Sunday, January 17, 2010

நான் ஒரு பூஜ்ஜியம்

சத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று நம்பி இந்த ஊரில் அவன் அழைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு கடன் கொடுத்தவன் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வை போக்கிக் கொள்வதற்காக ஒரு மனோதத்துவ நிபுணரை அணுகுவானேயானால், அவனுக்கு அந்த மருத்துவரால் உணர்த்தப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில், கடன் வாங்கிய ஒருவன் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்ட பொழுதும் கொடுக்காமல் இருக்கிறான் என்றால் அவனிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதுதான். அவனைத் தேடி வீனாக அழைய வேண்டியதன் அவசியம் என்ன. மாதவன் நல்லவன்தான் அவனுக்கு தேவையைய் இருந்தது அந்த 50 ஆயிரம் ரூபாய். ஆனால் நான் 50 ஆயிரம் ரூபாயை மொத்தமாக பார்த்தது என் வாழ்வில் ஒரே ஒரு முறைதான். அது மாதவன் என்னை நம்பி சிரித்தபடி உரிமையோடு எனக்கு கடன் கொடுத்த பொழுதுதான்.

50 ஆயிரம் ரூபாயோடு சென்னை வந்திறங்கிய பொழுது புது நம்பிக்கை ஊற்றெடுக்க, என்னை மெருகேற்றப்பட்ட, உத்வேகமூட்டப்பட்ட இன்னொரு அம்பானியாகவே உணர்ந்தேன். வெகு காலத்திற்குப் பின் தான் தெரிந்தது, இது போன்ற உணர்வு என் தனிப்பட்ட ஒருவனுக்கு மட்டும் சொதந்தமானது அல்ல என்று. நம்பிக்கைகள் அனைத்தையும் குருட்டுத் தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என ஏன் எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கவில்லை. பத்தாம்பசலித்தனமாக நம்பிவிட்டேன், நம்பிக்கைகள் எல்லாமே சரிதான் என்று. 50 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்னதான் செய்துவிட முடியும் இந்த சென்னையில். எனது ஒரு வருடச் செலவுகளுக்கு அது போதுமானதாக இருந்தது அவ்வளவே.

கடந்த 6 மாதங்களாக மாதவனால் எழுதப்பட்ட உருக்கமான கடிதங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டால் அது நல்லதொரு கடித இலக்கியமாக வடிவெடுத்திருக்கும். அனைத்தும் அவ்வளவு உருக்கமான கடிதங்கள். என்னைப் போலவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.

ஆகஸ்ட்,18, 2008

அன்புள்ள ரவி

நலம், நலம் அறிய ஆவல், கடந்த ஆறு மாசம்மா உன்ன பத்தின எந்த தகவலும் இல்லை. உன் அப்பாகிட்டதான் உண்ண பத்தின எல்லா விவரத்தையும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவருகிட்ட கேட்டுக்க வேணாம்னுதான் நெனச்சேன். தப்பா எடுத்துக்காத.

ஊர்ல போன மழைக்காலத்துல பெஞ்ச மழைல எல்லா கண்மாயும் நெறைஞ்சு போச்சு, நாம நெறையவே நெறையாதுன்னு நெனைச்ச கோடிக்கரை கம்மாய் கூட நெறஞ்சு போச்சு, ஊர்ல நல்ல விவசாயம் நடந்துருக்கு, எல்லாமே நல்லபடியா போய்கிட்டு இருக்கு, நீ இல்லாதது ஒண்ணுதான் கொறை. அப்புறம் நம்ம சேகர் உன்ன கேட்டதா சொல்ல சொன்னான். அவனுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கலயாணமாச்சு, நீ இருக்கிற இடம்தெரியாததால உனக்கு சொல்ல முடியல.

அப்புறம் வயல்ல நெல்லெல்லாம் அறுப்புக்கு பதமா வந்துருக்கு. எப்படியும் இந்த வாரத்துக்குள்ள கூலிக்கு ஆள் வெக்கணும். கொஞ்சம் பணம் பத்தாக் கொறையா இருக்கு. தப்பா எடுத்துக்காத. உன்னால முடிஞ்ச தொகைய அனுப்பு. மீதிக்கு நான் இங்க சமாளிச்சுக்கிறேன்.

