இது புரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது.
அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான்.
அவன் இடது கையால் தான் சாப்பிடுவான்.
அவன் 9 மணிக்குமுன் படக்கையைவிட்டு எழுந்ததேயில்லை.
அவன் பல்துலக்கியதே இல்லை.
அவன் தலையில் எண்ணெய் தேய்த்ததேயில்லை.
ஆனால், அவன் பள்ளிக்கு தவறாமல் செல்கிறான். ஏனெனில் பள்ளிக்கூடம் சென்றால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். ஆம் அன்றுதான் நான் அவனை புரிந்து கொண்டேன். அவனது எதிர் செயல் எனக்கெதிராகத்தான் என்பதை. அவன் வேறு யாருமல்ல என் மகன்தான்.
நான் அடிக்கடி மனதிற்குள் நினைத்து, நினைத்து குமுறி நொந்து போன விஷயம் எது தெரியுமா? அன்று ஏன் நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு சினிமாவுக்கு சென்றிருக்கக் கூடாது என்பதுதான். அல்லது ஒருவேளை சென்ற பிறவியில் நான் ஒரு கொடூர கொலைகாரனாக இருந்து பலரின் சாபங்களை பெற்றுவிட்டேனா என்று தெரியவில்லை. மனவேதனையின் உச்சத்தில் நேற்று கோவிலுக்கு சென்ற பொழுது நான் இதைத்தான் வேண்டிக்கொண்டேன். கடவுளே என் பையனைபோன்ற ஒருவனை அந்த இலங்கை கொடூரனுக்கு பிள்ளையாகக் கொடு என்று. அது ஒரு நல்ல தொடர்பாக இருக்கும். பின் என்னைப் போன்ற ஒருவனுக்கு பைத்தியம் பிடிப்பதால் நாட்டுக்கு என்ன நலன் கிடைத்துவிடப் போகிறது. பைத்தியம் யாருக்கு பிடிக்க வேண்டுமென்பதில் அவ்வளவு தெளிவாக இல்லை அந்த கடவுள்.
ஆனால் நேரத்திற்கு உணவு உண்பதைப் பொறுத்தவரை அவனது எதிர்ச்செயல் செய்யும் தன்மை செல்லாக்காசாக போய்விட்டது. நான் அவனைப் பார்த்துக் கூறுவேன், அல்சர் பிராப்ளம் வர்றதெல்லாம் நேர நேரத்துக்கு சாப்டாம இருக்கிறதனாலதான் என்று. அவனிடம் கூறிய பொழுது அதன அர்த்தமே வேறு. ‘சொன்ன பேச்ச கேக்காத நீயெல்லாம் நேரநேரத்துக்கு சாப்ட்டு என்ன பண்ணப் போற” என்பது. இதுதான் நிஜம். ஆனால் அவன் என்ன செய்திருக்க வேண்டும். ஒரு அப்பனை எதிர்க்கும் நியாயமான பிள்ளையாக, முகத்தை திருப்பிக் கொண்டல்லவா சென்றிருக்க வேண்டும். 5 நாள் பட்டினியாய் கிடந்த முதுமலை காட்டு யானை போன்று பேய்த்தீனி தின்கிறான் என்றால் எனக்குப் புரியவில்லை என்ன நடக்கிறது என்று.
இது எப்பொழுது ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் போல குழந்தை பிறந்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இதை இப்பொழுது சொல்ல எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. நான் அப்பொழுது கண்ணீர் வேறு விட்டேன். ஆம் ஆனந்தக் கண்ணீர்தான். சத்தியமாக அது நிஜம்தான். என்னால் இப்பொழுது அந்த உணர்வை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
2 வயதில் அவன் செய்த சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது. ஆம் எனது மாமனார் ஆசையாக வாங்கிக்கொடுத்த அதுவும் நெஞ்சுவலி வந்து இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் வாங்கிகொடுத்த கோல்டு பிரேம் வாட்சை, ஆசையாக வாங்கி தூக்கி கீழே எரிந்துவிட்டான். அப்பொழுது நான் அவனை என் மார்போடு அணைத்தப்படி 3வது மாடியில் நின்று கொண்டிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. நிஜமாக நம்பித்தான் ஆக வேண்டும், நான் அந்த செயலை ரசித்தேன் என்பதை. என்னுடைய கோபமெல்லாம் கீழே விழுந்து நொறுங்கிய வாட்சை தூக்கிக் கொண்டு ஓடினானே ஒரு திருட்டுப் பயல் அவன் மேல்தான். அவன் அன்று என்கையில் சிக்கியிருக்க வேண்டும். என் மனைவிக்கு தினமும் அரைத்து கொடுக்கும் தக்காளி சட்னியை விட கேவலமாகிப் போயிருப்பான்.
