என் மென்னியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
பேரண்ட பிரபஞ்சத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கோண மூலையில், நான் மட்டும் தனியாய், ஏனோ புரியாமல் போன, ஒரு நாழிகைத் துவாரத்தில், சிறகாய் வந்த பெரு யானையுடன் மரணக்கிணற்றின் தீச்சுவாலையை பற்றிக் கொண்டு..............
1. அவர் ஒரு சர்ரியலிச எழுத்தாளர்
2. நான் அவரது அறை நண்பன்
3. நான் அவரிடம் கேட்டது ‘எங்க போயிருந்தீங்க’
மயக்கம் தான் போட்டிருக்கிறாரா அல்லது செத்துவிட்டாரா? என்று தெரியவில்லை. கீழே விழுந்துவிட்டார். அவர் எங்களது அறையின் புதிய விருந்தினர் முத்துகிருஷ்ணன். அவர் ஒரு கௌரவமான வேலையில் இருப்பவர். அவரிடம் நான் ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன். எப்பொழுதும் சர்வ ஜாக்கிரதையாக, எல்லையில் நிற்கும் போர் வீரனைப் போல தெறிநிலையுடன் இருக்க வேண்டும் என்று. அவருக்கு அவ்வளவு ஜாக்கிரதை உணர்வு பத்தவில்லை. இப்படித்தான் நிகழும் என்று எதிர்பார்த்தேன். நான் கடவுளிடம் வேண்டினேன். வீட்டு வாடகை கொடுப்பதற்காவது அவரை உயிருடன் விட்டுவிடு கடவுளே........... என்று உருக்கமாக.
நான் அந்த எழுத்தாளரை சுருக்கமாக சார்லி என்றுதான் குறிப்பிடுவேன், சர்ரியலிச என்று கூற கடுப்பாக இருக்கிறது. சர்ரியலிசம் என்பது காலப்போக்கில் மருவி சார்லியாகி விட்டது என்று கூறினால் நம்பமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க வேண்டாம். அவரது நிஜப்பெயர் எனக்குத் தெரியாது. ஆரம்பத்தில் சந்தித்த பொழுது அவரிடம் அவரது பெயரைக் கேட்டேன். ஏதோ புரியாத மொழியில், ஆனால் தமிழில்தான் பேசினார். பாதியில் மயங்கிவிட்டதால் முழுதாக ஞாபகம் இல்லை. அப்பொழுது எனக்கு அவ்வளவாக பயிற்சி கிடையாது. போகப் போக என்னை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதைக் கற்றுக் கொண்டேன்.
திரு. முத்துகிருஷ்ணனை இவ்வளவு பொறுப்புணர்வுடன் பாதுகாக்க நினைப்பதன் ரகசியம் எனது கடந்த கால அனுபவத்தில் ஒளிந்திருக்கிறது. மீட்டர் வட்டி வாங்கும் ஒரு கொடூரமான ரவுடியை விட மோசமான ஒருவனை காண்பிக்கச் சொன்னால் நான் தயக்கமின்றி எனது ஆட்காட்டி விரலை உயர்த்தி காண்பிப்பேன் எங்களது வீட்டு ஓனரை நோக்கி. அதை வீடு என்று அடிக்கடி தவறுதலாக்க் கூறிவிடுகிறேன். அது ஒரு குட்டி அறை. அந்த அறையில் உள்ள குழாயில் 6 மாதங்களுக்கு முன்பாக தண்ணீர் வந்ததாக ஞாபகம். சத்தியமாக ஆறு மாதத்திற்கு முன் அந்தக் குழாயில் ஒரு சொட்டு தண்ணீரை பார்த்திருக்கிறேன். எனது சொந்த ஊர் திண்டுக்கல். மலைக் கோட்டையில் உள்ள திப்பு சுல்தான் கோட்டையில் நுழைந்தவுடன் ஒருவித உப்பு நெடி வீசும். நான் ஒருநாள் ஊருக்குச் சென்றிருந்த போது நண்பர்களோடு அங்கு சென்றிருந்தேன். நண்பர்கள் அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டார்கள் உப்பு நெடி பொறுக்க முடியாமல். ஆனால் நான் அதுபோன்று அசிங்கமாக எதுவும் செய்யவில்லை. காரணம் அந்த நெடி நான் அனுதினமும் அனுபவிக்கும் நெடிதான். எனது அறையின் நெடி அது. எனது வாழ்விடத்தை நினைவுப்படுத்தியது அந்த நெடி. இது அறையின் அநாயசமான சூழ்நிலை. இப்படிப்பட்ட ஒரு அறைக்கு ஆயிரத்து 500 ரூபாய் வாய் கூசாமல் வாடகை கேட்கிறான் அந்த வீட்டுக்காரன்.