இப்படிக்கு அன்புள்ள

மாதவன்
விவசாயம் அப்படியொன்றும் எரிச்சல் தரக்கூடிய செயல் அல்ல. ஆனால், அதை நான் ஏன் வெறுத்து ஒதுக்கி சென்னை வந்தேன் என்ற சிந்தனை சென்னை வந்தபின்தான் ஏற்பட்டது. உணவுக்கு அப்படியொன்றும் பஞ்சமில்லை. நகரத்தில் வாழ்பவர்களைவிட, கிராமத்தில் வாழ்பவர்கள் தான் திருப்தியாக உண்கிறார்கள். ஒரு கிராமத்தானின் உடலில் இருந்து அவ்வளவு சக்தி வௌ¤ப்படுகிறதென்றால், அவன் மானாவாரியாக கூச்சமின்றி உண்பதுதான். நானும் அப்படித்தான். 5ம் வகுப்பு படிக்கும் பொழுது ஆசிரியர் என்னை எழுப்பிக் கேட்டார். ஒரு மனிதன் ஒருநாளைக்கு எத்தனை வேலை உண்பான் என்று. 4 வேலை என்றேன். காலை, மதியம், மாலை, இரவு என 4 வேலையும் மனிதன் உணவு உண்கிறான் என்பதை நிஜமாக நம்பினேன். ஆனால் 3 வேலைதான் உண்ண வேண்டும், அது தான் இயல்பு என்று என்தலையில் பெரியதொரு இடியை இறக்கினார். அவருக்கென்ன தெரியும் நான் 5 வேலை உண்பது பற்றி. சந்தோஷமாக வேலை செய்வோம். சந்தோஷமாக சாப்பிடுவோம், ஆனால் எப்படி அந்த வாழ்க்கை வெறுத்து போனது என்றுதான் தெரியவில்லை.

நகரத்தின் பகட்டு வலையில் என் மனம் எப்படி விழுந்தது. அந்த வானுயர்ந்த கட்டடங்களையும், மாட மாளிகைகளையும் முதன் முதலாகப் பார்த்த பொழுது, நான் சிலையாகிப் போனேன். இங்குதான் என் வாழ்க்கை என்று அப்பொழுதே உள்ளுக்குள் ஒரு பட்சி சொன்னது. அந்த பட்சியை அப்பொழுதே கொன்றிருக்க வேண்டும். தவறு செய்துவிட்டு புலம்புவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்கிற உலக நியதியில் எப்பொழுதோ ஒரு நாளிலிருந்து எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ஒருமுறையாவது அந்த கட்டிடங்களுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்குள் உண்டு. அதற்குள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பார்தது வியந்த அழகான பெண்கள் எல்லாம் அது போன்ற கட்டடங்களுக்குள் தான் செல்கிறார்கள்.


செப்டம்பர் 25, 2008

அன்புள்ள ரவி

நலம், நலம் அறிய ஆவல், நீ அனுப்பிச்ச பணம் மொத்தமும் கிடைச்சது. வயல்ல அறுப்பு வேலையெல்லாம் முடிஞ்சது. நல்ல மகசூல் கெடைச்சிருக்கு, போன வருஷத்தோட, இந்த வருஷம் நல்ல லாபம். எல்லாத்துக்கும் நீ நேரத்துக்கு கொடுத்த பணம்தான் உதவியா இருந்துச்சு.

இப்படியெல்லாம் சொல்ல வேண்டிய என்னை புலம்ப வச்சிட்டியேடா. நீயும் பணத்த அனுப்சுடுவன்னு நம்பி அறுப்பு வேலைய ஒருவாரம் தள்ளிப் போட்டேண்டா. அதுக்கு அப்புறம் அடிச்ச மழைல அம்புட்டு நெல்லும் அடிச்சுட்டு போயிடுச்சுடா. வயலே தண்ணிக்குள்ள முங்கி போச்சுடா. கைல பணம் இல்லன்னா சொல்லிருக்கலாம்ல. கடன உடன வாங்கி சமாளிச்சிருப்பேன்ல. ........... ..................... ................ ...................

