்கட்டுகளை சாப்பிட்டிருக்கிறார்கள். இது ஒரு சாதனையும் கூட.

2. ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 7 ரூபாய் 50 பைசா. அதை செவன் ருபீஸ் பிப்டி பைசே என்று ஆங்கிலத்தில் சொல்லவில்லை என்று யார் அழுதது. அதை குத்துமதிப்பாக புரிந்து கொண்ட அந்த சிறுவர்களில் ஒருவன் 3.50க்கும், மற்றொருவன் 4.50க்கும் விநியோகம் செய்திருக்கிறார்கள். இப்பொழுதான் புரிந்தது பிஸ்கட் பாக்கெட்டுகள் அவ்வளவு வேகமாக ஏன் விற்றுத் தீர்ந்தன என்று.

3. மூன்றாவது முக்கியமான விஷயம், ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டிருக்க வேண்டிய விஷயம், அவர்கள் இருவரில் ஒருவன் 2 வது படிக்கும் பொழுது அவனது ஆசிரியரின் அழகான, முடியில்லாத மண்டையில், ஒரு அழகான வழவழப்பான மற்றும் உருண்டையான வெள்ளை நிற பளிங்கு போன்ற கல்லை போட்டு விட்டான். நியாயமாக அந்த கல் உடைந்திருக்க வேண்டும். அந்த சிறுவனின் போதாத காலம் ரத்தம் தோய்ந்த சிவப்பு நிறக் கல் நீதிமன்றத்தில் சாட்சியாகிப் போனது. சென்ற வருடம் தான். சிறுவர் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தான். மற்றொருவன் அவனது சிறைத்தோழன். அவன் பள்ளிக்கு செல்ல சொன்ன அவனது தந்தையின் மண்டையில் கபடி விளையாடியவன்.

இந்த இரு கல்வி மேதைகளிடமும், செவன் ருபீஸ் பிப்டி பைசே என்று சொல்லவில்லை என்றால் தான் என்ன? சுந்தரேஷனின் கண்களில் கண்ணீர் துளிகள் ரயில் பூச்சி போன்று வழிந்து கொண்டிருந்தது. இது ஆனந்த கண்ணீரா, சுயபச்சாதாப கண்ணீரா, அல்லது பயக் கண்ணீரா, இல்லை கோபக் கண்ணீரா ஒரு முடிவுக்கு வர முடியாத ரியாக்ஷன்.

இந்த விஷயம் மட்டும் மனைவி லதாவிற்கு தெரிந்தால், ஐயோ, அந்த வெண்கலப் பானையால் மட்டும் தன்னால் அடி வாங்க முடியாது. அது இரும்பை விட கடினமாக இருக்கிறது. நினைக்கும் பொழுதே உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் இருவருக்கும் கடைசியாக இருந்த 4 பிஸ்கட் பாக்கெட்டுகளை ஆளுக்கு இரண்டாகப் பிரித்து கொடுத்து வழியனுப்பி வைத்தார் சுந்தரேஷன். தனது சோடாபுட்டியை கழற்றி உறைந்து போயிருந்த கண்களை துடைத்துக் கொண்டார்.

தனது தனி அலுவலகத்தை மூடிவிட்டு, ஸ்கூட்டரை உதைக்க தெம்பில்லாமல் உருட்டிக் கொண்டே சென்றார். மொத்தமாக கணக்கு பார்த்ததில் 33,270 ரூபாய் நஷ்டம். தனது 3 மாத சம்பளம். வேதனையில் வாய் குளறி தனக்குத் தானே இவ்வாறு கூறிக் கொண்டார்.

‘ஐயோ, லதா! எனக்கு 33,270 ரூபாய் நஷ்டம் கூட பெரிய விஷயம் அல்ல. நமது வீட்டு புறக்கடையில் உள்ள அந்த உரல் குத்தும் தேக்கு மரத்தாலான உலக்கைதான். அதை நினைக்கும் பொழுதே வேர்வை அனைத்தும் மொத்தமாக வெளிவருகிறது. உன் அப்பன் சொட்டைத் தலையன் கொடுத்த சீதனங்கள் எல்லாம் மிகக் கொடூரமான ஆயுதங்களாக அல்லவா இருக்கின்றன.’

இடம் திரு. டேவிட்டின் வீடு

திரு. டேவிட் தன் நண்பனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

‘இதற்கெல்லாம் வருத்தப்படலாமா. பிசினஸ்னா அப்படித்தான் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இதையெல்லாம் சமாளிச்சுதான் மேல வரணும். என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு......... இந்த சாக்கலேட் சாப்பிட்டுருக்கீங்களா.......... ஆதித்யா சாக்லேட்டுன்னு புது பிராண்ட் ஒண்ணு மார்கெட்ல வந்திருக்கு............ சுந்தரேஷன்.........சுந்தரேஷன்.......... சுந்தரேஷன் எங்க எழுந்து போறிங்க..... சுந்தரேஷன்......... இதுக்கெல்லாம் மனசு ஒடிஞ்சு போகக் கூடாது........

புத்தர் கூட தோற்று போவார். அவ்வளவு அமைதியாக எழுந்து தனது வீட்டை நோக்கி நடந்தார் சுந்தரேஷன்.

அதிகாலை நேரம்

ஸ்ருதி, தூங்கிக் கொண்டிருக்கும் சுந்தரேஷன் மீது வந்து குதித்தாள்.

டாடீடீ.......... டாடீடீ........... எனக்கு பிஸ்கட் எடுத்து தாங்க டாடி. எந்திரிங்க டாடீடீ..... எனக்கு பிஸ்கட் வேணும் டாடி.

பதறி எழுந்த சுந்தரேஷன், அவிழ்ந்து விழப்போன வேட்டியை இறுக்கி பிடித்தபடி

‘ஐயோ, நான் இல்ல....... நான் இல்ல......என்னை மன்னிச்சிடுங்க....... மன்னிச்சிடு லதா.......தெரியாம பண்ணிட்டேன்........... லதா... ல.........ல.........’

மிரண்டு போன ஸ்ருதி சுவரின் மூலையில் நின்று கொண்டு வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.


இப்பொழுதெல்லாம், சுந்தரேஷன் தனது ஆத்ம நண்பர் திரு. டேவிட்டைப் பார்த்தால் ஒரு நூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரரைப் போல் மாறிவிடுகிறார். வாழ்க்கையில் தப்பிக்கும் கலைதான் எவ்வளவு முக்கியமானது. திரு. டேவிட்டின் வார்த்தைகளிலிருந்து, திருமதி லதாவால் தூக்கியெறியப்படும் ஆபத்து மிகுந்த கணைகளிலிருந்து. 33,270 ரூபாய் செலவு செய்து திரு. சுந்தரேஷன் கற்றுக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கைக்கு மிக அவசியமான மற்றும் அழகான இந்த தப்பிக்கும் கலை, அனுபவப்படாதவர்களுக்கு ஒரு இலவச பாடம்.

- சூர்யா