ஆனால் எனது திறமை குறித்து ஒன்றுமறியாதவர் அந்த வீட்டுக்காரர். ஆறு மாதங்கள் முழுதாக ஆறு மாதங்கள் வாடகை கொடுக்காமல் சமாளித்திருக்கிறேன் என்றால் என்னையே என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்வில் யார் முதலில் கற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்கிறார்கள். ஆறு மாதங்களானாலும் என்னை கற்றுக் கொண்டார் அந்த வீட்டுச் சொந்தக்காரர். அந்த பழைய முறையை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார். அது ஒரு மோசமான பழைய முறை. கழுத்தில் துண்டைப் போட்டு கடனை வசூலிக்கும் பழைய முறை. அன்றுதான் எனக்கு அறிமுகமானார் திரு. சார்லி.
ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பது எவ்வளவு உண்மையான வார்த்தையாக இருக்கிறது. அந்த வீட்டுக்காரரை சமாளிக்க சார்லிதான் சரியான ஆள் என்கிற அடிப்படை உண்மை பளிச்சென்று என் மூளையில் அன்று உதித்தது. அன்று அவரை அறையில் இருக்கச் செய்துவிட்டு நான் வெளியே சென்று விட்டேன். துண்டை கழுத்தில் போட்டு வாடகை வசூல் செய்ய வந்த வீட்டு ஓனரிடம் முழுதாக ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார் திரு. சார்லி. என்னால் அதைப்பற்றி புரிந்து கொள்ள முடியும். அது அவ்வளவு சாதாரணமாக இருந்திருக்காது என என்னால் யூகிக்க முடிகிறது. என்னால் கூட முடியாது அவ்வளவு கொடூரமான தண்டனையை கொடுக்க. அவர் ஒரு வித்தியாசமான உணர்வை அடைந்திருப்பார். அது மரணத்தை நேரில் சந்தித்த உணர்வை அவருக்கு கொடுத்திருக்கலாம். அது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால், உயிரோடு இருக்கும் போதே இறப்பை சந்திக்கும் விநோதமான தருணங்கள் வாழ்வில் வெகு சிலருக்கே ஏற்படும். அதற்காக, அப்படிப்பட்டதொரு உணர்வை அறிமுகப்படுத்தியதற்காக அந்த வீட்டுச் சொந்தக்காரர் எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு இது முற்றிலும் இலவசம். ஆம் நூறு சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட்டுவிட்டது அவருக்கு.
மீண்டும் ஒரு முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது அவ்வளவு நிச்சயமில்லை. இருப்பினும் அந்த பரிதாபத்துக்குரியவரின் நிலைகுறித்து அறிய ஆவல் கொண்டவனாக அவரை சந்திக்க முனைந்தேன். எனது அதிர்ஷ்டம் ஒரு நாள் கடைத்தெருவில் மாட்டிக் கொண்டார். எலிகளின் நிலை குறித்து எப்பொழுதும் எனக்கு பரிதாபம் உண்டு. பொரி வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனால் ஒரு எலி என்னை பொரி வைப்பவனாக நினைக்கும் பொழுது நான் என்ன செய்வது? அவரால் ஒரு 20 வயது இளைஞனைப் போல் ஓட முடியும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் என் உள்உணர்வு கூறியது, அவர் என்னை பார்த்து தெறித்து ஓடவில்லை என்று. நான் மறந்தே போயிருந்தேன் என் அருகில் திரு. சார்லி இருந்ததை. அவரை நான் இவ்வாறுதான் சமாளிக்க வேண்டியதிருக்கிறது.