எனக்கு நன்றாகத் தெரியும் ஒரு அறுப்புக்கு எவ்வளவு பாடுபட வேண்டும் என்று, ஆனால் என் நிலைமையை என்னவென்று சொல்வது. இந்த பெரிய நகரத்தில் என்னவிதமான வேலை கிடைக்கும் என்று இன்றுவரை புரியவில்லை. ஆனால், இங்கு வசிக்கும் மனிதர்களை பார்க்கும்பொழுது ஆச்சரியமாக உள்ளது. ஏதோ போர்க்களத்தில் வீரன் ஒருவன் முக்கியச் செய்தியை எடுத்துக் கொண்டு வெறித்தனமாக ஓடுவதைப் போல அதி தெறிநிலையுடன் குனிந்த தலை நிமிராமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பெண்களைப் பார்க்கும் பொழுது, அவர்கள் அந்தநிறத்தைப் பெற என்ன செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்த ஊரில்தான் பெண்கள் கால்சட்டை அணிந்திருப்பதை முதன் முதலில் பா£த்தேன். ஆச்சரியத்தில் வாய்பிழப்பது எல்லோருக்கும் நடக்கும் ஒரு பொதுவான விஷயம் தான் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லையெனில் தயவு செய்து நம்புங்கள் நான் பலமாதங்களாக வாய்பிழந்தபடி வெறுமனே சைட் அடித்துக் கொண்டுதானிருந்தேன். இளமை ஒரு வரப்பிரசாதம் என்கிற வரிகளை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. கடந்த போன நேரங்கள் அனைத்தும் திருப்பிக் கிடைக்கப் போவதில்லை. கண்முன்னே நேரம் கடந்து போய்க் கொண்டுதானிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது இன்னும் புரியவில்லை. இப்பொழுதெல்லாம் தினம் 2 வேலை உணவு உண்பதே தாழ்வு மனப்பான்மையை தரும் செயலாக உள்ளது.

செப்டம்பர் 20, 2008

அன்புள்ள ரவி

நலம், நலம் அறிய ஆவல்

சுருக்கமா சொல்லிடுறேன், கடன் தலைக்கு மேல ஏறிப் போச்சு வீட்ல வேற செலவ சமாளிக்க முடியல, வேற வழி தெரியல, அதனால வயல வித்துட்டோம். நீ சந்தோசம்மா இருடா.

அடுத்த மாசம் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கோம். வந்து ஒரு எட்டு பாத்துட்டு போவியாம், சொல்லச் சொன்னா? அப்படியே ஊர்ல எனக்கு எதாவது வேலையிருந்தா பாத்து வையி நானும் வந்துர்றேன். வயலில்லாம என்ன பண்ண முடியும் இந்த ஊர்ல. இந்த உதவியாவது எனக்கு செய்யிடா? ............ ............ ................ ...................... .........................

வரட்டு சிரிப்புக்கு ஆளானது இந்த ஒரு பொழுதுதான். எனக்கு பிச்சையெடுத்து உண்பது போல் இருந்தது. நண்பனுக்கு துரோகம் செய்துவிட்டேன். இவ்வளவுக்கும் பிறகும் அவன் என்னை முழுவதுமாக வெறுத்துவிடவில்லை. இங்குள்ள லட்சக்கணக்கான பேர் வேலை பார்க்கிறார்கள். நான் மட்டும் என்ன சபிக்கப்பட்டவனா? என்ற கேள்வி என்னை கசக்கி பிழிந்தது. சென்னை வந்தபின்தான் ஐ.டி. துறையை பற்றி கேள்விபட்டேன். அதற்கு எம்.சி.ஏ., பி.இ. போன்ற படிப்புகளையெல்லாம் படித்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். எனக்குத் தெரிந்ததெல்லாம். ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்தான். கடன் வாங்கிய பணம் இல்லாமல் ஊருக்கும் செல்ல முடியாது. கடந்த சில மாதங்களாக அதிர்ச்சியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

வறுமையின் காரணமாக வழி தவறிப் போகும் இளைஞர்களுக்கு கிடைக்கும் வழி கூட எனக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு கூட ஏதோ வழி கிடைத்திருக்கிறது. மூட்டை தூக்குபவர்கள், பேப்பர் பொறுக்குபவர்கள், வண்டி இழுப்பவர்கள் என சிலர் உழைத்து உண்பதை சுட்டிக்காட்டி யாரோ ஒருவர் எனக்கு அட்வைஸ் செய்தார். இது நடந்து சில மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் அவருக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை. நான் தாக்க ஆரம்பித்த உடனேயே, அவர் கொடூரமாக கத்திக் கொண்டு ஓடிவிட்டார். ஏன் அவ்வாறு செய்தேன் என்று புரியவில்லை. எனக்கு அவ்வளவு எளிதாக கோபம் வந்துவிடாது. ஆனால் அன்று, அது ஏன் அவ்வாறு ஆனது. இதயத்துக்கு நியாயம் தேவையில்லை என்று நினைக்கிறேன். உணர்வுக்கு மரியாதை மட்டுமே தேவையாய் இருக்கிறது. மற்றபடி நியாயம், நீதி, நேர்மை பற்றியெல்லாம், ஒரு பொதுமேடையிலோ, அல்லது ஒரு தொலைக்காட்சி பேட்டியிலோ தாராளமாக வைத்துக் கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. வேதனை புரியாமல் வியாக்கியானம் பேசலாம், யாரிடம் என்றால் எதிர்த்து தாக்க இயலாத ஒரு வலிமையற்றவனிடம், அது ஏன் அவருக்கு புரியாமல் போனது. அவர் தெறித்து விழுந்த தனது 2 பற்கைளக் கூட எடுக்காமல் ஓடிவிட்டார்.