ஆனால், பிறகு நான் கலவரமடைந்ததெல்லாம் 5 வயதில் அவன் செய்த சேட்டைகளைப் பற்றிதான். தினமும் நான் தூங்கும் பொழுது உருட்டுக் கட்டையை எடுத்து வயிற்றின் மேல் சாத்த ஆரம்பித்துவிட்டான். பதறிப் போய் எழுந்து கண்கள் இரண்டையும் துடைத்துக் கொண்டு என்ன என்று கேட்டால், வயிற்றுக்குள் கரடி கத்துகிறது என்கிறான். நான் குறட்டை விடுவதைத்தான் அப்படிக் கூறுகிறான். அது முதல் முறை என்றால் பரவாயில்லை. 18 முறை வாங்கிவிட்டேன். இதில் 6 முறை கனவில். தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தூங்க வேண்டிதாயிருந்தது. எனக்கு அப்பொழுதே மனதில் பட்டது. இது அவ்வளவு நார்மலாக இல்லை என்று.
பிறகு ஒருநாள்,அது தீபாவளி முடிந்து 2 நாள் கழித்து நிகழ்ந்த நிகழ்ச்சி. பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற எனது கண்டிப்பான உத்தரவையும் மீறி எனது பாக்ககெட்டிலிருந்து 5 ரூபாயைத் திருடி ஒரு வெடியை வாங்கி ஒளித்து வைத்திருக்கிறான். எங்கு தெரியுமா எனது சிகரெட் பாக்கெட்டில். எனக்குப் பயந்து ஒளித்து வைத்தானா, இல்லை பழிவாங்க ஒளித்து வைத்தானா என்று தெரியவில்லை. வெடித்தது சிறிய அளவு சீனிவெடிதான் என்றாலும், அனைவருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்க வாய்ப்பில்லை. என்னால் வாயை திறந்து திட்டக் கூட முடியவில்லை. இது ஏதோ தேர்ந்த ஒருவனின் சதிச்செயல் போல் தோன்றினாலும், அவன் அப்பொழுது குழந்தை என்பதால் சந்தேகப்பட முடியவில்லை. என் மனைவி இன்றளவும் கேலி செய்வதற்கு ஏதுவான செயலாக போய்விட்டது அந்த சம்பவம். சிகரெட்டுக்கும், சீனிவெடிக்கும் வித்தியாசம் தெரியாதவர்தான் என் புருஷன் என ஒவ்வொரு வீடாக சென்று லெக்சர் கொடுத்து வருகிறாள்.
இந்த சம்பவம் சற்று கொடூரமானது. நான் உயிர் பிழைத்திருக்கிறேன் என்றால் அதற்கு தெய்வச் செயல்தான் காரணம். ஒரு நாள் வீட்டில் ஓடாமல் இருந்த கடிகாரத்தை சரி செய்து விட்டானாம் என் மகன். அந்த சம்பவம் காட்டுத் தீபோல அக்கம் பக்கம் எல்லாம் பரவிவிட்டது. அவ்வளவு வேகம் காட்டுத்தீக்கு கூட கிடையாது. என் மனைவி ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்திருப்பாளேயானால், அக்கட்சி சுலபமாக ஆட்சியை பிடித்திருக்கும். அப்படியொரு வேகம் செய்தியைப் பரப்புவதில். அது ஒரு செய்தித் தொலைக்காட்சியால் கூட முடியாது. அடுத்தவர் கருத்திற்குள் செய்தியை திணிக்கும் கலையில் டாக்டர் பட்டம் ஏதேனும் இருப்பின் அதை என் மனைவிக்கு வழங்காமல் இருப்பது குறித்து ஒரு பல்கலைக்கழகம் வெட்கப்பட வேண்டும்.
விஷயம் அதுவல்ல. என் மகன் தனக்கு மெக்கானிக்கல் மைண்ட் இருப்பதாக நம்பத் தொடங்கியது தான். வீட்டிலிருந்த தொலைக்காட்சியை ரிப்பேர் செய்தான். அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது அதை அவன் வேலை பார்க்கும் வரை. பின் ஒரு புது கலர் டி.வி வாங்க வேண்டியிருந்தது. பின் என் மனைவி சமையல் செய்யும் குக்கர். என்மனைவி எதையுமே வீணாக்குவதில்லை. இப்பொழுது அந்த குக்கர் மூடியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறாள். எனக்கெதிராகத்தான் என்பது வேதனையான உண்மை. விஷயம் விபரீதமாகப் போய் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டுதான் இருந்தேன் என்றாலும், அன்று எப்படியோ நிகழ்ந்துவிட்டது. நான் மோதியது நல்ல வேளையாக ஒரு ஆட்டோவாக இருந்தது குறித்து மகிழ்ச்சி கொள்ள வேண்டியதாயிருந்தது. அவன் பிரேக் ஒயரில் தனது ஆராய்ச்சியை செய்திருக்கிறான் என்பது மோதுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்தான் தெரியவந்தது. எனக்கு இப்பொழுது நன்றாக புரிந்துவிட்டது. ஏதோ நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது எனக்கெதிராக.