மறந்துவிடுதல் என்ற அறிய கண்டுபிடிப்பை நான் கண்டுபித்திருக்கிறேன். திரு. சார்லி என் அருகில்தான் இருக்கிறார். ஆனால் அவரைப்பற்றி எனக்குத் தெரியாது. அவரை நான் பார்க்கவில்லை. ஆம் அவர் எங்கோ வடதுருவத்திலும், நான் எங்கோ தென் துருவத்திலும் இருக்கிறோம்.
திரு. சார்லி ஒரு காய்கறி கடைக்காரரிடம் 200 கிராம் தக்காளி வாங்குவது குறித்து பேரம் பேசிக்கொண்டிருந்தார். அந்தக் கடைக்காரர் மேல் எனது பரிதாப உணர்வு மேலோங்கியது. அவரது உயிரைக் காக்கும் கடமை உணர்வு என்னை உந்தித் தள்ளியது. ஒரு 200 கிராம் தக்காளிக்காக ஒரு உயிர் வதைபடுவதை என்னால் கிஞ்சித்தும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மதயானையை அடக்க அதிகபட்சம் தகுதியானவர் ஒரு பாகனாகத்தான் இருக்க முடியும். இப்பொழுது நான் ஒரு பாகன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதால், ஓடிச்சென்று அவரது காதுகளில் அந்த விஷயத்தை கூறினேன். அது எங்களது அறைச் சொந்தக்காரர் அவரை சந்திக்க விரும்புவதை பற்றியதாக இருந்தது. அவர், நூறுமீட்டர் தூரத்தில், நூறுமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். சரியாக சொல்வதென்றால் இது போதுமானதாக இருந்தது. திரு. சார்லி நிச்சயமாக விரும்பமாட்டார், தன்னுடன் ஒரு மணி நேரம் பேசும் தகுதிபடைத்தவரை விட்டுவிட. அவரால் அவ்வளவு வேகமாக ஓடமுடியவில்லை என்றாலும் ஓடினார். அதுவே போதுமானதாக இருந்தது அந்த சூழ்நிலைக்கு.
திரு. சார்லி எனது ஆயுதமாக இருக்கிறார் என்றால் அது மிகையில்லை. இது போன்ற புதுவித ஆயுதத்தைப் பற்றி உலகம் யோசித்துக் கூட பார்த்திருக்காது. என்னைக் கேட்டால் நான் இதைத்தான் கூறுவேன். உலகின் மிகச்சிறந்த ஆயுதம் அணு சக்தியால் செய்யப்பட்ட ஆயுதம் அல்ல. சிந்தனை........ கருத்து........... சொல்.......... இவைதான் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கப் போகிறது. அணுகுமுறையில் மட்டுமே வித்தியாசம் வேண்டும். உலகம் மயங்கத் தயாராக இருக்கிறது. ஏசுவும், முகம்மதுவும், புத்தரும் சேர்ந்து உருவாக்கிய உலகம் இது. இந்த நவீன உலகிற்கு திரு. சார்லி ஒரு முன்னுதாரணம், சிறு உதாரணம். விரோதம், வன்முறை, சண்டை, இவற்றிற்கெல்லாம் அவ்வளவு தகுதியில்லை நீடித்திருப்பதற்கு. உலகில் வலிமையான விஷயங்கள் மட்டுமே நீடித்திருக்கும். சிந்தனை ஒரு வலிமையான விஷயம். சொல் ஒரு வலிமையான தாக்குதல். சார்லி ஒரு வலிமையான ஆயுதம்.
ஆனால் ஆயுதங்கள் எப்பொழுதும் ஒன்றோடு முடிந்துவிடுவதில்லை. என்னால் திரு சார்லி கண்டுபிடிக்கப்பட்டது போல, எனது அறை ஓனர் அவர்களால் இன்னொருவரை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த இன்னொருவரால் சார்லிக்கு ஈடுகொடுக்க முடிந்தது. நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நாய்க்கு பிஸ்கட் போட்டு சமாளிப்பது போல, இந்நிகழ்ச்சி இருந்தது. பிறகு நான் ஓடி ஒளிய இடம் இல்லாமல் போய் விட்டது.