சமீப காலமாக வன்முறை எண்ணங்கள் எனக்குள் துளிர்த்தெழுவதை நான் கவனித்துக் கொண்தானிருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் என்னை இணைத்துக் கொண்டு வேலை செய்து சம்பாதித்து வாழ்க்கையை நடத்தும் மனநிலையையே இழந்துவிட்டேன் நான். ஒரு வேளை எனக்கு, ஒரு நல்ல வேலை கிடைத்தாலும் அதில் ஈடுபட முடியுமா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இது எனது சோம்பேறித்தனம் அல்ல. நிச்சயமாக அப்படி அல்ல. ஒருமனித வெடிகுண்டாக மாறக் கூட எனது என்பது என்னுள் தயாராக இருக்கிறது. ஆனால், நிலைமை என்று மோசமானது என்று தெரியவில்லை. நான் இங்கு, இப்பொழுது நிறைவாக இல்லை. எனது என்பது எங்கோ, எதிலோ சிக்கிக் கொண்டு மூச்சு தினறியபடி கொதித்துக் கொண்டிருக்கிறது. எனது இப்------- பொழுது சாதாரணத்தை விரும்பவில்லை. ஒரு சாதாரண வேலையை விரும்பவில்லை, வேறு விதமாக சொல்வதென்றால், நான் சாதாரண ஒரு வேலைக்கு தகுதியானவன் இல்லை. அசாதாரணத்தையே என் மனம் விரும்புகிறது. நான் சபிக்கப்பட்டவன் இல்லை என்பதை ஒரு அட்வைஸ் செய்பவனுக்கு அடித்துச்சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. எனது தேவை எனது அடுத்த வேலை சோற்றுக்கான ஒரு வேலை இல்லை. எனது அசாதாரணத் தன்மைக்கு கிடைக்க வேண்டிய மரியாதை மட்டுமே. ஆனால் நான் ஒரு பூஜ்ஜியம், எனக்குள் வேரூன்றிவிட்ட அந்த பூஜ்ஜியத்துக்கு வலிமை அதிகம். அது தனக்குள் என்னை உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.

நான் தேடிக்கொண்டிருக்கிறேன், எனது நண்பன் என்னை தேடிக் கண்டுபிடித்துவிட முடியாத ஒரு மூலையை. அதில் நான் ஒண்டிக்கொள்ள விரும்புகிறேன். காற்றுக்கு சக்தியிருந்தால் இந்த செய்தியை எடுத்துச் செல்லட்டும். நண்பா நான் அசிங்கமானவன். என்னை பார்த்து விடாதே. தெரியாத்தனமாக பார்க்க நேர்ந்தாலும், அவ்வாறு செய்துவிடுவாயானால் இப்பொழுதே சொல்லிவிடு, எதிரே ஒரு ரயில் வேகமாகத்தான் வந்து கொண்டிருக்கிறது. நண்பா எனக்குத் தோன்றவில்லை, இனி அந்த ரயிலை நிற்கச் செய்ய முடியுமென்று. நேரம் கடந்து விட்டது. எனக்கும் தோன்றவில்லை நகர்ந்து கொள்ள வேண்டும் என்று.

யாராவது இப்படி செய்திருந்தால் நான் பிழைத்திருப்பேனோ என்னவோ?

அது......... அதுதான்................ அது ஒரு அட்வைஸ்

"தம்பி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம்"

நான் அந்த மகானை துரத்திக் கொண்டல்லாவா ஓடியிருப்பேன். பின்அவருக்கு வேறு 36 பற்கள் நிச்சயமாக இருந்திருக்கும். என்னால் ஒரு 15 யாவது முடியாதா என்ன?