அன்றிலிருந்து ஒரு தவறான உறவுமுறை உருவாக ஆரம்பித்துவிட்டது. அவனது ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண ஆரம்பித்துவிட்டேன். ஒரு வேளை அவன் ஏதேனும் சரியாக செய்திருக்கும் போதும் நான் குறையாகவே எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டேன். என்னால் சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த அணுகுமுறை அவனை எவ்வகையில் பாதித்ததோ, அவனும் தனக்குரிய வழிமுறையை கண்டுகொண்டான். அவனும் எனக்கெதிராக இப்பொழுது செயல்பட ஆரம்பித்துவிட்டான். ஆம் எதிராக என்றால் முற்றிலுமாக, ஒரு சதவீதம் கூட குறைவில்லாமல், எதிர்முனையிலிருந்து செயல்பட ஆரம்பித்துவிட்டான். நான் இடம் என்றால் அவன் வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பான்.
அவனது எதிர் செயல்களில் சகித்துக் கொள்ள முடியாத சில உள்ளன. குறிப்பாக, எந்த தமிழ் சினிமாவில் பார்த்தான் என்று தெரியவில்லை. அநேகமாக அது ரஜினிப்படமாகத்தான் இருக்க வேண்டும். சிகரெட்டை தூக்கிபோட்டு வாயில் பிடிக்கிறான். பின் அந்த தீக்குச்சியை கழுத்துப் பட்டையில் வைத்து தேய்க்கிறான் அது பற்றிக்கொண்டது. ரகசியமாக அவனது சட்டையை சோதனை செய்த போதுதான் தெரிய வந்தது. அந்த சட்டையின் காலர் பகுதியில் ஒரு தீப்பெட்டி அட்டையை கிழித்து ஒட்டிவைத்திருக்கிறான். கழுதைக்கு சிகரெட் வாடை ஒத்துக்கொள்ளவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ஒரு இழுப்புக்கே டி.பி நோயாளியைப் போல இருமுகிறது. இருப்பினும் வளையம், வளையமாக புகைவிடுவதில் முனைப்பாக இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு என்ன தோன்றியது தெரியுமா? கம்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் நான்கு இழுப்பு இழுக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவ்வாறு செய்வதால் அவன் திருந்திவிடப் போகிறான் என்று நான் நம்பினால், அது உலக அழிவுக்கு நிகரான கற்பனை.
பின் ஒருநாள் அவன் செய்த வேலை இருக்கிறதே, நியாயமான ஒரு தந்தையாக இதை சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் வெட்க உணர்வை பெற்றிருக்க கூடிய தகுதியை இழந்துவிட்டேன் என்று. அது என்றோ பறித்துக் கொள்ளப்பட்டுவிட்டது என் மனைவி மற்றும் மகனால். ஆகையால் ஒரு வெட்கங்கெட்டவனாக இதைக் கூறுவதில் தடையேதும் இருக்காது. அவன் வயதுக்கு வந்துவிட்டான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும் நான் அவனிடம் இதைத்தான் கேட்பேன், கேட்பதாய் இருந்தால்.
‘இந்த மஞ்சள் பத்திரிகை உனக்கு எவ்வாறு உதவி செய்யும்’ என்று. அவனுக்கு இந்த சமுதாயம் ஒரு நாள் முழு சுதந்திரத்தையும் கொடுக்கத்தான் போகிறது. கட்டுப்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பிற்கே. பாலுணர்வு விஷயத்தில், பொறுமையையும். மேன்மையையும் கடைபிடிப்பது உடல் மற்றும் மன நலனை பாதுகாப்பதற்கே. அதற்கென்று தகுந்த வயது உள்ளது. இவற்றையெல்லாம் இதே த்வனியில் நான் அவனிடம் கூறினால், என்னை தலையிலிருந்து கால்வரை வித்தியாசமாக ஏற, இறங்க பார்க்கமாட்டான் என்று என்ன நிச்சயம். நான் இப்பொழுதெல்லாம் என் தன்மானத்தை பாதுகாப்பது குறித்து அதிக கவலை கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.
அன்று ஒரு நாள் தலையில் வழிந்த ரத்தத்துடன், எதிர்த்த வீட்டில் வசிக்கும் திரு. ராஜேந்திரன் வந்து கொண்டிருந்தார். பதறிப் போய் விசாரித்ததில் கிடைத்த தகவல். என் பையன் கிழக்கு திசையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறான் என்பது. நான் அதிர்ஷ்டசாலி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏனெனில் திரு. ராஜேந்திரனின் இதயம் இன்னும் நன்றாகத் துடித்துக் கொண்டுதான் இருந்தது. அவர் இன்னும் சாகவில்லை. மேலும் அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் நான் மகிழ்ச்சியடையுமாறு கூறினேன். புரியாத திரு. ராஜேந்திரனுக்கு நான் கூறிய விளக்கம் இதுதான்.