உணவு, உடை, இருப்பிடம் மூன்றின் இன்றியமையாமையைப் பற்றி பள்ளிகளில், ஆசிரியர்கள் சொல்லி கொடுத்த பொழுது, சகிக்க முடியாத கல்வியாக இருந்தது. ஆனால் அத்தனையும் நிஜம். வாழ்வின் அடி ஆதாரத்தையே தகர்த்தெறிந்துவிடும் சக்தியுள்ளது அவை மூன்றிற்கும். நான் ஒரு 3வது மனிதரை தேட வேண்டியிருந்தது. எனது இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ள. ஆனால், எனக்கென ஒரு வேலையை தேடிக்கொள்ளக்கூட நிதானிக்க விடாத எதன் துரத்துதலில் நான் சிக்கிக் கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் எதனாலையோ துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் எதனால் துரத்தப்படுகிறேன் என்பதை சரியாக கணிக்க முடியவில்லை. மனிதர்களைக் குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. சுட்டிக்காட்டப்பட வேண்டிய வேறு ஏதோ ஒன்றினுள் அகப்பட்டுக் கொண்டது போல் தோன்றுகிறது.
ஆனால், சரியாக வந்து சிக்கிக் கொண்டவர் திரு. முத்துகிருஷ்ணன்தான். பார்த்த பொழுது, அவர் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்த இந்த வாசகத்தைதான் நான் படித்தேன். அதில் ‘நான் ஒரு அப்பாவி” என்று எழுதப்பட்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு மறுபடியும் பார்த்தேன். மறுபடியும் சந்தேகமின்றி அதேதான். ‘நான் ஒரு அப்பாவி”. ஆனால் அப்பாவிகளை பார்க்கும் பொழுது ஏமாற்றக் கூடாது என்று எந்த திருடனுக்கும் தோன்றும். நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. நான் ஒரு புத்திசாலி. என்னை யாரும் ஏமாற்ற முடியாது என்று இறுமாப்புடன் திரியும் சிலரை பார்க்கும் பொழுதுதான், சவாலாக தோன்றும். சிறிது விளையாடிப்பார்க்கலாம் என்கிற ஆசை உந்தித் தள்ளும். உண்மையில் ஜாக்கிரைதையாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் தூண்டிவிடுகிறார்கள். அந்த வகையில் பார்க்கும் பொழுது. திரு. முத்துகிருஷ்ணனை பாதுகாக்க வேண்டும் என்று தோன்றியது. வேறு யாரிடமும் சென்று அதிகபட்சமாக அவர் ஏமாற்றப்படவேண்டாம் என்று யோசித்தேன். அவர் என்னிடமே குறைவாக ஏமாந்தால் போதுமென்று நினைத்தேன். ஆம். நான் வெட்கத்துடன் ஒத்துக் கொள்கிறேன். நான் ஒரு குறைவாக, அளவாக, அடுத்தவர் சக்திக்கு ஏற்ப ஏமாற்றக் கூடிய மனசாட்சியுள்ள நியாயமான திருடன் என்று.
அன்று திரு. முத்துகிருஷ்ணனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எனது வர்ணனைகளைக் கண்டு அவர் ஒரு தாஜ்மஹாலை எதிர்பார்த்திருக்கலாம். நான் சற்று தைரியமாக இருந்தேன். எனக்கு நெஞ்சுவலி வருபவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அறையை பார்த்ததும் எச்சிலை இரண்டு முறை விழுங்கினார். அவரது மனக்குமுறலை போக்குவதற்காக, இந்த சென்னையைப் பற்றியும் அதன் ஏமாற்றும் குணங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாக எடுத்துரைத்தேன். அவர் சற்று சமாதானம் அடைந்தவராகத் தோன்றியது. மேலும் ஒரு கடினமான பொறுப்பு என் தலைமேல் உள்ளது. இந்த ஆட்டை ஒரு புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டும். திரு. முத்துகிருஷ்ணனைத் தயார்படுத்த வேண்டும். நிச்சயமாக ஒரு போர்வீரனை நான் உருவாக்கியாக வேண்டும்.
ஆனால் அது நிகழ்ந்துவிட்டது.
முகத்தில் தண்ணீர் அடித்தும் அவர் எழுந்திருக்கவில்லை. நிச்சயமாக அரை மணி நேரம் தாக்குப் பிடித்தது குறித்து ஆச்சரியமாகத்தான் இருந்தது. மயக்கம் தெளிந்தவர் அந்த பழைய புளித்துப் போன கேள்வியை கேட்டார்.
‘நான் எங்க இருக்கேன்'
நான் அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டேன். அடுத்த முறை இவ்வாறு நடக்கும் போது இது போன்றதொரு கேள்வியை கேட்கக் கூடாது என்று. இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனியும் தொடருமோ என்று நினைத்து பயந்தாரோ, என்னவோ? அதிக மிரட்சியுடன் காணப்பட்டார். எனக்கு மட்டும் சக்தியிருந்தால் நான் ஒரே ஒரு சாபத்தை மட்டும் தான் பயன்படுத்துவேன். அது திரு. சார்லி ஊமையாகப் போவதைப் பற்றியதாக இருக்கும். நான் எனது அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி சூழ்நிலையை சமாளிக்க வேண்டியதாகப் போயிற்று.
இதெல்லாம் ஒரு பொழப்பா........தூ........ என்று காரித்துப்பியது வேறு யாருமல்ல எனது மனசாட்சிதான். ஒரு நாள் ஏற்பட்ட கனவைப்பற்றி கூற வேண்டும். நான் கால்மேல் காலை போட்டுக் கொண்டு ஒரு அறையில் உட்கார்ந்திருக்கிறேன். தனது கைகளில் துண்டை பிடித்துக் கொண்டு சுற்றியபடி அறைச் சொந்தக்காரர் வருகிறார். நான் சம்பாதித்த...........(அந்த நேரத்தில் கூட எனக்கு ஆச்சரியமாக இருந்தது) பணத்தை எடுத்து அவர் முகத்தில் தூக்கி வீசுகிறேன். ‘பிடி உன் வாடகையை” என்று சத்தமாக கத்துகிறேன். வீட்டுக்காரர் என்னை ஆச்சரியமாகப் பார்க்கிறார். எல்லாம் ஸ்லோமோஷனில் நடக்கிறது. அந்த இடமே புகை மூட்டமாக வேறு இருந்தது.
ஆனால் இவையெல்லாம் கனவு என்று தெரிந்த பொழுது உள்ளம் நொந்து போனது. கடவுள் இரக்கமற்றவரா என்ற எனது சந்தேகம் உறுதிபட்டுவிட்டது. ஆம், முதலில் அவர், பின்புதான் நான் இரக்கமற்றவனாக மாறினேன். ஆம் ஒரு அப்பாவியை ஏமாற்றத் துணிந்தேன். அந்த கழிவிறக்கம் காரணமாக என் மனதிற்குள்ளாக இவ்வாறு புலம்பினேன்.
‘இந்த பிறவியில் நீ என்னிடம் ஏமாறு, அடுத்த பிறவியில் நான் உன்னிடம் ஏமாறுகிறேன் என்று’
கணக்கு நேராகிவிடும். ஆனால் எனக்கு அதிசயங்கள் நிகழ்வதில் சற்று நம்பிக்கையுண்டு. என்றேனும் ஒருநாள் அந்த கனவு மெய்யபடும். கடினமாக உழைத்தால் வெற்றிகிட்டும் என்பதில் சுத்தமாக எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதை தொடங்கலாம் என்றிருக்கிறேன். இந்த ஏமாற்றும் உலகில் ஏமாற்றினால்தான் பிழைக்க முடியும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தாலும், ஏனோ அதைத் தொடர முடியாது என்றே தோன்றுகிறது. சூழ்நிலை என்னை எங்கு இழுத்துச்செல்கிறது என்று தெரியவில்லை. இவ்வளவு முரண்பாடுகளுக்கு நடுவே, சார்லி மட்டும் சற்று நம்பிக்கை தருகிறார். காரணம் அவர் ஒரு முரண்பாட்டுக் குவியல். அவருக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது, எனக்குள்ள பிரகாசமான வாய்ப்புகளை என்னால் சிறிது யோசித்துப் பார்க்க முடிகிறது.
- சூர்யா

நன்றி கீற்று, திண்ணை