‘நியாயமாக போயிருக்க வேண்டிய உங்கள் உயிர் இன்னும் இருக்கிறதென்றால் நன்றி கூறுங்கள் அந்த கடவுளுக்கு. காரணம் என் மகன் கிரிக்கெட் விளையாடுகிறான் என்றால் அந்தப் பகுதி இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குச் சமம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை”
அவர் மேலும் என்னை மகிழ்ச்சியடையும் படி சில வார்த்தைகளை கூறிச் சென்றார். காவல் நிலையத்தில் புகார் செய்து எனது மகனுக்கு புதிதி புகட்டப் போவதாக கூறிச் சென்றார். அந்த விஷயத்தை 2 நாள் ஆறப்போட்டு பின் சுமுகமாக முடிக்க எனக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவானது.
ஆனால் வாழ்வில் தவிர்க்கவே முடியாத விஷயங்கள் சில உண்டு. எந்த ஒரு மோசமான கடைபிடித்தலுக்கும் முடிவு என்ற ஒன்று உண்டு. சார்ந்திருக்கும் கொடுமைபற்றி தெரியாத குரங்கு குட்டியாகத்தான் என் பையன் இதுவரை இருந்திருக்கிறான். என்றேனும் ஒருநாள் சார்ந்திருத்தல் என்பது ஒரு மோசமான பாதிப்பையும், நீங்காத பதிவையும் வடுவாக விட்டுச் சென்று விடுவதுண்டு. ஊர் முழுவதும் பரவிய வைரஸ் காய்ச்சல் முதலாவதாக யாரிடமிருந்தாவது வெளிப்பட்டுத்தானே ஆக வேண்டும். அந்த வைரஸ் கிருமிகள் தனது தாக்குதலுக்கு முதலாவதாக தேர்ந்தெடுத்தது என் பையனைத்தான். அவன் மிகத் தகுதியானவனாக அந்த கிருமிகளுக்கு தோன்றியிருக்கலாம். இந்த நகரத்திலேயே அவ்வளவு அழுக்கான ஒருவனை தேர்ந்தெடுக்க அதிகமாக சிரமப்பட்டிருக்காது அந்த கிருமிகள். அவன் சிரமமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டான்.
ஆனால் எங்கிருந்துதான் வந்தது என்று தெரியவில்லை இந்த அக்கறை. எனது பொறுப்புணர்வு யாரால் சுட்டிக் காட்டப்பட்டது என்றும் புரியவில்லை. நான் அந்த செயலை செய்ய வேண்டியவனாகக் கருதப்பட்டேன். நான் அவனைப் பாதுகாக்கும் செயலை செய்ய வேண்டியவனாக கருதத் தலைப்பட்டேன். நிச்சயமாக சொல்ல முடியாது அது பாசமாக இருக்கலாம் என்பது தவறாகக் கூட இருக்கலாம். ‘பாசம்’ இன்றுவரை அது உணரப்படாத ஒரு உணர்வாகவே இருந்தது எங்களிடையே. ஆனால் இன்று நான் அந்த பொறுப்பில் உட்கார வைக்கப்பட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்தில் அவன் உடல்நிலை போன போக்கை கவனித்த பொழுது, நம்பவே முடியவில்லை என்னால். இரண்டாவது முறையாக அவனுக்காக எனது கண்களில் கண்ணீர். யாரும் கவனிப்பதற்குள் அதை துடைத்துவிட வேண்டும் என என் கைகள் துடித்ததும் உண்மை.
உண்மையான ஆச்சரியம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட அவனது உடல்நிலையில் ஏற்பட்ட மாறுதல் மட்டும் அல்ல. எனது மற்றும் அவனது உள்ளுலகம் அடைந்த மாற்றம் தான் ஆச்சரியமான ஆச்சரியம்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் நிர்ணயிக்கப்பட்ட ஆழமான உணர்வுகளின்றி மற்ற நமது அனைத்து செயல்களும் பொருளற்றதாகவே தோன்றுகிறது. ஒரு தந்தையாக நான், எனது மகனை பாசத்துடன் பாதுகாக்க வேண்டியவன். அது நிர்ணயிக்கப்பட்டது. அது போல் ஒரு மகனாக தந்தைக்கு அடிபணிய வேண்டியவனே எனது மகன். இது எங்கள் உள்ளுலகில் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு எதிராக இத்தனை வருடங்களாக செய்யப்பட்ட இத்தனை எதிர்ச்செயல்களும் பொருளற்றதாகவே
நன்றி கீற்று, திண்ணை